அறிமுகம்

கினிப் பன்றி (Guinea pig) இந்தப் பெயரைக் கேட்டதும் பயந்துவிட வேண்டாம். பெயரில் பன்றி pig என்று வந்ததற்கு இது பன்றி இனத்தைச் சேர்ந்ததோ அல்லது கினி Guinea என்று வந்ததற்கு கினியா நாட்டைச் சேர்ந்ததோ அல்ல. "பன்றிகள்" என இவை அழைக்கப்படுவதன் சரியான விளக்கம் என்ன என்பது தெளிவில்லாமலே இருக்கின்றது. அவை ஏதோவொரு வகையில் பன்றிகளின் தோற்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது கொறித்து உண்ணும் கேவிடே குடும்பவகையினுடையதும் மற்றும் கேவியா எனும் விலங்கு வகையைச் சார்ந்ததுமாகும். இவை அந்தீஸ் மலை நாட்டுக்கு உரித்தானவையாகும். ஆனால் தற்போது இவற்றை இயற்கையான காட்டுப் பகுதிகளில் காண முடிவதில்லை. தற்போது இவை வீடுகளில் செல்லப் பிராணியாகவும் பண்ணைகளில் விற்பனைக்காவும் தான் வளர்க்கப்படுகின்றன.
உடற் தோற்றம்
கொறித்துண்ணுபவைகளில் கினிப் பன்றிகள்தான் மிகவும் பெரியவை. உடற் தோற்றத்தில் அவற்றுக்கு பெரிய தலை, தடித்த கழுத்துகள், நீண்ட உடல்,
வட்டமான பின்பகுதி, குட்டையான எலி, அனில்களுடையது போன்ற நான்கு
கால்கள், எந்தவித வால் அறிகுறியும் இல்லாத பின்பக்கம் என பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் துரு துருவென
அழகாக இருக்கும். பன்றியின் தோற்றத்தில் இருந்ததற்கு இது பன்றி இனத்தைச் சேர்ந்ததல்ல. இந்த கினிப் பன்றிகள் 700 முதல் 1200 கிராம் நிறையையும் 20 முதல் 25 செ.மீ. நீளம் வரையான வளர்ச்சியையும் இவை கொண்டிருக்கும். சராசரியாக அவை நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன, சரியான பராமறிப்புகளுடன்
வளர்த்தால் எட்டு ஆண்டுகள்கூட அவை உயிர் வாழும். 2006 ஆம் ஆண்டு கின்னஸ் உலக
சாதனையில் மிக நீண்ட காலமாக உயிர் வாழ்ந்த கினிப்
பன்றியின் வயது 14 ஆண்டுகளும்
10.5 மாதங்கள் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நிற அமைப்பு
கினிப் பன்றிகளின் விஷேட அம்சமே
அவற்றின் உடல் உரோமங்களின் நிற அழகுதான். தனி வெள்ளை, கருப்பு, மஞ்சல், பழுப்பு, செம்மஞ்சல்
(ஒரேன்ச்), சாம்பர், கபிலம் எனத் தனித் தனி நிறங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கலவை நிறங்களிலும்
இவை காணப்படுகின்றன. அத்தோடு சுருட்டை முடி (Curl haired), நீண்ட முடி (Long haired)
குட்டை முடி (Short haired) எனவும் சிவப்புக் கண் (Red Eye) எனவும் இவை வேறுபிரித்து
அறியப்படுகின்றன. இந்த முடி அலங்காரங்கள் எல்லாம் அவற்றுக்குத் தனி அழகைக் கொடுக்கின்றன.
வாழ்க்கை முறை
இவை கூட்டாக வாழும் இயல்புடையவை.
இரண்டோ இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ அவற்றை எமது வீடுகளிலும் வளர்க்கலாம். ஒரு
கூட்டத்தில் அதிகமான பெண் கினிப் பன்றிகளும் அவற்றின் குட்டிகளும் ஒரு வளர்ச்சியடைந்த,
ஆதிக்கம் செழுத்தக் கூடிய, அனைத்தையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்கக் கூடிய ஒரு ஆண்
கினிப் பன்றியும் இருக்கும். தண்ணீரையும் சிறுநீரையும்கொண்டு ஆண் கினி தனது கூட்டத்திற்கான எல்லையை வரைந்துகொள்ளும்.
