குறிப்பு : இந்த ஆய்வைப் பெரும் சிறமத்திற்கு மத்தியில் நீண்ட நாள் முயற்சியின் பின்பு செய்து முடித்துள்ளேன். தயவுசெய்து இதனை யாரும் தம்பெயரில் பிரசுரம் செய்ய வேண்டாம் என வினயமாயக் கேட்கின்றேன்
கட்டுப்பாடானதொரு சமூகத்தின் தோற்றத்திற்கு அங்கு இயற்றப்படுகின்ற சட்டங்களும் செலுத்தப்படுகின்ற நீதிகளும் பெரிதும் செல்வாக்குசவ்செலுத்துகின்றன. மனிதனின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணும் விதத்தில் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் சமத்துவம் வாய்ந்தனவாக இருக்கவேண்டும். அங்கு செல்வந்தன், வரியவன், உயர் குலத்தான், கீழ் இனத்தான், வெள்ளையன், கருப்பன் என்றெல்லாம் பிரிவினைகளும் வேறுபாடுகளும் இருக்கக்கூடாது.
இதுபோன்ற கட்டமைப்பில் நீதம் நிலைநாட்டப்படவேண்டுமாயின் அது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகினால் சாத்தியப்பட முடியாது. ஏனெனில் நீதி வழங்குவதற்காக மனனிதனால் இயற்றப்படும் சட்டங்கள் அவனது மனோ இச்சைகளுக்கு அடிமைப்பட்டதாக, ஒரு சாசாருக்கு சலுகைகள் வழங்கி மற்றோர் சாரார்மீது அடக்குமறைகளைக் கட்டவிழ்த்து விடும்வகையிலேயே இயற்றப்படுகின்றன. இதனை அக்கால கிரேக்க நகர அரசுகள் முதல் தற்கால அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள்வரை கண்டுகொள்ளலாம்.
நீதியை நீதமாக வழங்குவதற்குள்ள ஏகவழிமுறை யாதெனில் மனித வாழ்க்கைக்கான சட்டங்கள், சகலதையும் அறிந்த இறைவனால் வரைந்துகொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் பூpமியில் அவனது பிரதிநிதி ஆட்சிபுரிவதாகும். ஆட்சியாளன் இறைவனுக்கு அஞ்சி பாரெங்கும் இறையாட்சியை நிலைநாட்டவேண்டுமென்ற தீரா வேட்கையுடனும் தியாகத்துடனும் செயற்படுவான். எனவே அச்சமூகத்தில் இறைகொள்கையின்படி நீதம் நிலைநாட்டப்படும்.
அந்தவகையில் வல்லநாயன் அல்லாஹ்வினால் பொருந்திக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் முற்றுமுழுதாக அவனது சட்டதிட்டங்களைக்கொண்டு அமைந்திருப்பதனால் அதுவே மனித சமூகத்தில் நீதியை நிலைத்தோங்கச்செய்ய சாத்தியமானதொரு வழிமுறையாகவும் பொறுத்தமானதாவும் இருக்கின்றது. அல்குர்ஆனின் கட்டளைகளுக்கினங்கவும் நபியவர்கள் வாழ்ந்துகாட்டியதன் பிரகாரமும்தான் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் கலீபாக்களும் அவர்களது கவர்னர்களும் காழிகள் என்றழைக்கப்படும் நீதவான்களும் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள்.
இதுவே நீதித்துறையின் உன்னதத்தன்மையைப் புடம்போட்டுக் காட்டுகின்றது. இன்றைக்கும் என்றைக்கும் ஒரு நீதிபதி எப்படியிருக்க வேண்டும் என்றும் சமூகம் எப்படி நீதத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை இவ்வரலாற்று நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அந்தவகையில் முஸ்லிம்களது நீதித்துறை வரலாற்றில் நடந்த சில முக்கிய வழக்குகளையும் அவற்றுக்கு அந்த நீதிபதிகள் முன்வைத்த தர்க்கரீதியான ஆனால் ஆச்சரியமான சில தீர்ப்புகளையும் பற்றி சிறிது தெளிவுபெற முயற்சிப்போம்.
நீதி பற்றி அல்குர்ஆன்
அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் மக்களிடையே நீதத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுமாறு கட்டளையிடுகின்றான். அந்த நீதம் ஈமானுடனும் இறையச்சத்துடனும் தொடர்புடையதென்றும் அவன் வலியுறுத்துகின்றான்.
எங்கு சரியான முறையில் நீதி வழங்கப்படவில்லையோ அங்கு எதிர்ப்புணர்வுகளும் மனக்கசப்புகளும் குரோதங்களும் உண்டாகி இருதியில் அவை புரட்சிகளாக வெடிக்கின்றன. இதனை வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் நடந்தேரியிருப்பதைக் கண்டுகொள்ளலாம். இந்நிலை ஆரோக்கியமான, கட்டுக்கோப்பனதொரு சமூகத்திற்கு உகந்ததல்ல. அல்லாஹ் எதிர்பார்க்கும் இஸ்லாமிய அரசைத் தோற்றுவிப்பதில் இதுபோன்ற இடர்பாடுகள் தோன்றுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவைப்பதற்கே அல்லாஹ்வும் அவனது தூதரும் நீதம் செலுத்துவதில் கண்டிப்புக்காட்டுகின்றனர். அல்லாஹ் கூறுகின்றான்.
“அமானிதங்களை (அவை உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்படால்) அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிடுமாறும் மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:58)
“விசுவாசிகளே! (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்தபோதிலும் நீதியை நிலைநிறுத்தி அல்லாவுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி. அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்)” (4:135)
“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக்கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக (உண்மையின் மீது) நிலைத்தவர்களாக ஆகிவிடுங்கள். எந்த சமூகத்தவரின் விரோதமும் நீங்கள் நீதமாக நடந்துகொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாகத் தூண்டிவிடவேண்டாம். (எவ்வளவு விரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திக்கு மிக நெருக்கமானது.” (5:8)
“அளவையிலும் நிறுவையிலும் நீதத்தையே நிலைநாட்டுங்கள்” (6:52)
“நீங்கள் நீதியாக நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.” (49:9)
இவ்வாறு நீதி வழங்குவதில் உள்ள சமத்துவத்தன்மையை அல்லாஹ் மீண்டும் மீண்டும் அல்குர்ஆனில் பல இடங்களில் ஞாபகிக்கின்றான். அல்குர்ஆனிற்கு விளக்கவுரையாக வாழ்ந்துகாட்டிய நபி (ஸல்) அவர்கள் முன்னுதாரணமாய் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிவழங்கயிருக்கின்றார்கள். அந்த நிகழ்வுகளும் சம்பவங்களும் இதனைப் புடம்போட்டுக் காட்டுகின்றன.
