*பிரம்மாண்டமான பிரபஞ்சம்.*
எமது பிரபஞ்சம் நன்றாகக்
காற்று நிரப்பப்ட்ட ஒரு பலூனைப் போன்ற மிகப் பிரம்மாண்டமானதொரு வெளி. இது ஒவ்வொரு வினாடியும்
300,000 கிலோ மீட்டர் (ஒளியின்) வேகத்தில்
விரிவடைந்துகொண்டிருக்கின்றது. இப்பிரபஞ்சத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான கெலக்ஸிகள் காணப்படுகின்றன.
கெலக்ஸி என்பது கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் அல்லது ஞாயிற்றுத் தொகுதிகளின் குவியல்
என்று கூறலாம். 300 மில்லியன்களுக்கும்
அதிகமான கெலக்ஸிகளில் பல்வீதி (Milky way) என்றழைக்கப்படும் ஒரு கெலக்ஸியில்தான் நாம் இருக்கின்றோம். இந்த கெலக்ஸியில் மாத்திரம்
250 பில்லியன்களுக்கும் அதிகமான
நட்சத்திரங்கள் (சூரியக் குடும்பங்கள்) இருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அவற்றில் ஒன்றுதான் எமது சூரியக் குடும்பம்.
*பிரபஞ்சத்தில் மனிதன்.*
சூரியக் குடும்பத்தில்
எட்டுக் கோள்கள். அதில் ஒன்றுதான் எமது பூமி. இங்குதான் நாம் வாழ்கின்றோம். பூமியிலும்
71% நீர்ப் பரப்பு. 29% தான் நிலப் பரப்பு. நீர்ப்பரப்பைத் தவிர்த்துப்
பார்த்தால் 29% ஆன நிலப்பரப்பில்தான் நாம் வாழ்கின்றோம். நிலத்திலும்
ஆட்டிக், அண்டாட்டிக் போன்ற
கடும் குளிர் பிரதேசங்களில் மனிதன் காலடிவைக்காத இடங்களும் உண்டு. சஹாராபோன்ற பெரும்
பாலை நிலங்கள் காணப்படுகின்றன. அமேசன் போன்ற அடர்ந்த பயங்கரமான காடுகள் உள்ளன. நாம்
வாழும் பகுதிகளிலேயே மலைகளும் பள்ளத்தாக்குகளும் சதுப்பு நிலங்களும் கணவாய்களும் நிறைந்து
காணப்படுகின்றன. இவையனைத்தையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 29% இலும் 10 வீதமான சிறு பகுதியிலேயே மனிதன் வாழ்கின்றான்.
சதாவும் விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் மனிதன் என்பவன் ஒரு அற்பப் பொருளே!
*அர்ஷ், குர்ஷ் உடன் ஒப்பிட்டால்*
வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் விரிவடைந்துகொண்டிருக்கும்
மேற் குறிப்பிட்ட இவ்வளவு பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை அல்லாஹ்வின் சிம்மாசனம்,
அவன் அமர்ந்திருக்கும் அர்ஷ்
உடனும் அதற்குக் கீழால் அல்லாஹ்வின் திருப்பாதங்களை வைக்கும் இடமான குர்ஷுடன் ஒப்பிட்டுப்
பார்ப்போம். குர்ஷை அர்ஷின் அருகில் வைத்தால் பெரியதொரு பாலை வனத்தில் காணாமல்போன மோதிரத்தின்
அளவுதான் குர்ஷ் இருக்கும். குர்ஷையும் அதற்குக் கீழால் உள்ள எமது பிரபஞ்சத்தையும்
ஒப்பிட்டால் அதுவும் பெரியதொரு பாலை வனத்தில் காணாமல்போன மோதிரத்தின் அளவுதான் இருக்கும்
எமது பிரபஞ்சம். ஆக இப்பிரபஞ்சமே அற்ப மோதிர அளவென்றால் அதில் எமது பால்வீதி எங்கே?
அதில் நமது சூரியன் எங்கே?
பூமி எங்கே? நாம் எங்கே? சுபஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவை அனைத்தையும்
விட அல்லாஹ்வே மிகப் பெரியவன்.
