பொதுவாகவே இறந்த சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
* உப தலைப்புகள்.
1. மண்ணைக்கொண்டுதான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
2. ஆரம்ப காலங்களில் சடலங்களை என்ன செய்தார்கள்?
3. புதைப்பதால் இடநெருக்கடி ஏற்படுமா?
4. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு புதைப்பதே சிறந்தது.
5. பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் புதைப்பதே மலிவானது.
6. புதைத்தபின்பு அதிலிருந்து வைரஸ் பரவுமா?
7. ஒரு எக்ஸ்பரிமன்ட் செய்து பார்க்கலாம்.
8. நோய்க் கிருமிகளைக் கொல்லும்
மண்.
9. நாய் வாய்வைத்த பாத்திரத்தை ஏன்
மண்கொண்டு கழுவவேண்டும்?
10. இறந்து சில மணி நேரங்களுக்கு
உடல் வேதனையை உணர்கின்றது.
11. எரித்து சாம்பலாக்கினாலும் உயிர்த்தெழுவோம்.
12. நல்லடக்கம் செய்வது என்பது கடமை, மத உரிமை.
13. உசாத்துணைகள்.
இறைவன் மண்ணைக்கொண்டுதான்
மனிதனையே படைத்திருக்கின்றான். மண்ணின் மைந்தன் என்று சொல்வது அதனால்தான். திருக்குர்ஆன்
இவ்வாறு கூறுகின்றது. ''நிச்சயமாக நாம் மனிதரைக் களி
மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்''. (அல் குர்ஆன் 23:12). இன்று இந்த நவீன அறிவியல்
வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியின் நிலப்பரப்பில் காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள், சத்துக்கள் மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சராசரியாக ஒரு உயிரினம்
95% கார்பன், ஹைட்ரஜன், ஒக்சிஜன், நைட்ரஜன், பொஸ்பரஸ், சல்பர் மற்றும் இரும்பு ஆகிய மூலக்கூறுகளைப் பெற்றுள்ளன. இவையல்லாத மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் உள்ள 'சுளாலா'
(sulala) என்ற அரபு வார்த்தையின் பொருள் 'தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருள் (Extract)'
என்பதாகும். அதாவது 'திரவசாறு - Essence'
என்று கூறலாம். இதனைத்தான் அல்லாஹ் 'களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்' என்று அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். எனவே மனிதன் மரித்ததும் அந்த உடலை மண்ணுக்கே
கொடுப்பதுதான் மிகப் பொருத்தமானது. ”உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு” என்று சொல்லும் வழக்கம்
இதனையே குறிக்கின்றது.
2.
ஆரம்ப காலங்களில் சடலங்களை என்ன செய்தார்கள்?
உலகில் தோன்றிய முதல்
மனிதர் ஆதம் (அலை) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்தபோது அந்த
சடலத்தை என்ன செய்யவேண்டுமெனத் தெரியாது திகைத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சடலங்களைப்
புதைக்கவேண்டும் என்ற முதல் பாடத்தை காகத்தின் மூலம் அல்லாஹ் மனித சமுதாயத்துக்குக் கற்றுக்கொடுத்தான்.
அன்று தொட்டு இறந்து போன சடலங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் வழக்கம்தான் காலா காலமாக வரலாறு நெடுகிலும் இருந்துவந்துள்ளது.
கற்காலம் என்று சொல்லப்படும் காலத்து புதை படிவ ஆதாரங்கள்கூட இதனையே காட்டுகின்றன.
எகிப்து காலங்களில் கூட இறந்த உடல்களை பெட்டிகளில் போட்டு மம்மிகளாக வைத்தார்கள். இறக்கும்
முன்போ அல்லது இறந்த பின்போ தண்டிப்பதற்காகத்தான் தீயிலிட்டு எரித்தார்கள்.
இறந்த பின்னர் அந்த உடலைவிட்டும்
பிரியும் ஆன்மா மீண்டும் அந்த உடலினுள் நுழைய நெருங்குவதாகவும் உடலை எரித்தால்தான்
அந்த ஆன்மா முழுமையாக சென்று விடுவதாகவும் சில மதம் சார்ந்த நம்பிக்கைகள்
தோன்றிய பிற்பாடுதான் இறந்த உடல்களை தகனம் செய்யும் வழக்கம் உருவாகியது.
சடலங்களைப் புதைப்பதென்பது
முஸ்லிகளுக்கு மட்டும் உரித்தானதொன்றல்ல. ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், முஸ்லிமல்லாத அரேபியர்கள், ரஷ்யர்கள் அனைவரும் புதைப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். யூத, கிறிஸ்தவ மதங்களிலும் எரிப்பதை விடப் புதைப்பதே பின்பற்றப்படுகின்றது. பண்டைய தமிழ்ச்
சமூகத்திலும் புதைக்கும் வழிமுறைதான் இருந்து வந்துள்ளது. இந்து மதத்தில் எரிப்பதும்
புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து
‘அதிஷ்டாணம்’ கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். என்னதான் எரித்தாலும்கூட சிறு
குழந்தைகளை ஒருபோதும் எரிக்கும் பழக்கம் எங்கும், எந்த மதத்திலும் இருந்ததில்லை. புதைக்கவே செய்தார்கள். இலங்கையில்தான் முதற்தடவையாக
இந்தக் கொடூரம் அரங்கேரியுள்ளது.
