ஒரு சம்பவம்
அண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில்
மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றாள். எல்லோருக்கும் ஆச்சரியம்.
மலைப்பாம்புக்கே பயப்படாத பெண்ணா? அந்த சமயம் பார்த்து
எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கரப்பான் பூச்சி தொப்பென்று வந்து அப்பெண்ணின் மீது வீழ்ந்தது.
அய்யோ பாவம் மலைப்பாம்பைத் தூக்கி எரிந்துவிட்டு கூச்சலிட்டு, பதறியடித்துக்கொண்டு ஓடிவிட்டாள். சபையோர் எல்லோருக்கும்
ஒரே சிரிப்பு. மலைப்பாம்புக்குக்கூட பயப்படாதவர் இப்படி சாதாரண கரப்பான் பூச்சிக்குப்
பயந்துவிட்டாரே! இப்படி பலரையும் பார்க்கலாம். சிங்கத்திற்கும் புலிக்கும் பயப்படாதவர்கள்கூட
கரப்பான் பூச்சியின் பெயரைக் கேட்டாலே தொடை நடுங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட “கரப்பான் பூச்சிகள்” பற்றி இத்தொடரில் அறிந்துகொள்வோம்.
அறிமுகம்
கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். துறு துறுவென்று
மிகவும் சுருசுருப்பாக இயங்கும் ஒரு பூச்சிதான் கரப்பான் பூச்சிகள். இவை எமது வீடுகளில்
அதிகமாக வாசஞ்செய்கின்றன. ஆங்கிலத்தில் Cockroach அல்லது Roach என அழைக்கப்படுகின்றன. பூச்சி இனத்தில்,
எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணி
வகைப்பாட்டில் இவையும் அடங்குகின்றன. ஆறு பெரிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் பூச்சிகள் தற்போது உலகெங்கும் காணப்படுவதாக
புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கணுக்காலி
கரப்பான்கள் கணுக்காலி (Arthropod) கூட்டத்தைச் சேர்ந்தவை. கணுக்காலிகள் என்பவை விலங்குகளின் பிரிவில் உள்ள ஒரு மிகப்
பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும் வண்டுகளும், தேளினங்களும், எட்டுக்கால் பூச்சி சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்புதான்
கணுக்காலிகள். இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். அந்தக்
கணுக்காலிகள் கூட்டத்தில்தான் கரப்பான் புச்சிகளும் அடங்குகின்றன.
உடலமைப்பு
கரப்பான் பூச்சிகளது உடலுறுப்புகள் மிகவும் மிருதுவானவை. இவற்றின் உடல்,
பகுதி பகுதியாக, அதாவது மூன்று கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தலைப் பகுதி, நெஞ்சுப் பகுதி,
வயிற்றுப் பகுதி. ஒரு கரப்பான்
பூச்சியைப் பார்த்தால் இந்த மூன்று பகுதிகளையும் இலகுவாக கண்டுகொள்ளலாம். அகன்ற தட்டையான
பெரிய உடல், உடலுக்குப் பொருத்தமில்லாத
சிறிய தலை. தலையின் கீழே வாயுறுப்புகள். இதில் உள்ள தாடைகள் உணவுப் பொருட்களை துண்டுகளாக
நறுக்கி, பிறகு மென்று தின்ன உதவுகின்றன. உணர்தலுக்கு, மோப்பம் பிடிப்பதற்கும் பிரத்தியேகமாக தமது உடலைவிட
நீளமான உணர் கொம்புகள் அல்லது ஆன்டெனாக் கொம்புகள் காணப்படுகின்றன. இவற்றின் கண்கள்
தும்பி, ஈ, நுளம்பு போன்றவற்றின் கண்கள் போன்று கூட்டுக் கண்களாகும்.
இரண்டு பக்கக் கண்களிலும் ஐம்பது ஐம்பது விகிதம் மொத்தம் நூறு கூட்டுக் கண் வில்லைகள்
காணப்படுகின்றன. எனவே இருளிலும் நன்கு பார்க்க முடியும். அத்தோடு நீண்ட உறுதியான கால்கள் அவற்றுக்கு ஓடவும்
எகிறிக் குதிக்கவும் உதவுகின்றன. இவற்றின் ஆறு கால்களும் சோடி சோடியாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் அமைந்துள்ளன. அதே போன்று
கால்களில் இருக்கும் நீண்ட நீண்ட முள்போன்ற மயிர்கள் பார்ப்பதற்கு பயத்தையும்,
அலர்ஜியையும் ஏற்படுத்துகின்றன.