*அல்லாஹ்வின் பேராற்றல்.*
மேலுள்ள பந்திகளை
வாசித்து விளங்கிய நீங்கள் தற்போது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் நாம் அல்லாஹ்வை
சர்வ வல்லமை மிக்க நாயனாக, அனைத்தையும் படைத்துப்
பரிபாலிக்கும் ஏக இரட்சகனாக ஏற்றிருக்கின்றோம். அவன் நாடியதைச் செய்யக் கூடியவன். யாதேனும்
ஒன்றை ஆக்க நினைத்தால் குன் என்ற ஒரு வார்த்தையின் மூலம் ஆக்கக்கூடியவன்.(19:35) இத்தனை பேராற்றலும்
மிக்க வல்லவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ் அவனது குர்ஷியுடன் ஒப்பிடும்போது மட்டுமே
மோதிர அளவுள்ள இந்த பிரபஞசத்தை மட்டுமே நிர்வகிக்கின்றானா?
.
அதிலும் மோதிர அளவேயான
பிரபஞ்சத்தில் 300 மில்லியனுக்கும்
அதிகமான கெலக்ஸிகளில் ஒரு கெலக்ஸியில் அதிலுள்ள 250 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களில் சூரியன்
எனும் ஒரு சிறு நட்சத்திரத்தில் எட்டுக்கோள்களில் ஒன்றான பூமியில் 29% ஆன நிலப்பகுதியிலும் சிறு பகுதியில் வாழும் இந்த
ஆறு அடி உயரமான மனிதர்களை மட்டும்தான் நிர்வகிக்கிறான? அப்படித்தான் என்பதை ஏற்க மனம் நாடுவதில்லை. சர்வ
வல்லமை பொருந்தியவன், மிகப் பெரியவன் அல்லாஹ்
அதனை மட்டும்தான் நிர்வகிக்கின்றான் என்று சிந்திப்பது இறை வல்லமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோன்று
தோன்றுகிறது. (நஊது பில்லாஹ்)
இத்தகையதொரு சிந்தனையில்தான்
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்த இந்த விஞ்ஞான உலகம்கூட நீண்ட காலமாக
மனிதன் மட்டுமல்லாமல் வேறு உயிர்களும் எமது பூமி மட்டுமல்லாது வேறு பூமிகளும் இப்பிரபஞ்சத்தில்
எங்காவதொரு மூலையில் இருக்கலாம் என்று நம்புகின்றது (Earths beyond the
Earth). விண்வெளியில் எண்ணிலடங்கா
நட்சத்திர சூரியன்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றைச் சுற்றியும் (எமது ஞாயிற்றுத்
தொகுதி போன்று) பல இலட்சக்கணக்கான கோள்கள், உப கோள்கள் வலம்வருகின்றன. இவை ஏதாவதொன்றில் நிச்சயம்
உயிரினங்கள் வாழவேண்டும். அவை மனிதர்களை விட விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் அதி உயர்
நிலையில் இருக்கமுடியும். அல்லது காட்டு மிராண்டித்தனமான, முரட்டு சுபாவமுள்ள ஜீவராசிகளாகவும் இருக்கமுடியும்
என்று விஞ்ஞானம் நம்புகின்றது.
2009 ஆம் ஆண்டு அமெரிக்க
வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாசா விண்வெளி மையம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது நவீன
ஐன்ஸ்டீன் என அழைக்கப்படும் வானியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் உரையாற்றும்போது “விண்ணகத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும்
கிரகங்கள் மத்தியில் நாம் மட்டும் தனிமையாய் இருக்கின்றோமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்
“பல காலமாக இவ்வினா பற்றி நான்
மிகவும் ஆழமாக அலசி ஆராய்ந்து வந்துள்ளேன். சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் மற்றும் வரலாற்று
நிகழ்வுகள் யாவும் ஒரே முடிவிற்கு வருவதற்கு சாதகமாக அமைந்திருந்தன. இப்பிரம்மாண்டமான
பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனிமையில் இல்லை என்பதுவே அம்முடிவு. இருப்பினும் வேற்றுக்
கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்தால் அவர்களின்
சமிக்ஞைகளை இதுவரை ஏன் மனித இனம் கண்டறியவில்லை. எமது தொழில்நுட்பம் அவற்றை அறியும்
ஆற்றல் அற்றனவா? வேற்றுக் கிரகவாசிகள்
எங்களைவிட அதி முன்னேற்றமடைந்தவர்களா? இவைகள் இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயங்கள்” என்று குறிப்பிட்டார்.