நீதி வழங்குவதில் நபிகளார்
நுபுவ்வத்திற்கு முன்பு நபியவர்களின் 35 ஆம் வயதில் கஃபா புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அதன்போது ஹஜருல் அஸ்வத் கல்லை யார் தூக்கி அதன் உரிய இடத்தில் வைப்பது என்பதில் பெரும் ரகலையே ஏற்பட்டுவிட்டது. கோத்திர வாழ்க்கையைப் பின்பற்றிய அந்த மக்கள் தமது கோத்திரத் தலைமையின் கீழ் தாமே அதற்குத் தகுதியானவர்கள் என்று வாதாடினர். இறுதியில் அதற்காகப் போர் செய்யவும் வாள்களைக் கையில் உருவியெடுத்தனர். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது மதியூகத்தினால் உருவாக இருந்த மாபெரும் கலவரத்தைத் தடுத்து இலகுவான, அழகானதொரு தீர்ப்பை வழங்கினார்கள். நபியவர்கள் ஒரு துணியின்மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அத்துணியின் ஓரங்களை ஒவ்வொரு குலத்தலைவரையும் பிடித்து உயர்த்துமாறு கூறி இறுதியில் நபியவர்களே அதனை உரிய இடத்தில் பொருத்தினார்கள். இது அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
வழக்குகளை விசாரனைக்கு உட்படுத்தும்போது நீதிபதி வாதியினதும் பிரதி வாதியினதும் வாதங்களை அல்லது நியாயங்களை அவர்கள் யாராயிருந்தாலும் எப்பதவியை வகிப்பவராக இருந்தாலும் தீர்க்கமாகக் கேட்டுவிட்டே நீதிவழங்கவேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பட மொழிந்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களைப் பார்த்து “ஏ அலியே! இரண்டு பேர் உம்மிடம் நீதிகேட்டு வந்தால் முதலாமவரை தீர விசாரித்ததுபோன்றே மற்றவறையும் விசாரிக்காதவரை தீர்ப்பளிக்கவேண்டாம் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மதி)
ஒரு தடவை இரண்டு பெண்மணிகள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தனர். அவர்கள் ஒரு ஆண்குழந்தை ஒன்றையும் பெண்குழந்தை ஒன்றையும் சுமந்து வந்தனர். ஆனால் இருவருமே அந்த ஆண் குழந்தையைத் தனது குழந்தையென்று உரிமைகோரி வாதிட்டனர். இவர்களுக்கு மத்தியில் நீதமான முறையில் தீர்ப்பளிக்கவேண்டிய நிலை நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. இதனை நபியவர்கள் அழகான முறையில் விஞ்ஞான பூர்வமாகத் தீர்த்துவைத்தார்கள். இரு பெண்மனிகளினதும் தாய்ப்பாலை எடுத்து நிறுத்துப்பார்த்துவிட்டு நிறைகூட இருந்த பெண்ணுக்கே ஆண் குழந்தை உரித்து என்று விஞ்ஞான பூர்வமானதொரு தீர்வை வழங்கினார்கள்.
நபியவர்கள் நீதிவழங்குவதில் குல பேதமோ மத பேதமோ காட்டியதில்லை. ஒரு முறை உயர் குலத்துப் பெண்மனியொருவர் திருட்டுக் குற்றத்தைச் செய்து அது நபியவர்களிடம் வந்தபோது அப்பெண்மனியின் கரத்தைத் துண்டித்து உரிய தண்டனையை வழங்குவது என்று முடிவானது. எனினும் அப்பெண்மனியின் குலகௌரவத்திற்காக அப்பெண் சார்பில் சில முஸ்லிம்களே பரிந்துரைக்க வந்தபோது நபியவர்கள் கூறிய வார்த்தைகள் நீதி வழங்குவதில் எந்தளவு திடமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. நபியவர்கள் கூறினார்கள். “நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் அழித்தோம். ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் வசதிவான்கள் திருடியபோது தண்டிக்காது விட்டுவிட்டார்கள். ஏழைகளை அவர்கள் தவறு செய்தபோதெல்லாம் தண்டித்தார்கள். இறைவன் மீது ஆனையாக முஹம்மதின் மகளான பாத்திமாவே திருடியிருந்தாலும் நான் கையைத் துண்டிக்கச் சித்தமாக இக்கின்றேன்” என்றார்கள்.
நீதி வழங்குவதில் தரவேறுபாடு மட்டுமன்றி மத வேறுபாடுகூட இருக்கக்கூடாது எனன்பதைனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பின்வரும் சம்பவம் இதனை இன்னும் வலுப்படுத்துகிறது. மதீனாவில் வைத்து திருட்டுச்செயலில் ஈடுபட்ட ஒரு முஸ்லிமைக் காப்பாற்றிவிட்டு அதற்குப் பதிலாள ஒரு யூதனைக் குற்றவாளியாக்க முனைந்த சில முஸ்லிம்களின் துர்குணத்தை அல்லாஹ் கண்டித்து யூதர்கள் இஸ்லதர்திற்கு முரணான வகையில் நடந்துவந்தாலும் அநியாயமிழைக்கப்படக் கூடாது என்பதை விளக்கினான்.
நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் தம்மிடம் வந்த வழக்குகளை அழகான முறையில் அல்குர்ஆனின் நிழலில் வஹியின் ஒளியில் தீர்த்துவைத்தார்கள். அன்றிருந்த ஸஹாபாக்கள் அதனைக் கண்டு, கேட்டு தம் வாழ்விலும் முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட்டார்கள். பின்னேய காலங்களில் வந்த கலீபாக்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் காழி மார்களும் நபியவர்களின் அவ்வழிகாட்டலின் அடிப்படையில் தாம் சந்தித்த பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கினார்கள்.
