ஆலிப் அலி
இஸ்லாஹியா வளாகம்
அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது
ஜனநாயகம், சோஸலிஸம், சிவில் உரிமை, மனித நேயம் போன்ற சமகால பேசுபொருள்களுள் மற்றொன்றுதான் பெண்ணிலை வாதம். ஆல்லது பெண்ணியல் வாதம் (Feminism). ஒரு சமூகத்தின் மதம், கலாசாரம், மரபு, என்ற அத்திபாரங்களையும் தாண்டி இன்றிந்த பெண்ணிலைவாதத்தின் குரல் ஒளித்துக்கொண்டிருக்கின்றது. உண்மையில் பெண்ணியலுக்கு பலரும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறியுள்ளனர். இன்றைய பெண்ணியலைப் பொதுவாக விளங்குவதாயின், சமூகத்தில் ஆண் - பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும், ஆண்களோடு பெண்கள் சம அந்தஸ்த்து வகிக்கவேண்டும். மதத்தினதும் சமூகத்தினதும் பெயரால் பெண்கள் ஒடுக்கப்படுவது தடுக்கப்டவேண்டும். பாலியல் அதிகாரம், பொருளாதார உரிமை என்பன வழங்கப்பட வேண்டும். இதுவே பெண்ணியக் கோசத்தின் சாரம்சமாகும்.
இஸ்லாம் பெண்ணியம் குறித்து என்ன பேசுகின்றது என்று நோக்க முன்பு இன்றைய பெண்ணியல் தேன்ற ஏதுவாயிருந்த வரலாற்றுக் காரணிகளையும் அன்றைய பலம்பொருந்திய சாம்ராஜ்யங்களும் முன்னுதாரணம் கூறப்பட்ட கலாசார நாகரிகங்களும் பெண்ணை எவ்வந்தஸ்தில்வைத்துப் பார்த்தது? எவ்வாறு நடாத்தியது? போன்ற கேள்விகளுக்கு விடைகான முயற்சிப்போம்.
பண்டைய காலப் பெண்களின் நிலைகுறித்து பேராசிரியர் அப்தூரஹ்மான் ஐ.தோய் அவர்கள் குறிப்பிடும்போது: “மனித இனத்தில் தோன்றிய கீழ்ப்பிறவியே பெண்”என்று பண்டைய மக்களும் நாகரிகங்களும் பெண்ணைக் கேவளமாகச் சித்தரித்தன. பெரும் பெரும் சாம்ராஜ்யங்களான கிரேக்கம், ரோமம், பாரஸீகம், சீனம் என்பனவும் ஸமாரிய, மொஸபதேமிய நாகரிகங்களிலும் பெண்களின் நிலை பரிதாபகரமாகவே காணப்பட்டது” என்கிறார்.
கிரேக்க மக்கள் பெண்கள் பற்றி மிகக்கீழ்த்தரமான முறையில் கருதிவந்தார்கள். உலகளாவிய குழப்பங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணம் பெண் என்று கூறினார்கள். அவ்வாறே நடாத்தவும் செய்தார்கள். ஒரு சுலோகத்தையும் அவர்கள் கூறிவந்தார்கள். “நாகம் தீண்டினாலும் சுகப்படுத்திவிடலாம். ஆனால் பெண்களின் மாயச் சூழ்ச்சிக் குணத்தை மாற்றவே முடியாது!” இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.
யூத மதத்தைப் பொருத்தவரை வீட்டு உடமைகளான ஆடு, மாடு, நிலம், பணம், அடிமை போன்றவற்றுள் மற்றுமொன்றாகவே பெண்ணும் கருதப்பட்டாள். பகிர்ந்தளிக்கப்படும் சொத்தாகப் பாவிக்கப்பட்டாள். பண்டமாற்று வியாபாரத்தில் ஒரு மாற்றுப் பொருளாகப் பெண் உபயோகிக்கப்பட்டாள். அதேபோல் மாதவிடாய் காலத்தில் தீண்டத் தகாதவளாகவும் கருதப்பட்டாள்.