3.
புதைப்பதால் இடநெருக்கடி ஏற்படுமா?
சனத்தொகை
பெருகி வருவதால் இறந்தவர்களைப் புதைக்கும்போது இடநெருக்கடி ஏற்படுகிறது. எனவே இறந்த உடலை எரிப்பதுதான் நல்லது என்று சிலர் கூறுகின்றனர். மனித வரலாற்றில் பிறப்பும்
இறப்பும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தாலும் சில காலகட்டங்களில் பிறப்பை விட இறப்பு
மிகுந்து விடுகின்றது. உதாரணமாகப் போர்கள், விபத்துகள், சுனாமி, சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
இயற்கையாக நிகழும் இறப்பாக இருந்தாலும் எதிர்பாராத பேரழிவுகளாக இருந்தாலும் உலகம் தோன்றியது
முதல் இதுநாள் வரை இறந்த சடலங்களைப் புதைக்க இடமில்லை என்ற இடநெருக்கடி எந்த நாட்டிலும்
இருந்ததாகத் தெரியவில்லை. வரலாற்றில் நடந்த பல போர்களில் கொத்துக் கொத்தாக லட்சோப லட்ச
மக்கள் இறந்தபோதெல்லாம் அவர்களது உடல்களைப் புதைத்தார்களே தவிர எரிக்கவில்லை. அத்தோடு
இந்தப் பூமியின் மொத்த நிலப்பரப்பில், மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலப்பரப்பு என்பது சிறியதொரு பகுதிதான். இன்னும் ஏகபோகமான நிலப் பரப்பு வெறுமையாகத்தான்
இருக்கின்றது. இப்படிப்பார்க்கும்போது கூட மயான இடநெருக்கடி என்பது உலகளாவிய பிரச்சினையன்று.
அப்படி பிரச்சினையாக வரப்போவதுமில்லை.
மேலும் உலகில் மனிதன்
மட்டும் இறப்பதில்லை. உயிருள்ள லட்சோப லட்ச ஜீவராசிகளுக்கும் மரணம் தொடர்ந்தும் நிகழ்ந்து
கொண்டேதான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு
மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே
இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும்
வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன. இதுகாலவரை
இதனால் எந்த இட நெருக்கடிகளோ, நோய்த் தொற்றுக்களோ, சூழல் மாசடைவுகளோ நடந்ததில்லை.
புதைப்பதால் இடநெருக்கடி
ஏற்படுவதற்குக் காரணம் அந்த இடத்தில் சமாதிகளும், கல்லறைகளும் கட்டுவதால்தான். இதனால்தான் ஆண்டாண்டு காலத்திற்கும் மீண்டும் அந்த
இடத்தைப் பயன்படுத்த முடியாமல் செல்கின்றது. கல்லறை கட்டுவதால் பிற்காலத்தில் அதனையே
வணக்கஸ்தலமாகவும் மாற்றுகின்ற சூழ்நிலை உருவாகின்றது. இதனால்தான் இஸ்லாம் இறந்தவர்களை
அடக்கம் செய்தபின் அந்த இடத்தில் அடையாளப் படுத்தும் விதமாக கல்லறைகள் அமைப்பதைத் தடைசெய்திருக்கின்றது.
எனவே இந்த இடநெருக்கடிப் பிரச்சினை அங்கு ஏற்படாது.
இஸ்லாம், இறந்தவர்களின் அடக்கஸ்தலத்தை வெறும் மண்ணறையாகவே கருதுகிறது. இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களில்
சமாதி கட்டுவதையோ அல்லது அலங்கரிப்பதையோ விரும்பவில்லை. இரண்டு சான்களுக்குமேல் மண்ணறையை
உயர்த்துவதைக்கூட நபிகளார் தடுத்துள்ளார்கள். ஒரு சிற்றூரில் வாழும் நூற்றுக்கணக்கான, அல்லது ஒரு பேரூரில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இரண்டிலிருந்து நான்கு
வீடுகள் கட்டிக் கொள்ளக் கூடிய நிலப்பரப்பே மயான பூமியாக, மையவாடியாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு உடலை அடக்கம் செய்த பின்னர் அடுத்த உடல்
அதிலிருந்து மூன்று அல்லது நான்கு அடிகள் மாத்திரமே தள்ளி அடக்கம் செய்யப்படுகின்றது.
அப்படி ஒன்றொன்றாக அடக்கம்செய்து ஒரு முறை முழு மயான பூமியையும் சுற்றி வரவே பல ஆண்டுகள் செல்லும். அதற்குள் ஆரம்பமாகப்
புதைக்கப்பட்ட உடல்களும் மண்ணோடு மண்ணாகி இருக்கும். எனவே மீண்டும் அந்த இடத்தின் மீது
மண்போட்டு, சீர்செய்து புதிய சடலங்களை அடக்கம் செய்யலாம். பொதுவாக
இந்த வழிமுறைதான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகின்றது. இவ்வாறு, பல்வேறு காலகட்டங்களில் மரணித்தவர்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் புதைப்பதால் முஸ்லிம்களின்
மயான பூமியில் இடநெருக்கடி ஏற்பட வாய்ப்பேயில்லை. மேலும்
இறந்தவர்களுக்கு சமாதி கட்டுவதை இஸ்லாம் தடுப்பதால், இஸ்லாமிய முறைப்படியான சவ அடக்கத்தில் இடநெருக்கடி அறவே ஏற்படப்போவதில்லை.
