ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
முயல்களின் வாழ்க்கைக் கோலமும் அவற்றின் இயல்புப் பண்புகளும் உண்மையில் மிகவும் சுவாரஷ்யமானவை. அனைவராலும் விரும்பி தமது வீடுகளில்கூட செல்லப்பிராணியாக இம்முயல்கள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் தோற்றமும் குரும்புத்தனமான நடத்தைகளும்தான் அவற்றின்பால் எம்மை ஆசைகொள்ளத் தூண்டுகின்றன.
அல்லாஹ் அவனது இப்படைப்பிலே பல்வேறு அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்துள்ளான். மிகவும் அடர்த்தியான பஞ்சுப் பொதிபோன்று உரோமங்களைக் கொண்டிருக்கும் இம்முயல்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. நீண்ட இரண்டு காதுகளையும் குட்டையானதொரு வாலையும் நீளமான இரு பின்னங்கால்களையும் கைபோன்று பயன்படுத்த இரு முன்னங்கால்களையும் இவை கொண்டிருக்கின்றன.
பொதுவாக முயல்கள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. காடுகளிலும் பாலை வனப்பகுதிகளிலும் பனிப்பிரதேசங்களிலும் வீடுகள் மற்றும் பண்ணைகள் என அனைத்துப் பகுதிகளிலும் இவற்றைக் கண்டுகொள்ளலாம். காட்டில் வசிக்கும் முயலுக்கும் நாம் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கும் முயலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. காட்டு முயல்கள் வீட்டு முயல்களை விடவும் அளவில் பெரியன. ஒரு காட்டு முயல் 20 – 35 செ.மீ. நீளத்தையும் 3கி.கி. நிறையும் கொண்டிருக்கும். வீட்டு முயல் 20 செ.மீ. நீளமும் 2.5கி.கி. நிறையையும் கொண்டிருக்கும்.
காடுகளில் வாழும்போது பல்வேறு உயிராபத்துக்களை முயல்கள் எதிர் நோக்கவேண்டி ஏற்படுவதனால் எந்நேரத்திலும் எதிகளிடமிருந்து தப்பிக்க அவை தயார்நிலையிலேயே இருக்கின்றன. உயிருக்கு உத்தரவாதம் குறைவு என்பதனால் காட்டுமுயல் கூடியது ஒரு வருடகாலம்தான் உயிர்வாழ்கின்றது. ஆனால் வீட்டு முயல் ஐந்து வருடங்கள் வரை உயிர் வாழும். உயிராபத்து நேரும்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரு சிறந்த வழிமுறைதான் அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியிருக்கும் கால்கள். வேகமாக ஓடுவதற்கும் பாய்வதற்கும் சுலபமாக அவற்றின் முன்னங் கால்கள் சற்று குட்டையாகவும் உந்திப் பாய்வதற்கு பின்னங்கால்கள் நீண்டதாகவும் சிறுஷ்டிக்கப்பட்டுள்ளன. வீட்டு முயல்களைவிட காட்டு முயல்கள் அதி உயரத்துக்குப் பாயக் கூடியனவாகவும் மிக வேகமாக ஓடக்கூடியனவாகவும் இருக்கும். இவை மணிக்கு 60 – 70 கி.மீ. வேகத்தில் ஓடும் ஆற்றலைப் பெற்றிருப்பதோடு ஒரே பாய்ச்சலில் 6மீற்றர் தூரம் பாயவும் இவற்றால் முடியும்.
முயல்கள் தலையைக் கீழே தாழ்த்தி புல் தின்றுகொண்டிருந்தாலும் அவற்றின் நீண்ட இரு காதுகளும் “ரேடார்” போன்று எப்போதும் உயர்ந்து அங்கும் இங்கும் அசைந்துகொண்டே இருக்குப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இது ஏனெனில் எந்தவொரு சிறிய சப்தமாயினும் அதனைத் துல்லியமாகக் கேட்கும் ஆற்றலை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். எனவே அவை உணவில் கண்ணாக இருந்தாலும் தன்னை ஏதும் நெருங்குகிறதா என்று அவதானத்துடனும்தான் இருக்கும். அதுபோன்றுதான் இவற்றுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அபாரமான மோப்ப சக்தியும். தன்னை நெருங்குவது நண்பனா அல்லது எதிரியா என்பதைத் தூரத்திலிருந்தே மோப்பம் பிடித்து அறிந்துகொள்ளும்.
இவ்வுயிரினம் அதிகம் விரும்பப்படுவதற்குக் காரணம் அவற்றின் உடலில் அடர்ந்திருக்கும் உரோமங்களாகும். இவ்வுரோமங்கள் அவற்றின் தோலை கடும் உஷ்னத்திலிருந்தும் கடும் குளிரிலிருந்தும் பாதுகாக்கின்றன. இந்த உரோமம் நிறைந்த தோலினால் மேலங்கிகளும் (Coat) தயாரிக்கப்படுகின்றன. எனவே முயல்கள் இன்று மனிதர்களால் அவற்றின் தோலுக்காகவும் உணவுக்காகவும் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன. ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் முயல்களின் உரோமங்களை அல்லாஹ் அவப்பிரதேசத்திற்குப் பொருத்தமான முறையில் படைத்துள்ளான். அது அவற்றின் உயிருக்குப் பாதுகாப்புப் பொறிமுறையாகவும் விளங்குகின்றது.