அபூபக்கர் (ரழி) அவர்களது தீர்ப்புகள்
முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்தபோது அதனை ஜீரணிக்க முடியாமல் ஸஹாபாக்கள் அங்கு வீற்றிருக்க உமர் (ரழி) அவர்கள் உருவிய வாளோடு யாராவது நபியவர்கள் மரணித்ததாகச் சொல்லும்வரை காத்திருந்தார்கள் தலையைக் கொய்தெடுக்க. இந்த சந்தர்ப்பம் அங்குவந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் நிலைமையை அழகான முறையில் சீர்செய்தார்கள். உமர் பொட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசின் பொறுப்பை நபி (ஸல்) அவர்களின் பின் யார் ஏற்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையும் அதனால் தோன்றவிருந்த பாரிய சமூகப் பிளவையும் அபூபக்கர் (ரழி) அவர்கள் யாருக்கும் அநியாயம் நேர்ந்துவிடாமல் யதார்த்த நிலையை எடுத்து முன்வைத்து அப்பாரிய பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்.
நபிடயவர்கள் மரணித்ததும் அவரது பிரோதத்தை முஹாஜிர்கள் மக்காவிலும் அன்ஸாரிகள் மதீனாவிலும் அடக்கம் செய்யவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு உருவாகிவிட்டது. இதன்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் நபிமார்கள் எங்கு வபாத்தானார்களோ அதே இடத்தில்தான் அடக்கம் செய்யப்படவும் வேண்டுமென்ற நபிமொழியை ஞாபகப்படுத்தி அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அபூபக்கர் (ரழி) அவர்களது ஆட்சிப்பொறுப்பு நபியவர்களுடன் தோன்றியதாலும் அவர் இரண்டு வருடங்களே ஆட்சிசெய்தார் என்பதாலும் பெரியளவில் சச்சரவுகள் தோன்றி அவற்றுக்குத் தீர்ப்புகள் வழங்க காலம் இருக்கவில்லை. ஆனாலும் அதன் பின்பு கலீபாவாக வந்த உமர் (ரழி) அவர்கள் சுமார் பத்து வருடங்கள் ஆட்சிசெய்தார்கள் என்பதாலும் அவரது காலப்பிரிவிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவுபட்டதென்பதாலும் பல்வேறு வழக்குகளை விசாரிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் அமீருல் முஃமினீன் அவர்களே தோன்றிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலும் சாம்ராஜ்யம் விரிவுபடவே அப்பொறுப்பை நீதிவான்களுக்கும் சிலபோது காழிமார்களுக்கும் வழங்கினார்கள். எனவே உமர் அவர்களின் காலத்திலிருந்து நீதி முறைமைகளுக்கான நடைமுறை நிகழ்வுகளை அதிகமாகவே இங்கே எடுத்துக்காட்ட முடியும்.
உமர் (ரழி) அவர்களது தீர்ப்புகள்
உமர் (ரழி) அவர்கள் தமது கவர்ணர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களுக்கு எழுதிய மடல் இங்கு கவனம் செலுத்தி நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். அம்மடலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “உங்களது பரிபாலனங்களில் சமத்துவத்தை நிழைநாட்டுங்கள். இதனால் பலமிக்கவர் உம்மிடம் சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்காதிருக்கட்டும். பலவீனர் உமது நீதியையிட்டு அவநம்பிக்கை கொள்ளாதிருக்கட்டும்” என்றார்கள்.
முஸ்லிமல்லாத ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் வந்து, ஸியாத் பின் கதீh என்பவர் தனது குதிரைக்கு ஆயிரம் திர்ஹங்களை வரியாக அறவிட்டதாகவும் மீண்டும் அவரைக் கடந்து சென்றபோது மறுமுறையும் ஆயிரம் திர்ஹங்களை வரியாக அறவிட்டதாகவும் முறைப்பாடு செய்தார். உடனே கலீபா அவர்கள் ஸியாதைக் கண்டித்துவிட்டு “ஒரு ஆண்டில் ஒரு பொருளுக்கு இறுமுறை வரி அறவிடக்கூடாது” எனக் கட்டளையிட்டார்கள்.
உமர் (ரழி) அவர்கள் தமது ஆளுனர்களாயிருந்தாலும் நீதியென்று வரும்போது கண்டிப்பாகவே இருந்தார்கள். பொதுமக்கள் வறுமையில் வாழும்போது அவர்களை நிர்வகிப்பவர்களோ எக்காரணம்கொண்டும் வளம்கொலிக்கும் ஆடம்பர வாழ்வு வாழக்கூடாது என்பதிலும் நேர்மையுடன் செயற்பட்டார்கள். தானும் எளிமையான வாழ்க்கை முறையையே கையாண்டார்.
அயாத் பின் கானம் என்ற உமர் (ரழி) அவர்களின் நிர்வாகி ஒருவர் ஆடம்பரமான வாழ்க்கையில் திலைக்கிறார் என்று கேள்வியுற்றதும் அவர் எப்படியிருக்கின்றாறோ அவ்வாறே தன்னிடம் அழைத்துவருமாறு உமர் அவர்கள் ஆளனுப்பிவைக்கின்றார். அவர் அழைத்துவரப்பட்டதும் விசாரணை செய்துவிட்டு அவர் ஆடம்பர மோகத்தில் வாழ்ந்த குற்றத்திற்காக கண்டித்துவிட்டு கானகம் சென்று மந்தை மேய்க்குமாறு தண்டனை வழங்குகின்றார். அவரைப் பதிவிநீக்கம் செய்கின்றார். என்றாலும் கவலையுடன் தலைகுணிந்து அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் அயாத் பின் கானம் அவர்களை மீண்டும் அழைத்து மன்னிப்பு வழங்கிவிட்டு அதே பதவியில் மீண்டும் அமர்த்துகின்றார்.
