பூமியின் ஒவ்வொரு பகுதியும் வித்தியாசமான அமைப்பில் வித்தியாசமான கால நிலையுடன் இருப்பது பூமிக்கே உரிய தனித்துவமாகும். ஒரு பக்கத்தில் கடுமையான குளிர் ஐஸ் பிரதேசங்கள், இன்னொரு பக்கத்தில் அடர்ந்த பசுமையான காடுகள், அழகான கடல், ஆறு, குலங்களைக்கொண்ட நீர் நிலைகள், மறுபுறம் பயங்கரமான பாலை நிலங்கள் என பலதரப்பட்ட அமைப்பில் காணப்படுகின்றது. உண்மையில் இவை அனைத்துக்கும் இடையில் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கின்றது என்பதுதான் இன்றைய நவீன புவியியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. இத்தொடரில் நாம் சஹாரா பாலைவனம் பற்றி சற்று நோக்குவோம்.
அறிமுகம்.
சஹாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனமாகும். கொளுத்தும் வெயில், முடிவில்லாத மணல்வெளி, உயர்ந்து நிற்கும் மணற் குன்றுகள், ஆங்காங்கே சொற்ப தாவரங்கள்... இப்படியான இலக்கணங்களுடன் விளங்கும் சஹாரா பாலைவனமும் ஒரு இயற்கை அதிசயம்தான். வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனம், 94 லட்சம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘சஹாரா’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘மிகப் பெரிய பாலைவனம்’ என்று பொருள். இது அஸ்சஹ்ராஉ (الصحراء) என்ற அரபுச் சொல்லிலிருந்து வந்ததாகும். பாலை நிலங்களில் சஹாரா உலகின் மூன்றாவது பெரிய நிலமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அன்டார்டிக் மற்றும் ஆர்க்டிக் பனிப் பாலை நிலங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கின்றன. இவை குளிர் பாலைவனங்களாகும்.
அமைவிடம்.
சஹாரா பாலைவனம் ஆபிரிக்காக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும் வடக்கு திசையில் அட்லஸ் மலை மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் கிழக்கில் செங்கடலும் தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக உள்ளன. இப்பாலைவனம் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மெரிடேனியா, மொரோக்கோ, நைகர், சூடான், டியுனிஷியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது.
புவியியல் அமைப்பு.
சஹாராவின் புவியியல் அமைப்பு வித்தியாசமானது. இதனை ஆய்வு செய்ய இலகுவாக புவியியல் ஆய்வாளர்கள் மேற்கு சஹாரா, மத்திய அஹக்கார் மலை, திபெஸ்தி மலை, ஜார் மலை, டெனிரி பாலைவனம், லிபியன் பாலைவனம் என்று ஆறு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். சஹாரா பாலைவனம் என்பது மணற்குன்று, மணற் கடல், கல் பீட பூமி, காய்ந்த பள்ளத்தாக்கு, உப்பு ப்ளாட், மலை, ஓடை, பாலைவனச் சோலை, இரண்டு நதிகள் என்பவற்றைக் கொண்டுள்ளது. திபெஸ்தி மலையில் அமைந்துள்ள ஏமி கூஸி (Emi koussi) தான் சஹாராவின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 3415 மீட்டர் ஆகும். வடக்கு சாட் பகுதியில் அமைந் துள்ள இம்மலை ஒரு கவச எரிமலை (Shield Volcano) ஆகும்.
உலகிலேயே அதி வெப்பம் மிகுந்த பகுதியாக சாஹாராவை நாம் நினைத்தாலும் அது முற்று முளுதாக வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றில் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும். சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத இரு நதிகளாகும். சில இடங்களில் நிலத்தடி ஆறுகளும் ஓடுகின்றன. அவை ஊற்றுக்களாக மேற் புறம் வரும் இடங்களில் பாலைவனச் சோலைகள் தோன்றுகின்றன. சஹாராவில் பகலில் எந்த அளவு வெப்பம் இருக்குமோ அதற்கு நிகரான கடுமையான குளிர் காற்று இரவு நேரங்களில் வீசிக்கொண்டிருக்கும். சஹாராவில் வீசும் மணற் புயற் காற்றுதான் மிகவும் அபாயகரமானது.
