ஆழ்கடலினுள் ஸ்ஜுத் செய்த இளைஞன்
.....ஆலிப் அலி.....
நான் பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு இளைஞன். வாழ்க்கையின் ஏகபோக உரிமைகளை அனுபவிப்பதில் விடாப்பிடியாய் இருந்தேன். பணம், மாடி வீடு, வாகனம் என்பவைதான் வாழ்க்கை என மிதம்மிஞ்சி எண்ணியிருந்தேன். எனக்கும் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களும் எவ்விதத்திலும் என்னைவிட தரம் குறைந்தவர்களல்லர்.
ஒரு வெள்ளிக்கிழமை. பொழுதுபோக்கிற்காக கடலில் சுழியோடச்செல்ல நண்பர்களோடு தயாராகிக்கொண்டிருந்தேன். ஜும்ஆப் பிரசங்கத்திற்காக அதானும் சொல்லப்பட்டது. வழமையாக ஐவேளைத் தொழுகைக்கும் அதானொலிப்பது என் செவிகளுக்கு உணர்த்தப்பட்டாலும் அதிலிருந்து விதிவிலக்கானவன்போல் நான் வேறு திசையில் சென்றுவிடுவேன். அன்றும் அப்படித்தான் பலரும் பள்ளிவாயிலை நோக்கி நடைபோட நாமோ ஆழ்கடல்நோக்கி எமது ஓடத்தைச் செலுத்திக்கொண்டிருந்தோம்.
சுழியோடும் கருவிகளோடு கடலினுள் குதித்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில்தான் எதிர்பாராத விதமாக திடீரென அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தது. இப்போது நினைக்கும்போதும் என் உடலெங்கும் நடுக்கம்கொள்கின்றது. வாயினுள் நீர்செல்லாது மூக்கு, வாய் இரண்டையும் மூடி தேவைக்கேற்ப ஒட்சிசன் வாயுவைத் தந்துகொண்டிருந்த அந்த இறப்பர் குழாய் உடைந்துவிட்டது.
நான் தினரினேன். எனது நுரையீரல் வலுவாக அழுத்தப்பட்டது. இதயம் நின்றுவிட்டதுபோல் உணர்ந்தேன். கடல் நீரும் வாயினுற் புகுந்து தொண்டைக்குழியை அடைத்தது. உடல் அங்கங்கள் தடுமாறின. நுரையீரல் சுவாசிக்க ஒட்சிசனைக்கேட்டுப் போராடியது. என்னைச் சுற்றி இருள் கவ்விக்கொண்டது. நண்பர்களோ என்னைவிட்டும் வெகு தூரத்தில் இருந்தார்கள். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. என் வாழ்வின் நினைவுகள் என் கண்முன் அலைமோதின.
“அஷ்ஹது” என்று மொழிந்ததுதான் தாமதம் தொண்டைக்குழி விக்கிக்கொண்டது. நான் கலிமாவை மொழிய முனையும்போதெல்லாம் மறைவிலிருந்து ஒருகை என் கழுத்தை நெரிப்பதுபோன்றிருந்தது. கடுமையாக முயற்சித்தேன். முடியவில்லை. “இறைவா என்னை மீட்டிவிடு... என்னைக் காப்பாற்று...” என்று உள்ளம் கத்திக் கதறியது.
“ஒரு நிமிடம்..... நிமிடம்..... ஒரு வினாடி..... ” என்று கெஞ்சியது. எவ்வித சாத்தியப்பாடுகளுமில்லை. உணர்ச்சிகளனைத்தையுமே இழந்துவிட்டேன். இறைவனை நினைக்கும் கடைசித்தருனம். நான் மூர்ச்சிக்கலானேன். திடீரென்று.....
திடீரென்று ஒரு காற்று என்நெஞ்சை உந்தித்தள்ளியது. சூழ்ந்திருந்த இருள் அகன்று போனது. என் விழிகள் திறந்துகொண்டன. நான் கண்டேன்.... என் வாயில் ஒட்சிசன் குழாயைவைத்துப் பொருத்தும் ஒரு நண்பரை அங்கு நான் கண்டேன். அவர் எனக்கு மென்மேலும் உதவ முயற்சித்தார். அவர் முகத்தில் புன்னகையையே நான் அவதானித்தேன். அதிலிருந்து நான் நலமாக இருக்கின்றேன் என்பதை உணர்ந்துகொண்டேன். அக்கணம் என் உடல் அங்க அவயங்கள் அனைத்தும் கலிமாவை மொழிந்தன. இறைவனுக்கு நன்றியுரைத்தன. கடல் நீரோடு கண்ணீரும் கரைந்துகொண்டிருந்தது....
அதன் பின் நான் நலமாக கடலில் இருந்து வெளியேற்றப்பட்டேன். சிகிச்சையும் பெற்றேன். அன்றிலிருந்து என் வாழ்க்கைப்போக்கு முற்றாக மாற்றங்கண்டிருந்தது. அதிகமதிகம் அல்லாஹ்வைத் தொழுபவனாகவும் அவனுக்கு நன்றியுரைப்பவனாகவும் மாறியிருந்தேன்.

அந்த இடம் நாளை மறுமையில் எனக்காக அல்லாஹ்விடம் சான்று பகரும். சிலவேளை நான் அந்த ஆழ்கடலில் சிரம் தாழ்த்தியமைக்காக அல்லாஹ் எனக்கு அருள்பாலித்து என் பாவங்களை மன்னிக்க்கூடும்.
அனைத்துக்கும் அவனே போதுமானவன்.
இது கதையல்ல நிஜம்
நன்றி : அல்-முஜ்தமா
.....ஆலிப் அலி.....
5 comments:
சிறந்த ஆக்கம். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்!
Subahanallah,
allahu akbar !
allah pothumaanavan.
Superb!!!! nice story
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...