இஸ்லாம், கிறிஸ்தவம்
யூதம் ஆகிய மூன்று மதங்களுடனும் மிகவும் நெருக்கமான தொடர்பைக்கொண்ட ஒன்றுதான் இந்த
சாக்கடல். மூன்று மதங்களினதும் வேதங்களில் இக்கடல் அப்பிரதேசம்
மற்றும் அங்கு நடந்த சில வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகப் பிரபல்யமிக்க இந்த சாக்கடலின் அதியங்கள் பற்றி இத்தொடரில் நோக்குவோம்.
சாக்கடலின் அமைவிடம்
சாக்கடல் கிழக்கே ஜோர்தானையும் மேற்கே
பலஸ்தீனையும் எல்லைகளாகக்கொண்டு இரண்டு நாடுகளுக்கும் சரி நடுவே ஜோர்டான் பெரும்பிளவுப்
பள்ளத்தாக்கில் (Jordan
Rift Valley) அமைந்துள்ளது. இது நான்கு புறத்தாலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு நீர்ப்பரப்பும்
கூட.
இது 67 கி.மீ (42 மைல்) நிளமும் 18 கி.மீ (11 மைல்) அகலமும் பரந்து
விரிந்துள்ளது. அதுமட்டுமன்றி உலகின் மிகவும் தாழ்வான நிலப்பரப்பும் இதுதான்.
கடல் மட்டத்திலிருந்து -395
மீட்டர் (1295 அடி) பள்ளத்தில் இக்கடலும் அது சார்ந்த பிரதேசங்களும் அமைந்துள்ளன. இவ்விடத்தில்
அல்குர்ஆனின் ஒரு வரலாற்று அற்புதத்தை ஞாபகப்படுத்தியாகவேண்டும்.
உலகிலேயே மிகவும் தாழ்வான பகுதி சாக்கடல்
பகுதிதான் என்பது நவீன தொழில்நுட்பக் கருவிகள், அளவை முறைகள்,
புவியியல் ஆய்வு முறைகள் என்பவற்றின் துணையுடன்தான் அண்மைக்காலங்களில்
கண்டறியப்பட்டது. ஆனால் இத்தகைய தொழிநுட்ப, அளவையியல் முறைமைகள் இல்லாத அன்றைய காலத்தில் அல்குர்ஆன் இதனைத் துள்ளியமாக்க்
கூறியிருப்பது அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு சான்றாகும். சூரா அர்ரூமில் மூன்றாவது வசனத்தில் “அத்னல் அர்ழ்
– தாழ்வான பூமி” என்ற பிரயோகத்தின் மூலம் இதனை
அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
சாக்கடல் என்று பெயர் வரக்காரணம்.
இது தமிழில் சாக்கடல், சாவுக்கடல் என்றும் ஆங்கிளத்தில் Dead
Sea என்றும் அரபு மொழியில் அல்பஹ்ருல் மைய்யித் (البحر الميت) என்றும் அழைக்கப்படுகிறது. இது கடல் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் கடல் அல்ல. உப்பு நீர் நிறைந்த ஒரு பெரிய ஏரி. ஏரிகளில் பொதுவாக
உப்புத் தன்மை காணப்படுவதில்லை. ஆனால் இதன் நீரில் உப்பின் செரிவு அதிகமாக இருப்பதால்
இதனைக் கடல் என்று அழைக்கின்றோம் அத்தோடு இது சாக்கடல் என்று அழைக்கப்படுவதற்கு முக்கியமாக இரண்டு காரணிகள்
உள்ளன. ஒன்று சாதாரண கடல் நீரை விடவும் இக்கடலில் 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமாக இருப்பதால் இதில் மீன்களோ, கடல் பாசிகளோ வாழ்வதில்லை.
அத்தோடு தரை வாழ் உயிரினங்கள் இதற்கு நீர் அருந்த வருவதுமில்லை.
எனவே இது செத்த கடல் எனப்படுகின்றது.