*அல்குர்ஆன்*
இறை நம்பிக்கையே அற்ற
இவர்கள் இவ்வாறு சிந்திக்கும்போது ரப்புல் ஆலமீன் - உலகங்களின் இரட்சகன் என அல்லாஹ்வை
ஈமான் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? அவர்கள் சிந்திப்பதோடு நிற்கவில்லை விண்வெளி ஆய்வுகூடங்கள்,
செய்மதிகள் என பல்வேறு சாதனங்களை
விண்ணில் ஏவி ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் நாம் சிந்திப்பதைக்கூட நிறுத்திவிட்டோம்.
இதனை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கும் அல்குர்ஆனின்
அற்புதத்தைப் பாருங்கள். “ஏழு வானங்களையும்
அதே தொகையான பூமிகளையும் அல்லாஹ்தான் சிருஷ்டித்தான்”(65:12) இவ்வசனம் எமது பூமி மட்டுமல்லாது எண்ணிலடங்காத பூமிகள்
இப்பிரபஞ்சத்தில் இருப்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. அவற்றில் உயிரினங்கள் இருக்கின்றனவா
என்ற ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கும் இதே வேளை உயிரினங்களும் இருக்கலாம் என்பது
போன்று உரைக்கும் சில வசனங்களை இங்கு அவதானிக்க முடிகிறது. அல்குர்ஆன் வானம் பற்றியும்
பூமி பற்றியும் முக்கியப் படுத்திப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுவதுபோன்று இவற்றிற்கு
மத்தியில் உள்ளவை பற்றியும் முக்கியப் படுத்திக் கூறுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.
“வானங்களிலும்,
பூமியிலுமுள்ளோர் அனைவரும்,
தங்கள் தேவைகளை அவனிடமே கேட்கின்றனர்.
(55:29).“வானங்களிலும் பூமியிலும்
இருப்பவைகளும் இவற்றுக்கிடையில் இருப்பவைகளும் பூமியில் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே
உரியன.” (20:6) “அவன்தான் வானங்களையும்
பூமியையும் இவற்றுக்கு இடையிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் சிறுஷ்டித்தான்.”
(25:59) வானத்திற்கும் பூமிக்கும்
இடையில் உள்ளவை பற்றி அல்லாஹ் பின்வரும் வசனங்களிலும் முக்கியப்படுத்திக் கூறுகின்றான்
: (32:4/ 50:38/ 21:16/ 44:7/ 44:38/ 78:37/ 15:85/ 46:3/ 48:4/ 48:7/
43:85) இத்திரு வசனங்கள் வானத்திற்கும்
பூமிக்கும் இடையில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள்,
விண் கற்கள் என்பவற்றோடு அங்கு
உயிரினங்கள் இருக்கலாம் என்பதையும் சூசகமாகக் கூறுவதாகக் கொள்ளலாம்.
ஏனெனில் 65 ஆவது அத்தியாயம் 12 ஆவது வசனத்தில் ஏழு வானங்களைப்போன்று ஏழு பூமிகளும்
இருப்பதாகக் கூறும் அவ்வசனத்தின் தொடரில் “அவைகளுக்கிடையில் கட்டளைகளை இறக்கிக்கொண்டே இருக்கின்றான்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கட்டளை என்பது
வஹியாகவோ அல்லது அவனது நிர்வாக ஒழுங்குகளாகவோ இருக்கலாம். பூமியில் வாழும் எமக்கு அல்லாஹ்
வஹீ மூலம் கட்டளைகளை இறக்கியது போன்று மற்ற பூமிகளில் வாழ்கின்ற உயிரினங்களிருந்தால்
அவற்றுக்கும் கட்டளைகளை இறக்குவதாகவும் இருக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன்.
*பிரபஞ்சத்திற்கு அப்பால் பிரபஞ்சங்கள்*
இதுவரை எமது பிரபஞ்சத்தைப்
பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த விஞ்ஞான உலகம் தற்போது ஒரு புதிய சிந்தனையை முன்வைத்துள்ளது.
