அறிமுகம்.
சங்கு
என்பது நடுத்தர அளவிலிருந்து பெரிய அளவு வரை வித்தியாசமான அளவுகளிலும்
வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்ற நத்தை ஓடுகளுக்கு வழங்கப்படுகின்ற பொதுப் பெயராகும். சிரிய அளவுள்ள ஓடுகளுக்கு
சிப்பி என்றும் அதனை விடப் பெரிய நடுத்தர அளவில் உள்ளவை சங்கு என்று
அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை Conch (கொன்ச்) எனப்படுகின்றன. சங்கு என்ற
இப்பெயர் தனியாக ஓட்டுக்கும் அல்லது ஓட்டுடன் கூடிய நத்தைக்கும்
வழங்கப்படுகின்றது.
இவை கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் (Gastropoda) குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஓட்டின் தோற்ற
அமைப்பு
தோற்றத்தில்
சங்கு என்பது கடினமான ஓட்டை உடைய, பெரிய, சுருள் அமைப்புள்ள, கூம்புக் குழாய் வழியுள்ள ஓடுகளாகும். இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால்
ஆனது. ஓட்டின் மேற்பகுதி பெரியோஸ்டிரகம் என்ற ஓட்டுறையினால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
சங்கின் வயது செல்லச் செல்ல ஓடும் கடினமடையும். ஓட்டின் மீது முள் முள் போன்ற
வடிவங்களும் சுருள் சுருளான கோடுகளும் அமைந்து ஓட்டை அழகுபடுத்தும். வெள்ளை,
பழுப்பு, கருப்பு, சாம்பள் போன்ற விதவிதமான நிறங்களில் சங்குகள் காணப்படுகின்றன.
ஓடுகள் பார்க்க அழகாக இருக்கும். ஓட்டினுட்பகுதி "காலுமெல்லா" என்னும் அமைப்பால் சுற்றப்பட்டு (Spires)
இருக்கும். சங்கின் வாய்ப் பகுதி
இளஞ் சிவப்பு நிறத்தில் பளபளப்புடன் அழகாகத் தோற்றமளிக்கும். அதனுள்தான் நத்தை
காணப்படுகின்றது.
ஓட்டின்
வாய்ப்பகுதியை மூட,
மூடி (Operculum) ஒன்று உண்டு. இது சங்கினுடைய
பாதத்தில் அடிப்புறத்தில் ஒட்டியிருக்கும். பெண் சங்குகள் ஆண் சங்கை
விட பெரியவை. ஆண் சங்கு குறுக்குவாட்டில் 57 முதல் 60 மி.மீ. வளர்ச்சி அடையும். பெண் சங்கு குறுக்குவாட்டில் 70 முதல் 80 மி.மீ. வளர்ச்சி அடையும்.
ஓட்டுக்குள்
இருக்கும் நத்தை
சங்கின்
ஓட்டுக்குள்தான் நத்தை வாழ்கின்றது. அந்த நத்தைக்கு நடமாடும் வீடுதான் அந்த சங்கு.
பிறப்பிலிருந்து அந்த சங்கும் படிப்படியாக நத்தையுடன் சேர்ந்து வளர்ந்து வரும். நத்தையின்
உடல் எழும்பற்ற தனி சதைப் பிண்டம் என்பதால் அது மிகவும் மிருதுவானது. எனவேதான்
அல்லாஹ் தமது உடலைப் பாதுகாத்துக்கொள்ள அவற்றுக்கு இத்துனை பலமான ஓட்டைக் கொடுத்துள்ளான்.
ஆமைகள் போன்று ஆபத்துக்கள் வரும்போது அவை தமது முழு உடலையும் ஓட்டினுள் இழுத்து
மறைத்துக் கொள்கின்றன. தமது கீழ்பகுதியில் இருக்கும் Operculum எனும் கடினமான
மூடியால் ஓட்டின் வாய்ப் பகுதியை மூடி அடைத்துக்கொண்டால் எந்தவொன்றாலும் நத்தையைப்
பிடிக்க முடியாது. மெல்லுடலிகள் என்பதால் தரையில் ஊர்ந்து
செல்லும் போது கல்லிலும் மணலிலும் தமது தசைகள் பட்டு காயமடையாதிருக்க வயிற்றுப்
பகுதி Operculum
எனும் கடிணமான பகுதியால் சூழப்பட்டிருக்கின்றது. அத்தோடு வழு
வழுப்பானதொரு பதார்த்தம் சுரந்து நத்தைக்கு நகர வசதியைக் கொடுக்கும்.
வகையினங்கள்.
பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள்
உள்ளன. எல்லாச்
சங்குகளையும் இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு என்பனவாகும். இவற்றுக்குள் வெண் சங்கு (Xancus pyrum), போர் சங்கு,
ஊது சங்கு,
பால் சங்கு,
இளஞ்சிவப்பு சங்கு,
கீற்றுச்சங்கு,
சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. இந்தியச் சங்கு இனம், டர்பினல்லா பைரம் (Turbinella
pyrum) எனவும் அழைக்கப்படுகிறது. சாங்கஸ் என்னும் சங்கினத்தில்
சாங்கஸ் பைரம், சாங்கஸ் எங்குலேட்டர்,
சாங்கஸ் லெவிகேட்டர் என்ற மூன்று
சிற்றினங்கள் உள்ளன. இந்த மூன்று வகைகளில்
சாங்கஸ் பைரம் என்னும் சங்கே சிறப்பானது. இப்படி நிறத்திலும் அமைப்பிலும் அளவிலும் வித்தியாசமான பல
வகையினங்கள் சங்கில் காணப்படுகின்றன.
வாழும்
இடங்கள்
சங்குகள் கூட்டம் கூட்டமாக
வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடிமட்டத்தில் சுமார் 20 முதல் 25 அடி ஆழமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன. இந்த இடங்கள் சங்குப் படுகைகள்
என்றும் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் பாறையோரத்தில் இருக்கும்
திடமற்ற,
மெல்லிய மணற் பகுதிகள் சங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். இந்தியாவில் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் தூத்துக்குடி, இராமநாதபுரம், சோழ மண்டலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மண்டலங்களிலும்
இச்சங்கு வளம் நிறைந்துள்ளது. அத்துடன் அந்தமான்,
குஜராத் மற்றும் இலங்கை கடற்கரைப் பகுதிகளிலும் குறைந்தளவு காணப்படுகிறது.
இணப்பெருக்கம்
ஜனவரி முதல் மார்ச் வரை
மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் சங்கின் இனப்பெருக்க காலம் ஆகும். இக்காலங்களில் ஆண் சங்குகள் இணை சேர்வதற்காக பெண்
சங்குகளின் முன் ஒரு வகை நடனமாடும். இதனால் கவரப்படும் பெண் சங்கு இணை சேரும்.
இதன் பின்னர் பெண் சங்கு உயிர் முட்டைகளை இட ஆரம்பிக்கும். இனச் சேர்க்கைக்கு பின்
வெளியிடும் முட்டைக் கூடு (Egg Mass) “சங்குப்பூ” எனப்படுகிறது. இதன் நீளம் 250 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை இருக்கும்.
இக்கூட்டின் குறுக்குவாட்டில் ஒன்றின் மீது ஒன்றென 24 முதல் 28 அறைகள் உள்ளன.
ஒவ்வொரு அறைக்குள்ளும் ஆயிரக்கணக்கான கருவுற்ற முட்டைகள் (Fertilized Egg) இருக்கும். அறைகளின் பக்கவாட்டில்
செவுள் போன்ற துளை உண்டு. இதன் மூலம் கருவுற்ற முட்டைகளுக்குத் தேவையான உயிர்வளி நீரிலிருந்து
கிடைக்கிறது.
சங்குக்
குஞ்சிகள்
ஐந்து நாட்களின் பின்பு சங்குப் பூ எனும் முட்டைக் கூட்டினுள் இருந்து 10 மி.மீ. நீளமுள்ள இளம் சங்குகள் வெளிப்படுகின்றன.
அது முதல் கடற் கரையை
அடைகின்ற வரை சுமார் ஒரு மாத காலம் நீரில் மிதந்துகொண்டிருக்கும். கரையை
அடைந்ததும் ஒரு வருட காலத்திற்கு மணலுக்குக் கீழேயே வாழும். பகல் பொழுதுகளில்
மணலடியில் இருந்துவிட்டு இராக் காலங்களில் உணவு தேடி வெளியே வரும். வருடப்
பூர்த்தியின் பின்னர் கடலுக்குள் சென்று ஏனைய சங்குகளுடன் சேர்ந்து வாழ
ஆரம்பிக்கும். பெண் சங்கு அல்லது இராணிச் சங்கு இணப் பெருக்கம் செய்யும் பருவத்தை
அடைய ஐந்து வருடங்கள் செல்லும். சாதாரணமாக ஒரு சங்கு 20 வருடங்கள் வரை உயிர்
வாழும்.
உணவு
முறை
சங்குகள்
கடலடியில் கற்பாரைகளில் படிந்திருக்கும் பாசிகளையும் கடற் தாவரங்களையும் உண்டு
வாழ்கின்றன. அத்தோடு கடலடி ஊர்வனவான சிறு புழுக்களையும் சிறிய நத்தைகளையும்,
மீன்களையும்கூட உணவாக எடுக்கின்றன.
வலம்புரிச் சங்கு
சங்குகளை
பிரதானமாக வலம்புரிச் சங்கு(Dakshinavarti Shankh), இடம்புரிச் சங்கு என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இடப்பக்கம்
சுழிந்து செல்லும் சங்குகள் இடம்புரிச் சங்கு எனவும் வலது பக்கம்
சுழியுடைய சங்குகள் வலம்புரிச் சங்குகள் (clock wise whorls)
எனவும் பிரிக்கப்படுகின்றன. (வித்தியாசத்தை அறிய படத்தைப் பார்க்கவும்.)