அதேபோன்று கூபாவில் ஆளனராக இருந்த சஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அங்கு தமக்கென ஒரு அரண்மனையைக் கட்டுவதாகவும் அதன் வாயிற்காவலனுக்கென ஓர் அறையைக் கட்டியிருப்பதாகவும் கேள்வியுற்றபோது உமர் அவர்கள் முஹம்மத் பின் மஸ்லமா என்பவரிடம் ஒரு நிறுபத்தைக் கொடுத்தனுப்பியதோடு அவ்வாயிற் காவலர் அறையை எரித்துவிடுமாறும் கட்டளையிட்டார்கள். அந்நிருபத்தில் பின்வருகின்ற அம்சங்களை அவர் எழுதியிருந்தார். “நீர் பாரசீகப் பேரரசர்கள் போன்று ஓர் அரண்மனை கட்டுவதாயும் அவர்களது அரண்மனை வாயிற் கவதவுகளை அதற்குப் பயன்படுத்துவதாகவும் அறிகின்றேன். நீரும் அவர்களைப்போல் வாயிற்காவலர்களை வைக்கப்போகின்றீரா? ஏழைகளும் முஸ்லிம்களும் உம்மிடம் வருவதை நீர் தடுக்கப்போகின்றீரா? அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளை மறந்து பாரசீகப் பேரரசர்களின் பாதையை எடுத்து நரகம் புக விரும்புகின்றீரா?” என்று வினா எழுப்பியிருந்தார்.
மற்றுமொரு முறை கூபாவாசிகளில் ஒருவர் மதீனா வந்து உமர் (ரழி) அவர்களிடம் ஆளுனர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் பற்றி முறையிட்டார். அப்போது முஸ்லிம்களுக்கும் பாரசீகப்படைக்கும் இடையே போர்வெடிக்க அண்மித்திருந்த வேளை. என்றாலும் உமர் (ரழி) அவர்கள் ஸஃத் (ரழி) அவர்களை மதீனாவுக்கு அழைத்து விசாரனை நடாத்தினார்கள். இந்த அளவு தனது பிரதிநிதிகள் நீதி நெறிகளில் தவறுவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள் உமர் (ரழி) அவர்கள்.
ஹஜ் காலத்தில் அனைத்து கவர்னர்களும் அங்கே சமூகம்தர வேண்டும் என்பது உமர் (ரழி) அவர்களது கண்டிப்பான உத்தரவு. அவ்வாறு அங்கு வரும் கவர்ணர்களைப்பற்றி மக்களிடம் விசாரித்து அவர்களுக்கிடையே பிரச்சினைகள் தகராருகள் இருந்தால் அவற்றைத் தீர்த்துவைப்பார். அதேபோன்று ஹஜ் காலத்தில் உமர் (ரழி) அவர்கள் மக்களையும் தனது பிரதிநிதிகளையும் ஒன்றாகவே வைத்து உரையாற்றுவார்கள். “ஏ மனிதர்களே! உங்களது உடமைகளைப் பறித்துக்கொள்வதற்றும் உங்களை அடிப்பதற்கும் அல்ல நான் இவர்களைக் (கவர்னர்களை) உங்கள் எவரையாவது இவர்கள் வேறு விதமாக நடாத்தினால் இஎன்னிடம் கூறுங்கள்.” என்றார்கள்.
இவ்வாறு ஒரு ஹஜ் காலத்தில் ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் தமது நாட்டு கவர்ணர் அநியாயமாகத் தனக்கு 100 கசையடிகள் வழங்கியதாக முறையிட்டார். அதனைத் தீர்க்கமாக விசாரித்து விடயம் ஊர்ஜிதமானதும் அவ்வாறே 100 கசையடிகள் அவருக்கு அடிக்க உமர் அவர்கள் உத்தரவிட்டார். அம்ர் இப்னு ஆஸ் டே;சேபனை தெரிவித்தும் உமர் (ரழி) அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு முறையிட்டவரிடம் இது கவர்னரின் அந்தஸ்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் ஒரு காரியம் என்பதால் ஒரு அடிக்கு இரண்டு பொற்காசுகள் வீதம் கொடுத்துவிட்டு தண்டனையிலிருந்து நீங்கச் சொன்னபோது அவ்வாறே செய்தனர்.
அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் எகிப்தின் ஆளனராக நியமிக்கப்பட்டிருந்தபோது அவர் அங்கிருந்த பள்ளிவாயிலொன்றை விரிவுபடுத்துவதற்காக அதன் அருகில் இருந்த கிறிஸ்தவப் பெண் ஒருவரின் வீட்டை உடைத்துவிட்டு அதற்கான இழப்பீட்டுத்தொகையையும் வழங்கினார். ஆனால் அதனை மறுத்த அப்பெண் மதீனாவில் இருந்த கலீபா உமர் அவர்களிடம் வந்து இதுகுறித்து முறைப்பாடு செய்தார். உமர் அவர்கள் கட்டபட்ட அப்பள்ளியின் அப்பகுதியை உடைத்துவிட்டு முன்பிருந்ததுபோல் அப்பெண்ணிண் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களின் மகன் இன்னுமொரு சாதாரண குடிமகனது புதல்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவனை அம்ரின் மகன் சாட்டையால் அடித்து விட்டான். இதுகுறித்து உமர் (ரழி) அவர்களிடம் முறைப்பாடு வந்ததும் அம்ரையும் மகனையும் மதீனாவுக்கு அழைத்து விசாரித்தார்கள். விடயம் உறுதியானதும் அப்பாமரனின் மகனிடம் கசையைக்கொடுத்து அம்ரின் மகனுக்கும் அவ்வாறே அடிக்குமாறு உத்தரவிட்டார். அவனும் அவ்வாறே அடித்தான். பின்னர் உமர் (ரழி) அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களைப் பார்த்து “அம்ரே! மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகத்தான் பிறக்கின்றார்கள். நீங்கள் அவர்களை அடிமைகளாக நடாத்த முனைகின்றீர்கiளா?” என்று கடிந்துகொண்டார்கள்.