4.
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு புதைப்பதே சிறந்தது.
அறிவியல் ரீதியாய் பார்த்தாலும்
கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பொருளாதார சிக்கனம், நடைமுறைச் சாத்தியம் ஆகிய காரணிகளைக் கொண்டு ஒப்பீடு செய்யும் போதும் எரிப்பதைவிடப்
புதைப்பதே சிறந்ததாகும். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால் மனித உடல் எரியூட்டப்படுவதால்
எழும் புகை மற்றும் மாசுக்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுகின்றது. குப்பைகளைக்கூட எரிப்பதால்
சூழல் மாசடைகின்றது என்றுதானே குப்பைகளை மீள் சூழற்சி செய்யுமாறு வேண்டுகின்றனர். சாதாரண
குப்பைக்கே அந்த நிலை என்றால் பெருவாரியாக சடலங்களை எரிக்க ஆரம்பித்தால் சூழல், வளி என்னவாகும்?
அத்தோடு பினச் சாவடிகளில்
சடலங்களை எரிப்பதற்காக அதிகளவிலான மரக் கட்டைகள், விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன. எழுதுகின்ற
காகிதங்களையே மீள் சுழற்சி செய்வதால் காடளிப்பைத் தடுக்கலாம் என்று பேசப்பட்டுவரும்
இன்றைய நாட்களில் சடலங்களை எரிப்பதற்காக மரக் கட்டைகளை நேரடியாகவே பயன்படுத்துவதென்பது
ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று. அழுகி, நாற்றமெடுத்த சவம் கூட புதைப்பதால் மண்ணுக்குள் அடங்கிவிடும். ஆனால் எரியூட்டப்படுவதால்
எழும் புகை, நாற்றம் பல மைல் தூரங்கள் வரை காற்றில் பரவி, ஆரோக்கியமான காற்றை மாசுபடுத்தி சுற்றியிருக்கும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகளைக்கூட பாதிப்படையச் செய்யும்.
ஐக்கிய நாடுகள் சபையின்
சுற்றுச்சூழல் கண்கானிப்பு அமைப்பின் Persistent Organic Pollutants
(POP) அறிக்கையின்படி சடலங்கள் எரியூட்டப்படுவதால் கொடிய விஷத்தன்மையுள்ள
நைட்ரஜன் ஒக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமில மழைக்குக் காரணமான கந்தக டையாக்சைடு ஆகியவை வெளியேறுகின்றன. சடல எரிப்பால்
வெளியாகும் டையாக்ஸினின் அளவு 0.2% ஆகும். உலகின் பெரும்பாலான
பகுதிகளில் சடலங்களைப் புதைப்பதே வழக்கத்தில் உள்ளதால் சூழல் மாசடைதல் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.
அப்படியல்லாமல் அதிகமான சடலங்கள் எரிக்கப்படுமானால் விளைவு விபரீதமாகுமென POP இன் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
5. பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் புதைப்பதே மலிவானது.
இறந்தவர் குடும்பத்தினரின் நிதிநிலையைக் கணக்கிட்டால் சடலத்தை எரிப்பதற்கான செலவு, புதைப்பதற்கு ஆகும் செலவை விட அதிகமே. சடலம் நன்றாக எரிவதற்கு சுமார் 1600 முதல் 2000 டிகிரி பாரண்ஹீட் வெப்பம் தேவைப்படும். இதற்கான கருவிகளின் விலையும் அதிகம். பெருவாரியான மின்கட்டணச் செலவும் ஏற்படுகின்றது. சடலங்களை எரியூட்டத் தேவையான மின்சாரம் நகர்ப்புறங்களில் மட்டுமே தடையின்றிக் கிடைக்கும் என்பதாலும் குறைந்த அளவிலான மின்மயானங்களே இருக்கின்றன என்பதாலும் இதற்கான கட்டணச் செலவுகளும் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகள் புதைப்பதைவிட அதிகமே.
சாதாரணமாக தற்போது இலங்கையில் ஒரு சடலத்தை
எரியூட்டுவதற்காக 50,000 ரூபா முதல் 80,000 ரூபா வரை செலவாகின்றது. இதே புதைப்பதாக இருந்தாலும் அதிலும் இஸ்லாம் கூறும் அமைப்பில்
ஒரு சடலத்தைப் புதைப்பதாக இருந்தால் 10,000 ரூபாக்களுக்குள் காரியத்தை நிறைவேற்றிவிடலாம். அதேபோன்று அனைத்து நாடுகளிலும்
ஒரு இடத்தில் ஒரு சமயத்தில் ஒரு உடலை மட்டுமே எரிக்க முடியும். அதற்கேற்றவகையில்தான்
இவ் ஆலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சூழல் மாசடைவதால் ஒரு இடத்தில்
ஒரே சமயத்தில் பல உடல்களை எரிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன. சடலங்களை எரிப்பதன்
பாரதூரத்தினால்தானே இத்தகைய சட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன?
