நாம் வாழும் பூமிப் பந்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டிருப்பது கடல்தான். கடற் கரைகளும்
கடலின் மேற்பரப்பும் அதன் சில மீட்டர்கள் வரையான அடிப்பகுதியும் பார்ப்பதற்கு அழகாக
வனப்புடன் காட்சி தந்தாலும் இன்னும் கீழே செல்லச் செல்ல ஆழ்கடல் பயங்கரமானதாகவும் சுவாரஷ்யமானதாகவும்
இருக்கும். இத்தொடரில் இருள் சூழ்ந்துள்ள ஆழ்கடலின் இரகசியங்களை அலசுவோம்.
1.ஆழ்கடலின் இருள்கள்.
ஆழ்கடலின் இருள் எப்படியிருக்கும் என்பதை இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்களின்
உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டறிய 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வியத்தகு விதத்தில் அல்குர்ஆன் கூறியிருப்பதை ஒரு முறை
படித்துப் பாருங்கள்.
“அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை
மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல
இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது.
இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.”
(24:40)
இங்கு ஆழ்கடலில் இருக்கும் அடர் இருளைப் பற்றி இவ்வசனம் பேசுகின்றது. சூரியனிலிருந்து
வரும் ஒளிக் கதிர்கள் கடலின் மேற்பரப்பில் பரவுகின்றன. ஒளிக் கற்றைகளின் ஏழு வண்ணங்களும்
கடலின் மேற்பரப்பில் படிந்தாலும் அதில் உள்ள நீல நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களெல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாக 1000 மீட்டர் ஆழம்வரை உறிஞ்சப்படுகின்றன.
மேல் அடுக்கில் உள்ள சிவப்பு நிறம் 10 மீட்டருக்குள் உறிஞ்சப்படுகிறது. பின்னர் 50 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் கதிர்கள் உறிஞ்சப்படுகின்றன. 100 மீட்டர் ஆழத்தில் பச்சைக் நிறக் கதிர்கள் உறிஞ்சப்படுகின்றன.
200 மீட்டர் ஆழம் சென்றவுடன்
நீல நிறக் கதிர்களும் மறைய ஆரம்பிக்கின்றன. இறுதியில் எஞ்சுவது ஊதா நிறமாகையால் அதிலிருந்து
1000 மீட்டர் ஆழம்வரை உள்ள பகுதி
நமது கண்களுக்கு சற்று கருமையாகவே தோன்றும். அதற்கும் கீழே செல்ல செல்ல நிறங்கள் யாவும்
மறைந்து இருள்வெளிகள் சூழ ஆரம்பித்து விடுகின்றன. கடும் இருட்டாகத்தான் இருக்கும்.
உங்கள் கைகளை நீங்கள் பார்க்க நினைத்தாலும் உணரத்தான் முடியுமே ஒழிய கண்களால் பார்க்க
முடியாது. இதனைத்தான் மேற்கண்ட அல்குர்ஆனிய வசனம் கூறியது.
2.ஆழ்கடலின் அலைகள்.
கடலின் மேற்பரப்பில் மட்டுமல்லாது ஆழ்கடலிலும் அலைகள் இருப்பதாக மேற்கூறிய வசனத்திலிருந்து
விளங்கிக்கொள்ளலாம். “ஓர் அலை அதை மூடுகிறது.
அதற்கு மேலே மற்றொரு அலை.” (24:40)
இந்த அல்குர்ஆன் வசனத்தின் நிதர்சனத்தை அண்மையில்தான் விஞ்ஞானம் கண்டுகொண்டது.
கடலில் அலைகள் மேற்பரப்பில் மட்டுமன்றி அதன் அடிப்பகுதிகளிலும் காணப்படுவதாக விஞ்ஞானிகள்
கண்டுகொண்டனர். இங்கு ஏற்படும் அலைகளின் கீழ் மட்ட நீரின் அடர்த்தியும் மேல் மட்ட நீரின்
அடர்த்தியும் நிறமும், சுவையும் வேறுபடுவதாகவும்
அவர்கள் கூறுகின்றனர். கீழுள்ள படத்தில் கடல்
நீரின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் உள்ள அலைகளை காணலாம். கீழ் அடுக்கு மேல் அடுக்கை
விட அடர்த்தி அதிகமாக உள்ளதை அவதானிக்க முடியும்.
வினாடிக்கு 300,000 கிலோ மீட்டராக உள்ள ஒளியின் வேகம் கடல் நீருக்கு அடியில் 225,000 கிலோ மீட்டராகக் குறைவதற்குக் காரணம் இந்த அலைகள்தான் எனவும்
கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரைகூட சூரிய ஒளியால் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. 200 மீட்டர் ஆழத்தில் வைத்தே ஒளி சன்னம் சன்னமாக குறைந்து முடிவில்
ஒளியே இல்லாமல் போகக் காரணமும் தண்ணீரின் மேல் மட்ட கீழ்மட்ட அடர்த்தியும் அதற்கு மேல்
அடுக்கடுக்காக மோதும் அலைகளும்தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை யாவும் சமீப காலக்
கண்டுபிடிப்புகள்தான். திருமறையோ 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
3.ஆழ்கடலின் மலைகள்.