பண்டைய கிறிஸ்தவம்கூட இவ்வாறுதான் எண்ணியிருந்தது. “கொட்டுவதற்கென்றே கொடுக்கை விரித்துவைத்துக்கொண்டிருக்கும் தேல்களே பெண்கள்” என்று அன்றைய பாதிரிமார் போதித்தனர். “மயக்கும் அழகும் வியக்கும் அலங்காரமும் கொண்ட பேய்தான் பெண்” என்று கூறி பலரும் பெண்களைவிட்டு ஒதுங்கி வாழந்தனர். அதேபோன்று 7 ம் நூற்றாண்டில் வியன்னாவில் இடம்பெற்ற ஒரு கத்தோலிக்க மாநாட்டில் பெண்களுக்கு ஆன்மா உண்டா? இல்லையா? என்றுகூட விவாதிக்கப்பட்டது. ஆதாமைப் பாவம்செய்யத் தூண்டியவள் பெண் என்ற அடிப்படையில் பெண்கள் பாவச்சுமையுடனே பிறப்பதாகக் கருதினர்.
ரோம சாம்ராஜ்யத்தில் பெண்கள் பலவாறு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சுடுநீரை உடம்பில் ஊற்றி அப்பெண்கள் படும் வேதனையில் அவர்கள் இன்பம் கண்டார்கள். சிறு தவறுகற்கும் தண்டனை என்ற பெயரில் உயிருடன் கொழுத்தப்பட்டார்கள். உயிர்ப் பிராணிகளுக்கு வழங்கப்படும் வாழ்வுரிமைகூட அப்பெண்களுக்கு மறுக்கப்பட்டது. உயிருள்ள சதைப்பிண்டங்காகவே கருதப்பட்டார்கள். சீனாவில் பெண்கள் வியாபாரச் சரக்குகள்போன்று சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
இந்து மதத்திலும் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏற்றப்பட்டாள். இளம்வயதில் துணையை இழந்தால் மறுமனம் செய்வது முற்றாகத் தடுக்கப்பட்டது. அத்தோடு “பெண் என்பவள் குழந்தைப் பருவத்தில் தந்தையிடமும் வாலிபப் பருவத்தில் கணவனிடமும் தள்ளாடும் வயதில் ஆண்மக்களிடமும் அடங்கி வாழவேண்டும்” என்று மனுதர்ம சாஸ்திரமும் கூறுகின்றது. (பெண் விடுதலையும் சமூக விடுதலையும் - புதிய பூமி வெளியீட்டகம்)
மௌட்டீக கால அரேபியாவில் வாழ்ந்த மக்கள் தமது பெண் குழந்தைகளை ஈவிரக்கமின்றிக் கொலைசெய்தனர். குழந்தை பெண்ணாகப் பிறப்பதை தமது குலத்துக்கே இழுக்கை ஈட்டித்தருவதாகக் கருதினர். அப்படிப் பிறந்துவிட்டால் அவ்வீட்டு ஆண்மக்கள் வெளியில் தலை காட்ட வெட்கப்பட்டனர். இதனை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது.
“இன்னும், அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயம் கூறப்பட்டால் கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவனிருக்கää அவனது முகம் (கவலையால்) கறுத்துவிடும்.” (அவன்) எதனைக்கொண்டு நன்மாரயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு, மக்கள்முன் செல்லாது) சமூகத்தைவிட்டும் மறைந்துகொள்கிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதென்பதை தெரிந்துகொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் - அந்நஹ்ல்: 58, 59)
அம்மக்களின் கல்நெஞ்சம் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “பிரசவ வேதனை ஏற்பட்டபெண் தோண்டிவைக்கப்பட்ட குழியொன்றினருகில்வைத்து வைத்தியம் செய்யப்படுவாள். பிறந்தது பெண் குழந்தையெனின் அதனைக் குழியினுள் தள்ளி மூடிவிடுவார்கள். ஆண் குழந்தையென்றால் மகிழ்ச்சியோடு எடுத்துக்கொள்வார்கள்.”
இவ்வாறு பெண்கள் ஆரம்ப காலங்களில் ஆணாதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டு அவர்களது இரும்புக் கரங்களால் நசுக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் மத்தியில் வாழந்துள்ளார்கள். எனினும் அம்முதளாலிய வர்க்கத்தின் ஆசைகளுக்குத் தூபம் போனவர்களும் கேலிக்கைக் கழியாட்டங்களில் அவ்வாழும் வர்க்கத்தை மகிழ்ச்சிக்களிப்பில் ஆழ்த்தியவர்களுமே ஓரளவேனும் அந்தஸ்துடையவர்களாக மதிக்ப்பட்டனர்.
