இன்று பூவுலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவாலாக புவி வெப்பமடைதல் மற்றும் ஓசோன் படையின் தேய்வு என்பன பரவலாகப் பேசப்படுகின்றன. இவற்றை நிவர்த்திக்கும் அல்லது சமாளிக்கும் வகையில் விஞ்ஞானிகளது சிந்தனைக்குப் புலப்பட்ட ஒரு மாற்று வழிமுறைதான் புவிப் பொறியியல் ஆகும். இலத்திரனியல் பொறியியல், தகவல் தொழில் நுட்பம், கணினி மென்பொருள், சிவில், மெக்கானிகல் என்றெல்லாம் பல பொறியியற் கற்கைகள் இருக்கின்றன. அவற்றோடு மற்றொன்றாகத்தான் தற்போது இந்த புவிப் பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் அந்த அளவிற்கு வளர்ச்சியடையாத ஒரு பொறியியற் துறையே இப்புவிப் பொறியியலாகும். இதனை ஆங்கிளத்தில் Geoengineering என அழைக்கின்றனர்.
கைத்தொழிற் புரட்சியின் விளைவாக இன்று மனிதனால் கட்டுப்பாடற்ற முறையில் காபனீரொட்சைட் வாயு வெளியேற்றப்பட்டு வருகின்றது. அத்தோடு நகரமயமாக்கல், விவசாய உற்பத்தி என்ற காரணங்களுக்காக துரித கதியில் காடளிப்புக்களும் நிகழ்ந்து வருகின்றமையால் குறித்த வாயுக்களை சுத்திகரிப்பதற்கான தாவரங்களின் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. எனவே புவியில் தேங்கிக்கிடக்கும் காபனீரொட்சைட்டுகளின் வீதம் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் புவியின் வெப்பம் இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் கழந்திருந்த காபனின் அளவு 180 ppm (parts per million) ஆகும். ஆனால் இன்று 392ppm ஆக வளிமண்லத்திலுள்ள காபனின் அளவு அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை பெரும் ஆபத்தை எதிர்காலத்தில் விளைவிக்கும். கடந்த 65,000 ஆண்டுகளில் என்றுமில்லாதவாறு காபனின் அளவு அண்மைக்காலமாக எகிரிச் சென்றுள்ளமை துல்லியமாக அவதானிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007ஆம் ஆண்டில் ஒரு எச்சரிக்கை விடுத்தது. காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களில் தற்போதைவிட அதிகரித்திருக்கும் என்பதே அவ் எச்சரிக்கையாகும்.
மேலும் உலகளாவிய காலநிலை பற்றிய ஆய்வொன்றை மெற்கொண்ட ‘அட்லெண்டிக் கவுன்சில்’ என்ற அமைப்பின் 250 விஞ்ஞானிகள் சுமார் 4 வருடங்கள் தீவிரமாக ஆராய்ந்ததன் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் “புவியின் ஏனைய பகுதிகளை விட வடதுருவம் இரு மடங்கு அதிகமாக வெப்பமடைந்து வருகிறது. இதனால் 20% ஆன பனிக்கட்டிகள் இப்போதைக்கு உருகிவிட்டன. 2100 ஆம் ஆண்டாகும்போது அங்கு வாழும் துருவக்கரடிகள், கடல்சீல்கள், பென்குயின் பறவைகள் போன்ற உயிரினங்கள் முற்றாக அழிந்து விடும். அது மட்டுமன்றி துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் உருகி மத்திய பகுதிகளை நோக்கி வடிவதனால் இப்பகுதியிலுள்ள கடல் நீரின் மட்டம் அதிகரித்து புவியின் பெரும் பகுதி கடலினால் காவு கொள்ளப்படும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்தோடு உயிர்ப்பல்வகைமையின் அழிவு தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழுவும் ஜேர்மனிய அரசும் மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வுகளின்படி இவ் உயிர்ப்பல்வகைமையின் இழப்பு தொடருமாயின் 2050 ஆம் ஆண்டாகும்போது உலகம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏழு சதவிகிதமான அளவு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டுகின்றது.