நீதிவழங்குவதிலும் அதன் மூலம் தண்டனையை நிறைவேற்றுவதிலும் சொந்த பந்தம் என்ற பாகுபாடு இல்லாமல் நீதமான முறையில் உமர் (ரழி) அவர்களது நீதிமுறை இருந்திருப்பதைக் காணலாம். இதனையே இஸ்லாமும் வலியுருத்துகின்றது. தனது அன்பு மகன் அபூ சஹ்மா மது அருந்தியமையைக் கேள்வியுற்றதும் அதனைக் நீதிபதிகளிடம் விசாரனைக்காக விட்டால் கலீபாவின் மகன் என்ற காரணத்தை அவர்கள் மகனுக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவர் என அஞ்சி தானே விசாரணை நடாத்தி தாமே கசையடியையும் வழங்கினார். இடையே மகன் வேதனையால் மரணித்தான். கதாமா பின் மஸ்ஊன் என்ற தனது மைத்துனர் ஒருவர் மது அருந்தியமைக்கும் இவ்வாறே உமர் அவர்கள் தண்டனை வழங்கினார்கள்.
கலீபாவாகவே இருந்தாலும் அவரையும் விசாரனைசெய்யும் அதிகாரத்தை நீதிபதிகளிடம் இஸ்லாம் வழங்கியுள்ளது. அவ்விடயத்தில் நீதிபதிகள் நீதமாக நடக்கவேண்டும் என்றும் கலீபா என்பதற்காக நீதியில் வளைவு சுழிவுகளை ஏற்படுத்தக் கூடாதென்றும் உத்தரவிடுகிறது.
ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் முஸ்லிமல்லாத ஒருவரிடம் ஓர் குதிரையை விலைக்கு வாங்குகிறார்கள். அக்குதிரையில் சிறிது தூரம் பயணித்ததும் அதில் ஏதோ குறை இருப்பதை அறிந்துகொண்ட உமர் விற்றவரிடம் வந்து அதனைத் திருப்பி ஏற்குமாறு கூற அவர் அதனை முழமையாகவே மறுக்கின்றார். இருவரும்நீதிபதி சுரைஹ் இடம் வருகிறார்கள். வலக்கை ஆராய்ந்த காழி சுரைஹ் “ஒரு பொருளை வாங்கிய பின்னர் இருவரும் அவ்விடத்தைவிட்டு பிரியும் முன் அதனைத் திருப்பிக்கொடுக்கும் உரிமை நுகர்வோனுக்குண்டு. பிரிந்ததன் பின்னர் அதனை ஏற்காது மறுக்கும் உரிமை விற்போனுக்கு உண்டு” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். அந்தத் தீர்ப்பில் அகமகிழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அவரை கூபாவிற்கு காழியாகப் பதவி உயர்வுழங்கினார்கள்.
மஸ்ஜிதுந் நபவிக்கு அருகாமையில் ஒட்டியவாறு அப்பாஸ் (ரழி) அவர்களது வீடு அமைந்திருந்தது. அவ்வீட்டின் கூரைத் தண்ணீர் பள்ளியினுள் வீழ்ந்து தொழுகையாளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. எனவே கலீபா உமர் பள்ளிவாயிலை நோக்கி நீண்டிருந்த கூரைப் பகுதியை அவ்விடம் விட்டு நீக்கச்செய்தார். இதனைக் கண்ட அப்பாஸ் (ரழி) அவர்கள் நீதிபதி உபை இப்னு கஅப் இடம் முறையிடவே கலீபா வரவழைக்கப்பட்டார். உள்ளே காழி ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தமையால் வெகுநேரம் கலீபா அவர்கள் வெளியே காத்திருக்கவேண்டி ஏற்பட்டது. காழி வந்ததும் அப்பாஸ் (ரழி) “இது நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இருந்து வந்த கூரை. உமர் இதனை எனது அனுமதியின்றியே அகற்றியுள்ளார். இது என் மனதைப் பெரிதும் வருத்தப்படுத்துகிறது.” என தனது நியாயத்தை முன்வைத்தார். உமர் (ரழி) அவர்கள் பதிலுக்கு “மக்களது நலனுக்காவேதான் நான் இதனைச் செய்தேன்” என்றார்கள். அதற்கு அப்பாஸ் (ரழி) “நபியவர்களின் வற்புருத்தலிற்கமைய நான் அவரது தோல்மேல் ஏரி நின்றே அதனைச் செய்தேன். அதனால்தான் அது அகற்றப்பட்டதையிட்டு நான் பெரிதும் மனவேதனைப் படுகின்றேன்.” என்றார். இதனைக் கேட்டதும் உமர் (ரழி) அவர்களின் மனம் பதைபதைத்தது. உடனே எழுந்து “என்னை மன்னித்து விடுங்கள். இவ்விடயம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நீங்களே அக்கூரையை என் தோல்மீது ஏரி நின்று வைத்துவிடுங்கள்.” என்று வருந்திக்கேட்டார். அவ்வாறே செய்த அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்னர் அவ்வீட்டை மஸ்ஜிதுந் நபவிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.
ஒரு காழி வாதியுடனும் பிரதி வாதியுடனும் எவ்வாறு சமத்துவம்பேணி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பின்வரும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒரு முறை உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கலீபா உமர் அவர்கள் மீது வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். இருவரும், காழியாக இருந்த ஸைத்பின் ஸாபித்திடம் தீர்ப்புக் கோரிச் சென்றனர். உமர் (ரழி) அவர்களைக் கண்டதும் ஸைத் பின் ஸாபித் அவர்கள் எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றார். உடனே கலீபா “நீர் ஆரம்பமாகவே ஓர் அநீதியைச் செய்துவிட்டீர்” என்றார். பின்பு இருவருக்கும் மத்தியில் வாதப்பிரதிவாதம் நடந்துகொண்டிருக்கும்போது காழியான ஸைத் பின் ஸாபித் அவர்கள் உபை இப்னு கஅப் இடம் உமர் (ரழி) அர்கள் கலீபா என்பதற்காக இவ்வலக்கை விட்டுக்கொடுக்கும்படி சிபார்சு செய்தார். உடனே உமர் (ரழி) அவர்கள் சினம் கொண்டு “இது நீர் செய்த இரண்டாவது அநீதி. உமது பதவியைப் பற்றி நான் சிந்திக்கவேண்டியுள்ளேன்” என்று கண்டித்துக் கூறிவிட்டுச் சென்றார்கள்.