உண்மையாகும் நபிமொழி.
தொடர்ந்து சஹாராவின் பருவ நிலை மாற்றங்களை கவனித்துவரும் ஆய்வாளர்கள் கடந்த சில நூறு ஆண்டுகளாக சஹாரா வித்தியாசமான பருவநிலை மாற்றங்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். மட்டுமல்லாமல் இப்போது, வறண்ட பகுதியாக இருக்கும் சஹாரா, இன்னும் 15,000 ஆண்டுகள் கழித்து மீண்டும் பசுமையாக மாறும் என்றும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் சஹாரா பசுமையான இடமாக இருந்துள்ளமைக்கான சில புவியியல் ஆதாரங்கள் இருக்கின்றனவாம். சஹாராவில் குலங்களும், நதிகளும், ஏரிகளும் இருந்துள்ளமைக்கா அடையாளங்களையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே மீண்டும் இது பசுமையாக மாறுவதில் ஆச்சர்யமொன்றும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். கீழே உள்ள நபிமொழியை ஒரு முறை படியுங்கள்.
“அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. ” (முஸ்லிம்) என்று அப்போதே நபி (ஸல்) அவர்கள் கூறிய வாக்கு நிகழாமல் இருக்குமா என்ன? இந்த ஹதீஸ் அரேபியாவை மட்டும் குறிக்கிறதா? அல்லது அரேபியா போன்றிருக்கும் ஏனைய பாலைவனங்களும் இதில் உள்ளடங்குமா என்பதை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
உயிரினங்கள்.
பூமியின் மிக வறண்ட, வெப்ப பிரதேசமாக சஹாரா இருந்தபோதிலும் அதற்கும் ஈடுகொடுத்து வாழக் கூடிய பல உயிரினங்களை அல்லாஹ் அங்கு படைத்துள்ளான். சஹாராவில் 1200 வகையான தாவரங்களும், சுமார் 70 வகையான மிருகங்களும் வாழ்கின்றன. தாவரங்களைப் பொருத்தவரை அவை முட்செடிகளாகவும், கடினத்தன்மை கொண்டனவாகவும், உள்ளே தண்ணீரையும் கொண்டிருக்கும். இத்தாவரங்கள் அதிக உயரம் வளர்வதுமில்லை ஆயுளும் குறைவு.
பாலைவனத்தின் சில பகுதிகளில் மனிதர்களும் வாழ்கின்றனர். அவர்களை “Bபதவி – நாடோடி” என்று அழைப்பர். ஒட்டகமும் ஆடும் இங்கு பொதுவான வீட்டு விலங்குகளாகும். நரி, சிறுத்தைப் புலி, மணல் விரியன், தேள், கொமோடோ பல்லி, காட்டு நாய், தீக்கோழி, மறிமான் (Antelope) ஆகிய விலங்குகளும் காணப்படுகின்றன. மேலும் தோர்க்சு, ரிம், தாமா எனப்படும் சிறுமான்களும் காணப்படுகின்றன. அல்சீரியா, தோகா, நைகர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் நரிகளும் உள்ளன.
சிலந்திகள், எறும்புகளும் இருக்கின்றன. இங்கு வெள்ளி எறும்புகள் எனும் ஒருவை எறும்பினங்கள் உள்ளன. இவை மட்டுமன்றி கழுகுகள், இன்னும் பல பறவைகளும் வாழ்கின்றன. இது பூமிக்கடியில் துளைகளில் வசிக்கும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. இங்கு உள்ள தாவரங்கள் உட்பட விலங்குகள், பறவைகள், பூச்சிகள் அனைத்தையும் இப்பகுதியின் கால நிலைக்கும் தட்ப வெப்ப நிலைகளுக்கும் ஏற்றவிதத்தில் வாழும் ஆற்றலுடன் அல்லாஹ் படைத்துள்ளான். இவ்வுயிரினங்கள் யாவும் அதிக காலம் நீர் அறுந்தாமல் வாழும் ஆற்றல் பெற்றவையாகும்.