நிலத்தில் போன்றே கடலுக்கு அடியிலும் பிரம்மாண்டமான மலைகள் காணப்படுகின்றன.
மலைகள்
மட்டுமன்றி கனவாய்கள், குகைகள், சுரங்கங்கள், பள்ளத்தாக்குகள் என பல மர்மப் பிரதேசங்கள் காணப்படுகின்றன. உலகின்
முப்பது நாடுகள் ஒன்று சேர்ந்து கடலின் அந்தரங்கத்தை அறிய 1955ல் ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. 1970 ஆம் ஆண்டு வரை கிடைத்த ஆய்வுத் தகவல்களைக் கொண்டு கடலின் தரைப்
பகுதி வரைபடமாக உருவாக்கப்பட்டது. இதில் மனிதன் கண்டறியாத பகுதிகள் இன்னும் பல உள்ளன
என்பதுதான் உண்மை.
4.ஆழ்கடலின் உயிரினங்கள்.
கடலின் சூரிய ஒளி ஊடுருவும் பகுதிக்குக் கீழே வாழும் உயிரினங்கள் ஆழ்கடல் உயிரினங்கள்
(Deep sea creatures) என அழைக்கப்படுகின்றன.
மனிதன் உயிர் வாழவே முடியாத இத்தகைய சூழ்நிலையில் சில அபூர்வ உயிரினங்கள் வாழ்ந்து
வருகின்றன. அவற்றில் சிலதைத்தான் மனிதன் இதுவரை ஆராய்ந்துள்ளான். இன்னும் ஆராயப்படாத, கண்டேயிராத பார்க்கப் பயங்கரமான உருவங்களுடன் ஏராளமான உயிரினங்கள்
இருக்கலாம் என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
பெரிய கண்களுடனும், பெரிய வாயுடனும், நீண்ட உணர் கொம்புகளுடனும் கூம்பு போன்ற அமைப்பிலும் மற்றும்
அதிக உணர்திறன் கொண்டதாகவும் இவ்வுயிர்கள் இருக்கின்றன. இவற்றில் அதிகமானவை ‘பயோலுமினிசென்ட் (Bioluminescence) அமைப்பைக் கொண்டவையாகும். அதாவது இவை இருளில் இருப்பதால் சுயமாக
ஒளியை தமது உடலிலிருந்து ஒளிரச் செய்யும் சக்தி இவற்றுக்கு உண்டு. ஒளிர்தல் (Bioluminescence)
என்பது வேதியியல் தாக்கங்கள் மூலம் ஒளியை உருவாக்கக்கூடிய திறனாகும்.
அதாவது, தாங்கள் செல்லும்
பாதையின் வெளிச்சத்திற்காகவும், இரையை ஈர்க்கவும் மற்றும் தன் துணையை ஈர்க்கவும் எனப் பல வழிகளில் இந்த ஒளியை இவை
உருவாக்கிப் பயன்படுத்துகின்றன.
இந்த ஒளியின் காரணமாக சில உயிரினங்கள் வைப்பர் மீன்
(Viper fish), பிரகாச ஒளி மீன் (flashlight
fish) எனப் பெயரிடப்பட்டுள்ளன. மேலும், ஒளிர்தலின் மூலம் எதிரிகளைக் குழப்பி அவைகளின் போக்கினை மாற்றவும்
இவற்றால் முடிகிறது. இந்த ஒளிர்தலுக்கு தேவையான ஒளியை உருவாக்குகின்ற இரசாயன செயல்முறையில்
முக்கிய இரண்டு இரசாயனங்கள் பயன்படுகின்றது. அந்த இரசாயனத்திற்கு லூசிஃபெரின் (luciferin)
என்று பெயர். இந்த இரசாயன செயல்முறைக்கு லூசிஃபெரஸ் (luciferase)
என்று பெயர். இவை மின்னும் வடிவிலும் ஒளி ஊடுருவக்கூடிய உடலமைப்பையும்
கொண்டுள்ளன.
இதில் சில வகை உயிரினங்கள் பார்வைச் சக்தியையும் தாண்டி உணர்ச்சித் திறன் கொண்ட
பெரிய உணர்வுக் கொம்புகளைக் கொண்டுள்ளன. மேலும் சில உயிரினங்கள் தனது துணை உயிரினம்
வெளியிடும் இரசாயன வாசனையைக் கண்டறிய வலுவான உணர்திறனைப் பெற்றுள்ளன. மேலும் பல மாதங்கள்
கூட உணவு இல்லாமல் வாழ்கின்றன.