வேறு ஆண் கினிகளை அதற்குள் பிரவேசிக்க அனுமதிக்காது. அதனால்தான் ஒரே கூட்டில் பல ஆண்
கினிகளை வளர்க்க முடியாதுள்ளது. அவை தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ஒரு ஆண்
கினி மற்றொரு ஆண் கினியுடன் எப்போது சண்டையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். எனவே ஒரு
ஆண் கினியுடன் ஐந்து முதல் எட்டு வரையான பெண் கினிகளைச் சேர்த்துவிடலாம். தனியாக ஒரு
கினியை மட்டும் வளர்க்கவும் கூடாது. அப்படியாயின் அது மிக விரைவில் சோர்ந்து பயந்து
இறந்துவிட வாய்ப்புண்டு. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கவேண்டும்.
கினிப் பன்றிகள் கூட்டமாகவே உணவுண்ணும், காடுகளில் வாழ்வதாக இருந்தாலும் இவற்றுக்கு வளை தோண்டும் பழக்கமோ கூடு கட்டும் பழக்கமோ இல்லை. இதர விலங்குகள் தோண்டிய வளைகளில் அல்லது மர வெடிப்புகளில் அவை பாதுகாப்பாக இருந்தால் தஞ்சம் புகுந்துவிடும். சூரிய ஒளியைத் தவிர்ப்பதையே அவை விரும்புகின்றன. இருளான இடங்களில் வசிப்பதற்கு மிகவும் ஆசைப்படும்.
தமது அதிகமான நேரத்தை உண்பதிலேயே கழிக்கும். சிலபோது
ஒரு பக்கமாக ஒதுங்கி சிறு தூக்கமும் போடும். முயல்களைப் போன்று தமது முன் கால்களால்
தமது முகங்களைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்துகொள்ளும். சிலபோது ஒரு கினி வேறு ஒரு
கினியின் காதுகள், முகம், உடல் போன்றவற்றை இவ்வாறு முகர்ந்து, பற்களால் மென்று துடைத்து
சுத்தம் செய்ய உதவும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது அவற்றின்
கண்களிலிருந்து பால் வெண்மை நிறத்தில் ஒரு பொருள் சுரக்கும். அதனைக்கோண்டே அவை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன.
நீச்சலடிப்பதிலும் இவை வல்லவை. வளர்ப்புக் கூண்டுகளில் இவற்றுக்காக வைக்கப்படும் நீர்ப்
பாத்திரங்களில் குதித்து குளித்து நீச்சலடிக்கவும் செய்கின்றன. பார்க்க குஷியாக இருக்கும்.
உணவு முறை.
புல் தான் கினிப் பன்றியின் இயற்கை உணவு. அவற்றின்
பின்கடைவாய்ப்பற்கள் தாவரப் பொருட்களை அரைப்பதற்குப் பொருத்தமாகவும்
முன் பற்கள் உணவைக் கொறிக்க இலகுவாகவும் இருக்கும். முன் பற்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளரும். அவற்றின் வாயைவிட நீண்டு விடும். அதனைத் தவிர்த்துக்கொள்வதற்காக கட்டைகளையும்,
கார்போர்ட்களையும், பிளாஸ்டிக், இரப்பர், துணி என அனைத்தையும் அடிக்கடி கொறித்துக்கொள்ளும்.
கினிப்
பன்றிகள் காய்ந்த புற்களை உண்பதால் அவற்றுக்கு நல்ல போசாக்கு கிடைக்கின்றது.