6.
புதைத்தபின்பு அதிலிருந்து வைரஸ் பரவுமா?
கோவிட் தொற்றுக்குள்ளானவர்களது
உடலை புதைக்கும்போது அதிலிருக்கும் தொற்றுக் கிருமி நிலத்தடி நீருடனும் மண்ணுடனும்
கலந்து பரவும் வாய்ப்புள்ளதாக சில வாதங்கள் (இலங்கையில்) முன்வைக்கப்படுகின்றன. இது
சாத்தியமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.
கொரோனாத் தொற்று ஆரம்பித்ததிலிருந்து
அதாவது 2020 ஜனவரி 31ம் திகதியிலிருந்து மார்ச் மாதம் இறுதிவரை உலக விஞ்ஞானிகளிடம் கொரோனா பற்றிய போதுமான
அறிவு இருக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் செய்து தகவல்களையும் தரவுகளையும் சேகரித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த ஆய்வு, ஆராய்ச்சிகளின் பின்னர் ஏனைய வைரஸ் கிருமிகள் போன்றே
கோவிட் – 19 தொற்றுக் கிருமியும் இறந்த ஒரு கலத்திலிருந்து பரவ
வாய்ப்பில்லை என்பதை சரியான விஞ்ஞான முடிவுகளுடன் உறுதிப்படுத்தியதன் பின்புதான் உலக
சுகாதார ஸ்தாபானம் - WHO கொரோனாவால் பீடிக்கப்பட்ட ஒருவர்
இறந்தால் உரிய வழிகாட்டல்களுடன் அந்த சடலத்தை புதைக்கவும் முடியும் எரிக்கவும் முடியும்
என்ற தீர்மானத்தை வழங்கியுள்ளது. அதன்படி 194 உலக நாடுகளில் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள சடலங்களை புதைத்தும் எரித்தும் வருகின்றார்கள்.
இவ்வளவு காலத்திற்குள் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து, அடக்கம் செய்யப்பட்ட உடலிலிருந்து வைரஸ் பரவியதாக இதுவரை எந்த நிகழ்வுகளோ, மருத்துவ பதிவுகளோ இல்லை.
அதேபோன்று இந்தத் துறைகளில்
கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் வளர்முக நாடுகளில் பணிபுரிந்து வருகின்ற இலங்கையைச்
சேர்ந்த டொக்டர் திஸ்ஸ விதானகே, டொக்டர் பபா பலியவர்தன
ஆகியோரும் இதே கருத்துக்களைத்தான் கூறுகின்றார்கள். மட்டுமல்லாது ”தற்போது இலங்கையில் இதுகூடத் தெரியாத விஞ்ஞானிகளும் வைத்தியர்களுமா இருக்கின்றார்கள்?” என்று நகைப்புடனும் கவலையுடனும்
அவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
கொரோனா தொற்று பரவ பிரதான காரணமாக இருப்பது, தும்மும் போதும், இருமும் போதும் நுண்துகள்கள் சிதறி பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் தொற்று ஏற்படாது. ஒருவர் இறந்ததும் அவரது உடலில் வைரஸ் தொற்று பல்கி பரவுவது நின்று போகும். சடலத்தை புதைப்பதால் தொற்று பரவாது. ஆழமான குழியை தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. மூச்சுப்பாதையைப் பாதிக்கும் எந்த வைரஸும் இறந்தவர்கள் மூலம் பரவாது. கொரோனாவாக இருக்கலாம், இன்புலுவன்ஸாவாக இருக்கலாம், HIV, சாஸ், அந்த்ரெக்ஸ் எந்த நோயாகவேண்டுமானாலும் இருக்கலாம். இவை ஒன்றும் இறந்த உடலிலிருந்து பரவுவதில்லை என்பதை உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் எமது இலங்கை நாட்டில் மட்டும்தான் பரவும் என்ற ஊகத்துடன் எரிக்கவே வேண்டும், புதைக்கக் கூடாது என்ற தீர்மானத்தில் உள்ளனர்.
அத்தோடு இலங்கை கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் தரம் 10 இன் விஞ்ஞானப் புத்தகத்தில் ”அங்கிகளின் சிறப்பியல்புகள்” என்ற பாடத்தில்கூட வைரஸ்கள்
உயிருள்ளவற்றில் மாத்திரமே வாழ்கின்றன. இறந்தவற்றில் அவை வாழ்வதில்லை என்று அச்சிடப்பட்டிருக்கின்றது.
தற்போது மாணவர்கள் எழுப்பும் கேள்வி என்ன தெரியுமா? பாடப்புத்தகத்தில் இருக்கும் விடயமும் அதனை பாடத்திட்டத்தில் இணைத்த பேராசிரியர்களும்
அதனைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும் பிழையா? அல்லது இறந்த உடலிலிருந்து வைரஸ்கள் பரவும் என்று தற்போது சொல்லிக்கொண்டிருக்கும் கருத்து
பிழையானதா? என்பதுதான். பாடப்புத்தகத்தில்
இருக்கும் விடயம் பிழையென்றால் அடுத்த வருடம் இது திருத்தப்பட்டல்லவா வெளியிடப்பட வேண்டும்? முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைத்த கதைதான் இது.
7.