இடம்புரிச் சங்குகள் எளிதாகக் கிடைக்கக் கூடியன. ஆனால் வலம்புரிச் சங்குகள்
ஆயிரத்தில் ஒன்றே கிடைக்கும் என்பதால் அவை மிக அரிது. இந்து, பௌத்த மதங்களில்
வலம்புரிச் சங்கிற்கு ஒரு தனி இடமே உண்டு. அது புனிதமானதாகவும் வளத்தையும், நலத்தையும் தருவதாகவும் கருதப்படுகிறது. இதனால் வலம்புரிச் சங்கை இலட்சங்கள், கோடிகள் விலை கொடுத்து வாங்குபவர்களும் உள்ளனர். வலம்புரிச் சங்குகள் மேலான
சக்தியைக் கொண்டவை என்பதற்கு சான்று எதுவுமில்லை. வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை என்பது
மட்டும் உண்மை.
வலம்புரி இடம்புரி
சங்குகள் உருவாகும் விதம்
இடம்புரி, வலம்புரிச் சங்குகள்
உருவாவதற்குப் பிரதான காரணம் மரபணுக்களே. சங்குகள் கருமுட்டையாக வளரத் தொடங்கும்போது கலப்
பிளவு நடைபெறும் கோணம் நேர் குறுக்காக அமையாமல் சற்று சாய்வாக அமைகிறது. இதன்போது மரபணுவின் சடுதிமாற்றத்தால் வலம்புரிச் சங்கு உருவாகிறது.
மரபணு சடுதிமாற்றம் வெகு அரிதாக நிகழ்வது என்பதால் வலம்புரிச் சங்கும் அரிதாகவே கிடைக்கிறது. மற்றபடி உருவாகும் எல்லாச் சங்குகளும் இடம் புரிதான்.
சங்குகளின் எதிரிகள்
சங்குகளுக்கு
சங்கு ஊதும் பிரதான எதிரி மனிதன்தான். முத்து எடுப்பதற்காகவும் உணவுக்காவும் சங்கின்
ஓட்டுக்காகவும் சங்குகள் பிடிக்கப்படுகின்றன. அதேபோன்று ஆமைகளும்,
nurse sharks எனும் சுறா மீன்களும் நீள நண்டுகளும் (blue
crabs), திருக்கைகளும் ஊசி முணைக் கடல் நண்டுகளும் (spiny
lobsters) இவற்றின் முக்கிய எதிரிகள். உணவுக்காக இவை சங்குகளை வேட்டையாடுகின்றன.
பயன்கள்
“சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி” இப்படி
தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது. மன்னர்
காலத்திலிருந்து யுத்தங்கள் ஆரம்பிப்பதற்காக சங்கு ஊதும் வழக்கம் இருந்து
வந்துள்ளது. சும்மா இருந்த சங்க ஊதி யுத்தமொன்றையே தேவையில்லாமல் ஆரம்பித்த
கதையைக் கூறுவதுதான் இது. யுத்தத்திற்கு மட்டுமல்லாமல் தகல் பரிமாற்றத்திற்காகவும்
சவ ஊர்வளங்களிலும் சடங்கு நிகழ்ச்சிகளிலும் சங்கு ஊதப்படும் வழமை இருந்து
வருகின்றது. பொதுவாக வலம்புரிச் சங்குதான் ஊதுவதற்கு உசிதமானது. எனவே சிலர் சங்கு
ஊதுவதை நல்ல சகுனமாகவும் சிலர் அதனை அபசகுனமாகவும் பார்க்கும் பலக்கமும் சில மத
நம்பிக்கையாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
மேலும்
உணவுக்கவும் சங்கு நத்தைகள் எடுக்கப்படுகின்றன. சங்கின் ஓட்டினால் வளையல், மோதிரம்
போன்ற அணிகலன்கள் செய்யவும் ஓர் அலங்கார பொருளாகவும் பயன்படுகிறது. என்புருக்கி நோய், மஞ்சள் காமாலை, காசநோய், வயிற்று வலி மற்றும் கண்
சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து குணமடைய சங்குத்தூள் மருந்தாகப் பயன்படுகிறது. கடலில் வாழும் நண்டுகள் தமக்கான அடைக்களமாக கடலில்
இருக்கும் சங்கு ஓடுகளை எடுத்துக்கொள்கின்றன. இப்படியெல்லாம் பல வகைகளிலும்
சங்குகள் பயன்படுகின்றன.
இந்த
சங்கிற்குள்ளும் பல சங்கதிகளை வைத்தவன் வல்லவன் அல்லாஹ்தான். அல்ஹம்துலில்லா!
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...