இரவு நேரத்தில் பரந்த வயல்
வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள்
விட்டு விட்டு ஒளிர்வதைப்போல நூற்றுக்கணக்கில் மின்மினிப் பூச்சிகள் அப்பகுதியெங்கும்
மின்னி மின்னிப் பறப்பதைக் கண்டு மகிழலாம். உண்மையிலேயே ரசனை உணர்வுடன் பார்ப்பீர்களானால்
இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் உங்கள் உள்ளங்களை ஆட்கொள்ளும். வல்லவனின் படைப்புகள்
யாவுமே அதிசயம்தான். அதில் மின்மினியும் ஒன்றுதான்.
அறிமுகம்
மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில்
Firefly என்று அழைக்கின்றனர்.
. இவை Cleopatra என்ற குடும்பத்தைச்
சேர்ந்த வண்டுகள் ஆகும். அதிக குளிர் பிரதேசமான ஆர்டிக், அண்டார்டிக் பணிப்
பகுதிகள் தவிர்ந்த மற்றைய எல்லா இடங்களிலும் இவை வாழ்கின்றன. நகர்ப்புறங்களை செயற்கை
மின்குமிழ்கள் அலங்கரிக்க கிராமப்புரங்களை மின்மினிப் பூச்சிகள் இன்னும் அழகுற அழங்கரித்து
உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஒவ்வொரு படைப்பிலும் அல்லாஹ் ஏதோ ஒரு விஷேட, அற்புதப் பண்பை வைத்திருக்கின்றான்.
அந்தவகையில் மின்மினிகளிடம் காணப்படுகின்ற விஷேட பண்பு அவை வெளிப்படுத்தும் இயற்கையான
வெளிச்சமாகும். மின்சாரம் இல்லாது ஒளிரும் மின் விளக்குகள்தான் மின்மினிப் பூச்சிகள்.
தோற்ற அமைப்பு.
உலகில் 2000 வகையான மின்மினிப்
பூச்சிகள் இருப்பதாக கண்டுபிடிப்புத் தகவல்கள் கூறுகின்றன. மஞ்சள், பச்சை, கறுப்பு, பழுப்பு போன்ற நிறங்களில்
அவை வித்தியாசமான அளவுகளில் வாழ்கின்றன. இரு பக்கமாக இரண்டு சிறகுகளும் ஆறு கால்களும்
உணர் கொம்புகள் இரண்டும் இவற்றுக்கு உண்டு. பெண் மின்மினி ஆண் மினியைவிட சற்று பெரிதாக
இருக்கும். அதேபோன்று ஆண் மின்மினி பெண்ணின் நிறத்தை விட கடுமையான (Dark) நிறத்தில் காணப்படும்.
ஒளிரும் அற்புதம்.
மின்மினிகள் சுயமாக ஒளிர்வதை
Bioluminescence - உயிரொளிர்வு என விஞ்ஞானத்தில்
அழைப்பர். இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio chemical) முறையாகும். மின்மினிப்
பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப்
பொருள். இது பூச்சியின் light
emitting organ எனும் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளது. இந்த லூசிஃபெரின்
எரி பொருளுடன் லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமும் சுவாசத்தின் போது உட்செல்லும் ஒட்சிசனும்
(oxygen) அவற்றின் கலங்களில்
(cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருளும்
மற்றும் கல்சியம், மக்னீசியம் என்பவையும்
ஒன்றாக கூட்டுச் சேர்ந்து கலவை புரிவதால் அவற்றின் உடலில் ஒளி உற்பத்தியாகின்றது. இவற்றில்
ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளி உற்பத்தியாகாது.
உடலில் உற்பத்தியாகும் ஒளியை
வெளிப்படுத்துவறத்காக ஒளி ஊடுருவும் அமைப்பு (Transparent) அவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது.
அதிலிருந்து பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களில்
510 முதல் 670 நனோமீட்டரிற்கு உட்பட்ட
ஒளி அலைகளை அவை வெளியிடுகின்றன. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச்
செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செயற்படுவனாலேயாகும்.
ஒளியின் சக்தி.