ஒரு எக்ஸ்பரிமன்ட் செய்து பார்க்கலாம்.
வெறும் ஊகத்துடன் அநியாயமாக
ஜனாஸாக்களை எரித்து மனிதர்களின் உணர்வுகளையும் பொசுக்கி விடாமல் கொரோனாத் தொற்றுக்குள்ளான உடலை அடக்கம்
செய்தால் அப்பிரதேசத்தில் விபரீதங்கள் ஏற்படுமா என்று ஒரு எக்ஸ்பரிமன்ட் செய்து பார்த்தால்
பிரச்சினை முடிந்துவிடுமல்லவா? சர்வதேச மருத்துவ உலகம் ஏற்கனவே பல ஆய்வுகள்
செய்துதான் இறந்த உடலிலிருந்து கொரோனாக் கிருமி பரவுவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றது.
உலக சுகாதார அமைப்பும் அதனால்தான் கொரோனாத் தொற்றினால் இறந்த ஒருவரை புதைக்கவும் முடியும்
எரிக்கவும் முடியும் என்ற வழிகாட்டலை வழங்கியிருக்கின்றது. இருந்தாலும் எமது அரசாங்கத்திற்கு
அதில் திருப்தி இல்லை என்றிருந்தால் மாலைத் தீவிற்கு ஜனாஸாக்களை அனுப்பி பல இலட்சங்கள்
செலவழிப்பதை விட்டுவிட்டு அந்தப் பணத்தை வைத்து எமது நாட்டிலேயே ஒரு ஆராய்ச்சியை செய்துபார்க்கலாமே.
மக்கள் வாழாத ஒரு பகுதியைத் தெரிவு செய்து, அதனை Restricted area ஆகப் பிரகடனப்படுத்தி, கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரது சடலத்தை தகுந்த பாதுகாப்புகளுடன், உரிய முறைப்படி அடக்கம் செய்யவேண்டும். அடக்கம் செய்து, ஒரு வாரமோ, ஒரு மாதமோ அந்த இடத்தைக் கண்காணித்து அதன் பின்னர் அடக்கம்
செய்த அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மண்ணை, கல்லை, நீரை, புழு, பூச்சிகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் புதைப்பதால்
கொரோனா பரவுகின்றதா? இல்லையா? அடக்கப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம் கொரோனாக்
கிருமிகள் பரவி இருக்கின்றன? என்பதையெல்லாம் தெட்டத்
தெளிவாக அறிந்துகொள்ள முடியும். ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள்கூட தகுதியுள்ளவர்களாகவும்
நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும். தற்போது ஏற்பட்டிருக்கும் இப்பிரச்சினையைத் தீர்க்க
சிறந்த, சரியான வழி இது என்று நினைக்கின்றேன். தெரியாத்தனமாக
இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடிக்கலாம். தெரிந்துகொண்டே
வரட்டுத்தனமாக செய்கின்றபோது இந்த ஆராய்ச்சியெல்லாம் சுத்த வேஸ்ட்தான். தூங்குகின்றவனை
எழுப்பலாம். தூங்குவதுபோன்று நடிப்பவனை எழுப்ப முடியாதல்லவா?
8.
நோய்க் கிருமிகளைக் கொல்லும் மண்.
மண்ணுக்கு அபாரமானதொரு
சக்தி காணப்படுகின்றது. இறந்த நிலையில் மண்ணில் ஏதும் வீழ்ந்தால் அதனை மண் உக்கி, மக்கவைக்கின்றது. காய்ந்துபோன மரங்களாக, செத்துப்போன விலங்குகளாக் கூட இருக்கலாம். அதே உயிருள்ள ஒன்று மண்ணில் வீழ்ந்தால்
அதனை பக்குவமாக வளர்த்தெடுக்கும். விதையாக இருக்கலாம், கிளையாக இருக்கலாம். ஆமை, முதலை, சில பாம்புகள், ஓணான் போன்றவை மண்ணில் வலைதோண்டி
முட்டைகளை இட்டுவிட்டு மண்ணால் மூடிவிடும். ஆனால் இவற்றை அதே மண் சூட்டைக் கொடுத்து
உயிர்கொடுத்து வெளியேற்றுகின்றது. உண்மையிலே அற்புதம்தான்.
மண் என்பது மருத்துவக்
குணம்மிக்கது. அதனால்தான் மண் குளியல் இயற்கை மருத்துவத்தில் முக்கிய சிகிச்சையாக இருக்கிறது.
அத்தோடு புற்றுமண், கடல் மண், ஆற்று மண் எல்லாம் மருத்துவ சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணில்
தாமிரம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு, கந்தகம் போன்றவைகளும், உயிர் சத்துக்களும் நிறைந்துள்ளன.
மண் சிகிச்சைக்கு தேவைப்படும் மண்ணை, சுத்தமான இடத்தில் 4 அடி ஆழத்தில் தோண்டி எடுப்பார்கள்.
பின்னர் அந்த மண்ணைக்கொண்டு தோல், எழும்பு மற்றும் இன்னும்
பல நோய்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.
காரணம் மண்ணில் மருத்துவக் குணம் இருப்பதால்தான்.
9. நாய் வாய்வைத்த பாத்திரத்தை ஏன் மண்கொண்டு கழுவவேண்டும்?