குறிப்பாக இலுவைப் புல், குதிரைப் புல், வைக்கோல்வகைகளும் கீரை வகைகளும் அவற்றின் விருப்பமான உணவுகள். அவையல்லாது கரட், தக்காலி, அப்பிள், ஒரேன்ச், பிஸ்கட், பான் என அனைத்தையும் உண்டுவிடும். வீட்டில் வளர்ப்பதாக இருந்தால்
வீட்டுக்குக் கொண்டு வரும் காய்கறிக் கழிவுகளை குப்பையில் எரிந்துவிடாமல் அவற்றுக்குக்
கொடுத்தாலே போதும். தின்று தீர்த்துவிடும்.
எம்மைப் போன்று கினிகளாலும் விட்டமின் சீ யை தாமாகவே உருவாக்கிக்கொள்ள முடிவதில்லை. பிற உணவுப் பண்டங்களை உட்கொள்வதன்மூலம்தான் அதனைச் சேகரிக்க முடிகிறது. எனவே மேற்கண்ட உணவுகள் அவற்றுக்கு மிகப் பிரதானமானவை. விட்டமின் சீ போதிய அளவு அவற்றுக்குக் கிடைக்காவிட்டால் அவை உடனடி மரணத்தை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். மட்டுமல்லாது இன்னும் சில நோய்கள்
கூட அவற்றைப் பீடிக்கும். அத்தோடு சுண்ணச்சத்து, மெக்னீசியம், பொசுபரசு, பொட்டாசியம் மற்றும் ஹைட்ரஜன் இரும்பு
என அனைத்து
சத்துக்களும் அடங்களான உணவு அவற்றுக்கு வழங்கப்படவேண்டும். அத்தகைய போஷாக்குகளை அல்லாஹ் இந்த உணவுகளில் வைத்துள்ளான்.
தொடர்பாடல் முறை
சிறந்த தொடர்பாடற் திறன் கினிப் பன்றிகளுக்கு
உண்டு. துல்லியமான கேட்டல் சக்தி, மோப்ப சக்தி, தொடுகை உணர்ச்சி என்பன அவற்றின் தொடர்பாடல்
சாதனங்களாக விளங்குகனிறன. தமது இன உறுப்பினர்களுக்கிடையே
தகவல்தொடர்புக்கான முதன்மை வழிமுறையாக இருப்பது குரலொலி ஓசைகள்தான். வித
விதமான ஓசைகளை வெளிப்படுத்தி தமது உணர்ச்சிகளை வெளிக்காட்டும். அவை வெளிப்படுத்தும் சில ஓசைகள் பன்றிகள்
எழுப்பும் ஓசையுடன் மிகவும் ஒத்திருக்கிறது. உதாரணமாக தனது வளர்ப்பாளரை, உடைமையாளரைக் கண்டால்
அல்லது உணவு கொடுக்கப்போவதை அறிந்துகொண்டால் அதற்கு பதிலுரைக்கும் விதமாக வீக் வீக்
என்று உரக்கக் கத்தும். அதன் முதுகில் தடவிக்
கொடுக்கும் போதும் ஒரு கினி இன்னொரு கினியை முகர்க்கும்போதும் மெலிதாக குர் குர் என்று
ஒலியெழுப்பும். இது அன்பைக் காட்டும்.