மெழுகுவர்த்தி அல்லது மின்விளக்கு
போன்றவற்றிலிருந்து வரும் ஒளியில் வெப்பம்தான் அதிகம். ஆனால் மின்மினிகளில் எந்த வெப்பமும்
உண்டாவதில்லை. இதனை ஆச்சரியமிக்க ஒரு விடயமாகவே விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். ஏனெனில்
மின் குமிழ் ஒன்று எரியும்போது அதில் இருந்து 10%மான வெளிச்சமே வெளிவருகின்றது. மீதி 90%உம் வெப்பம்தான்.
ஆனால் மின்மினிகளிலிருந்து மொத்தமாகவே 100% வெளிச்சம் மட்டுமே வெளியாகின்றது. அதனால்தான் மின்மினிகளைத்
தொட்டாலும் சுடுவதில்லை. அந்த ஒளியை குளிர் வெளிச்சம் (Cold Light) என்று கூறுவார்கள்.
தூக்கணாங் குருவி போன்ற சில பறவைகள் தமது கூடுகளில் வெளிச்சத்திற்காக மின்மினிகளைப்
பிடித்து வைத்துக்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.
ஒளியை வெளிப்படுத்துவதன் காரணம்.
இவ்வாறு மின்மினிகள் ஒளியை
உற்பத்திசெய்து அதனை வெளிப்படுத்துவதற்கு முக்கியமான சில காரணங்கள் காணப்படுகின்றன.
ஒன்று ஏனைய மின்மினிகளுடன் தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்காக இவ்வாறு ஒளியை
வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது ஆண், பெண் மின்மினிகள்
தமது துணையைக் கவர்ந்துகொள்வதற்காகவும் இந்த ஒளிப் பாய்ச்சல் செயற்பாட்டைச் செய்கின்றன.
மூன்றாவது. கவர்ந்திலுத்த துணையுடன் இணை சேரும்பொழுதும் ஒளியை வெளிப்படுத்துகின்றன.
நான்காவது தமக்கு உணவுத் தேவை ஏற்படும்போது சிறிய பூச்சிகளையும் புழுக்களையும் வேட்டையாடி
உண்பதற்கு அவற்றைத் தம்பால் கவர்ந்திலுப்பதற்கும் ஒளியை வெளிப்படுத்துகின்றன.
ஐந்தாவது ஆபத்து நேரும்போது
ஏனைய பூச்சிகளுக்கு எச்சரிக்கை சமிக்ஞையாக தகவல் அனுப்பி உசார்படுத்தவும் ஒளியை வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறு பல்வேறு செயற்பாடுகளுக்கு இவை தமது உடலில் ஒளியை உற்பத்திசெய்து அதனை வெளிப்படுத்தி
பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பரந்த வயல் வெளியையோ, மரத் தோப்பையே அவதானித்தால்
அனைத்து மின்மினிகளும் ஒரே தாளத்தில் சிலபோது ஒரே நேரத்தில் விட்டு விட்டு ஒளிர்ந்து
இத் தொடர்பாடல் செயன் முறைகளைப் பேணும் அழகைக் கண்டுகொள்ளலாம்.
வாழ்க்கை முறை.
மின்மினிகள் தமது வாழும் பகுதியை
நிலமும் நீர் நிலைகளும் அடங்கிய ஓரளவு குளிர் சீதோஷ்ன நிலையுள்ள இடங்களைத் தெரிவுசெய்துகொள்கின்றன.
ஏனெனில் அவற்றின் இனப் பெருக்கத்திற்கும் உணவுக்கும் வசதியான இடம் இதுதான். ஆண், பெண் மின்மினிகள்
இணை சேர்ந்து ஓரிறு நாட்களில் பெண் பூச்சி நிலத்தில் அல்லது காய்ந்த மரங்களில் சிறு
துளையிட்டு முட்டை இடும். மூன்று வாரங்களின் பின் முட்டைகளில் இருந்து குஞ்சுப் புழுக்கள்
வெளிவரும். இவை லாவா (larvae)
என்று அழைக்கப்படுகின்றன.
பிறந்து மூன்று நாட்க்களில் இந்தக் குஞ்சு லாவாக்களும் ஒளியை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.