இந்த இடத்தில் நபியவர்கள்
கூறிய ஒரு முக்கிய விடயத்தை அவதானிக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் வாய் வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தை ஏழு தடவை தண்ணீரால் கழுவுங்கள். அதில் முதல் தடவை
மண்ணிட்டுக் கழுவுங்கள்” என்றார்கள். (முஸ்லிம்) மற்றுமொரு அறிவிப்பில் ''பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள்.
எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்'' என்றார்கள். (முஸ்லிம்)
நாயின் எச்சிலில் மனிதனுக்கு
அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் முக்கியமானதும்
அபாயகரமானதும்தான் ரேபிஸ் (Rabies virus – RABV) எனப்படும் வைரஸ். இது நமது உடலில் நீரின் மூலமோ, நாய்க் கடியின் மூலமோ உள் நுழைந்தால் 30 முதல் 60 நாட்களுக்குள் மூளையைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான
மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விசர் நாய்க் கடியினால் நோய்த் தொற்றுக்குள்ளான
ஒருவர் இன்னும் ஒருவரைக் கடித்தால் அவருக்கும் இந்த நோய் பீடித்துவிடும். பார்க்கப்போனால்
கொரோனாவை விடப் பயங்கரம். இறுதியில் மிகக் கொடூரமான முறையில் இறப்பெய்தச் செய்கின்றது
இந்த வைரஸ். இதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் முதலில் வீடுகளில் நாய் வளர்ப்பதை
இஸ்லாம் தடுக்கின்றது. அத்தோடு நாய் வாய்வைத்த ஏதேனுமொன்றை நன்றாக மண் இட்டுக் கழுவ
சொல்கின்றது. இந்த இடத்தில் உள்ள கேள்வி ஏன் மண்ணிட்டுக் கழுக வேண்டும் என்பதுதான்.
பாத்திரங்களை மண்ணால்
ஏன் சுத்தம் செய்ய வேண்டும்? நாயின் எச்சிலில் உள்ள
வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிரூபிக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. எனவே இந்த
மூலங்கள் கிருமிகளை அழித்து சுத்தப்படுத்துகிறது. பலவிதமான
நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள்
பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள இவ்வகையான மூலங்கள் அந்தக்
கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர். இந்த
இடத்தில் மற்றுமொரு விடயத்தையும் பார்க்கலாம். தொழுகைக்காக தண்ணீர் கொண்டு வுழு - சுத்தம்
செய்யவேண்டும். அப்படி தண்ணீர் இல்லாவிட்டாலோ, தண்ணீரைப் பயன்படுத்த முடியாவிட்டாலோ மண்ணைக் கொண்டு தயம்மும் செய்யுமாறு இஸ்லாம்
கூறியுள்ளது. தண்ணீர் சுத்தப்படுத்தும் என்பது சரி? அது ஏன் தயம்முமிற்கும் மண் பயன்படுத்தவேண்டும் என்றால் இதுதான் காரணம். மண்ணும், மண்ணில் இருக்கும் மூலங்களும் கிருமிகளை அழித்து சுத்தப்படுத்தும் பணிகளை செய்கின்றது.
10. இறந்து சில மணி நேரங்களுக்கு உடல் வேதனையை உணர்கின்றது.
சமீபத்திய விஞ்ஞான ஆய்வொன்று
இதனை உறுதிப்படுத்துகின்றது. டொக்டர் சேம் பர்னியா அவர்களின் தலைமையில் NYU's Langone
Medical Center இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “ஒருவர் இறந்து அவருடைய இதயம் செயற்பாட்டை நிறுத்திய பின்னரும்
சில மணி நேரங்களுக்கு அவருடைய மூளை மற்றும் உடலில் உள்ள பல கலங்கள் இயங்கிக்கொண்டுதான்
இருக்கும். அந்த நிலையில் இந்த இறந்த மனிதரைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவரால்
உணர்ந்துகொள்ள முடியும். மருத்துவர்கள், தாதிகள் பேசிக்கொள்வதையெல்லாம் அவரால் கேட்க முடியும், தான் இறந்துள்ளதையும் அவரால் உணர முடியும்” எனத் தெரியவந்துள்ளது.
மனிதனுடைய உடலில் இருந்து
அவனுடைய ஆன்மா பிரிந்து செல்வதைத்தான் இறப்பு, மரணம் என்கிறோம். அப்படி ஆன்மா பிரிந்து சென்றாலும் உயிர் குறிப்பிட்ட சில/பல மணி
நேரங்கள் அந்த உடம்பில் இருக்கும். (உயிரும், ஆன்மாவும் (ரூஹும்) வெவ்வேறானவை என்பதைக் கவனத்திற்கொள்க.) எனவே அந்த இறந்த மனிதனால்
பார்க்க, கேட்க, கத்த, கதற முடியும். என்றாலும் சுற்றியிருக்கும் எம்மால் அதனை
அறிய, உணர முடியாது. ஏனென்றால் இந்த உலகில் எமக்கு பார்ப்பதற்கு
இருக்கும் பார்வைச் சக்தி 400 நனோ மீட்டருக்கும் 700 நனோ மீட்டருக்கும் இடைப்பட்டதுதான். கேட்பதற்கு இருக்கும் கேட்டல் சக்தி 20 ஹேட்ஸ் இற்கும் 20,000 ஹேட்ஸ் இற்கும் இடைப்பட்டதுதான்.
