அல்லாஹ்வின் படைப்புகளில்
முக்கியமானதும் சிக்கலானதும் கடினமானதுமான படைப்பு என்றால் அது வானம்தான். மனிதனைப்
படைப்பதைவிடவும் இது ஒரு படிமேல் என அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். “நிச்சயமாக வானங்களையும்
பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும். எனினும் மனிதர்களில்
அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.” (40:57) மற்றுமோர் வசனத்தில் “வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் படைக்கச் சக்திபெற்றவனாக
இல்லையா? ஆம் அவன் மிகப் பெரிய
படைப்பாளன், யாவற்றையும் அறிந்தவன்.” (36:81) இவ்வாறு முதலாவதாகவே
அல்லாஹ் வானத்தின் படைப்பு பற்றி விளக்குகின்றான்.
பகல் பொழுதுகளில் வானத்தின்
பால் அன்னார்ந்து பார்வையைச் செழுத்தினால் அது நீல நிறத்தில் விசாலமான அமைப்பில் அழகாகக்
காட்சியளித்துக்கொண்டிருக்கும். இடைக்கிடையே தூரிகையால் தீட்டிவிட்டது போன்று மேகங்களும்
வானை அழகு படுத்தும். அதேபோன்று இராக்காலங்களில் கருமை நிறத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுடனும்
பிரகாசமான நிலாவுடனும் பார்ப்பவர்களைப் பரவசமூட்டிக்கொண்டு வானம் காட்சியளிக்கும்.
அல்லாஹ்வின் படைப்புகள் ஒவ்வொன்றிலும்
அவனது இருப்புக்கான அத்தாட்சிகள் ஏறாலமாக இருப்பது போன்று எமது பார்வையில் பெரும்பகுதியை
ஈர்த்தெடுக்கும் வானத்திலும் அறிவுடையவர்களுக்குப் பல அத்தாட்சிகள் இருப்பதாக அல்லாஹ்
கூறுகின்றான்.
“நிச்சயமாக இரவு மற்றும் பகலிலும் வானங்கள், பூமியிலும் அல்லாஹ்வின்
அனைத்துப் படைப்புகளிலும் பயபக்கதியுள்ள மக்களுக்கு நிரைய அத்தாட்சிகள் இருக்கின்றன.” (10:6)
ஆரம்பகால மக்கள் இப்பூமி தட்டையானதெனவும்
அதன் இருமருங்கிளும் உயராமான பாரிய மலைகள் இருப்பதாகவும் அம்மலைகள்தான் வானத்தைத் தாங்கியிருப்பதாகவும்
அவை வானத்தின் தூன்களாகத் தொழிற்படுவதாகவும் நம்பிவந்தனர். ஆனால் பிற்பட்ட கால அறிவியல்
வளர்ச்சி அந்நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டு வானம் என்பது தூண்கள் ஏதுமின்றி நிரந்தரமாக
நின்றிருப்பவை என்பதை அறிந்துகொண்டது. இது குறித்து அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பு
முன்வைத்த விஞ்ஞான ரீதியான கருத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
“அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்கள்
பார்க்கின்றீர்கள்” மற்றுமொரு வசனத்தில்
“அல்லாஹ்தான் வானங்களைத்
தூண்களின்றி உயர்த்தி வைத்துள்ளான். அதனை நீங்கள் பார்க்கின்றீர்கள்…” (13:2)
சடரீதியான, திண்ம வடிவிலான தூண்கள்
இல்லாவிடினும் எமது கண்களால் பார்க்க முடியாத விதத்தில் அல்லாஹ் வானம் பூமிக்கு மத்தியில்
தூண்களை இறுத்தியுள்ளான். எனவே அவை ஒன்றை விட்டு ஒன்று விலகிடா வண்ணம் இருப்பதாகவும்
அல்லாஹ் மற்றுமொரு திருறை வசனத்தில் கூறுகின்றான்.
“நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிடாதவாறு அல்லாஹ்வே
தடுத்துக்கொண்டிருக்கின்றான். அவை இரண்டும் விலகுமாயின் பின்னர் வேறெவரும் அவ்விரண்டையும்
தடுத்து நிறுத்த முடியாது.”
(35:41) மற்றுமொரு இடத்தில் “தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் வீழ்ந்துவிடாதவாறு அவன்
தடுத்துக்கொண்டிருக்கின்றான்” (22:65) என்று கூறுகின்றான்.
“நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான்”(31:10) இங்கு கண்களால் காண
முடியாத தூண்கள் என்று கூறப்பட்டிருப்பது வானம், பூமிக்கு இடையிலிருக்கும் ஈர்ப்பு விசைதான் என சமகால
அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். கோள்கள், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், பிற விண்பொருட்கள் என
அனைத்தும் ஒரு ஈர்ப்பாற்றலால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பது இன்றைய விண்ணியல் விஞ்ஞானத்தின்
அறிவிப்பு.