அலி (ரழி) அவர்கள்
மேலே கூறியதுபோன்றதொரு சம்பவம் அலி (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்தபோது நிகழ்ந்தது. ஒரு தடவை அலி (ரழி) அவர்களின் கவச ஆடை காணமல் போய்விட்டது. நீண்ட நாற்கலின் பின்பு அது ஒரு யூதனிடம் இருப்பததைக்கண்ட அலி அவர்கள் அவனிடமே சென்று அக்கவச ஆடை தன்னுடையது என்று கூறினார். அவனோ இல்லை அது தன்னுடையதே என்று விடாப்பிடியாய்ப் பதிலளித்தான். அது தன்னுடையதென்றே வாதித்தான். எனவே இருவரும் காழியிடம் சென்றனர். இருவரும் தமது வாதங்களை காழியிடம் எடுத்துக் கூறினார்கள். அலி (ரழி) அவர்களைப் பார்த்த காழி “இது உங்களது என்பதற்குத் தகுந்த சாட்சி இருக்கின்றதா?” என்று கேட்டதும். அவர் தனது மகனையும் அடிமையையும் சாட்சிகாளாக எடுத்துக் கூறினார். ஆனால் இஸ்லாமிய நீதி முறைப்படி இவ்விருவரும் உமக்கு நெருக்கமானவர்கள் என்றவகையில் அவர்கள் சாட்சிசொல்லத் தகுதியற்றவர்கள் என்று காழி மறுத்துவிட்டார். வேறு தகுந்த சாட்சியங்கள் அலி (ரழி) அவர்களிடம் காணப்படாமையால் அவ்வழக்கை காழி அவர்கள் தள்ளுபடி செய்தார்கள். ஒரு ஆட்சியாளரே சாதாரண ஒரு பாமரனின் முன்னால் நீதியில் தோற்றுப் போவாரா என்ற ஆச்சரியத்தில் அந்த யூதன் இஸ்லாத்தை தழுவினான். அக்கவச ஆடையை அலி (ரழி) அவர்களிடமே ஒப்படைத்தான்.
அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களது தீர்ப்பு
கிறிஸ்தவர்கள் மாபெரும் சலசலப்புடனும் சினத்துடனும் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களது வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர் எகிப்தின் ஆளனராக நியமிக்கப்பட்டிருந்தார். அம்ர் அவர்கள் வெளியே வந்து விடயத்தைக் கேட்டதும் அம்மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வந்திருந்த பாதிரியார் நடந்ததைக் கூறினார். “நேற்று இரவு யாரோ நகரின் மத்தியில் இருந்த சலவைக்கல்லினால் ஆன இயேசு சிலையின் மூக்கை உடைத்துள்ளார்கள். இதனை முஸ்லிம்களில் யாராவதுதான் செய்திருக்க வேண்டும்.” என்றார்.
அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் இது குறித்து அம்மக்களிடம் மன்னிப்புக்கோறி சிலையைப் பழுதுபார்த்துக்கொள்ளுமாறும் அதுக்குண்டான முழச்செலவீனத்தையும் தானே தருவதாகவும் கூறினார். ஆனால் பாதிரியாரோ விடுவதாயில்லை. “பலிங்குக் கல்லைப் பழுதுபார்க்க முடியாது என்றும் முழுச்சிலையையே செய்து தந்து அது அங்கே வைக்கப்பட்டாலும் அது போதுமான தீர்வல்ல என்றும் இதற்குப் பதிலாக உங்கள் முஹம்மத் நபியின் சிலையை அங்கு வைத்து மக்கள் முன்னால் அதன் மூக்கை உடைக்கவேண்டும்” என்றார்.
அம்ர் அவர்கள் அதிர்ச்சியும் அதேநேரம் கோபமும் கொண்டு “நீங்கள் செய்ய நினைக்கும் காரியத்திற்குப் பதிலாக எமது இந்த ஆட்சியும் செல்வங்களும் ஏன் உயிரே போனாலும் கூட பரவாயில்லை. இக்காரியத்தை ஒரு போதும் நான் செய்யமாட்டேன்.” என்று கூறிவிட்டு “நாளை குற்றவாளியைக் கண்டுபிடித்து அதே திடலில் உங்கள் முன்னால் நிறுத்துகின்றேன். அப்படி செய்யாவிடின் எனது மூக்கை நீங்களே துண்டித்து பலிதீர்த்துக்கொள்ளலாம்.” என்றார்கள். அனைவரும் திருப்தியுடன் திரும்பிச்சென்றார்கள்.
மறுநாள் காலை திடலிலே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூடியிருந்தார்கள். அம்ர் (ரழி) அவர்கள் அனைவரினதும் முன்னால் வந்து விடயத்தைக் கூறிவிட்டு தலைமைப் பாதிரியை முன்னால் வருமாறு அழைத்தார். “நேற்று கூறியதுபோல் என்னால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நீங்கள் தாராளமாக எனது மூக்கைத் துண்டிக்கலாம்” என்று கூறி தனது மூக்கை நீட்டியது மட்டுமன்றி தனது உரையிலிருந்த குற்றுவாளையும் உருவி பாதிரியின் கையில் கொடுத்துவிட்டார். பாதிரியார் அதிர்ச்சியடைந்தார். பின்பு அவ்வாளின் கூர்மையைக் கைகளால் பரிசோதித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கூட்டத்திற்கு மத்தியிலிருந்து ஒரு முஸ்லிம் இளைஞன் எழுந்து முன்னால் வந்தான். இக்குற்றத்தைச் செய்தது நான் தான் என்றும் தனது மூக்கையே துண்டித்துவிடுமாறும் ஆளுனர் அம்ர் அவர்களை விட்டுவிடுமாறும் வேண்டிநின்றான்.