மேலும் பெண்கள் அவப்போது பலிப்படாக்களாகவும் பணன்படுத்தப்பட்டனர். சாமிப் பூஜையென்றும் கட்டுமானப் பணிகளென்றும் புதையல் அகழ்வென்றும் விவசாயம், பயிர்ச்செய்கை என்றெல்லாம் வேலைகளை ஆரம்பிக்கும் முன்பு பெண்களைப் பலியிடும் மரபுகூட இருந்துவந்துள்ளது. ஹிஜ்ரி 20ல் எகிப்தைக் கைப்பற்றி கவர்னராக இருந்த அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்களிடம் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் வந்து “நாம் ஒவ்வொரு வருடமும் நைல் நதி சிறப்பாக ஓட ஒரு பெண்ணைப் பலியிட்டு வருகின்றோம். அதற்குத் தற்போது நீங்கள் அனுமதி தரவேண்டும்” என்று கோரியபோது, “இந்த மூடப் பழக்கங்களை நீங்கள் இன்றே விட்டுவிடவேண்டும். இதனை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.” என்று உறுதியாகக் கூறி அப்பாவத்தைத் தடுத்தார்கள்.
அதேபோன்று உலகம் சுற்றிய கடற்பிரயாணி இப்னுபதூதா அவர்கள் தனது நூலில் எழுதும்போது இவ்வாறு மாலைத் தீவுகளில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தீவின் கரையோரத்திலிருந்த கோயிலில் பேய் இருப்பதாக அம்மக்கள் நம்பி அதனைச் சாந்தப்படுத்த ஒவ்வொரு மாதமும் ஒரு கன்னிப்பெண்ணைத் தனியாக அங்குவிட்டுவிடுவார்கள். மறுநாள் காலை அப்பெண் கற்பழிக்கப்பட்டு இறந்திருப்பாள். இப்படியிருக்க ஒரு முறை அபுல் பறகாத் அல்பர்பரி என்ற ஓர் மகான் அங்குவந்தபோது இச்செய்திகேட்டு இம்முறை அவரே அக்கோயிலில் தனியாக இரவைக் கலிப்பதாகக்கூறி தங்கிவிட்டார். அடுத்தநாள் காலை மக்கள் அவரை உயிருடன் காணவே அது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்து உடனே இஸ்லாத்தத் தழுவினர்.
ஆரம்பகால மன்னர்களும் சர்வாதிகாரிகளும் பெண்களை வலுக்கட்டாயமாகத் தமது விருப்பினடிப்படையில் உபயோகித்துவந்தனர். இது அன்றைய அடிமைத்துவக் கலாசாரத்தின் மூலம் வெற்றிகண்டது. காலவோட்டத்தில் ஜநனாயகம், மனித உரிமை, பாலியல் துஷ்பிரயோக எதிர்ப்பு போன்ற சிந்தனைகள் தலைத்தெழவே எதேச்சாதிகாரத்தோடு பெண்களைத் தமது விருப்புக்கு அடிமையாக்க முதலாளியத்தால் முடியாது போனது. எனவே பெண்ணை அவளின் இயைபோடு அனுபவிக்க முதலாளிய உலகம் கட்டவிழ்த்துவிட்ட எண்ணக்கருதான் பெண்ணிலைவாம் என்ற உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.
ஆணும் பெண்ணும் சம அந்தஸ்து வகிக்கவேண்டும் என்ற கருத்தினால் பெண் என்பவள் கண்ணியமானவள், கற்புடையவள், அடக்கமாக வாழவேண்டியவள் போன்ற வாதங்கள் பிற்போக்கானவையென்றும் வேண்டியவிதம் செயலாற்றும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்றுகூறி பெண்ணைப் புது உத்தியின் மூலம் அடிமைகளாக்கினர். ஆக முதலாளிய உலகம் விரித்த பெண்ணியம் என்ற அகன்ற மாயவலையில் பெண்கள் மாட்டிக்கொண்டுள்ளனர்.
