அறிமுகம்
1997 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்
வெளியான அனகோண்டா திகில் திரைப்படத்தினூடாகத்தான் உலக மக்களில் அதிகமானவர்களுக்கு அனகோண்டா
பாம்புகள் பற்றி தெரியவந்தது. இத்திரைப்படம் பல கோடிகளை ஈட்டி வெற்றி பெற்றது. வெற்றியின்
காரணமாக இதனைக் கருவாக வைத்து தொடர்ச்சியாக இன்னும் சில படங்களும் வெளியிடப்பட்டன.
உண்மையிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான பாம்பு உள்ளதா? கொடூரமானதா? பெரிய விளங்குகளையும் வேட்டையாடுமா? மனிதர்களையும்
கொன்று தின்னுமா? என்றெல்லாம் கேள்வி எழும்பியது அதனைத் தொடர்ந்துதான். இனி பல்வேறு
வாய் வதந்திகளும், கட்டுக் கதைகளும் அன்றைய தினங்களில் பரவின. எனவே டிஸ்கவரி போன்ற சில டீவீ செனல்கள் அனகோண்டா பாம்புகளின் உண்மைச் செய்திகளை ஆவணப்படமாக
வெளியிட ஆரம்பித்தன.
பெயர் விளக்கம்.
இதன் பெயரே
ஒரு வித திகிழையூட்டும் வண்ணமிருக்கின்றது. “அனகோண்டா – Anaconda” என்ற பெயர் எப்படி வந்தது என்பதில்
பல கருத்துகள் நிலவுகின்றன. இந்தியத் தேசிய புவியியல் இதழானது அனகோண்டா எனும் ஆங்கிலச்
சொல் ஆனைகொன்றான் எனும் தமிழ் சொல்லிலிருந்து வந்தது என்கிறது. மெரியம் வெப்ஸ்டர் இணைய
அகராதியின்படி, இலங்கையில் காணப்படும் சிறிய பச்சை நிற சாட்டைப் பாம்பு வகையை
குறிப்பிட பயன்படுத்தும் சிங்கள வார்த்தையான “ஹெனகாண்டாயா” என்ற சொல்லே மருவி அனகோண்டா என வந்துள்ளது என்கிறது.
ஹெனகாண்டாயா என்பது இலங்கையில் இப்போது அழிந்து விட்ட நொறுக்குவான் வகையைச் சேர்ந்த
பாம்பினத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல் என சில இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிச்சர்ட் பாயில் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் இலங்கை ஆங்கில ஆலோசகர்) தன்னுடைய
'சிந்துபாத் இன்
செரெண்டிப்' என்ற புத்தகத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். எப்படிப்போனாலும்
இப்பாம்பைப் பற்றிய விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டுகளில்தான் ஆய்வாளர்களுக்குக்
கிடைக்கப்பெற்றது. அதன் பின்புதான் 1997 இல் அனகோண்டா திரைப்படம் வெளியாகியது.
தோற்ற அமைப்பு
அனகோண்டாக்கள்
உலகிலுள்ள பாம்பு வகைகளிலேயே மிகப் பெரியதும் நீளமானதுமாகும். வீடியோக்களில் பார்க்கும்
போதே இவற்றின் பிரம்மாண்டமான தோற்றம் பார்ப்போரை அதிர வைக்கும். நிஜத்தில் பார்த்தால்
அவ்வளவுதான். (தெஹிவலை மிருகக்காட்சி சாலையில்
பார்க்கலாம்.) இவை நச்சுத் தன்மையற்ற போவா வகையைச் சேர்ந்தவை. அதிலும்
யுனெக்டஸ் முரினஸ் எனப்படும் பச்சை அனகோண்டாக்கள்
முக்கியமானவை. இவைதான் பெரியவை. அத்தோடு யுனெக்டஸ் நோடியஸ் என்பது மஞ்சள் நிறம்கொண்ட சிறிய வகைப் பாம்புகளைக் குறிக்கும்.
யுனெக்டஸ் டெஸ்சாயுயன்சியி என்பது உடலில் கரும்புள்ளிகளைக் கொண்ட அனகோண்டாவைக் குறிக்கும்.
சாதாரணமாக ஒரு அனகோண்டா 20 முதல் 30 அடிகள் வரை நீண்டு வளரும். அத்தோடு 100 முதல் 200 கிலோ கிராம்
வரையான நிறையையும் கொண்டிருக்கும். இவற்றின் நடுப்பகுதி 30 செ.மீ. தடிப்பிருக்கும்.
உலகிலேயே பாரத்தில் அதிகமான இடத்தைப் பிடித்திருப்பது இப்பாம்புகள்தான்.
வாழிடங்கள்.