சற்று தாமதித்த பாதிரியார் குற்றுவாளைத் தூக்கி எரிந்துவிட்டு புன்முறுவலுடன் இவ்வாறு கூறினார். “எம் நாட்டு ஆளுனர் அவர்களுக்கும் இந்த இளைஞனுக்கும் கூடியுள்ள அனைவருக்கும் நான் வாழ்த்துக்கூறுகின்றேன். இப்படிப்பட்ட சொக்கத்தங்கங்களை உருவாக்கிச்சென்ற நபியவர்களையும் வாழ்த்துகின்றேன். ஒரு சிலையின் மூக்கை உடைத்தமைக்குப் பதிலாக தமது மூக்குகளையே பலிகொடுக்கத் துணிந்துவிட்ட இவர்களை எண்ணி நான் பெருமிதம் அடைகின்றேன். இதுபோன்றதொரு நீதியை, நேர்மையை நான் பார்த்ததுமில்லை, எங்கும் கேட்டதுமில்லை.” என்று கூரி அம்ரையும் அவ் இளைஞனையும் ஆரத்தழுவிக்கொண்டார். கூடியிருந்த முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒருவரையொருவர் கண்ணீர்க் கண்களுடன் ஆரத்தழுவிக்கொண்டனர்.
சுரைஹ் அல்காழி
சுரைஹ் அல்காழி இஸ்லாமிய நீதி வரலாற்றில் முக்கியமான ஒரு நீதிபதி. பல்வேறு வழக்குகளை நடுநிலையோடு நின்று தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு தடவை அவரது மகன் அவரை நெருங்கி “தனக்கும் மற்றொரு கூட்டத்தாருக்குமிடையே தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு வழக்கு இருக்கின்றது என்றும் அதில் தனக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவீர்களென்றால் நீங்களே அதனை விசாரிக்கலாம். இல்லையெனில் வேண்டாம்” என்று கூறினார் அவரது மகன். சுரைஹ் வழக்கைத் தானே விசாரிப்பதாகக் கூறி அவர்கைள தன்னிடம் அழைத்துவர உத்தரவிட்டார். வழக்கை விசாரித்ததும் குற்றம் தனது மகன் பக்கத்தில் இருப்பது ஊர்ஜிதமாகியது. சுரைஹ் தீர்ப்பை மகனுக்கு எதிராக நீதத்தைப் பேணி வழங்கிவிட்டார். பின்பு தானே தனது மகனைச் சிறையிலடைத்து குற்றத்திற்கான தண்டனையை வழங்கினார்.
நீதிபதிகள் வெறுமனே வாதியினதும் பிரதிவாதியினதும் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் மட்டும் கேட்டுத் தீர்ப்பளிக்காது அவர்கள் சற்று மதியூகத்துடனும் மதிநுட்பத்துடனும் நடந்து குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளார்கள். இய்யாஸ் பின் முஅவியா (ரழி) அவர்கள் இதற்கு சிறந்த உதாரணமாவார்.
இவர் நீதிபதியாக இருந்தபோதுஇருவர் ஒரு வழக்கைக் இவரிடம் கொண்டுவந்து தீர்ப்பு வழங்குமாறு வேண்டினார்கள். அதில் ஒருவர் தான் ஒரு தொகைப் பணத்தை மாற்றவரான வியாபாரியிடம் பாலைநிலத்தில் ஒரு மரத்தடியில் வைத்து அமானிதமாக ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றதாகவும் திரும்பி வந்து கேட்கும் போது “அப்படியொரு பணத்தொகையைத் அவர் என்னிடம் பெறவே இல்லை” என்று மறுப்பதாகவும் கூறினார். காழி வியாபாரியைப் பார்த்து விவரத்தைக் கேட்டார். அவர் “தான் ஒரு நிரபராதியென்றும் தனக்கும் அப்பணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லையென்றும் அப்படியானதொரு மரத்தை நான் கண்டதேயில்லை” என்றும் அவர் பதிலுரைத்தார்.
நீதிபதியான இய்யாஸ் அவர்கள் வியாபாரியை அங்கே அமரவைத்துவிட்டு மற்றையவரைப் பார்த்து “நீங்கள் அதே மரத்தடிக்கு மீண்டும் சென்று வாருங்கள். அங்கு சென்றீர்களாயின் ஒரு வேளை அதனை சரியாக வைத்த இடம் உங்களுக்கு ஞாபகம் வரும். அல்லது ஒரு வேளை நீங்கள் அதனை அங்கு புதைத்திருப்பீர்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அவரும் மறுப்பேதும் பேசாது சென்றுவிட்டார். காழியும் தமது மற்ற வேளைகளில் மூழ்கிவிட்டார். சற்றுநேரத்தில் வியாபாரியைப் பார்த்து காழி “தற்போது அவர் அம்மரத்தை சென்றடைந்திருப்பாரா என்று கேட்டார்?” அதற்கு வியாபாரி “அது மிகவும் தொழைவில் உள்ளதால் இன்னும் போய் சேர்ந்திருக்க மாட்டார்” என்று பதிலுரைத்தார். காழிக்கு விடயம் புரிந்து விட்டது உடனே “ஏ மனிதரே! ஆரம்பத்தில் அம்மரத்தைக் கண்டதே இல்லை, அது பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறிய நீ தற்போது அம்மரம் தொலைவில் உள்ளது என்பதைச் சரியாகச் சொல்கிறாயே! நீ பொய் கூறிவிட்டாய் அல்லவா?” என்று கூறியதம் திகைத்துப் போன வியாபாரி தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு பணத்தொகையைத் திருப்பி ஒப்படைத்தான்.
அப்பாஸியர் ஆட்சிக் காலம்
இவ்வாறுதான் பின் வந்த அப்பாஸியர் ஆட்சிக் காலத்திலும் நீதி விடயங்களில் முஸ்லிம்கள் பேனுதனுடன் நடந்கொண்டார்கள். கலீபா முஃதமித் பில்லாஹ்வின் அமைச்சர் அப்தூன் பின் ஸாஇத் என்ற கிறிஸ்தவர் இஸ்மாயில் பின் இஸ்ஹாக் எனும் நீதிபதியின் அவைக்கு வருகை தந்தபோது நீதிபதி அவரை எழுந்து நின்று வரவேற்றார். இதனை அவையிலிருந்தோர் விரும்பாது முகம் சுலித்ததைக் கண்ட இஸ்மாயில் ஸ{ரா மும்தஹினாவில் வரும் எட்டாவது வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
“(விசுவாசிகளே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்துப் போராடாமலும் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாமலும் இருந்தவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீதமாக நடந்துகொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.”
