யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா இல்லை கிறித்துவ அப்போஸ்தலர்களின் வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம். இவற்றைக் குறித்து பொதுவில் கிறிஸ்தவ விமர்சகர்களிடம் இருக்கும் ஊகங்கள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவற்றை ஒரு முற்றிலும் புதிய விதமான கற்பனையுடன் கலந்து சொன்ன விதம் மிகச் சுவாரசியமானது. படத்தில் குறியீடாக எதையும் சொல்லவில்லை, பட்டவர்த்தனமாக தெளிவாக சில விஷயங்களைப் பேசுகிறது. நாம் கற்பனையால் நிரப்பிப் புரிந்து கொள்ள வேண்டியது என எதுவும் இல்லை. எனவே இது படத்தைக் குறித்தான விமர்சனமோ, அலசலோ அல்ல. படம் குறித்தான அறிமுகம் மட்டுமே. இதன் நோக்கம் வாசகர்களைப் படத்தைப் பார்க்கத் தூண்டவும், அதன்வழி படம் பேசும் முக்கியமான கருத்துக்களைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுரீதியான ஆர்வத்தைத் ஏற்படுத்துவதும், வெற்று நம்பிக்கையை உதறி தர்க்கப் பூர்வமாக சிந்திக்கச் செய்வதுமே.
விடைபெற்றுச் செல்லும் ஒரு கல்லூரிப் பேராசிரியரை (ஜான்) வாழ்த்தி வழியனுப்ப அவர் வீட்டிற்கு வரும் சக பேராசிரிய நண்பர்களுடன் படம் துவங்குகிறது. ஒரு வரலாற்றாய்வாளர், ஒரு உயிரியல் பேராசிரியர், ஒரு மானிடவியலாளர், ஒரு தொல்லியலாளர், ஒரு உளவியல் நிபுணர் என நல்ல கலவையான நண்பர் கூட்டம் அது.
எந்தத் தேவையுமில்லாமல் எதற்கு திடீரென்று பணியில் இருந்து விலகிச்செல்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் நண்பர்கள். ஆரம்ப தயக்கத்திற்குப் பிறகு, தான் 14000
ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மனிதன் என்றும், பத்து வருடங்களுக்கு மேல் ஒரு ஊரில் இருந்தால் வயதான மாற்றமே தெரியாமல் இருக்கும் தன்னை மக்கள் சந்தேகப்படுவார்கள் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பதாகவும் ஜான் சொல்கிறார். குகை மனிதனில் இருந்து, சுமேரியனாக, இந்தியாவில் புத்தரின் மாணவராக, ஐரோப்பாவில், அமெரிக்காவில் என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தான் எப்படி எல்லாம் வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார். முதலில் கிண்டல் செய்து அதை வேடிக்கையாக்கிக் கொள்ள முயல்கிறார்கள் நண்பர்கள். ஜான் நிதானமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல் தொனி மாறுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் இருந்து அவரைக் கேள்வி கேட்கிறார்கள். அவர் சொல்லும் பதில்களை தங்கள் துறை சார்ந்த தகவல்களுடன் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். ஆனாலும் நம்பிக்கையில்லை.
சட்டென்று உரையாடல் மதம் பற்றித் திரும்புகிறது. நமது மதத்தின் ஆளுமைகளில் யாரையாவது தெரியுமா என்று ஒரு நண்பர் கேட்கிறார். ஜான், ‘ஒருவகையில்..ஆம்’ என்கிறார். உரையாடல் நீள்கிறது… “மோசஸ்?” ‘அது மிஸிஸ் என்னும் சிரியாவின் தொண்மம் கிறிஸ்தவத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பும் பல வகைகளில் அந்தத் தொண்மம் இருந்தது. அவர் வரலாற்றில் இருந்தவரல்ல’.
“அப்போஸ்தலர்கள் உண்மையில் எதையும் மக்களுக்கு போதிக்கவில்லை, புதிய ஏற்பாடு ரொம்ப எளிமையானது, மிஞ்சிப்போனால் 100
வார்த்தைகள் அவ்வளவு தான், அப்போஸ்தல்ர்களும் பின்வந்தவர்களும் அவர்கள் தேவைக்காக அதில் கட்டிவைத்த கதைகள் தான் மற்ற எல்லாமும்” என்கிறார்.