உலகின்
அதிகமான நாடுகளில் சதுப்பு நிலங்களிலும், மித வெப்பக் காடுகளிலும்
இவை வாழ்கின்றன. தென் அமெரிக்காதான் இவற்றின் தாயகம். அடர்ந்த காட்டுப் பகுதிகளும் ஆற்றோரப் படுகைகளும் இவைகளுக்கு பிடித்தமான இடங்கள்.
இவை அதிகமாக நீரில் வாழ்வதையே விரும்புகின்றன. அமேசன் ஆற்றில் அதிகமாக இவற்றைக் காணலாம்.
நீரின்மீது அட்டகாசமாய் நீச்சலடிக்கும். நீருக்குள் மூச்சை அடக்கி அரைமணி நேரம் வரையிருக்கும். மூக்கை மட்டும் வெளியே விட்டு
நீருக்குள் அமிழ்ந்து கிடப்பதும் இவற்றின் பழக்கம்தான். சிலபோது மரங்களில் ஏறி கிளையோடு
கிளையாக தொங்கி கொண்டே தூங்கவும் செய்யும்.
அந்தீசு மலைத்தொடரின் கிழக்கே உள்ள கொலம்பியா, வெனிசுலா, கினியா, ஈக்வெடார், பெரு, பொலிவியா, பிரேசில் மற்றும் டிரினிடாட் தீவுகளில் பச்சை அனகோண்டா வகையும் கிழக்கு பொலிவியா, தெற்கு பிரேசில், பராகுவே, வடகிழக்கு அர்ஜென்டினா ஆகிய இடங்களில் மஞ்சள் நிற சிறிய அனகோண்டாக்களும் வடகிழக்கு பிரேசில், பிரெஞ்சு கயானாவின் கடலோரப் பகுதிகளில் மூன்றாவது வகையான கரும்புள்ளி கொண்ட அனகோண்டாக்களும் வாழ்கின்றன.
உணவு
மற்ற விலங்குகளை
போல அனகோண்டாக்கள் தினசரி சாப்பிட்டு, ஏப்பம் விட்டு, அதை அன்றே ஜீரணித்து, மறுபடியும் விருந்துக்கு தயாராவதில்லை. உட்கொண்ட இரையின் பருமனைப் பொறுத்தே
ஜீரணம் ஆகும். மீன், எலி, கோழி, வாத்து போன்றவை ஒரு வாரத்திலும், முயல், பெருச்சாளி, முள்ளம்பன்றி
போன்றவை இரண்டு வாரங்களிலும் ஆடு, மான், நரி போன்றவை மூன்று வாரங்களிலும் பன்றி, மாடு, குதிரை, காகிபரா (kakibara), சிறுத்தை, முதலை என்பன நான்கு வாரங்களிலும் ஜீரணமாகும். பெண் அனகோண்டாக்கள்
குட்டி போட்டதும் தன் குட்டிகள் சிலதையே மீண்டும் உண்ணும். அரிதாக ஒரு அனகோண்டா இன்னொரு
அனகோண்டாவையும் விழுங்கும். மனிதர்களையும் வேட்டையாடக் கூடியவைதான் இந்த அனகோண்டாக்கள்.
இவை மனிதனை விழுங்கிய பல சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. உண்ட உணவு ஜீரணமாகும் வரை இவை
அருகில் வரும் இரைகளை வேட்டையாட முற்படுவதில்லை. இரை எதுவும் இல்லாமலே இரண்டு ஆண்டுகள் கூட ஒரு அனகோண்டா உயிர் வாழும்.
வேட்டைத் திறன்.
அனகோண்டாக்களுக்கு
கண் பார்வை அவ்வளவாக இல்லாவிட்டாலும் நல்ல மோப்ப சக்தி உண்டு. நாக்குதான் அவற்றுக்கு
மூக்கு. ஏனைய பாம்புகளைப் போன்று இவையும் நாக்கினாலேயே மோப்பம் பிடிக்கின்றன. நீர்
நிலைகளிலும் அதனை அண்டிய காட்டு நிலங்களிலும் நாக்கை நீட்டி மோப்பம் பிடித்தவாரே இரைக்காக
ஊர்ந்து திரியும். இரையொன்றைக் கண்டால் தன்னுடைய பிளவு நாக்கின் (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி என்பவற்றைப் பயன்படுத்தி இரையை நோக்கி வேகமாக
முன்னேறும். இரையை நெருங்கியவுடன் விர்ரெனப் பாய்ந்து இரையின் கழுத்துப் பகுதியைக்
கவ்விப் பிடிக்கும். பின் தன் வால் பகுதியை வீசி இரையின் உடலை மொத்தமாகச் சுற்றி இறுக்கிப்
பிடித்துக் கொள்ளும். இனி இரையால் அசைய முடியாது. பிடியை மென்மேலும் இறுக்கி இரத்தவோட்டத்தை
முடக்கும். கழுத்துப் பகுதியை அழுத்தி சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினரவைக்கும்.