இரண்டாவது காணரம், ஜோர்தான் ஆற்றிலிருந்தும் இன்னும் சில ஓடைகளில் இருந்தும் இங்கு வந்து சேரும் நீர் அப்படியே இங்கு
தேங்கி நிற்கின்றது. இங்கிருந்து வேறு எங்கும் நீர் ஓடுவதில்லை. ஆற்றினதும் ஓடைகளினதும் நீர் இறுதியாக
வந்தடையும் இடம் என்பதாலும்
இது சாக்கடல் எனப்படுகிறது.
சாக்கடலின் வரலாறு.
சாக்கடல் மிகத் தொன்மையான ஏரியாகும். சுமார் 37 இலட்சம்
ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகிலேயே மிக
நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ
நகரம் நம்பப்படுகிறது. பைபிலில் குறிப்பிடப்படும் சொடம், கெமோரா அதாவது லூத் (அலை) அவர்களுடைய சமூகம்
வாழ்ந்த அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட (பார்க்க : அல்குர்ஆன் 29:30-35) நகரங்கள் சாக்கடலின் தென் பகுதியில்
அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில்
கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவியிருந்த்தாகவும். எப்திய
பிரமிட்டுகளில் மம்மிகள் சாக்கடலில் உள்ள கணிமங்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகளைக்
கொண்டுதான் பாதுகாக்கப்பட்டன என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இன்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இடத்தைப் பார்வையிட ஆண்டொன்றுக்குக் சுமார் 2.9 மில்லியன் சுற்றுலாப் பிரயாணிகள் வருகின்றனர்.
மிதக்கவைக்கும் சாக்கடல்
சாக்கடல் பிரபல்யமாவதற்கு முக்கிய காரணமே
அது மிதக்கும் தன்மை கொண்டிருப்பதால்தான். பொதுவாக நாம் ஆற்றிலோ, குளத்திலோ குதித்தால் நீரினுள் அமிழ்ந்துவிடுவோம். ஆனால்
சாக்கடல் அவ்வாறல்ல. அதில் குதித்தாலும் அது எம்மை வெளியே அழுத்தி
நீரினுள் ஆமிழ்ந்துவிடாமல் செய்யும். சுற்றுலாப் பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும்,
செய்தித்தாள்களும் படிக்கும்
காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு.
மற்றைய கடல் நீரில் உள்ள உப்பின் செரிவைவிடவும்
இதில் 8.6 மடங்கு அதிகமான உப்பு செரிந்திருக்கின்றது. இதனால் இயற்கையாகவே நீரில் மிதப்புத்தன்மை (Buoyancy) உருவாகின்றது. எனவேதான் இந்நீரின் அடர்த்தியைவிட குறைந்த
செறிவுள்ள எதையும் இது மிதக்கச் செய்யும். இது மனித உடலைவிட அதிகமான அடர்த்தி என்பதால்தான்
நாமும் மிதக்கின்றோம். இதன் நீர் அதிகளவு
உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு முக்கியமான இரு காரணங்கள் உள்ளன.
ஒன்று
சுற்றியுள்ள
பகுதியின் ஆறுகள் இறுதியாக வந்து சேரும் இடம் இக்கடல் என்பதாலும் இதிலிருந்து நீர்
வேறு எங்கும் கடத்தப்படாத்தாலும் ஆற்று நீரிலுள்ள கனிம உப்புக்கள் இங்கே படிந்துவிடுகின்றன. இரண்டாவது
ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுவதால் கணிமங்கள் தங்கிவிட நீர்
மட்டும் சூரிய ஒளியால் வடிகட்டப்பட்டு மேலே செல்கின்றது. இக்காரணங்கள்தான்
உப்பின் அடர்த்தி கூடுவதற்கும் நாம் மிதப்பதற்கும் காரணமாக உள்ளன.
சாக்கடல் பகுதியில் உயிரினங்கள்
அதிகளவு உவர்ப்புத்தன்மைகொண்ட இந்நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா
விட்டாலும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. சாக்கடல் பகுதியில் பலவிதமான பறவைகளும் ஒட்டகம், முயல், மலையாடு, நரி, குள்ளநரி, சிறுத்தை போன்ற
விலங்குகளும் வாழ்கின்றன. பலஸ்தீன், ஜோர்டான்
நாடுகள் இப்பகுதியில் இயற்கைப் சரணாலயங்களை அமைத்துள்ளன. பப்பைரஸ்
மற்றும் தென்னை இனத் தாவரங்களும் இங்கு
காணப்பட்டன.