அவை
பயந்தாலோ, கோபத்திலிருந்தாலோ உடல் அதிர்ந்தவாறு பூனை போன்று சீறும். இதற்கு உருட்டொலி என்றும் சொல்லப்படுகிறது. அதேபோன்று
பெண் கினியைக் கவர்வதற்காக "ரம்பிள்ஸ்ட்ரட்டிங்" எனும் நடனத்துடன் பெண் கினியைக் கவர ஒருவித சிணுங்கும்
ஒலியையும் ஒலிக்கச் செய்யும். அபாயம் நேரிடும்போது அதனை எச்சரிக்க வீறிட்டு கீச்சொலியை
எழுப்பும். இவ்வகை ஒலிகள் அவற்றின் பிரதான தொடர்பாடல் சப்தங்களாகும். அதே போன்று அவை
மிக அரிதாக முக பாவனைகள் கூட செய்யும். நாம் சிரிப்பதைப்போன்று அவையும் அன்புணர்ச்சியுடன்
சிரிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
இனப் பெருக்க முறை
கினிப்
பன்றியால் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்ய முடியும். இரண்டு
மாதங்களுக்கு ஒரு தடவை வீதம் ஆண்டுக்கு ஐந்து குட்டிகள் வரை
ஈன்றெடுக்கும். கருவுற்றிருக்கும் பெண் கினி அளவில் பெரிதாக பருத்த கத்தரிக்காய்
வடிவில் இருக்கும். பெரும்பாலான
இதர கொறித்துண்ணிகளின் குட்டிகள் பிறக்கும்போது கண்திறக்காமல் உடலில் உரோமங்கள் வளராமல் உணவுக்குப்
பெற்றோரைச் சார்ந்திருக்கும் நிலையில்தான்
பிறக்கும். ஆனால் கினிப் பன்றிகள் இதில்
வித்தியாசமானவை. புதிதாய்ப் பிறக்கும்
கினிக் குட்டிகள் உரோமங்கள்,
பற்கள், நகங்கள் என்பன நன்கு வளர்ந்த நிலையிலும் கண்கள் பாதி
திறந்த நிலையிலும்தான் பிறக்கின்றன. இது முற்றிலும் அற்புதமானவொன்று. எனவே பிறந்து
சில வினாடிகளிலேயே அவை உடனடியாக நகரத் தொடங்கிவிடுகின்றன. மேலும் ஆரம்பங்களில் தாய்ப்பால் குடித்தாலும் அதுவல்லாத இதர
உணவுகளையும் அவை உண்ண ஆரம்பிக்கின்றன. ஆண் கினிக்
குட்டிகள் பிறந்து 3–5 வாரங்களில் பருவ முதிர்ச்சி அடைகின்றன. பெண்
கினிப் பன்றிகள் நான்கு வாரங்களிலேயே இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடுகின்றன.
அறிவியல் ஆய்வுக்காப் பயன்படுத்தல்
17 ஆம் நூற்றாண்டு முதலே கினிப் பன்றிகள்
மீது உயிரியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1960 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆண்டுதோறும்
சுமார் 2.5 மில்லியன்
கினிப் பன்றிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்த விலங்குகள் அடிக்கடி
மாதிரி உயிரினங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறன. பொதுவாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஒரு பொருள் ஆங்கிலத்தில் "கினியா
பிக்" (கினிப் பன்றி) என அழைக்கப்படுகின்றது. இதுவும் கினி பன்றி என்ற
பெயர்வரக் காரணமாக உள்ளது. நோய்களுக்கான மறுந்து கண்டுபிடிப்புகளின்போது அவற்றை செயற்படுத்திப்
பார்ப்பதற்காக கினிப் பன்றிகள் கூடுதல் அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது 2007ஆம்
ஆண்டின் பின் கினிகளைப் பயன்படுத்தும் வீதம் நன்கு குறைந்துள்ளது. தற்போதைய
ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கூட விலங்குகளில் அவை தோராயமாக 2% மாக இருக்கின்றன. மட்டுமன்றி விண்வெளி ஆராய்ச்சிகளுக்காகவும் விண்வெளிப் பயணங்களிலும்
கினிப்
பன்றிகள் பல முறை அனுப்பப்பட்டிருக்கிறன.
செல்லப் பிராணி
நாய், புனை, முயல் போன்று இன்று கினிப்
பன்றிகளும் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகின்றன. எனவே வனாந்தரங்களில்
காண்பதை விடவும் வீடுகளிலும் பண்ணைகளிலும்தான் இவற்றை அதிகமாகக் காணலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும் குறிப்பாக அமெரிக்க ஐரோப்பா
ரஷ்யா போன்ற நாடுகளில் மனிதர்கள் தமது வீட்டு செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
தென் அமெரிக்காவின் பலங்குடி மக்கள் இதனை கலாச்சார சம்பிரதாய சடங்குகளுக்காவும்
உணவுக்காவும் மருத்துவ நடவடிக்கைகளுக்காவும் பயன்படுத்தியுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய
வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், கினிப் பன்றி மேற்கத்திய சமூகங்களில்
ஒரு வீட்டு வளர்ப்புப் பிராணியாக பிரபலமடைந்து வருகிறது. எமது
நாட்டிலும் தற்போது இது பிரபலமடைந்து வருகின்றது. அவற்றின்
அடக்கமான நடத்தை, கையாளுதல் மற்றும் உணவு புகட்டுவதில் அவை காட்டும் ஆர்வம் மற்றும் அவற்றின் மீது காட்டப்படும்
பராமரிப்பின் எளிமை ஆகியவை கினிப் பன்றியைத் தொடர்ந்து ஒரு பிரபல வளர்ப்புப்
பிராணியாக வைத்திருக்கிறது.
