...ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)...
1987 இல் ஆரம்பிக்கப்ட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி 2010 ம் கல்வி ஆண்டிலிருந்து முற்றிலும் புதிய முறையிலான கல்வித்திட்டத்தின் பிரகாரம் இயங்கவுள்ளது. இப்புதிய கல்வித்திட்டம் குறித்தும் பொதுவாக இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி குறித்தும் அதன் அதிபர் உஸ்தாத் ரம்ஸி அவர்களுடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
கேள்வி : இஸ்லாஹியா அரபுக்கல்லூரியின் அதிபர் என்ற வகையில் இஸ்லாஹிய்யா பற்றி வாசகர்களுக்கு ஓர் அறிமுகத்தைச் சுருக்கமாக வழங்க முடியுமா?
பதில் : இஸ்லாஹியா அல்லாஹ்வின் அருளால் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மாதம்பை பழைய நகரில் ஆரம்பிக்கப்பட்டது. மாதம்பை ஜும்ஆப் பள்ளி வாயிலுக்கு உரித்தான அதனோடு இணைந்த சிறியதொரு கட்டிடத்தில் 25 மாணவர்களுடனும் இரண்டு ஆசிரியர்களுடனுமே இக்கல்லூரி தனது பயணத்தைத் ஆரம்பித்தது. அன்றுமுதல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை அக்கட்டிடத்திலேயே இயங்கிய இஸ்லாஹிய்யா 2000ஆம் ஆண்டு தற்போது கல்லூரி அமைந்துள்ள, தனக்கே சொந்தமானதொரு வளாகத்திற்கு
இடம்பெயர்ந்தது.
இன்று இஸ்லாஹிய்யாவில் 145 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆரம்பத்தில் காணப்பட்ட வளப்பற்றாக்குறை காரணமாக இரண்டு, மூன்று வருடங்களிற்கு ஒரு முறைதான் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். எனினும் படிப்படியான மனித மற்றும் பௌதீக வளர்ச்சிக்கு ஏற்ப 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேள்வி : இஸ்லாஹிய்யா ஆரம்பிக்ப்பட்ட காலப்பிரிவில் இலங்ககையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் காணப்படத்தான் செய்தன. இந்நிலையில் மற்றுமொரு கல்லூரியை உருவாக்க எந்தவகையில் அவசியம் ஏற்பட்டதென நீங்கள் கருதுகிறீர்?
பதில் : பொதுவாக அரபுக் கல்லூரிகள் சமூகத்திற்குத் தேவையான ஆலிம்களை உருவாக்கும் நோக்கிலேயே இன்றளவில் இயங்கிவருகின்றன. இது சமூகத்தின் இன்றியமையாத தேவையும் கூட. ஆனாலும் இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்றவகையில் வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் இஸ்லாமிய அடிப்படையிலான மாற்றங்களை, செயற்றிட்டங்களைக் கொண்டுவரும் இகாமதுத்தீன் பணியில் இஸ்லாமிய அறிவு, ஆன்மீகப் பலம், ஆளுமைகள் என்பனவோடு அர்ப்பணத்துடன் செயல்படக்கூடிய தாஈக்களான, சமூகத் தலைவர்களான ஆலிம்களை உருவாக்குவது சமூகத்தின் மற்றுமொரு இன்றியமையாத தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்யும் உயர்ந்த இலட்சியத்திலேயே இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
கேள்வி : இந்த உயர்ந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போதுமான வளங்களை இஸ்லாஹிய்யா கொண்டுள்ளதா?
பதில் : ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகையில் இன்றளவில் தாராளமான வளங்களை இஸ்லாஹிய்யா தன்னகம் கொண்டுள்ளது. இஸ்லாஹிய்யாவில் தற்போது 10 முழுநேர விரிவுரையாளர்களும் பகுதி நேர விரிவுரையாளர்களாக ஐந்து பேரும் கடமைபுரிகின்றனர். இவர்களில் பலரும் எகிப்து, யெமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உயர் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம்பெற்றவர்களாவர். இதுதவிர அல்அஸ்ஹர் பல்பலைப்கழகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவரும் கடமையாற்றுகின்றார்.