இவற்றுக்கு இரண்டு ஜோடி இறக்கைகள் இருக்கின்றன. முதல் ஜோடி கெட்டியான கவசம் போல்
மற்றொரு மெல்லிய ஜோடி இறக்கைகளைப் போர்த்திப் பாதுகாக்கும். இந்த மெல்லிய இறக்கைகள்
10-15 மி.மீ நீளத்தில் விசிறி போல்
மடிந்திருக்கும். இவை பறக்க உதவினாலும் கரப்பான்கள் பறப்பது வெகு குறைவே. எப்போதாவது
சொற்பமாகப் பறக்கும். மற்றபடி ஓட்டம்தான் அதிகம். மிகவேகமாக ஓடும். மணிக்கு 200 மைல் வேகத்தில் இவற்றின் ஓட்டம் இருக்கும். தமது
உடலைவிட சிறிய தட்டையான சந்து, பொந்துகளால்கூட விணாடியில்
நுழைந்து சென்றுவிடும். இருந்தாலும் இவை தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதை விரும்புவதில்லை.
சீக்கிரமே ஒரு மறைவான இடத்தைப் பார்த்துப் பதுங்கிக்கொள்ளவே முயற்சிக்கும். இவற்றுக்கு பறப்பதிலும் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. பொதுவாக
இரையைத் துரத்திப் பிடிக்க வேண்டிய அவசியம் இந்தப் பூச்சிகளுக்கு இருப்பதில்லை. அபாய
சூழலில் இருந்து தப்பிப்பதற்கு மட்டுமே ஓட்டம் உதவுகிறது. இதனால்தான் சில இனங்களுக்கு
இறக்கைகளே இருப்பதில்லை. சிலவற்றுக்கு இருந்தாலும் பறப்பதற்குப் பயனில்லாமல் சின்னஞ்
சிறியதாய் இருக்கும்.
வெண்ணிறக் குருதி
இரத்தம் இல்லாத பூச்சி கரப்பான் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் கரப்பான் பூச்சிகளுக்கு
இரத்தம் இல்லாமலில்லை. அவற்றின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் குருதி வெண்ணிறமாக
இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. கண்டதையெல்லாம் உண்ணும்
அனைத்து உண்ணியாக இருந்தாலும் இப்பூச்சிகளின் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் இருப்பதில்லை.
அதனால்தான் கரப்பான் பூச்சியை அடித்து நசுக்கினால் வெள்ளை நிறத்தில் இரத்தம் வரும்.
நீண்ட நாள் வாழும்
கரப்பான் பூச்சிகளின் உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும்
நரம்பணுத்திரள்கள் உள்ளன. இது பூரான்களுக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் மட்டுமே உள்ள
பிரத்தியேக விஷேட உடலமைப்பாகும். எனவே ஒரு பகுதியை துண்டித்துவிட்டால்கூட மற்ற பகுதியால்
சில நாட்கள் வரை உயிர் வாழும். கரப்பான் பூச்சிகளின் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு
வாரத்திற்கு அவை உயிர்வாழும். அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று
ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வீட்டில் சிலபோது கரப்பான் பூச்சியை ஓங்கி செருப்பால்
அடித்தாலும் சிறிது நேரத்தில் அது எழுந்து அதன்பாட்டுக்கு சென்றுவிடும்.
ஆபத்துக்கள்
பல்வேறு வழிகளிலும் கரப்பான் பூச்சிகள் எமக்குத் தீங்கிளைக்கின்றன. அண்மையில் இந்தியாவில்
நடந்த ஒரு சம்பவம். பெண் ஒருவரின் மூக்குத் துவாரத்தினூடாக கரப்பான் பூச்சியொன்று மண்டையோட்டுக்குள்
நுழைந்துள்ளது. அதனை வைத்தியர்கள் பெறும் சிறமத்திற்கு மத்தியில் உயிரோடு சத்திரசிகிச்சை
செய்து வெளியே எடுத்துள்ளார்கள். சிலபோது நாம் களற்றி வைத்துள்ள ஆடைகளுக்குள் நுழைந்து
மறைந்து கொண்டிருக்கும் கரப்பான்கள் ஆடை அணிந்ததும் உடல் முழுக்க ஓடித் திரிந்து எம்மைக்
கதற வைக்கின்றன. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டில் விரிப்புக்குள் வந்து
புகுந்து நம்மைப் பயம் காட்டும். சிலபோது நமது வாயை நக்கி எச்சம் வைத்துவிட்டுச் சென்று
விடும்.