இவையும் ஒளியை வெளிப்படுத்துவதால் இவற்றுக்கு Glowworms என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புழுக்கள்
துவாரங்களிலேயே சில வாரங்களைக் கழிக்கும். பின்பு கால்கள் முளைத்த மரவட்டைகளாக மாறியதும்
துவாரங்களில் இருந்து வெளியே வந்து தமக்கான உணவுகளைத் தாமே தேடிக்கொள்ள ஆரம்பிக்கும்.
ஒரு மாத காலம் செல்லும் போது சிறகுகள் எல்லாம் முளைத்த மின்மினிப் பூச்சியாக இவை வளர்ச்சியடைந்து
மின்னி மின்னிப் பறக்க ஆரம்பிக்கின்றன.
உணவு முறை.
சிறு பூச்சிகள், அட்டை, நத்தை, மண் புழு போன்றவற்றை
தமது வெளிச்சத்தை வெளிப்படுத்தி கவர்ந்து இழுத்து வேட்டையாடி உண்டு வளரும். இன்னும்
சில வகை புழுக்களும் பூச்சிகளும் தாவர இலைகளை உண்டு வாழும். வெயில் காலங்களில் உணவினை
நன்கு எடுத்துக்கொண்டு வளர்ந்து வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில்
சென்று ஒளிந்திருக்கும். இவை இரையை வேட்டையாடும் விதமே வித்தியாசமாக இருக்கும். முதலில்
இரையைப் பிடித்து தன் முகப்பகுதியில் இருக்கும்
கத்தி போன்ற கொடுக்கால் கொட்டி மயக்கமடைச் செய்கிறது. அதன்பின் செரிமான நொதியங்களையும்
இன்னும் சில வேதியியல் பொருள்களையும் இரையினுள் செழுத்துகின்றது. இதனால் இரையானது ஒரு
சில மணி நேரத்தில் கூழ்மமாக மாறிவிடும். பின்னர் இவ் இரையைச் சுற்றி மின்மினிப் புழுக்களும்
மின்மினப் பூச்சிகளும் அமர்ந்துகொண்டு தங்களுக்குத் தேவையான அளவு உணவை உறிஞ்சிக் குடிக்கின்றன.
அழிந்துவரும் மின்மினிகள்.
இன்றைய காலத்தில் அழிவுக்குள்ளாகி
வரும் பல்வேறு உயிரினங்களின் வரிசையில் மின்மினிகளும் இடம்பெறுகின்றன. முன்பெல்லாம்
இரவு நேரங்களில் தாராளமாகக் காணக்கிடைத்த மின்மினிகளை இன்று அரிதாகவே காண முடியுமாக
உள்ளது. இன்றைய சிறார்களில் மின்மினிப் பூச்சிகளைக் கண்டிருப்பவர்கள்கூட அரிதாகவே இருப்பார்கள்.
சில நாடுகளில் மின்மினிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள்கூட முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் சில காட்டுப் பகுதிகளில் மின் விளக்குகள் போடுவதைத் தடைசெய்து பாதுகாக்கப்பட்ட
பகுதியாக அறிவித்துள்ளனர். அபரிமிதமான நகரமயமாக்கலும், இரவைப்பகலாக்கும்
ஒளி விளக்குகளும் பூச்சிக் கொள்ளி நாசினிகளும்தான் மின்மினிகளின் அழிவிற்கு முதற்தரக்
காரணியாகியுள்ளன. இறைவனின் படைப்பாற்றலுக்கு நிகரே இல்லை. அல்ஹம்துலில்லாஹ்!
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
B.A
2 comments:
பாரகல்லாஹு சகோதரரே!
இன்ஷாஅல்லாஹ்!
தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான ஆக்கங்களை கொடுங்கள்.அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!
பாரகல்லாஹு ஃபீ இல்மிக வ ஹிக்மதிக!
பாரகல்லாஹு ஃபீ இல்மிக!
இன்ஷாஅல்லாஹ்!
தொடர்ந்து சமூகத்திற்கு தேவையான செய்தியை கொடுங்கள்.அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...