இறைவனின் இருபெரும் அத்தாட்சிகள்.
அல்லாஹ் தன் படைப்புகளில் ஒன்றின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான்
என்றால் அது மிக முக்கியமானவொன்றாகவும் அவனது வல்லமையை வெளிப்படுத்தக் கூடியவொன்றாகவும்
இருக்கும். அந்தவகையில்தான்
அல்லாஹ் திருமறையில் இரவு என்ற ஒரு அத்தியாயத்தையும் இறக்கி அதில் இரவின் மீதும் பகலின்
மீதும் சத்தியம் செய்கின்றான். “(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக, பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக” (92:1,2) இந்த இரண்டும் வல்ல அல்லாஹ்வின்
இரு பெரும் அத்தாட்சிகளாகும்.
அல்குர்ஆனில் சொற்பிரயோகங்கள்.
இரவு, பகல் குறித்த அநேக வசனங்களை அல்குர்ஆனில் பல இடங்களிலும் காணலாம். இரவையும் பகலையும் குறிக்கும் “லைல், நஹார்” என்ற இரு சொற்களும் சேர்ந்து அல்குர்ஆனில் சுமார் 60 இடங்களில் வருகிறது. மேலும், இரவு - அதிகாலை, வைகரை, விடியற் காலை என பொருள்படும் “லைல், ஸுப்ஹ்” என்ற இரு
சொற்களும் மூன்று (6:96; 74:33; 81:17) இடங்களிலும், இரவு என்று மாத்திரம் பொருள்படும் “லைல்” என்ற சொல்
பதினைந்து (2:187, 6:76; 10:27; 11:81; 15:65; 17:78,79; 39:9; 50:40;
51:17; 52:49; 73:6,20; 76:26; 86:4) இடங்களிலும் வருகிறது. இது மட்டுமின்றி “லைலத்துன்” என்ற சொல் திருக்குர்ஆனில் எட்டு இடங்களிலும் (2:52; 7:142;
7:143; 2:187; 44:3; 97:1,2,3) அதன் பன்மை
சொல்லான “லயாலின்” மூன்று (19:10; 69:7; 89:2) இடங்களிலும் வருகின்றன. இந்துனை தடவைகள் மீண்டும்
மீண்டும் கூறி இரவினதும் பகலினதும் முக்கியத்துவங்களை அல்லாஹ் அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.
பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பூமியின்
ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை.
இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். எனவே பூமியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில்
சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு என்றும் சூரிய ஒளி நேரடியாக விழும் பகுதி
பகல் என்றும் அழைக்கப்படுகிறது. இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. ஒளி படர்ந்திருக்கும் நேரமே பகல்.
இரவு சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும்.
பகல் என்பது அந்த சூரிய உதயத்திற்கும் அதன் மறைவுக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும்கொண்டது
ஒரு நாள் ஆகும்.
உண்மையில் இதனை விளக்குவதும் விளங்குவதும் சற்றுக் கடினமாக இருக்கும். அண்டவெளி முழுவதும் பரந்துகிடக்கும்
ஒன்றுதான் இருள். இருள் என்பது இயற்கையானதும் நிரந்தரமானதுமாகும்.
வெளிச்சம் என்பது தற்காலிகமானது. பிரகாசிக்கும்
அல்லது எரியும் ஒன்றின் இருப்புதான் வெளிச்சம். அது அனைந்துவிட்டால்
மீண்டும் இருண்டுவிடும். சூரியன் உற்பட நட்சத்திரங்கள் அனைத்தும்
தற்காலிகமானைவையே! அவை எரிந்து ஓய்வுபெற்றதும் கருந்துளை எனும்
இருண்ட நிலையை அடைகின்றன. வெளிச்சத்தின் ஆயுள் முடிந்தபின்னும், தொடர்ந்தும் இருக்கப்போவது இருள்தான்.
வெளிச்சத்துக்கு ஓர் ஆதாரம் தேவை. இருள் எந்த ஆதாரத்தையும் சார்ந்திருப்பதில்லை. பின்வரும் அல்குர்ஆனிய வசனத்தைப்
படியுங்கள். “எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்.”(6:1) இருள்தான் இயற்கையானது என்பதால் இதுபோன்ற அனைத்து வசனங்களிலும் இருளை அல்லாஹ் முற்படுத்தியுள்ளான். பிரபஞ்சத்தில் எங்கும் பரவியிருப்பது இருள் என்பதால் அதனைப் பண்மையில் (துலுமாத்) இருள்கள் எனப் பிரயோகித்துள்ளான். சுபஹானல்லாஹ்!