வளங்களும் உரங்களும்.
சஹாராவில் 20 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இதில் பெரும்பாலோர் நாடோடிகள். இங்குள்ள முக்கிய பழங்குடி இனத்தின் பெயர் பெர்பெர் (Berber) ஆகும். முக்கிய மொழி அரபி. இங்கு பெரும் அளவில் இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும் அல்ஜீரியாவில் எண்ணெயும், மேற்கு சஹாராவில் பொஸ்பேட்ட தாதுக்களும் அதிக அளவில் கிடக்கின்றன. இவற்றில் அதிகமானவை சிறந்த உரங்களாகும். தாவரங்களின் வளர்ச்சிக்கு சிறந்த பசளைகளாக விளங்கினாலும் இப்பகுதியின் வெப்பம் அதற்கு இடம்கொடுப்பதில்லை. இப்பாலைவனத்தின் மெரிடேனியா பகுதியில் ‘ரிச்சாட்’ (Richard) என்ற விசித்திர நில அமைப்பு காணப்படுகிறது. எருதின் கண் போல் காணப்படும் இதை ‘சஹாராவின் கண்’ என்றும் அழைப்பர். 50 கி.மீ. விட்டத்தில் அமைந்துள்ள வட்ட வடிவ, வரி வரியாக அரித்தெடுக்கப்பட்ட இயற்கையான பாறை அமைப்பு இது.
அமேசன் காட்டுக்கு உரமளிக்கும் சஹாரா.
கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியதுபோல இப்புவியின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் ஒரு சங்கிலிப் பிணைப்பு காணப்படுகின்றது. ஒன்று இன்னொன்றில் தங்கி வாழ்கின்றது. மிக வறண்ட பகுதி யான சஹாரா பாலைவனத் திற்கும் மிக செழிப்பான பிரேஸிலின் அமேசன் மழைக்காடுகளுக்கும் இடையிலான அற்புதமான, ஆச்சர்யமான தொடர்பை புதிய ஆய்வொன்று விளக்கியுள்ளது. அவ்வாய்வு சுட்டிக்காட்டுவதாவது…
சஹாரா பாலைவனத்தில் இருக்கும் ஊட்டசத்துக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தொன் புழுதிகள் மணிக்கு 20 மைல் வேகத்தில் வசும் புயல் காற்று மூலம் அள்ளிக்கொண்டு அட்லான்டிக் சமுத்திரத்தையும் கடந்துசென்று அமேசன் மழைக்காடுகளில் கொட்டப்படுகின்றன. இந்த புழுதி அதிக பொஸ்பரஸ் கொண்டதாக இருப்பதால் அது சிறந்த இயற்கை உரமாக செயற்பட்டு அமேசன் வனத்தை பாதுகாக்கின்றது. அமேசன் காடுகளுக்கு ஆண்டுதோறும் 22,000 தொன்களுக்கும் அதிகமான பொஸ்பரஸ் மணல்கள் சஹாரா பாலைவனத்தில் இருந்து கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவு "ஜோக்ரபிகல் ரிசேச் லெட்டர்ஸ்" சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வின் படைப்பாற்றலின் சமநிலைத்தன்மையைப் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் படைப்புகளில் எந்தவொன்றும் வீணுக்காகப் படைக்கப்படவில்லை என்பதற்று இதுவும் ஒரு சிறந்த சான்று. வரண்ட பாலைவனத்தின் மூலம் எத்தனையோ ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஒரு மழைக்காடு உயிர் வாழ்கின்றது.
6 comments:
Amazing alhamdulillah. Allah be with you
Amazing alhamdulillah. Allah be with you
Amazing alhamdulillah. Allah be with you
Amazing alhamdulillah. Allah be with you
Amazing alhamdulillah. Allah be with you
Amazing alhamdulillah. Allah be with you
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...