வீட்டில் வளர்க்கும் முறை.
அண்மையில் இணையத்தில் கினிப் பன்றிகள் தொடர்பான
ஒரு வீடியோப் பதிவைப் பார்வையிட்டேன். அதன் பின்புதான் வளர்க்கவேண்டும் என்ற ஒரு ஆசை
எனக்குள்ளும் ஏற்பட்டதன் விளைவாக இரண்டு கினிகளை வாங்கிவந்தேன். மன அழுத்தம் மன உழைச்சல்
உள்ளவர்கள் வீட்டில் ஒரு மீன் தொட்டியை வைத்திருப்பது அவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும்
என உளவியல் சொல்வதுபோன்று கினிப் பன்றிகள் வளர்ப்பதும் மனதுக்கு மிக்க இதமாக இருக்கும்.
அதற்காகவே மேலைத்தேயர்கள் அவர்களது வீடுகளில் தனி அறையையே ஒதுக்கி கினிப் பன்றிகளை
வளர்த்து பராமறித்துவருகின்றனர்.
கினிகள் அளவில் சிறியவை என்பதால் சிறியதொரு இடத்தில்
அவற்றை வளர்க்க முடியும். 3 X 3 அடி பரப்பளவுள்ள ஒரு கூண்டுக்குள் அவற்றை வளர்க்கலாம்.
மிக விரைவாக அவற்றால் நகரவோ சாதாரண உயரத்தைக்கூட தாண்டவோ முடியாததால் வீட்டில் வளர்ப்பது
மிக சுலபம். அவற்றின் கூண்டுக்குள் பல வர்ண வேலைப்பாடுகள், பந்துகள், ஏறி இறங்குவதற்கு
படிக்கட்டுகள், கடந்து செல்வதற்கு பாலங்கள், மறைந்துகொள்வதற்கு குகைகள், படுத்து உறங்குவதற்கு
மெத்தைகள் என அழகுபடுத்தி வைக்கலாம். நீர் அருந்தவும் உணவுண்ணவும் கூண்டுக்குள்ளேயே
ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம். தரையில் மரத் தூள்போட்டு வைப்பதால் அவற்றின் சிறு
நீரும் விட்டைகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்தாது. வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தாலே
போதும். ஆரம்பத்திலிருந்தே சரியாக உணவு வழங்கி அன்பாகக் கையாண்டால் மிக விரைவில் அவை
எம்முடன் பழகிவிடும். நாம் அருகில் செல்லும்போது எம்மை அடையாளம் கண்டுகொண்டு சமிக்ஞை
செய்யவும் ஒலியெழுப்பவும் கையில் ஏறவும் பழகிக்கொள்ளும்.
பன்றி இறைச்சி உண்பதையும் அதனை விற்பதையும் வளர்ப்பதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது.
அப்படியாயின் கினிப் பன்றியை வளர்க்கலாமா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும்.
தாராளமாக வளர்க்கலாம். இஸ்லாம் இதனைத் தடைசெய்யவில்லை. பன்றி என்ற பெயர் இருந்ததற்கு
இது பன்றி இனமல்ல. எலி மற்றும் முயல் குடும்பத்தைச் சேர்ந்ததவைதான் இந்த கினிகள். அல்லாஹ்வின்
மற்றுமொரு அருமையான படைப்பு.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...