தற்போது ஒரு விடயத்தைப் பாருங்கள். இருளின் மாபெரும் மடியில்தான்
இந்தப் படைப்புகள் அனைத்தும் இருக்கின்றன. படைப்புகள் யாவும்
இருளின் எதிர்ப்பதமான ஒளியின்பால் எப்போதும் தேவையுடையனவாக இருக்கின்றன. படைப்புகள் நாட்டம் கொள்ளும் வெளிச்சத்தின் முழுமுதற் காரணியாக இருப்பவன்தான்
படைப்பாளன் வல்லவன் அல்லாஹ். அவனே உண்மையான ஒளியின் சொந்தக்காரன்.
. அல்லாஹ் ஒருவன் என்பதால் வெளிச்சத்தைப் பற்றிக் கூறும் இடங்களிலெல்லாம்
அதனை ஒருமையிலேயே (நூர்) குறிப்பிட்டுள்ளான்.
சக்தியை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. ஒளிச் சக்தியும்
அவ்வாறுதான். சக்தியின் முழு முதற்காரணமானவன் அல்லாஹ்வே.
அவனுக்கும் ஆக்கமோ அழிவோ இல்லை. அவனின் பக்கமே
நாம் எப்போதும் மீளவேண்டும் என்பதனை ஞாபகப்படுத்தும் விதத்தில் தர்க்கரீதியாக இவற்றை
அமைந்திருப்பது உண்மையிலேயே மாபெரும் அற்புதம்தான். திருமறையில்
அல்லாஹ் கூறுகின்றான்.
“அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன்
(ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு
ஒரு கண்ணாடி(க் குவி)யலில் இருக்கிறது அக் கண்ணாடி ஒளிவீசம் நட்சத்திரத்தைப்
போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப்
படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை
நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம்
சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளியின் பால்
நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.” (24:35)
இரவின் பயன்கள்
மனிதன் மட்டுமன்றி உயிர்ப் பிராணிகளும்கூட இரவின் ஆரம்பத்தில் தமது வசிப்பிடங்களைநோக்கிச் சென்று உறங்கி இளைப்பாருகின்றன. தாவரங்களும் இரவில் ஓய்வெடுக்கின்றன. விதிவிலக்கான சில பிராணிகள்தான் இரவில் உணவுதேடி வெளியே சஞ்சறிக்கின்றன.
இரவை அல்லாஹ் மனிதனுக்கு
இளைப்பாறும் விதமாக ஆக்கியுள்ளான். “உங்களுடைய தூக்கத்தை உங்களுக்கு இளைப்பாறுதலாகவும் இரவை உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம்” (78:09,10)
உண்மையில் உறக்கம் என்பது படைப்பினங்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள மாபெரும் அருள். உறக்கம் இல்லாத எந்தப்படைப்பும் உலகில் இல்லை. படைப்பினங்களின் பூரணத்துவம் அவற்றுக்கு உறக்கம் இருக்கும்போதுதான். உறக்கம் இல்லாவிட்டால் அது ஒரு நோய்.
Sleeping Tablet உட்கொண்டாவது உறங்க முயற்சிப்பது எமது வழமை. ஆனால் படைப்பாளனின் பூரணத்துவம் உறக்கம் இல்லாதிருப்பதுதான். “(அல்லாஹ்) அவனை சிறு தூக்கமோ, ஆழ்ந்த நித்திரையோ பீடிக்காது”(2:255)
எமது உடலுக்கென்று ஒரு நேரசூசி இருக்கின்றது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை
அது தொழிட்பட்டுக்கொண்டிருக்கும். உடலின் ஒவ்வொரு பாகமும் குறிப்பிட்ட
நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையைச் செய்துவிட்டு நிறுத்திவிடும். இது சிர்கார்டியன் ரிதம் (Circadian Rhythm) அல்லது பயலொஜிகல்
குலொக் (Biological clock) என்றும் அழைக்கப்படுகின்றது.
எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்பதனை இது இயற்கையாகவே கண்காணித்து
செயற்படுத்திக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் பகல் நேரத்தில்
உடலுக்குத் தேவையான எந்த ஹோமோன்கள் சுரக்கவேண்டும் இரவில் எது சுரக்கவேண்டும் என்பதை
இதுவே தீர்மானிக்கின்றது.
இரவு உறக்கத்தில்தான் அங்க வளர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. உடலிலுள்ள கோடிக்கணக்கான கலங்கள் தினமும் புதுப்பிக்கப்படுவதும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதும், குறிப்பிட்ட வயதுவரை உடல் வளர்ச்சியடைவதும், இந்த இரவுத் தூக்கத்தில்தான். அதேபோன்று மெலடோனின் எனும் ஹோமோன் இரவின் கும் இருளில் மட்டுமே சுரக்கக்கூடிய ஒன்றாகும். இது பகலில் நாம் களைப்புற்ற, காயப்பட்ட இடங்களை சுகப்படுத்தும் அற்புதப் பணியை செய்கின்றது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் புற்றுநோய் வராதிருக்கவும் இந்த மெலடோனின் அவசியம் என்கிறது நவீன மறுத்துவ விஞ்ஞானம்.