பனிப்பிரதேசத்தில் வாழ்கின்ற முயல்கள் வெண்மை நிற உரோமங்களைக் கொண்டிருப்பதும் பாலைவன முயல்கள் மணல் நிற உரோமங்களைக் கொண்டிருப்பதும் காடுகளில் வாழும் முயல்கள் அதற்கேற்ற கருப்பு அல்லது சாம்பல் நிறத்தைக் கொண்டிருப்பதுமே அவற்றின் பாதுகாப்புப் பொறிமுறையாக உள்ளது.
பெரும்பாலும் முயல்கள் நிலக் கீழ் வலைகளை அமைத்துக்கொண்டு அதில்தான் வாழ்கின்றன. இவை பகல் நேரங்களில் அதிகம் வெளியே சஞ்சரித்துத் திரிவதில்லை. இரவு நேரங்களில்தான் உணவிற்காக வெளியிறங்குகின்றன. வேட்டை மிருகங்கள் அந்நேரத்தில் அதிகம் காணப்படாததுமே இவை இரவில் வெளியிறங்கக் காரணம். இருளில் தெளிவாகப் பார்க்கும் பார்வைத் திறனையும் அல்லாஹ் அவனது இப்படைப்புக்கு வழங்கியுள்ளான்.
முயல்கள் தாவர உண்ணிகளாகும். கொடிகளையும் செடிகளையும் சிறு புற்களையும் கிழங்குகளையும் இவை அதிகம் உட்கொள்கின்றன. கரட் முயல் விரும்பி உண்ணும் ஒரு உணவு. இவற்றை இலகுவாகக் கொறித்து உண்பதற்கென்றே அவற்றின் வாயில் முன்பகுதியில் இரண்டு கொரிக்கும் நீண்ட பற்கள் காணப்படுகின்றன. இவை இவற்றுக்கு வசீகரமான தோற்றத்தையும் வழங்குகின்றன.
காட்டில் வாழும் பிற விலங்கினங்களைப் போலவே முயல்களும் தமக்கொன ஒரு பகுதியைச் சூழ அடையாளமிட்டு அதனை வாழிடமாக எடுத்துக்கொள்கின்றன. அவ்வெல்லைக்குள்ளேயே வாழவும் செய்கின்றன. முயல்களின் நாடிப்பகுதியில் உள்ள ஒரு வகைச் சுரப்பியிலிருந்து (Gland) சுரக்கும் வாசனைப் பதார்த்தம் மூலம் தமது இடத்தை எல்லையிட்டு அடையாளப்படுத்துகின்றன. எனவே வேறு முயல்கள் அதனுள் பிரவேசிக்கமாட்டா.
பொதுவாக முயல்களில் பெண் முயல் ஆண் முயலைவிடவும் அளவில் பெரியனவாக இருக்கும். பெண் முயல் ஒரு தடவையில் மூன்று முதல் ஐந்து குட்டிகளை ஈனுகின்றது. பனிப்பிரதேச முயல்கள் வருடத்திற்கு 13 தடைவைகள் குட்டிகளை ஈனுகின்றன. குட்டி ஈனும் பருவத்தை எட்டியதும் தாய் முயல் சிறியதொரு வலையை அமைத்த பின் அற்புதமான வேளையொன்றைச் செய்கின்றது. என்னவெனில் வலையை அமைத்ததும் தனதும் தனது ஆண் முயலினதும் உடலில் உள்ள உரோமங்களைக் கொறித்து எடுத்து அதனை வலையினுள் தமது குட்டிகளுக்கான பஞ்சு மெத்தை போன்று பரத்திவிடும். அதன் பின்புதான் அதில் குட்டிகளை ஈனும்.
பிறக்கும் குட்டிகள் கண்களை மூடிய வண்ணம் உடலில் மயிர்களே இல்லாதுதான் பிறக்கின்றன. இவை மூன்று வாரங்கள் செல்லும்வரை தாய் முயலிடம் பாலருந்தியே வளர்கின்றன. முயலின் பாலில் அதிகமாக புரொட்டீனும் கொழுப்பும் அடங்கியிருக்கின்றது. எனவே குட்டி முயல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நான்கு கிடைக்கப்பெறுகின்றன. மூன்று வாரங்களின் பின் குட்டிமுயல்கள் தாமாகவே உணவு தேடி உண்ண ஆரம்பித்துவிடுகின்றன. மூன்று மாதங்களை அடையும்போதுதான் ஒரு முயல் அதன் இளமைப் பருவத்தை எட்டியிருக்கும்.
ஆபத்து நேரின் தப்பியோடுவதற்கு இலகுவான நான்கு கால்களின் அமைப்பு, காதின் துல்லியமான கேட்கும் ஆற்றல், அபார மோப்ப சக்தி, இடத்திற்கு ஏற்ற உரோமங்களின் வடிவமைப்பு இம்முயலில் நாம் கண்ட அற்புதங்கள் யாவும் வல்ல நாயன் அல்லாஹ்வே திட்டமிட்டுப் படைத்தவையாகும். இவை ஒன்றும் எதேச்சையாக திடீரென உருவானவையல்ல. இப்பிர பஞ்சத்தையும் அதில் உள்ள யாதொரு படைப்பையும் படைத்தவன் அல்லாஹ் அன்றி வேறு யாருமல்ல.
“அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால் அதற்குக் கூறுவதெல்லாம் “ஆகுக” என்றுதான். (உடனே) அது ஆகிவிடும்” (ஆலு இம்ரான் : 47)
2 comments:
Nice Article for Children
fathima......
good article...........
nice......
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...