அல்குர்ஆன் வானம் என்ற சொல்லை
இரண்டு கருத்துக்களில் பயன்படுத்துகின்றது. ஒன்று எமது பூமியோடு, பூமிக்கு மேலால் அமைந்துள்ளவை
என்றும் மற்றையது முழுப் பிரபஞ்சத்தினதும் எல்லையாக (Border) அமைந்துள்ளவை என்றும்
பொருள்படும். இவை இரண்டையும் “ஸமாஉன்” என்ற பதம் மூலம் வானம் என்ற கருத்திலேயே அல்குர்ஆன் பயன்படுத்துகின்றது.
அல்லாஹ் இப் பிரபஞ்சத்தைப்
படைக்கையில் வானங்களை ஏழாகப் படைத்தான் என அல்குர்ஆன் கூறுகின்றது. ஏழாகப் படைத்தான்
என்ற இவ்விடயம் அல்குர்ஆனில் மொத்தம் 24 இடங்களில் இடம்பெற்றுள்ளது. அந்தளவு ஒரு முக்கியத்துவத்தை அல்லாஹ்
இது விடயத்தில் செலுத்தியிருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்.
“அவன் வானத்தைப் படைக்க நாடி, அதனை ஏழு வானங்களாக அமைத்தான்.”(2:29) “அல்லாஹ் ஏழு வானங்களையும்
அடுக்கடுக்காக எவ்வாறு படைத்திருக்கின்றான் என்று நீங்கள் பார்க்கவில்லையா? (71:15) (78:12) என்றும் கேட்கின்றான்.
இவ்வுண்மை 20ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட
விஞ்ஞான ஆய்வுகளுடாக நிருபிக்கப்பட்டது. 21ம் அத்தியாயதம் 32ம் வசனத்தில் அல்லாஹ் வானத்தைப் பாதுகாப்பான முகடாக அமைத்திருப்பதாகக்
கூறுகின்றான். எமது பூமியில் உயிர்வாழ்க்கைக்கு வளிமண்டலம் மிகப் பிரதானமானது. இவ்
வளிமண்டம் திட்டமான ஏழு படைகளைக்கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ள விடயம். வளிமண்டலத்தில்
இவ் ஏழு படைகளையும் அல்லாஹ் ஏழு வானங்கள் என்று கூறுவதாகவும் இருக்கலாம்.
1. பூமியிலிருந்து அண்மையிலும்
தரையிலிருந்து 15 கி.மீ. வரையில் அமைந்துள்ள
மாறன் மண்டலம் (Troposphere)
பூமியிலிருந்து ஆவியாகிச்
செல்லும் நீரை வெளியே செல்லாது தடுத்து நிறுத்தி மீண்டும் பூமிக்கே மழையாகப் பொழிய
வைக்கின்றது.
2. அதனைத் தொடர்ந்து
படை மண்டலம் (Stratosphere) காணப்படுகின்றது. இதன் ஒரு பகுதிதான் ஓசோன் மண்டலம் (Ozonosphere). இது பூமியிலிருந்து
25 கி.மி. உயரத்தில்
காணப்படுகிறது. ஓசோன் படையானது சூரியனிலிருந்து
வரும் புற ஊதாக் கதிர்கள் போன்ற பாதகமான நச்சுக் கதிர்களைப் பூமியினுள் வரவிடாது திருப்பி
விண்வெளிக்கே அனுப்பி விடுகின்றது.
3. இதனை அடுத்து இடைமண்டலம்
(Mesosphere) காணப்படுகின்றது.
4. பின்னர் வெப்ப மண்டலம்
(Thermosphere) அமைந்துள்ளது.
5. தொடர்ந்து Exosphere உள்ளது.
6. அடுத்து அயன மண்டமல்
(Ionosphere) காணப்படுகின்றது.
இது பூமியிலிருந்து ஒலி, ஒளி பரப்பப்படும்
ஒலி, ஒளி அலைகளை பூமியின்
பல பாகங்களுக்கும் தெரிப்படையச் செய்கின்றது.
7. வளிமண்டலத்தின் இறுதிப்
படையாக புறமண்டலம் (Magnetosphere) காணப்படுகின்றது.
இது ஏறத்தாழ 480 கி.மீ. முதல் 960 கி.மீ வரை விரிந்து
காணப்படும். இதுவே மிகப்பெரிய மண்டலமாகும்.
இந்த ஏழு படைகள் மாத்திரமன்றி
பூமிக்கு மேலாலுள்ள பூமியின் காந்தப் புலம் காரணமாக உருவாகும் வான் எலன் வலையம் (Van Allen radiation belt) என்றொரு பகுதியும் காணப்படுகின்றது. இது சூரியன்
மற்றும் பிற உடுக்களிலிருந்து வீசும் வெப்பப் புயற்காற்றுகளிலிருந்து பூமியைப் பாதுகாக்கின்றது.