இரவு உறக்கத்தில்தான் அங்க வளர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. உடலிலுள்ள கோடிக்கணக்கான கலங்கள் தினமும் புதுப்பிக்கப்படுவதும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதும், குறிப்பிட்ட வயதுவரை உடல் வளர்ச்சியடைவதும், இந்த இரவுத் தூக்கத்தில்தான். அதேபோன்று மெலடோனின் எனும் ஹோமோன் இரவின் கும் இருளில் மட்டுமே சுரக்கக்கூடிய ஒன்றாகும். இது பகலில் நாம் களைப்புற்ற, காயப்பட்ட இடங்களை சுகப்படுத்தும் அற்புதப் பணியை செய்கின்றது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் புற்றுநோய் வராதிருக்கவும் இந்த மெலடோனின் அவசியம் என்கிறது நவீன மறுத்துவ விஞ்ஞானம்.
3.பௌதிக மாற்றங்கள்
இரவு நேரத்தில்தான் பூமியின் தட்ப வெப்ப நிலைகள் மாறி பூமி குளிர்ச்சியடைகின்றது. தாவரங்களும் தமது சுவாச முறையை
மாற்றிக்கொள்கின்றன. இவ்வாறு பல மாற்றங்கள் இரவில் நடைபெறுகின்றன.
பலங்காலம்தொட்டு ஜீவராசிகள் அனைத்தும் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும்
மையமாகக்கொண்டு இயங்கிவருகின்றன. மனிதனும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தான். ஆனால்
மின்குமிழ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மின்குமிழை மையமாக்க்கொண்டு இயங்கிவருகின்றன.
இன்று எமது அநேகருக்கு இரவு பகலாகவும் பகல் இரவாகவும் மாறியிருக்கின்றது. இன்னும் அதிகமானவர்கள் படுக்கைக்குச் செல்வது இரவு 12 அல்லது 1 மணிக்குத்தான். இதனால் புத்தி மயக்கம்,
சோர்வு, தலைவலி, படபடப்பு,
சமிபாட்டுக் கோலாரு, மலச்சிக்கல் என பல்வேறு உபாதைகளுக்கும்
அவர்கள் ஆளாகின்றனர்.
இரவை இளைப்பாறும் காலம் என்று கூறிய அல்குர்ஆன் பகலைப் பற்றிக்
கூறும்போது “பகலை உங்கள் வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக்கொள்ளும் காலமாக ஆக்கினோம்.” (78:11) என்று குறிப்பிடுகின்றது. இரவில் ஓய்வெடுத்துவிட்டு
புத்துணர்ச்சியுடன் பறவைகளும் விலங்குகளும் உணவுதேடுவதற்காக வெளிக்கிளம்பி விடுகின்றன.
தாவரங்களும் சூரியனின் ஒளியைப் பெற்று ஒளித்தொகுப்புக்குத் தயாராகின்றன.
மனிதனும் பணிபுரிய ஆரம்பிக்கின்றான். அது மட்டுமன்றி
பகல் காலத்தில் சூரிய ஒளியின் மூலம்தான் எமக்கு விட்டமின்-D கிடைக்கின்றது.
விட்டமின்-D இருந்தால்தான் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கல்சியம் சத்துக்கள் பயன்தரும். அதேபோன்று சூரிய ஒளி தோலில் படுவதால் மெலனின் சுரந்து உடற் தோலுக்கு வலுசேர்க்கின்றது. இப்படிப் பல பயன்களை பகலிலும் அல்லாஹ் வைத்திருக்கின்றான்.
ஜும்ஆ, இரு பெருநாள் பகல் நேரங்கள் போன்று சில இரவுகளும் முக்கியப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை அல்லாஹ் அருள்மிக்கதாக ஆக்கிவைத்துள்ளான். நபியவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டதும் இரவில்தான்.
ஹிஜ்ரத் எனும் மதீனா நோக்கிய பயணம் மேற்கொண்டதும் இரவில்தான்.
அர்ஷில் இருக்கும் அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி அடிவானத்திற்கு இரங்குவதும் இரவில்தான்.
திருமறைக் குர்ஆன் உலகுக்கு இறங்கியதும் லைலதுல் கத்ர் எனும் அந்த இரவில்தான்.
சுபஹானல்லாஹ்!
“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு உறுதியாகவே
பல அத்தாட்சிகள் இருக்கின்றன. இவை பற்றி சிந்திப்பவர்கள் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் சாய்ந்தவாரும் அல்லாஹ்வின் சிந்தனையிலேயே இருப்பார்கள்.
பின்னர் வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பாற்றலைப் பற்றி ஆராய்ச்சிசெய்து "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணுக்காகப் படைக்கவில்லை, நீ தூய்மையானவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்று கூறுவார்கள்).
(3:191)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...