எனவே எம்மால் அந்த இறந்த உடல் கதைப்பதையோ, கத்துவதையோ கேட்க முடியாது. என்றாலும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற எல்லா
உயிரினங்களும் இதனைக் கேட்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை நாம் அறிவோம்.
அது எப்படி சாத்தியமென்றால் எம்மை விட அபாரமான பார்வைச் சக்தியும் கேட்கும் சக்தியும்
அவற்றுக்கு இருக்கின்றன என்பதனால்தான். இதனையும் விஞ்ஞானம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இதனால்தான் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள் ”உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருடைய கண்களை மூடிவிடுங்கள்.
ஏனெனில் ஆன்மா கொண்டு செல்லப்படுவதை அவரது பார்வை பின்தொடர்கின்றது” (முஸ்லிம்) அதாவது
ஆன்மா பிரிந்து சென்றாலும் அந்த சடலத்தினால் பார்க்க முடியும். அவ்வாறே அந்த உடலைக்
குளிப்பாட்டும் பொழுது ”தற்போதுதான் ஒரு மலக்கு என்னை நோகடித்துவிட்டுச் சென்றுள்ளார்.
நீங்களும் என்னை நோகடிக்க வேண்டாம். மெதுவாகக் குளிப்பாட்டுங்கள்.” என்று கதறுமென்று நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி) நல்ல மைய்யித்தாக இருந்தால் தன்னை அவசரமாக கொண்டு
சென்று அடக்குமாறும் கெட்ட மைய்யித்தாக இருந்தால் தன்னை எங்கே கொண்டு செல்கின்றீர்கள்? தன்னை அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் கத்தும், இதனை மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற எல்லா விலங்குளும்
செவிமடுக்கும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஆன்மா பிரிந்து சென்றாலும் அந்த சடலத்தினால் கதைக்க முடியும்.
அதே போன்று ஒரு சடலத்தை மண்ணறையில் அடக்கம் செய்து விட்டு அங்கிருந்து மக்கள் திரும்பிச் செல்லும் போது ஏற்படும் காலடி ஓசைகளைக்கூட அந்த ஜனாஸா கேட்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியென்றால் ஆன்மா பிரிந்து சென்றாலும் குறித்த சடலத்தினால் கேட்க முடியும். அம்மண்ணறையின் மீது ஒரு ஈ வந்து அமர்வது கூட மிகப் பெரும் சுமையாக அந்த ஜனாஸாவுக்கு இருக்கும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ்களையும் விஞ்ஞானத் தகவல்களையும் வைத்துப் பார்க்கின்றபோது நாம் இறந்த பின்னரும் சில அல்லது பல மணி நேரங்களுக்கு நமது உடல் வேதனையை உணர்கின்றது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். ஜனாஸாக்களை விரைவாக அடக்கிவிடுங்கள் என்று நபியவர்கள் கூறியது இதனாலாகவும் இருக்கலாம். இறந்த பின்னரும் உடல் இதனையெல்லாம் உணர்கின்றது என்பதைத்தான் மேலே கூறிய டொக்டர் சேம் பர்னியா அவர்களின் ஆய்வும் உண்மைப்படுத்துகின்றது. அப்படியென்றால் ஒருவர் இறந்து சில மணி நேரங்களுக்குள் அந்த உடலை எரிப்பது என்பது அந்த உடலுக்கு வேதனையை ஏற்படுத்தும் செயலாகும். இறந்த உடல்களை எரிக்காமல், அடக்கம் செய்யவேண்டும் என்று இஸ்லாம் கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான். என்றாலும் தற்போதெல்லாம் உடல்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர், அதாவது மொத்தமாக உயிர் பிரிந்ததன் பின்னர் எரிக்கப்படுகின்றன என்பதால் இந்த வேதனைகளையெல்லாம் அவை உணர வாய்ப்பில்லை என்பது ஓரளவு நிம்மதியைத் தருகின்றது. என்றாலும் மனித உரிமை, மத உரிமை என்பவற்றின் மீது கைவைப்பதை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஞாபகத்தில் வைக்கவேண்டும்.
இறந்த உடலை விறகுக் கட்டைகளால் எரிக்கும்போது அதன் நரம்புகள் முறுக்கிக்
கொண்டு சடலம் எழுந்து அமரும். அப்போது, அந்த சவத்தை தடியால் அடித்து மீண்டும் சிதையில் தள்ளுவார்கள். இருக்கும்வரை மதிப்புடன்
இருந்த ஒருவரின் சடலம் இறந்தபின் சிதைக்கப்படுவதைக் கண்ணால் காணும் நெருங்கியவர்களின்
மனவேதனை இறந்த துக்கத்தை விட அதிகமானதாகும். இது உடலுக்கு வலிக்குமோ இல்லையோ இதனைப்
பார்த்துக்கொண்டிருக்கும் உறவினர்களுக்கு நிச்சயமாகப் பெரும் மன வேதனையைத் தரும்.