இவ்வாறு பூமியின் வளிமண்டலம்
பல்வேறு படைகளைக்கொண்டு செயற்படுகின்றது. ஒவ்வொரு படையும் ஒவ்வொருவிதமான தொழிலைச் செய்கின்றது.
மேற்கூறிய படைகளது செயற்பாடுகளைப் பின்வரும் அல்குர்ஆனிய வசனம் சுருக்கமாகவும் விளக்கமாகவும்
கூறுவதைப் பாருங்கள். “தெரிப்படையச் செய்யும்
வானத்தின் மீது சத்தியமாக”
(86:11) மற்றுமொரு வசனம் ஏழு வானங்கள் பற்றியும் அவை ஒவ்வொன்றுக்கும் குறித்த தொழில்களை அல்லாஹ் வழங்கியிருப்பதாகவும்
குறிப்பிடுகின்றது.
“இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் படைத்தான். பின்னர்
ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமைகளை இன்னதென்று அறிவித்தான்…” (41:12) என்கின்றது.
ஒருவகையில் வானம் என்று வளிமண்டலத்தின்
இப்படைகளை எடுத்தாலும் மேலும் சில அல்குர்ஆனிய வசனங்களை ஆராயும்போது அவை வானம் என்பது
முழுப் பிரபஞ்சத்தினதுமானது என்ற கருத்தையும் தருகின்றது.
“நிச்சயமாக நாம் (பூமிக்கு) அண்மையில் உள்ள வானத்தை நட்சத்திரங்களின்
அழகைக்கொண்டு அலங்கரித்தோம்” (37:6) (41:12)
இங்கு அண்மையில் உள்ள வானம்
நட்சத்திரங்களைக்கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அப்படியாயின்
பூமிக்குத் தொலைவிலும் வானங்கள் இருக்கவேண்டும். மேலும் பின்வரும் வசனம்
“மலக்குகளும் (ஜிப்ரீலாகிய)
அவ் ஆன்மாவும் ஒரு நாளில் அல்லாஹ்விடத்தில் ஏறிச் செல்வார்கள். அத்தினத்தின் அளவு 50,000 ஆண்டுகளுக்குச் சமனாக
இருக்கும்” (70:4)
என்கின்றது. மேலே
பார்த்த படைகளைத் தாண்டிச் செல்ல இத்தனை ஆண்டுகள் செல்வதில்லை. ஏனெனில் இன்று மனிதனே
ஆறு, ஏழு மாதங்களில் விண்வெளிக்குச்
செல்கின்றான். எனவே வானம் என்று முழுப் பிரபஞ்சத்தினதும் எல்லைகளையும் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பதை
விழங்க முடியும்.
அதேபோன்று எமது பூமியின் வளிமண்டலத்தின்
எல்லையை ஒரு வானமாகவும் சூரியக் குடும்பத்தின் எல்லையை ஒரு வானமாகவும் எமது பால்வெளி
மண்டலத்தை மற்றுமொரு வானமாகவும் பிரபஞ்சத்தின் எல்லையை ஒரு வானமாகவும் இவ்வாறு பல படித்தரங்களை
நோக்கும்போது அவற்றையும் வானமாகக் குறிப்பிடலாம். அதனால்தான் அல்லாஹ் மனிதர்களையும்
ஜின்களையும் பார்த்து இவ்வாறு கூறுகின்றான் போலும்.
“ஜின், மனித கூட்டத்தாரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள்
சக்தி பெற்றால் அவ்வாறே செல்லுங்கள்.” (55:33) என்கின்றது.
எது எப்படியோ அல்லாஹ் இப்பூமிப்
பந்தில் உயிர் வாழ்க்கை சிறப்புற்றிருக்க வேண்டுமென்பதற்காக அழகாகவும் பாதுகாப்பாகவும்
எமக்குக் கூரைபோன்று இவ் வானத்தைப் படைத்துத் தந்துள்ளான். எந்தக் கோனலும், பிழையும், வெடிப்புகளுமற்ற வானம்
பற்றி ஆராய்ந்தால் அங்கே இறை இறுப்பை உணர்ந்துகொள்ளலாம்.
“அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான். (ஏ மனிதா!)
அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீ காணமாட்டாய். (நீ ஒரு முறை) உன் பார்வையை மீட்டிப்பார்.
(அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவையாவது நீ காண்கிறாயா? பின்னர் (திரும்பவும்
திரும்பவும்) இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார். உன் பார்வைதான் களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து
உன்னிடமே திரும்பிவிடும்.”
(67:4)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...