இவற்றின் பெரும்பாலான உணவு கடலின் மேல் பகுதியில் இருந்து விழும் பொருட்களாலும்
அல்லது கடலில் வாழும் உயிரினங்கள் இறந்து அடிமட்டத்தில் விழும்பொழுதும் கிடைக்கிறது.
அத்தோடு கடலுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்களையும், நுண்ணுயிரிகளையும் உண்டு உயிர் வாழ்கின்றன.
கடலின் மேல் மட்டத்தைவிட பல நூறு மடங்கு அழுத்தமான நீர்ப்பகுதியில், மிகக் குறைந்த
அளவு ஒக்சிஜன், மிக சிறிய உணவுகள், கடுமையான இருட்டு, அதீதக் குளிர் என கடினமான நிலைமைகளிலும் இவை வாழ்ந்துவருகின்றன.
வேறு எந்த ஜீவராசிகளாளும் வாழ முடியாத இந்த சூழலிலும் வாழும் விதத்தில் அல்லாஹ் இவ்வுயிர்களைப்
படைத்துள்ளான். இந்தப் பிரதேசத்திலிருந்து மேற்பகுதிக்கு வந்து இவற்றால் வாழவும் முடியாது.
இந்தச் சூழலில் வாழும் வண்ணம் பெரும்பாலும் மீன்கள் 25 செ.மீ நீளத்திலும், வழுவழுப்பான சதையையும், குறைந்த பட்ச எலும்பு அமைப்பையும் கொண்டிருக்கும்.
5.ஆழ்கடல் ஆராய்ச்சிகள்.
அரபு மொழியில் கடல் “பஹ்ருன்” என அழைக்கப்படுகிறது. அல்குர்ஆனில் கடல் சம்பந்தமாக 41 இடங்களில் வந்துள்ளன. இத்துனை தடவைகள் திரும்பத் திரும்பக்
கூறியிருப்பது அதன் அற்புதங்களையும் அத்தாட்சிகளையும் மனிதன் ஆராய வேண்டுமென்பதற்காகத்தான்.
ஓதிவிட்டு மூடிவைப்பதற்கு மட்டுமல்ல.
ஆழ்கடல் ஆராய்ச்சிகள் விண்வெளி ஆராய்ச்சிகளைவிட சிறமமானது என்பதே விஞ்ஞானிகளின்
கருத்து. அதனால்தான் ரஷ்ய ஸ்புட்னிக் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப்பின்புதான்
ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக நீர் மூழ்கி ஓடம் அனுப்பப்பட்டது. எப்படியோ இன்றைய விஞ்ஞான
தொழில்நுட்பங்களின் உதவியுடன் மனிதன் கடலின் ஆழ, அகலங்களையும் அதன் தன்மையையும் வெகு சுலபமாக கண்டு பிடித்துள்ளான்.
ஒக்சிஜன் சிலிண்டர்களையும், நீர் மூழ்கி ஓடங்களையும்
பயன்படுத்தி பல நாள் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்துள்ளான். ஆளில்லா நீர் மூழ்கி சாதனங்களில்
கேமராக்களைப் பொறுத்தி கடலின் தன்மைகளை அடர்த்தியை அறிந்துகொண்டுள்ளான். இத்தனை வசதி
வாய்ப்புகளும் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பிறகுதான் கடலின் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை
தற்காலங்களில் கண்டறிய முடிந்தது. ஆராய்ச்சியாளர்கள் ஆழமான கடல் தரையில் இரண்டு சதவீதத்திற்கும்
குறைவான உயிரினங்களை மட்டுமே ஆராய்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். இன்றளவும் ஒவ்வொரு புதிய
ஆராய்ச்சியின் போதும் பல புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லிண்ட் பெர்க் என்பவரும், இராபர்ட் ஸ்டெனுயிட் என்பவரும்தான் 432 அடி ஆழத்தில் 49 மணி நேரம் தங்கிச் சாதனை ஏற்படுத்தினர். கடலடியில் அமைக்கப்பட்ட
உலோகக் கூடாரம் ஒன்றில் தங்கி, அவ்வப்போது சுவாசக் கருவியுடன் வெளியே வந்து நீரில் நடமாடினர். 1960ஆம் ஆண்டில் டொன் வொல்ஷ் மற்றும் ஜேக்கஸ் பிக்காட் ஆகிய இருவரும்
10975 மீட்டர் ஆழம்வரை சென்று ஆராய்ச்சியில்
ஈடுபட்டனர். அதன் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டில் ஹொலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் 10898 மீட்டர் ஆழம்வரை சென்று வந்தார். இவ்வாறு ஆழ் கடலின் மர்மங்களைத்
துளக்கும் நோக்கில் ஆழ் கடல் ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆழ்கடல் பற்றிய ஆய்வுகளில் இதுவரை மனிதன் கண்டறிந்துள்ளது அற்பமானவையே. இந்த மறைவான
உலகின் முழு மொத்த அறிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான்.
“அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி
எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்”
(6:59)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...