காலநிலை குறித்து ஆராய்வதற்காகவும் விழிப்பூட்டுவதற்காகவும் பல்வேறு மாநாடுகள் கூடப்படுவதும் முடிவுகள் எட்டப்படாத நிலையில் கழைந்து செல்வதுமே இன்றைய நாட்களில் தொடர்கதையாக மாறியுள்ளது. இதற்கு வளர்முக, மேற்குலக நாடுகளின் சுய நலமும் பேராசையும் மற்றுமொரு காரணமாகும். நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகின்ற விஞ்ஞான தொலில்நுட்ப ரீதியான போட்டி, அதோடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான போராட்டம் என்பனவும் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றன. கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளை ஏற்பாடுசெய்து கூடி, புவி வெப்பமடைதல் பற்றியும் காலநிலை மாற்றம் குறித்தும் மிக மும்முரமாக அளவளாவுகின்றனர். ஆனால் அப்பேச்சுக்களின் இறுதியில் எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவுகளும் அடையப்பெறவில்லை என்பதே நிதர்சனம்.
மாநாடுகள் கூடி அதிகூடிய அளவில் சூழலுக்குக் காபனை வெளியிடும் நாடுகள் பட்டியலிடப்பட்டு பின்னர் குறித்த காலத்துக்குள் தற்போது வெளியிடப்படும் அளவில் கனிசமானளவு காபனீரொட்சைட் வாயு மற்றும் ஏனைய பச்சைவீட்டு வாயுக்களைக் குறைக்க வேண்டும் என ஒரு உடன்படிக்கை கைச்சாத்தானது. வளர்ச்சியடைந்த நாடுகளே காபனீரொட்சைட்டு வாயுவை அதிகமாக சூழலகப்படுத்துகின்றன. குறிப்பாக உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் உள்ள அமெரிக்காதான் உலகின் 25 வீத காபனை வெளியிடுகின்றது. அமெரிக்காவோ உடன்படிக்கையின் பின்னர் அதிலிருந்து மெதுவாக நழுவிக்கொண்டது.
புவிவெப்பமடைதலைத் தடுக்க செய்யவேண்டியதெல்லாம் ஒன்;று காபனீரொட்சைட் வெளியிடப்படுவதைக் குறைக்கவேண்டும். அதற்கு காபனை வெளியிடும் தொழிற்சாலைகள், வாகனங்கள் முதலியவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். இது உண்மையில் அசாத்தியமானவொன்று. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் என்பதால் எந்த நாடும் தமது உற்பத்தியைக் குறைப்பதில் உடன்படுவதில்லை. இரண்டாவது வழிமண்டலத்தில் காபன் வெளியிடப்படும் விகிதாசாரத்தை ஒவ்வொரு நாடும் குறைத்துக்கொள்ளவேண்டும். இதுவும் தமது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் வளர்முக நாடுகள் இதற்கும் ஒத்துக்கொள்வில்லை.
இவ்வாறு செய்தால்கூட வருடத்திற்கு 1 டிரில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படும். இந்த இரண்டு வழிமுறைகளும் தமக்குப் பாதகமாக உள்ள காரணத்தினால்தான் மேற்கூறிய மாநாடுகளும் உடன்படிக்கைகளும்கூட தோல்வியில் முடிவடைந்தன. எனவே யாருக்கும் பிரச்சினையில்லாத மூன்றாவது ஒரு வழிமுறை பற்றி சிந்திப்பதன்பால் கவனம்குவிக்கப்படட்டது. அதன் விளைவுதான் புவிப்பொறியியல் என்ற புதியதொரு வழிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.
புவிப்பொறியியல் மூலமாக செய்யப்படவிருக்கும் வேளை என்னவென்றால் ‘காபனீரொட்சைட்டு வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்துதல்’ என்ற முடிவை விட்டுவிட்டு எவ்வளவு காபன் சூழலுக்கு விடப்பட்டாலும் அவற்றை இரண்டு வழிகளில் நிவர்த்திக்க உள்ளனர். ஒன்று பூமியை வந்தடையும் சூரிய ஒளியைத் தடுப்பதனூடாக காபனினால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுத்தல். மற்றையது வெளியப்பட்ட காபனை வளிமண்டலத்திலிருந்து வடிகட்டி எடுத்துவிடுவது. இவ்வழிமுறைகளால் நாடுகளின் வளர்ச்சிக்கோ, உள்நாட்டு உற்பத்திக்கோ எந்தப்; பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதுதான் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.