அல்லது சமயலறைக்குள் புகுந்து நாம் வைத்திருக்கும் உணவுப்பண்டங்களை ருசி பார்த்து
எச்சில் படுத்திவிடும். தேணீர் கோப்பையையும் விட்டுவைக்காது. கரிச் சட்டிகளையும் விடாது.
நாம் உண்ணும் உண்வின்மீது உலாவித் திரிந்து, அசுத்தமாக்கி உல்லாசமாக சாப்பிட்டு, பற் தூரிகை முதல் தும்புத் தடிவரை அனைத்தையும் அசுத்தப்படுத்திவிடும்.
மலசலகூடம் சென்றால் அங்கும் வந்து அங்குமிங்கும் பறந்து நம்மை படாதபாடு படுத்தும்.
நாம் உண்ணும் உணவு, நீர், பழங்கள் என்பனவற்றில் கரப்பான் பூச்சியின் மலக்கழிவு,
அதன் உமிழ் நீரும் சேர்வதால்
அவை மாசடைகின்றன. இக்கழிவுகளால் உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து
காணப்படுகின்றன. இதனை உற்கொள்வதால் வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
உணவுமுறை
கரப்பான் பூச்சிகள்
அனைத்துண்ணிகள் இனத்தை சேர்ந்த்தவை என்பதால் எதையும் உண்ணக் கூடியவை. பகல் முழுக்க
இருட்டுக்குள் ஒழிந்திருக்கும் இவற்றுக்கு இரவு வந்து விட்டால் குஷிதான். குடும்பப்
பெண் போல் குனிந்த தலை நிமிராமல், மூன்று ஜோடிக் கால்களால்
வேக நடை போட்டுக் கொண்டு உணவுக்குக் கிளம்பி விடும். இரை என்பது இவற்றுக்கு இன்னதென்று
இல்லை. உணவுப் பண்டங்கள், குடிபாணங்கள்,
பேப்பர், துணி மட்டுமின்றி இறந்து கிடக்கும் வேறு ஜீவராசிகளின்
சடலங்கள் என அனைத்தையும் சாப்பிடும். இனிப்புப் பண்டங்களும் மாப்பொருட்களும்தான் இவற்றின்
விஷேட உணவு. உணவே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இரண்டு மாதங்கள் வரை கூட சாப்பிடாமலேயே
சுறுசுறுப்பாக இருக்கும்
வாழும் இடங்கள்.
கரப்பான் பூச்சிகள் இருட்டைத்தான் அதிகம் விரும்புகின்றன. வெளிச்சம் மிகுந்த பகல்
பொழுதுகளில் இருட்டான இடம் பார்த்து மறைந்திருக்கும். கல்லிடுக்கு, சுவர் விரிசல், கழிவறை, வீட்டில் உள்ள தளபாடங்களின் அடிப்பகுதி,
சிவிலினின் மேற் பகுதி,
சமையல் அறையிலும் ஸ்டோர் ரூமிலும்
உள்ள பொருட்களின் பின்புறம் போன்ற இடங்கள் இவற்றுக்குத் தோதானவை. இத்தகைய ஸ்தலங்களில்
ஒன்றை தாம் தம் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். பகல் முழுதும் இங்கே சப்தம்
காட்டாது மறைந்திருக்கும். இரவானால் கரப்பான் புச்சிகளின் ராஜாங்கம் ஆரம்பமாகும். உலகில்
துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் அசுத்தமாக இருக்கும் வீடுகளில்
வீட்டு ஒட்டுண்ணியாக இவை வாழ்கின்றன.
கரப்பன் புச்சியை விரட்ட
கரப்பான் பூச்சியை விரட்ட பூச்சிக் கொள்ளிகளே தேவையில்லை. முதலாவது நாம் இருக்கும்
இடம் சுத்தமாக இருந்தாலே போதும். அசுத்தமான இடங்களைத்தான் கரப்பான்கள் தேடிவரும். உணவு,
நீர், என்பவற்றை தகுந்த சுகாதார முறைப்படி கையாள்வது மிகவும்
முக்கியமானது. மேலும் உணவுப்பொருட்களை இறுக்கமாக மூடிவைத்தல், வீட்டிலுள்ள கழிவுப்பொருட்களை முக்கியமாக சமையலறைக்
கழிவுகளை உடனுக்குடன் அகற்றுதல், மற்றும் களஞ்சிய அறை,
குளிர்சாதனப்பெட்டி,
பாவனையற்ற வீட்டுப்பாகங்களை
அடிக்கடி தூய்மைப்படுத்தல் மூலம் கரப்பான் பூச்சிகளின் பெருக்கத்தையும், ஆபத்துக்களையும் தடுத்துக் கொள்ளலாம்.












0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...