மேலும் இஸ்லாஹிய்யாவின் விரிவரையாளர்களில் ஒருவர் யெமன் ஜாமிஅதுல் ஈமான் பல்பலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மற்றொருவர் அங்கேயே முதுமானிப் பட்டப் படிப்பையும் மற்றுமெருவர் சூடானின் ஜாமிஆ அல்அப்ரீகிய்யா அல்ஆலமிய்யா பல்பலைக்கழகத்தில் முதுமானிப் பட்டப் படிப்பையும் தொடர்வதற்காக கற்றல் விடுமுறையில் சென்றுள்ளனர்.
இஸ்லாஹிய்யாவின் வாசிகசாலை இலங்கையில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய வாசிகசாலைகளுள் ஒன்றாகும். இதில் சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. இஸ்லாஹிய்யாவின் ஊடக மையத்தைப் பொறுத்தவரை அது நவீன தொழிநுட்பத்தை கல்வியிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் பயன்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றது. இதில் நாளாந்த நாட்டு நடப்புகளைத் தெரிவிக்கும் செய்தி நிகழ்ச்சிகள், சர்வதேச செய்திகள் என்பனவும் பாடத்திட்டத்துடன் தொடர்பான வீடியோ மற்றும் ஓடியோ நாடாக்கள் என்பனவும் மாணவர்களுக்காக நேரசூசி அடிப்படையில் காண்பிக்கப்படுகின்றன.
இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான “தகவல் தொழிநுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனம் - Islamic Institute of Information Technology (iiit) இஸ்லாஹிய்யா மாணவர்களது தகவல் தொழிநுட்பத்துறை அறிவை மேம்படுத்துவதற்கான கற்கைகளை வழங்குவதோடு அதற்கான பயிற்சிகளையும் வழங்குகின்றது. இதில் இஸ்லாஹிய்யா மாணவர்கள் மாத்திரமன்றி வெளிவாரியாகவும் சுமார் 3000 இளைஞர் யுவதிகள் பயிற்சி நெறிகளை முடித்து வெளியேறியுள்ளனர். 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் Tertiary and Vocational Education Commission இனால் அங்கீகரிக்கப்பட்தாகும்.
கேள்வி : இவற்றுக்குப் பொருத்தமாக இஸ்லாஹிய்யாவின் பௌதிக வளங்கள் எந்த அளவில் காணப்படுகின்றன?
பதில் : தற்போது இஸ்லாஹிய்யா பௌதீகரீதியிலும் கணிசமானளவு வளர்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ். வளாகத்தினுள் நுழையும்போது தோன்றும் பிரதான இரு மாடிக்கட்டிடம் அலுவலகத்தையும் வகுப்பறைகளையும் கொண்டிருக்கின்றது. அதனை அடுத்துள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் மேல் மாடியில் கேட்போர் கூடமும் இரண்டாம் மாடியில் வாசிகசாலை, ஊடக மையம் என்பனவும் கீழ்ப்பகுதியில் மேலும் இரு வகுப்பறைகளும் காணப்படுகின்றன. அதனை அடுத்துள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல் மாடியில் மாணவர்களுக்கான விடுதியும் கீழ் மாடியில் இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழிநுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனமும் அமையப்பெற்றுள்ளன.
அத்தோடு சிறியதொரு மறுத்துவ நிலையமும் இஸ்லாஹிய்யாவை அண்மித்ததாகக் கட்டப்பட்டுள்ளது. மாணவர்களது விளையாட்டுச் செயற்பாடுகளில் கவனம்செலுத்தி இரண்டு கரப்பந்தாட்ட மைதானங்களும் அவர்களுக்காக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து இஸ்லாஹிய்யாவின் பள்ளிவாயில் அமைந்துள்ளது. பள்ளிவாயிலுக்கு மேலாக இன்னும் இரண்டு மாடிகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. அதனை அண்மித்ததாக இன்னும் இரண்டு பெரிய விடுதிகளும் காணப்படுகின்றன. அத்தோடு ஆசிரியர்கள் தங்குவதற்கான விடுதிகளும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி : இன்றைய காலவோட்டத்தில் அதிலும் கல்வி உலகில் பாரிய அபிவிருத்திகள் நிகழ்ந்து வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது. இத்தகையதொரு சூழ்நிழையில் கற்றல் கற்பித்தல் முறைகளை இஸ்லாஹிய்யா எவ்வாறு கையாள்கிறது?
பதில் : உண்மையில் இஸ்லாஹிய்யாவின் பாடத்திட்டம் மிகவும் நவீனமயமானது. காலமாற்றத்திற்கேற்ப மாணவர்களினதும் சமூகத்தினதும் நலன் கருதி அதில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்ட முறைமையை இங்கு அறிமுகப்படுத்துவது சிறந்ததென நினைக்கின்றேன்.