அதுதான் “பிரபஞ்சத்திற்கு அப்பால்
பிரபஞ்சங்கள் – Universes beyond the Universe” அதாவது இப்பிரபஞ்சத்தில் எமது பூமி மட்டுமல்ல இன்னும்
பூமிபோன்ற பல கோள் இருக்கவேண்டுமென்றும் மனிதர்கள் நாம் மட்டுமல்ல எம்போன்ற இன்னும்
ஜீவராசிகள் இருக்க வேண்டுமென்றும் கூறிவந்த விஞ்ஞானம் அதற்கு ஒரு படி மேலே சென்று அதாவது
நாம் இருக்கும் இப் பிரபஞ்சம் மட்டுமல்ல இதனையும் தாண்டி பல பிரபஞ்சங்கள் இருக்கவேண்டுமென
நம்புகின்றது. (கீழுள்ள வீடியோவின் துணையுடன் இதனை வாசிக்கவும்) இது தொடர்பான கருத்தை இத்தாலியைச் சேர்ந்த ஜியோர்டானோ
புரூனே (கி.பி. 1548 – 1600) என்பவர் முதன் முதலில்
முன்வைத்தார். “கடவுளின் திறனாலும் நற்பண்பாலும் முடிவுள்ள உலகம்
ஒன்றைத்தான் படைக்க முடியும் என்று நான் கருதவில்லை. அவனது வல்லமை எண்ணிலடங்காத பல
உலகங்களைப் படைக்கக்கூடியது. ஆகவே இது போன்று பல உலகங்கள் இருக்கின்றன” என்றார். இக்கருத்து பைபிலுக்கு முரணாக இருந்தது
என்பதால் கிறிஸ்தவ மடத்தின் எதிர்ப்புக்குள்ளான இவ் அறிஞர் கி.பி. 1600ல் உயிரோடு நெருப்பில் கொளுத்தப்பட்டார்.
*அல்குர்ஆன்*
புரூனேயின் கருத்து
பைபிலிற்கு முரணானது என்று அக்கால கிறிஸ்தவ பாதிரிகள் எண்ணினாலும் அது அல்குர்ஆனுக்கு
முரணானது அல்ல என்றே நான் கருதுகின்றேன். ஆதம், ஹவ்வா, இப்லீஸ் ஆகிய மூவரையும் அல்லாஹ் இப் பிரபஞ்சத்திற்கு வெளியிலிருந்த சுவனத்திலிருந்து
பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இப்பூமிக்கு இறக்கியதாலும் எமது ஆன்மாக்கள்கூட ஆலமுல்
அர்வாஹ் எனும் ஒரு உலகத்திலிருந்து இப்பூமியை வந்தடைவதாலும் ஒரு வகையில் இப்பிரபஞ்சம்
தவிர்ந்த இன்னும் பிரபஞ்சங்கள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. ஒரு வகையில் நாம்
வேற்றுப் பிரபஞ்சவாசிகள்தாம். ரப்புல் ஆலமீன் என்ற சொல் அல்லாஹ் பல பிரபஞ்சங்களினதும்
ரப் என்ற கருத்தைத் தருவதாகவும் உள்ளது. அல்லாஹ்வே அறிந்தவன்.
அல்லாஹ் பிரபஞ்சத்தைப்
படைத்துவிட்டு மலக்குகளைப் பார்த்து இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என்றபோது “மலக்குகள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக்
கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்,
விவேகமிக்கவன்” எனக் கூறினார்கள்.[2:32] அப்படிப்பட்ட மலக்குகளிடம் அல்லாஹ் நான் மனிதர்களைப்
படைக்கப்போகின்றேன் என்று கூறியபோது...
“(நபியே) இன்னும்,
உம் இறைவன் வானவர்களை நோக்கி
"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது,
அவர்கள் "(இறைவா!) நீ
அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா
அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ
உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம்
நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.” [2:30]
இங்கு மனிதர்கள் படைக்கப்பட
முன்பே மலக்குகளுக்கு மனிதர்களின் பண்பு தெரிந்திருக்கின்றது. அவர்கள் இரத்தம் சிந்தி
பூமியில் குழப்பம் செய்பவர்களென்ற முன் அனுபவம் மலக்குகளுக்கு இருந்திருக்கின்றது.