இவ்வசனத்தை ஓதிவிட்டு இவ்வாறு கூறினார். “இவர் கலீபாவுக்கும் எமக்குமிடையிலான தூதுவர். முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றித்தருபவர். இது நன்மைசெய்தல் எனும் வட்டத்திற்குள் அடங்கும்” என்று விளக்கினார்கள்.
மன்னர் ஜஹான்கீர்
இந்தியாவில் மன்னர் ஜஹான்கீரின் ஆட்சிக்காலம். அவரது மனைவி நூர்ஜஹான் நிர்வாக விடயங்களில் அவருக்குப் பக்கபலாமாக இருந்தவர். ஒரு முறை தோட்டத்திற்குள் வந்த சலவைத் தொழிலாளியின் மீது அரசி நூர்ஜஹான் அம்பு வீசி அவன் இறந்துவிட்டான். எனவே இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி அவருக்கு மரணதண்டனை விதியானது. முழு நாடும் திகைத்து நின்றது. “மன்னனின் மணைவிக்கு மரணதண்டனையா?”
“தன்னால் நீதி விடயத்தில் தலையிட முடியாது அது மார்க்கத்திற்கு முரணான செயல்” என்று மன்னர் முற்றாகவே மறுத்துவிட்டார். மரணித்தவரின் மனைவி அரசி நூர்ஜஹானை மன்னித்து அதற்காக இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதுதான் அவரைக் காப்பாற்ற உள்ள ஒரே வழி என்று அமைச்சர்கள் எடுத்துக் கூறினர். என்றாலும் மன்னர் ஜஹான்கீர் “அவர் மன்னிப்பது அவரது சுய விருப்பத்தில் அமைய வேண்டும். இதில் எனது அதிகாரத்தையோ செல்வாக்கையோ பயன்படுத்திவிடக் கூடாது” என்று உறுதியாகச் கூறினார். அதனடிப்படையில் அரசி நூர்ஜஹான் விடுதலைபெற்றார்.
முடிவுரை
இவ்வாறு இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் நீதிமுறைமை என்பது மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கப்பட்டுள்ளது. இதில் ஏழை, பணக்காரன், உயர் குலத்தான், இழி குலத்தான் முஸ்லிம், முஸ்லிமல்லாதவன், ஆண்டான், அடிமை என்ற வித்தியாச வேறுபாடுகளெல்லாம் காணப்படவில்லை. அனைவருக்கும் ஒரே நீதி. யாரின் பக்கம் நியாயம் இருக்கின்றதோ அவருக்கு சார்பாகவே நீதி வழங்கப்பட்டது. இதனைக் கண்ணுற்ற பல முஸ்லிமல்லாதவர்களே இஸ்லாத்தில் நுழைந்துள்ளமையை வரலாறு எடுத்தியம்புகிறது.
இன்று மனித உரிமை, ஜனநாயகம் பேசும் நாடுகளில்கூட ஒரு ஜனாதிபதி என்ன குற்றம் செய்தாலும் அவரை விசாரனைக்கு உட்படுத்தவோ தண்டிக்கவோ உரிய அதிகாரம் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் பல்வேறு நாடுகளை இணைத்து பெரும் சாம்ராஜ்யமாய்த் திகழ்ந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதிக்கு எதிராக ஒரு சாதாரணக் குடிமகன் வழக்குத் தொடர்வதும் அவரை நீதிபதி அழைத்து விசாரிப்பதும் இலகுவானதாக இருந்தது. இது உண்மையிலேயே ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
ஒரு குற்றவாளியின் தண்டனையைக் குறைக்கும் அல்லது தள்ளிப்போடும் அல்லது ரத்து செய்யுதும் அதிகாரத்தை சம்பந்தமே இல்லாத ஜனாதிபதியிடம் கொடுத்திருக்கும் இன்றைய சடவாத அரசியலில் எங்கு நீதம் காணப்படுகின்றது? இஸ்லாமோ அவ்வதிகாரத்தை அநீதமிழைக்கப்பட்டவனிடமோ அல்லது அவனது குடும்பத்திடமோ வழங்கி நீதி முறைக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கின்றது.
இன்று நீதி என்பது வெறுமனே ஒரு யாப்பழங்காரமாகவும் வார்த்தைப் பிரயோகமாகவுமே நடைமுறையில் காணப்படுகின்றது. பிரான்ஸிஸ் பேகன் (Francic Bacon) என்பவர் நீதி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறிய சடவாத சிந்தனையை இங்கு ஞாபகிப்பது சிறந்ததென நினைக்கின்றேன்.
“Judges should be lions. But yet lions under the throne”
“நீதிபதிகள் சிங்கங்களைப் போன்று செயல்படவேண்டும். ஆனாலும் சிங்கங்கள் மன்னனின் சிம்மாசனத்திற்குக் கீழ்ப்பட்டே செயற்படவேண்டும்”
எனவே நீதி என்பது நீதியாக இருப்பது இஸ்லாத்தின் ஆளகையில் மட்டும்தான். இதனையே இவ்வாக்கம் வரலாற்று ஆதாரங்களுடாக முன்வைத்துள்ளது. இஸ்லாம் நீதி பற்றி வெறும் கோட்பாட்டளவில் மாத்திரம் பேசாது அதனை நடைமுறையிலும் அச்சொட்டாக அமுல்படுத்திக் காட்டியுள்ளது என்பதை நிரூபிக்கவே ஓரிரு சம்பவங்களை மாத்திரம் இங்கே எடுத்துக் காட்டியுள்ளேன். மாறாக நீதி வழங்கியதில் முன்னோர் காட்டிய முன்மாதிரிகள் அனைத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
கட்டுக்கோப்பானதொரு சமூக உருவாக்கத்திற்கு எவ்வளவு நீதி நிலைநாட்டப்படல் முக்கிம். இந்த நீதியை நீதமாக நிலைநாட்ட இஸ்லாத்தினால் மட்டும்தான் முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
5 comments:
thanks love this blog
மிகவும் அற்புதமான தொகுப்பு தொடரட்டும் உங்கள் பணி
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி அன்பரே!
மிகச் சிறந்த ஆக்கம்.
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
மிகச் சிறந்த ஆக்கம்.
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...