இப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்தி… என்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது.
சக்தி மற்றும் சடம் ஆகிய இரண்டாலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள் ஆகும்.
மலக்குமார்கள் பற்றி நம்புவது இஸ்லாமிய அகீதாவின் ஓர் அடிப்படை அம்சமாகும். முஸ்லிம்கள் மாத்திரமன்றி பல்வேறு மதங்களிலும் இவர்கள் பற்றிய நம்பிக்கை பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அவ் வேதங்களில் இவர்கள் தேவதைகள், தூதுவர்கள், இறைவனின் குழந்தைகள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். உருவங்களாக வரைந்தும் வைத்துள்ளனர். ஆனால் இஸ்லாம் மலக்குகள் விடயத்தில் அழகான விஞ்ஞான பூர்வமானதொரு விளக்கத்தை வளங்குகின்றது.
மலக்குகள் الْمَلَائِكَةَ - என்ற சொல் ’மலக்’ என்ற சொல்லிலிருந்து வந்துள்ளது. இதற்கு வானவர் என்று பொருள். இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும். ’மலக்’ என்ற சொல் குர்ஆனில் 13 இடங்களிலும் ’மலகைன்’ இருமை யாக 2 தடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன.
அல்லாஹ் மலக்குகளை ஒளியால் (LIGHT/RAY) படைத்துள்ளான். “வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்” என்பது நபிமொழி. (முஸ்லிம், அஹ்மத்: 2996)
ஒளி அல்லது கதிர் எனும் போது அவற்றில் எமது கண்களுக்குப் புலப்படுபவையும் உள்ளன. கண்களுக்குப் புலப்படாத ஒளி அல்லது கதிர்களும் உள்ளன. இப்பூமியில் அல்லாஹ் எமது பார்வைச் சக்திக்கும் கேட்கும் சக்திக்கும் ஒரு வரையறையை வைத்துள்ளான். அதற்கு அப்பால் எம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியாது.
எமது பார்வைச் சக்தி வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nano meter) அலைநீளத்திற்கு உட்பட்ட கதிர்களையே காண முடியுமான ஆற்றலைப் பெற்றுள்ளது. (அடிப்படையில் உள்ள ஏழு நிறங்களும் இந்த அலை நீள அளவுகளுக்கு உட்பட்டவையே.) இதனால்தான் இவற்றுக்கு அப்பாட்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களால் படைக்கப்பட்டிருக்கும் மலக்குகளை எம்மால் காண முடியாதுள்ளது. அதேபோன்று எமது கேள்விச் சக்தி 20 ஹேட்ஸ் முதல் 20,000 ஹேட்ஸ் வரையான ஒலியலைகளைக் கேட்கும் விதத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு அப்பால் மலக்குகள் பேசுகின்ற ஒலிகளை கேட்க முடியாதுள்ளது. எம்மால் அவாகளைப் பார்க்கவோ, கேட்கவோ முடியாவிடினும் அவர்கள் எம்மைப் பார்க்கவும் எமது பேச்சுக்களைக் கேட்கவும் செய்கிறார்கள்.
எமக்கு மலக்குமார்களைப் பார்க்க முடியாவிட்டாலும் நபிமார்களுக்கு அல்லாஹ் அவர்களைப் பார்க்கும் சக்தியையும் அவர்களுடன் உரையாடும் ஆற்றலையும் கொடுத்திருந்தான். இவ்வாறு நபியர்வகள் ஜிப்ரீல் (அலை) உட்பட சில மலக்குகளைக் கண்டுள்ளார்கள்.
அத்தோடு விளங்குகளுக்கும் மலக்குமார்களைப் பார்க்க முடியும். நபியவர்கள் கூறினார்கள் “சேவல் கூவும் சப்த்த்தைக் கேட்டால் ரஹ்மத்தை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில் அது மலக்குகளைக் கண்டுள்ளது” என்றார்கள்.
மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளவர்கள் என்ற வகையில் அவரகள் பரயாணிக்கும் வேகம் ஒளியின் வேகமாகிய செக்கனுக்கு 300,000Km இற்குச் சமனாகவோ இல்லை அதை விட அதிக வேகமாகவோ இருக்கலாம். எமது கற்பனைக்கும் எட்டாத வேகம். சுபஹானல்லாஹ்!
அவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்? என்பது இறைவனைத்தவிர எவருக்கும் தெரியாது. இருப்பினும் அவர்கள் ‘மனிதன் படைக்கப்படுமுன் படைக்கப் பட்டவர்கள்’ என்பதை (2:30) ஆவது வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உறுதியாகக் கூறமுடியும்.
மலக்கு மார்களால் உருவம் மாற்றி வரும் அற்புதச் சக்தி காணப்படுகின்றது. நாய் மற்றும் பன்றி தவிர்ந்த மற்ற உருவங்களில் அவர்கள்வருகிறார்கள். ஸஹாபாக்கள்கூட ‘திஹிய்யத்துப்னு கலீஃபத்துல் கல்பி’ எனும் ஸஹாபியின் தோற்றத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருவதைப் பார்த்துள்ளனர். (அஹ்மத்) வேறு பல உருவங்களில் வந்தாலும் அவர்களுக்கென சுயமான உருவத் தோற்றம் இருக்கின்றது. அவர்களது அசல் உருவத் தோற்றமோ எம்மை விடவும் பல மடங்கு மிகப் பிரம்மாண்டமானவாகளாக இருப்பர். நபியவர்கள் கூறுகின்ற செய்தியைப் பாருங்கள் “நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி,தப்ரானி) “(அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள்; கொண்ட தூதர்களாக அனுப்புகிறான்.” (35:1)
ஜிப்ரீல் (அலை) அவர்களே மலக்குகளின் தலைவர். இவரது பெயர் குர்ஆனில் 2:97,2:98,66;4 ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன. இவருக்கு சில சிறப்புப் பெயர்களும் உள்ளன. ரூஹுல் குத்ஸ் (16:102), ரஸூலுன் கரீம் (81:19), தூ குவ்வத் (81:20), ரூஹுல் அமீன் (26:193), ஷதீதுல் குவா (52:5) நாமூஸுல் அக்பர் என்பன சில சிறப்புப் பெயர்களாகும்.
கட்டுக்கடங்காத எண்ணிக்கை கொண்டவாகள்தான் மலக்குகள். ‘பைத்துல் மஃமூர்’ எனும் வானவர்கள் தொழுமிடத்திற்கு ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் உள்ளே செல்வார்கள். சென்றவர்கள் மிண்டும் திரும்பிவருவதில்லை. (புகாரி 3207, முஸ்லிம் 162.) அதேபோன்று மறுமைநாளில் நரகில் 70,000 கடிவாளங்கள் கட்டப்பட்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 வானவர்கள் இழுத்துப் பிடித்த்துக்கொண்டிருப்பார்கள். (முஸ்லிம் 2842-29, திர்மிதி : 2573) ஆக இந்த ஹதீஸ்களின் மூலம் மலக்குகள் எவ்வளவு தொகையானவாகள் என்பைதை விளங்கலாம். மலக்குகளின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். “மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்” (74:30)
மலக்குகள் ஆண்களுமல்ல, பெண்களுமல்ல. ஊண், உறக்கம் எதுவும் அவர்களுக்கு இல்லை. சதாவும் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். செயல் சுதந்திரம் அற்றவர்கள். எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாக இருக்கின்றனர்.
மலக்குகள் பிரபஞ்சமெங்கும் பரவிக் காணப்படுகின்றார்கள். இறைவனின் கட்டளைக்கிணங்க பூமிக்கு இறங்குகின்றார்கள். “(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர, (நாங்கள் பூமிக்கு) இறங்கி வரமாட்டோம்.” (19 : 64) பூமியிலும் அசுத்தமான இடங்கள் (கழிவறை, தொழுவம்...) உருவப்படங்கள், நாய், பன்றிகள் இருக்கும் வீடுகள் தவிர்ந்த மற்ற அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றார்கள்.
இவ் அற்புதப் படைப்பான மலக்குகள் இப்புமியில் வாழ்வதற்கு மனிதர்களாகிய எமக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றனா. எம் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் கூடவே ஒரு மலக்கையும் சாட்டி வைத்துள்ளான். காலையிலும், மாலையிலும், ஒவ்வொரு வாரத்திலும் எம்மை மேற்பார்வை செய்வதற்காக பலர் புமிக்கு இரங்குகின்றனர். பழைய அறிக்கைகளை சமர்பிப்பதற்காக மற்ற மலக்குகள் இறைவனிடம் விரைகின்றனா. இவ்வாறு ஓர் அற்புதமான செயல்முறை இப்பிரபஞ்சத்தில் விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
1 comments:
subahanallah !
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...