அப்படியானால் அல்லாஹ் எம்மைப் போன்றோ அல்லது வேறு அமைப்பிலோ இதற்கு முன்பு உயிரினங்களைப்
படைத்திருக்க வேண்டும். அதுபற்றிய முன் அனுபவம் இருப்பதால் மலக்குகள் இம்முறை அல்லாஹ்விடம்
இவ்வாறு கூறியிருக்கவேண்டும்.
எமது இப்பிரபஞ்சத்தின்
வயது 13.5 பில்லியன் ஆண்டுகள்தாம்.
பெரு வெடிப்பு Big Bang நடைபெற்று 9 பில்லியன் ஆண்டுகள் கடந்த பின்புதான் எமது பூமி
உறுவாகியுள்ளது. பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள்
மட்டுமே. இந்த பில்லியன் ஆண்டுகள் எல்லாம் அல்லாஹ்வின் வருடக் கணக்கின்படி அற்பமானவை.
காரணம் பூமியின் 1000 வருடங்கள் அல்லது
50,000 வருடங்கள் அல்லாஹ்விடத்தில்
ஒரு நாளிற்கு சம்மானதாகும்.(70:4, 32:5,22:47) ஆக ஆரம்பம் ஒன்றே இல்லாத அல்லாஹ் 13.5 பில்லியன் எனும் இந்த சொற்ப ஆண்டுகளுக்கு முன்பு
என்ன செய்தான்? இந்தப் இறுதி நாளில்
இந்தப் பிரபஞ்சத்தை அழித்து சுவனத்தில், நரகில் எம்மை நுழைய வைத்ததன் பின்னர் அழிவோ, இறப்போ இல்லாத அவன் என்ன செய்வான்? அவனுக்கு ஓய்வோ, உறக்கமோ கிடையாது. “அவன் எப்போதும் காரியத்திலேயே (பிஸியாகவே) இறுக்கிறான்.”(55:29)
*இறுதியாக…*
ஆக இந்த விடங்களை
வைத்துப் பார்க்கும்போது எனது சிந்தனையில் பட்ட ஒரு விடயத்தை சுருக்கமாகக் கூறுகின்றேன்.
சில சிந்தனைகளும் கேள்விகளும் தான் பல ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக
இருந்துள்ளன. அர்ஷ் உடனும் குர்ஷ் உடனும் ஒப்பிடும்போது மோதிரத்தைவிட சிறிதான இப்பிரபஞ்சம்
தவிர்ந்த நிறையப் பிரபஞ்சங்களை அல்லாஹ் அர்ஷை சூழ படைத்து வைத்திருக்கின்றான். அவற்றிலும்
எம்போன்ற உயிர்களைப் படைத்து அவன் பரிபாலித்துக்கொண்டிருக்கின்றான். எம்மைப் படைக்க
முன்பும் நாம் சுவனம் நரகம் அனுப்பப்பட்டதன் பின்பும் இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அல்லாஹ்வின் பரீட்சைகளும், சோதனைகளும் பரிசில்களும்
தண்டனைகளும் எம்மோடு ஆரம்பிக்கவும் இல்லை. அது எம்மோடு முடிவடைவதும் இல்லை. தொடரும்.
பிரபஞ்சம் பிரபஞசமாகத் தொடரும். எமது பிரபஞ்சத்தை எம்மைப் படைக்கும் முன் அவன் ஓய்வாக
இருக்கவும் இல்லை. எம்மை சுவனம் நரகம் நுழைவித்த பின் அவன் ஓய்வெடுக்கப் போவதுமில்லை.
அவன் எப்போதுமே பிஸியாக இருக்கின்றான்.(55:29) யா அல்லாஹ் நீ தந்த அறிவுக்குள்தான் நான் யோசித்திருக்கின்றேன்.
உண் மீதுள்ள இரக்கத்திலும் அளப்பெரிய நம்பிக்கையிலும்தான் இதனை எழுதுகின்றேன். இதில்
ஏதும் தவறுகள் இருந்தால் எம்மை மன்னித்துவிடு ரஹ்மானே!
2 comments:
நல்ல சிந்தனை
Really nice article
All the very best for your future.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...