”கொள்ளையடிப்பதையும்
ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி
(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.” (புகாரி) நபி (ஸல்) அவர்கள் “நெருப்பின் சொந்தக்காரன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது.” என்று கூறினார்கள்.
(அபூதாவுத்)
11. எரித்து சாம்பலாக்கினாலும் உயிர்த்தெழுவோம்.
உடலைவிட்டும் நமது ஆன்மா
பிரிந்ததும் அது ஆலமுல் பர்ஸக் எனும் திரைமறைவான ஒரு வாழ்க்கைக்குச் செல்கின்றது. அதற்கு கப்ருடைய வாழ்க்கை என்றும் கூறலாம்.
அங்கு கேட்கப்படுகின்ற கேள்விகள், தண்டனைகள் எல்லாம் அந்த
ஆன்மாவுக்குத்தான். இந்த உடலுக்கல்ல. எனவே எமது உடலை எரிப்பதால் நாம் மொத்தமாக அழிந்துவிடப்போவதில்லை.
ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து எம்மைப் படைத்த இறைவன் மீண்டும் மறுமையில் ஒன்றுமே
இல்லாத நிலையிலிருந்து எம்மை உயிர்ப்பித்து எழுப்புவான்.
ஆன்மா அழியாதிருப்பது
போன்று எம்மை மொத்தமாகவே எரித்து சாம்பலாக்கினாலும்
எமது உடலில் இருக்கும் ”குத எழும்பு” ஒரு போதும் அழிவதில்லை. குத எழும்பு அரபு மொழியில் ”அஜ்புஸ் ஸன்ப்” என்றும் ஆங்கிளத்தில் ”Coccyx” என்றும் அழைக்கப்படுகின்றது. இது தொடர்பாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் செய்தியைக் கொஞ்சம் பாருங்கள்.
“ஆதமின் மகனின் (உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும். மனிதனின்
(முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) குத எலும்பின் நுணியைத்தவிர. அதனைக்கொண்டே
அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாகப்) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும்
மறுமை நாளில்) படைக்கப்படுவான்” (முஸ்லிம்)
இந்தச் செய்தி ஒரு அற்புதமான விஞ்ஞான
விளக்கத்தைச் சொல்கின்றது. எமது உடலில் முதுகந்தண்டின் நுணிப்பகுதியில் இருக்கும் அணுவளவு
பிரமானமான இந்த எழும்பு ஒரு நாளும் அழியப்போவதில்லை. மண்ணில் போட்டுப் புதைத்தாலும்
சரி, தீயிலிட்டுக் கருக்கினாலும் சரி, நீரிலிட்டுக் கரைத்தாலும் சரி அது அழியாது. அதனை அல்லாஹ் பாதுகாக்கின்றான். தாயின்
கருவறையில் அதனைக்கொண்டுதான் அல்லாஹ் எம்மைப் படைத்தான். நாளை மறுமையிலும் அதிலிருந்துதான்
எம்மை உயிர்த்தெழச் செய்யப்போகின்றான். எனவே இந்தச் செய்தியும் எமக்கு ஆறுதலைத் தருகின்றது. என்றாலும் மனித உரிமை, மத உரிமை என்பவற்றின் மீது கைவைப்பதை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
12. நல்லடக்கம் செய்வது என்பது கடமை, மத உரிமை.
ஒருவர் இறந்ததும் சூடாரிய, வாசனைத் திறவியங்கள் கலந்த நீரினால் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, அடக்கம் செய்யவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது முஸ்லிம்கள் மீதான
ஒரு கடமை. உடலை எரித்தாலும் ஆன்மாவும் அழியாது, குத எண்பும் அழியாது, என்ற போதிலும் இறந்த ஒருவருக்கு
செய்ய வேண்டிய இறுதி மரியாதை, மார்க்கக் கடமை என்ற
வகையில்தான் நல்லடக்கம் செய்யவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். புதைப்பதால் விபரீதம் இருக்கின்றது என்பது விஞ்ஞானபூர்வமாக
நிரூபிக்கப்பட்டிருந்தால் முஸ்லிம்கள் ஜனாஸா எரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க
மாட்டார்கள். ஆனால் உலக நாடுகள் எல்லாம் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறந்துபோன சடலங்களைப்
புதைக்கும்போது இலங்கையில் மாத்திரம் எரிக்கவே வேண்டும் என்று விதண்டாவாதம் செய்வதுதான்
மிக மோசமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே மத உரிமைகளையும்
மனித உணர்வுகளையும் மதித்து சடலங்களை, ஜனாஸாக்களை அடக்கம் செய்யவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம்
முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
13. உசாத்துணைகள்.
1. நூல் இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்
கதைகள் - அ.மார்க்ஸ்.
2. Talk show – Dr. Sam Parnia M.D., Ph.D,
YouTube/CBS News
3. Talk show – Prof.
Nihal Abeysinghe
4. Talk show – Pro. Mali peris (pathologist & virologist)
5. Scientists discover brain functions heart
stops meaning KNOW dead - www.dailymail.co.uk
6. Science alert - Dead Bodies Keep Moving for
More Than a Year After Death, Forensic Scientist Finds. www.sciencealert.com
7. Human brain may stay active for hours after
death By Dr. Ananya Mandal, MD
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In
psychological Counseling, Al-Quran & Science researcher.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...