பல வழிகளில் இப்புவிப் பொறியியலின் அமுலாக்கம் குறித்து கருத்துரைக்கப்படுகின்றது. தற்போது சூரியனிலிருந்து வரும் ஒளியை 2 வீதத்தால் குறைத்துவிட்டாலே பழைய நிலைக்கு எமது பூமியின் வெப்பநிலையை மாற்றிவிட முடியும். சூரியனின் நேரடி ஒளிவருகையைக் குறைப்பதற்காக வானத்தில் பெரிய மேகக் கூட்டங்களை உருவாக்குதல் ஒரு வழிமுறை. கடலின் பல பகுதிகளில் 400 கப்பல்களின் உதவியுடன் பெரிய புரொப்பெல்லர்களின் மூலம் கடல் நிலத்துகள்களைத் தொடர்ந்தும் வானிற்கு விடுவதால் அவை வளிமண்டலத்தில் கலந்து பெரும் மேகக் கூட்டங்களாக மாறிவிடும். எனவே சூரிய ஒளியின் வருகையைக் குறைத்துவிடலாம்.
மற்றுமொரு வகையில் இரண்டு கி.மீ. நீளமுள்ள பாரிய குலல்களை (துப்பாக்கிகளை) உயர்ந்த மலைகளில், உயர் மாடிக் கட்டிடங்களில் நிறுவி ஒவ்வொரு துப்பாக்கி மூலமும் நிமிடத்திற்கு எட்டு இலட்சம் சிறிய தகடுகளை வானில் செலுத்தவேண்டும். இவ்வாறு நாள் முழுவதும் 10 வருடங்களுக்குத் தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் இத்தகடுகளை அந்தரத்தில் மிதக்க விடமுடியும். இதனால் இவை பூமிக்குக் குடைபோன்று நிழல்தரும்.
இன்னும் நிறைய விமானங்களின் உதவியுடன் கந்தகத் துகள்களை வானில் தூவிவிடுவது. இத்துகள்கள் பூமியை வந்தடையும் சூரிய ஒளியை மீண்டும் விண்ணுக்கே திருப்பி அனுப்பிவிடும். பகல்வேளைகளில் கூட வானத்தைப் பார்த்தால் நீல நிறத்திலல்லாமல் வெண்மையான மேகக் கூட்டங்காளல் வானம் காட்சியளிக்கும். இவ்வாறு சூரியனிலிருந்து பூமியை வந்தடையும் வெப்பக் கதிர்களைத் தடுப்பதற்காக பல வழிகள் கூறப்படுகின்றன.
வெப்பத்தைத் தடுத்தாயிற்று. தற்போது பூமியில் நிறைந்துள்ள காபனீரொட்சைட்டுகளை வடிகட்டி எடுப்பதற்கான வழிகளையும் விஞ்ஞர்னிகள் யோசித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறும் ஒரு முறை, கடலில் பிளாங்டன் என்றொருவகை உயிரினம் வாழ்கின்றது. இவை அதிகளவில் காபனீரொட்சைட்டை உறிஞ்சிக்கொள்கின்றன. எனவே இவ்வகை உயிரினங்களைப் பெருக்குவதற்கான வழிகளை மேற்கொள்ளல். பிளாங்டன் வகை உயிரினங்கள் வளர்வதற்கு இரும்புச் சக்தி தேவை என்பதால் இரும்புத்துகள்களை கடலிலும் அவை வாழும் இடங்களிலும் தூவிவிடுவதன் மூலம் இவற்றின் இனத்தைப் பெருக்கிவிடலாம் என்கின்றனர். இவ்வாறுதான் புவிப்பொறியியலின் மூலம் செய்யவிருக்கின்றனர்.
புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்குள்ள மிகச் சறந்த வழிமுறை மனிதன் வெளியிடும் காபனீரொட்சைட்டின் அளவைக் குறைப்பதும் இயற்கைக்கு இயைந்தாற்போல் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்வதும்தான். ஆனாhல் பல நாடுகளும் காபனின் அளவைக் குறைப்பதில் உடன் படவில்லை. இயற்கைக்கு இயைந்த தொழில்நுட்பத்தை ஆரம்பிப்பதன் விளைவாகத்தான் Green Technology அறிமுகமாகியுள்ளது. காபனின் அளவைக் கட்டுப்படுத்;தாமல் என்ன பச்சைத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை வேலைக்காகாது. அதனால்தான் மாற்றுவழியாக புவிப்பொறியியல் பற்றிய சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் இது நடைமுறைச் சாத்தியமானதுதானா? இயற்கையை நமக்குச் சாதாகமாக மாற்றியமைக்கும் போது அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. எனவே காலநிலையில் மனிதன் கைவைப்பதால் இயற்கையின் சீற்றம் இன்னும் அதிகரிக்குமா? என பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துவருகின்றன. பெரும்பாலான அறிவியல் வல்லுனர்களும் விஞ்ஞானிகளும் இம்முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பாரதூரம் பற்றிய முழுமையான விளக்கமின்றி இதனைச் செய்யக் கூடாது, கைவிடவேண்டும் என்றே அவர்கள் கூறுகின்றார்கள்.
வளர்முக நாடுகள் இதில் அக்கறைகொள்ளக் காரணம் ஒன்று காபனீரொட்சைட்டின் வெளியேற்றத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாததால் தமது நாட்டு உற்பத்திகளை இன்னும் பெருக்கிக்கொள்ள முடியும். காபனீரொட்சைட்டைத் தடுப்பதற்காக புவிப்பொறியியலின் வழிமுறைகளைச் செய்துகொள்ளலாம். இதற்கு செலவும் குறைவு. மற்றையது அனைத்து நாடுகளும் இதில் பங்குகொள்ள வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு நாடும் தமது விருப்பத்திற்கேற்ப செய்துகொள் முடியும். அரசாங்கம்தான் செய்யவேண்டுமென்பதுமில்லை. தனியார் நிறுவனங்களும் இதனைச் செய்துகொள்ள முடியும் என்று இதனை முன்வைப்பவர்கள் கூறுகின்றனர்.
அத்தோடு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அமைப்புகள் இக்கருத்துக்களை ஆதரித்து வருகின்றனர். அறிவியல் ஆய்வுகளுக்கு நிதியுதவி அளிக்கும் அரச, அரச சார்பற்ற நிருவனங்கள் இதனை ஊக்குவிக்கன்றனர். இவர்களின் அதிகமானவர்கள் தமது சுயநலத்திற்காக புவி வெப்பமடைதல் என்பது உண்மையில்லை என்று வாதிட்டவர்களாவர். புவி வெப்பமடைதல் என்ற அறிக்கைகளுக்;கு எதிராக ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்களுக்கு பல பரிசுத்தொகைகளை வழங்கியவர்களே தற்போது புவிப் பொறியியலுக்கு ஊக்கமளிக்கின்றனர். காரணம் இது அவர்களுக்கு சார்பாக உள்ளதாலாகும்.
புவிப் பொறியியல் என்பது இன்னும் ஆய்வு முடிவாகவே உள்ளது. எங்கும் பரீட்சித்துப் பார்த்ததாக அறியப்படவில்லை. என்ன நடக்கும் என்று பொருத்திருந்து பார்க்கவும் முடியாது. வெள்ளம் வந்தபின் அணைகட்டி என்ன பயன்? எனவே வளர்ந்த நாடுகளும், ஆராய்ச்சியாளர்களும்தான் தமுது சுயநலத்தைப் பார்க்காது இதுபற்றிய தெளிவான ஆய்வு முடிவுகளை முன்வைத்தாகவேண்டும்.
குறிப்பு : December 1-14, 2011 எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...