அத்தோடு சிலர் ‘பெண்விடுதலை’ என்ற பெயரில் முன்வைத்த கருத்துக்கள் பிற்காலத்தில் பெரும் கலாசார விழுமிய சீர்கேட்டுக்கே வித்திட்டதாயமைந்தன. அமெரிக்காவின் நவீன பெண்ணிய இயக்கங்களின் தாய் என வர்ணிக்கப்படுகிற ‘பேடோ ஃபிரொய்ட்மேனா’ என்பவர் “குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் என்ற பெயர்களில் பெண்களை வீடுகளில் முடக்கிவைப்பது பெரும்மோசடியாகும். பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறவேண்டும். சமூகத்துடன் கலந்திருக்கவேண்டும்.” என்று கருத்துவெளியிட்டார். இதனால் பல பெண்கள் வீடுகளைவிட்டும் வெளியேறி பெண்கள் இயக்கங்களுடன் வந்துசெர்ந்தனது. அவ்வாறே திருமணத்தையும் புறக்கணித்து வாழ்வதற்காக “sex is politics” பாலுணர்வும் அரசியலே என்று ஒருவர் கருத்துரைத்தார். மேலும் சைமன் என்ற பெண்நிலைவாதி “மனைவியாக இருப்பதைவிட விபசாரியாக இருப்பது சிறப்பானது. விபசாரிக்கு புகழும் செல்வமும் ஒருசேரக்கிடைக்கின்றது. ஆனால் மனைவியோ தொடர்ந்தும் அடிமையாகவே இருந்துவருகிறாள்” என்று கூறியுள்ளார். அதேபோல் “ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள் - One is not born a woman; but becomes one” என சிமோன் டீ பூவா கூறி ஓர் உதாரணத்தையும் கூறுகிறார். “ பெண்பிள்ளை மரமேரக்கூடாது கூறும் பெற்றோர் ஆண்பிள்ளைக்கு அதனைச் செய்ய அனுமதிக்கின்றனர்” என்கிறார்.
இவ்வாறான மாய மந்திரக் கருத்துக்களில் மயங்கிய பெண்கள் தமது சுயத்தையே தொலைத்துவிட்டனர். பெண்நிலைவாதி என்ற தினவெடுக்கினாலும் சில ஆண்களின் சுயநலத்தினனாலும் பெண்கள் இன்று மறைமுகமாகக் கபலீகரம் செய்யப்பட்டு வருகின்றனர். அன்று புரியப்பட்ட உரிமை மறுப்புக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் பெண்கள் எழுந்ததை ஆதரித்தாலும் இன்றைய பெண்ணிய வாதிகளின் செயல்களை அங்கீகரிக்கவே முடியாது ஒரு சமூகத்தின் இருப்பை நிர்ணயம் செய்யும் அடையாளங்களான பண்பாட்டையும் கலாசாரத்தையும் அவமதிக்கின்றனர். மதங்களை பிற்போக்குவாதம் என விமர்சிக்கின்றனர். குடும்ப ஒழுங்குமறைகளை உதறித்தள்ளி வீதிக்கு இறங்குகின்றனர். இதனால் இன்று தற்காலிகத் திருமணம், திருமணமாகாத் தாய்மார், உடன் வாழ்வு (Living together), ஒரு பாதுகாவலர் மட்டும்கொண்ட குழந்தை (Single parent child), தாய், தந்தையர் பெயரறியாத குழந்தை, சிசுக்கொலை, கருக்கலைப்பு என மேற்கு நாடுகளில் மோசமான முறையில் கலாசார சிரழிவுகள் அரங்கேறிக்கொண்டிப்பதைக் காணமுடிகின்றது.
அதுமட்டுமன்றி இப்பெண்நிலைவாதிகள் ஒருபடி மேலேறி ஒருபால் புணர்ச்சியையும் (Lesbians) ஆதரிக்கின்றனர். 1970 களில் அமெரிக்கப் பெண்ணியம் பெண் ஓரினப்புணர்ச்சியை முழக்கமாக முன்வைத்தது. இவ்வாறான கட்டற்ற பாலியல் சீர்கேட்டைத்தான் அறிஞர் முஹம்மத் அல்-குதுப் அவர்கள் “இன்றைய பெண்கள் தம்முடல்களை மற்றவர்களுக்கு அர்ப்பணித்துவிட்டு தாம் சுதந்திரப் பறவைகளென நினைக்கின்றனர். ஆனால் இவர்கள் சுதந்திரத்தை அர்ப்பணித்துவிட்டு முன்னேய அடிமைத்தனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நவீன அடிமைக்கூடமே!” என்கிறார். ஆக பெண்களை வேலைத்தலங்களில் கொத்தடிமைகளாக, கவர்ச்சியூட்டும் காட்சிப்பொருளாக, சுகம்தரும் போகப் பொருளாக மாற்றுவதே இன்றைய பெண்ணியத்தின் மறைமுகமான நோக்கம்.
1 comments:
fathima.....
sirantha article.....
ungal muyatchi menmealum thodarattum
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...