சாக்கடலின் மருத்துவக் குணங்கள்
இந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைட் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன. மக்னீசியம் குளோரைட் 53%, பொட்டாசியம்
குளோரைட் 37%, சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) 8%, இன்னும் வேறு பல உப்புக்கள் 2% என்ற அமைப்பில் கிடைக்கின்றன. இவை இரசாயன மற்றும் இரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல்
இருக்கக் காரணம் சாக்கடலில்
இருந்து வெளியாகும் ‘அஸ்ஃபால்ட்’
(asphalt) என்னும் நிலக்கீல் உப்புமூலம் அவை பாதுகாக்கப்பட்டதுதான்.
சாக்கடல் நீரிலும்
சேற்றிலும் கலந்துள்ள மருத்துவக் குணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ்
(Psoriasis) முகப்பரு, சொறி, படை, பொடுகு உட்பட சில தோல்
நோய்களைக் குணப்படுத்துவதாகக்
கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக்
கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு The Health Spa என்றும் Natural Spa என்றும் பெயர் கூறப்படுகின்றது. மட்டுமன்றி இங்கிருந்து கிடைக்கும் களிமண்ணையும் தாதுப்பொருட்களையும்
பயன்படுத்தி ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றது.
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின்
கரையில் காணப்படல், மாசுபடாத வளி, தாழ்வான பகுதி என்பதால் குறைவான வளியமுக்கம், புற ஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல்
என்பன உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச்
சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்குகிறது. சாக்கடலைச்
சுற்றிலும் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, பலவகை உப்புகள்
தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து கணிசமான அளவு ‘பொட்டாஷ்’ (எ) ‘சாம்பல் உப்பு’ எடுக்கப்பட்டு, உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இத்தனை காரணங்களும் சேர்ந்து இயற்கையாகவே அல்லாஹ் சாக்கடலையும் அதன் அண்டிய பகுதிகளையும் ஓர் ஆரோக்கிய
பூங்காவாக அமைத்துள்ளான்.
அல்குர்ஆனின் சான்று.
ஆய்வாளர்களின் யூகங்களின்
படி பல இலட்சம் வருடங்களுக்கு முன்பிருந்து சாக்கடல் உருவாகி இருக்கலாம் என்று
நம்பப்பட்டாலும் அது இப்றாஹீம் (அலை) அவர்களுடைய
காலத்தில் லூத் (அலை) அவர்களுடைய
சமூகத்தை கல்மாறி பொழிந்து அவ் ஊரைத் தலைகீழாகப் புறட்டியதிலிருந்துதான் இது
நடந்திருக்கவேண்டும் என்பதும் நவீன கால தொல்பொருள் ஆய்வாளர்களின் ஒரு முக்கிய
கருதுகோளாகும். காரணம் சொடம், கெமூரா
எனும் இப்பகுதிகளை அண்மித்த பகுதியில் ஒரு பாரிய எரிமலை வெடிப்பும் புவி
நடுக்கமும் ஏற்பட்டதாகவும் அதுவே சுடப்பட்ட கற்களாக அவ் ஊர் வாசிகள் மீது பொழிந்து
அப்பகுதி தலை கீழாக புறட்டப்பட்டதாகவும் இதனை எரிமலையில் இருந்து
எடுக்கப்படக்கூடிய சல்பர் இக்கடல் பகுதியில் அதிகமாக இருப்பது உறுதிசெய்வதாகவும்
விஞ்ஞானிகள் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
லூத் (அலை) அவர்களுடைய வரலாற்றை அல்லாஹ் குர்ஆனில்
கூறியதனூடாக சாக்கடலின் அறிவியல்தன்மைகள் பற்றியும் எம்மை ஆராயத் தூண்டுகின்றான்.
கீழே படியுங்கள். “ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி
விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப்
பொழியச் செய்தோம். நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (15:73)
1 comments:
👍👌Jazakumullahu khaira sir, 4 the wonderful msg.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...