ஆசிரியர் மையக் கல்வி முறையுடன் இணைந்த பாடத்திட்டத்திலிருந்து மாறி மாணவர் மையக் கல்வி முறைமையுடன் அமைந்த நவீன கற்பித்தல் முறைமை தற்போது இஸ்லாஹிய்யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கவொன்று. மேலும் நவீன கல்வி முறைமைகளின் அடிப்படையில் Semester System, Unit System, Continents Assessment ஆகிய முறைமைகளே தற்போது இஸ்லாஹிய்யாவில் பின்பற்றப்படுகின்றன.
இவ்வருடம் முதல் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் புதிய கலைத்திட்டத்தின்படி கல்லூரியின் கற்கை நெறியானது ஏழு வருடங்களைக்கொண்டதாகும். இது இரண்டு கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதன் முதற் கட்டம் Diploma in Arabic and Islamic Studies; என்றும் இரண்டாம் கட்டம் Licentiate Certificate in Arabic and Islamic Studies என்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இதன் முதற்கட்டம் மூன்று வருடங்களைக் கொண்டது. இதில் அரபு மொழி, அல்குர்ஆன், அல்ஹதீஸ், பிக்ஹ், அகீதா, தஃவா மற்றும் தர்பிய்யா போன்ற ஷரீஆத் துறைப்பாடங்களும் ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம், வாழ்க்கைத் திறன் போன்ற இதர பாடங்களும் கற்பிக்கப்படும். இம்மூன்று வருட கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு Diploma in Arabic and Islamic Studies; சான்றிதல் வழங்கப்படும்.
அதேவேளை மாணவர்கள் கலை மற்றும் வர்த்தகத் துறைகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கும் தயார்படுத்தப்படுவார்கள். அவர்களால் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு கணக்கியல் அல்லது அரசியல், பொருளியல், வணிகக் கல்வி அல்லது அரபு மொழி ஆகிய பாடங்களைத் தெரிவசெய்ய முடியும்.
முதலாம் கட்டத்தில் ஷரீஆத் துறைப் பாடங்களில் விஷேட சித்திபெறும் மாணவர்கள் மாத்திரமே இரண்டாம் கட்ட கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏனைய மாணவர்கள் வேறு துறைகளில் பிற நிறுவனங்களில் தமது உயர்கல்வியைத் தொடர வழிகாட்டப்படுவார்கள்.
எமது கலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கற்கைநெறி நான்கு வருடங்களைக் கொண்டுள்ளது. இதில் அரபு மொழி, பிக்ஹ், அகீதா, உலூமுல் குர்ஆன், உஸ{லுல் ஹதீஸ், உஸ{லுல் பிக்ஹ், உஸ{லுத் தஃவா மற்றும் ஸீரா, தாரீஹ் போன்ற ஷரீஆத் துறைப் பாடங்களும் ஆய்வு முறைமைகளும் ஆழமாகக் கற்பிக்கப்படும்.
மேலும் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம், முகாமைத்துவம் போன்ற பாடங்களில் டிப்ளோமா பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டு அவற்றுக்கான பிரத்தியேகமான சான்றிதழ்களும் வழங்கப்படும். அதேசமயம் இம்மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கலைமானிப் பட்டப்பரீட்சைக்கும் தயார்படுத்தப்படுவார்கள். அதுமாத்திரமன்றி ஷரீஆத் துறையில் விசேடதிறமையும் ஈடுபாடுமுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்பலைக்கழகங்களில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்களும் ஏற்பாடுசெய்து கொடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.
இத்திட்டத்தின் கீழ் நாம் ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு விசேட அம்சம் யாதெனில் வேறு அரபுக்கல்லூரிகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு ஷரீஆக்கற்கைகளையும் முடித்து பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு தமது அடுத்தகட்ட உயர்கல்வியைத் தொடர இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி வழியமைத்துக்கொடுத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இதற்கான மாணவர்கள் இன்னும் மூன்று வருடங்களின் பின்பே அனுமதிப்பரீட்சையொன்றின் மூலம் சேர்த்துக்கொள்ளப்படுவர். இவர்கள் இஸ்லாஹிய்யாவின் இரண்டாம் கட்ட பாட நெறிக்குள் அனுமதிபெற்று தமது உயர்கல்வியைத் தொடர்வார்கள்.



.png)

.png)