விழுங்குவதற்கு இலகுவாக இன்னும் இருக்கி எழும்புகளை நொருக்கும். இப்போது இரை செத்து
மடிந்திருக்கும். இனி இறந்த இரையின் உடல் முழுவதையும்
ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும்.
தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின் அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக இரை உள்ளே வழுக்கிச் செல்லும். மொத்தமாகவே விரிக்ககூடிய விதத்தில் தாடை எலும்புகள் இணைக்கப்படாதிருப்பதால் இரையின் பருமனுக்கு ஏற்ப வாயை அகளப் பிளந்து திறந்து விழுங்கும். உள்ளே விழுங்கப்படும் இரை நழுவி வெளியே வராமல் இருக்க அனகோண்டாவின் நீண்ட கொழுக்கிப் பல் உள்ளே வளைந்து கொழுகிப் பிடித்து உந்தித் தள்ளும். முதலை, மாடு போன்ற பெரிய விலங்குகளை விழுங்குவதற்கு மட்டும் ஐந்து, ஆறு மணி நேரங்கள் செல்லும். அவற்றின் தோழ், ரோமம், கொம்பு, கால் என அனைத்தையும் மொத்தமாக விழுங்கி விடும். இப்படியொரு நல்ல விருந்தை முடித்துக் கொண்ட பாம்பு அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும். அப்படி வலுக்கட்டாயமாக நகர்ந்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் அசைவற்றுப் படுத்துக் கிடக்கும். இரையை மிக விரைவில் சமிபாட்டையச் செய்வதற்காக சக்திவாய்ந்த நொதியங்கள், அமிலங்கள் அனகோண்டாவின் வயிற்றில் சுரக்கும். அவை இரையின் தோல், கால், கொம்பு, பற்கள், எழும்புகள் என அனைத்தையும் கரைத்துவிடக் கூடியவை. இப்படி விழுங்கிய ஓர் இரை மொத்தமாக சமிபாட்டைய ஒரு மாதகாலம் செல்லும். அதுவரை இவை வேறு பிராணிகளை வேட்டையாடுவதில்லை.
வாழ்க்கை முறை
5 வருடங்களைக் கடந்த அனகோண்டாவால் இனச்சேர்க்கையில் ஈடுபட முடியும். டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி, மாதங்களில் மட்டுமே இனப்
பெருக்கத்தில் ஈடுபடும். இந்தக் காலங்களில் “ஈஸ்ட்ரோஜன்” ஹோமோன் உச்சகட்டத்தில் இருக்கும். எனவே
ஆண், பெண் பாம்புகள் தனக்கான துணையைத் தேடிப் பிடித்து இனைசேரும். அதன் பின்பு மூன்று மாதங்களில் பெண் அனகோண்டா
30 முதல் 40 வரையில் குட்டிகளை இடும். முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்
அனகோண்டாக்களும் இருக்கின்றன. அவை உடலைச் சுற்றி,
அதிக அளவில் உஷ்ணத்தை உருவாக்கி
58 நாட்களுக்கு முட்டைகளை
அடைகாக்கும். பிறக்கும் குஞ்சுகள் 2.5 அடி நீளத்திலிருக்கும். பிறந்து
சிறிது நேரத்திலேயே தன் முதல் வேட்டையை ஆரம்பிக்கும். அத்துடன் தாயின்
பராமரிப்பும் முடிந்துவிடும்.
இனி குட்டிப் பாம்புகள் காட்டுப் பூனை, பிரானா மீன், பருந்து, நரி என பல எதிரிகளிடமிருந்தும் தப்பி வாழவேண்டும். அனேகமானவை பிற மிருகங்களுக்கு இரையாகிவிடும். தப்பினால் 5 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்த பாம்பாக மாறும். வளர்ந்த பாம்புகளுக்கும் சிங்கம், புலி, மனிதன் என பல எதிரிகள் இருப்பதால் இதனுடைய எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு எதிரிகளிடமிருந்து தப்பி வாழுமானால் அவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். பூமியில் வாழும் ஒவ்வெரு உயிரும் போராடி, முட்டி, மோதித்தான் தன் வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருக்கின்றன. இலட்சியத்தோடும், தன்நம்பிக்கையோடும் செயற்படுபவனுக்கு தொடர்ந்தும் முன்னே செல்லலாம் வெல்லலாம் என்ற பாடத்தை இறைவன் இப்படைப்புகளினூடாக எமக்குக் கற்றுத்தருகின்றான். அவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்!
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...