நண்பர் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண், கிறித்தவ நம்பிக்கையாளர் மனம் புண்படுகிறார். மற்ற நண்பர்கள் அவரைச் சமாதானப்படுத்தி ஜானை மேலும் கேள்வி கேட்கிறார்கள். ஜான் சொல்கிறார், “புத்தரிடம் பயின்ற பின்பு, அதையே சிந்தித்துக் கொண்டிருந்தேன் சுமார் ஐநூறு ஆண்டுகள்… அப்புறம் மத்திய தரைக்கடல் பகுதிக்கு வந்தேன். Etruscan ஆக வாழ்ந்தேன் அப்படியே ரோமப் பேரரசின் குடிமகனானேன். பெரிய கொலை எந்திரமாக மாறிய அதன் போக்கு பிடிக்காமல் கொஞ்சம் தள்ளி கிழக்காகப் போனேன். புத்தரின் போதனைகள கொஞ்சம் காலத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றிச் சொன்னால் என்ன என்று தோன்றியது. சொன்னேன். ரோமை எதிர்த்து வாழ முடியுமா? ரோம் வென்றது. அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு… அதவாது ஏராளமான கற்பனைகளுக்கு நடுவில் கொஞ்சம் வரலாறு”.
நண்பர்கள் அமைதியாகிறார்கள். கிறிஸ்த நம்பிக்கையாள பெண் தர்ந்து போகிறார். மற்றவர்கள், சிலுவையில் அறைந்தது, உயிர்த்தெழுந்தது, ஜீசஸ் என்கிற பெயர் என்று ஒவ்வொன்றைக் குறித்தும் கேட்கிறார்கள். “என் கையில் ஆனியடித்த தழும்பைத் தேடாதீர்கள். அதெல்லாம் அழுத்தமான சுவாரசியத்திற்காக ஜோடிக்கப்பட்டது. என் கைகளைக் கட்டியிருந்தார்கள் அவ்வளவுதான். திபெத்திலும், இந்தியாவிலும் வலியை உணராதிருக்கவும், உடல் உறுப்பின் செயல்பாடுகளை வெளியிலிருந்து உணரமுடியாதவாறு கிட்டத்தட்ட நிறுத்தும் அளவிற்கு மந்தமாக்கவும் பயின்றிருந்தேன். நான் இறந்துவிட்டதாக நம்பினார்கள். சிலுவையில் இருந்து மாற்றி உடலை ஒரு குகையில் கிடத்தினார்கள். உடல் செயல்பாடுகளை மீட்டுக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை விட்டு மெல்ல அகல விரும்பினேன். குகை வாசலில் இருந்த ‘பக்தர்கள்’ பார்த்து உணர்ச்சிவசப்பட்டு என்னை ‘உயிர்தெழும்பிய கடவுளாக்கி’விட்டார்கள். சொல்லிப் புரியவைக்க முடியவில்லை, அங்கிருந்து மத்திய ஐரோப்பா நோக்கி வந்துவிட்டேன்.”
இந்த உரையாடலே படத்தின் பெரும்பகுதியை நிரப்புகிறது. இடைஇடையே மற்ற நண்பர்கள் சொல்வதாக வரும் கருத்துக்களும் முக்கியமானவை. கிறிஸ்துவின் தொண்மம் ஹெர்குலிஸ், கிருஷ்ணன் வரை பின் செல்கிறது. ஹெர்குலிஸ் அல்க்மெனி என்னும் கன்னிக்குப் பிறந்தவர், ஸீயஸ் என்னும் இறைத் தந்தையின் ஒரே வாரிசு. ரட்சகர். (ஆங்கிலத்தில் சேவியர், கிரேக்கத்தில் சோடர்). இறந்ததும், ஒலிம்பஸ் மலையில் தனது இறைத்தந்தையுடன் இணைந்தார். பிற்காலத்தில் யேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின இரவு ஜெருசலேமின் கெத்செமான் தோட்டத்தில் தனது இறைத்தந்தையை பிரார்த்தனை செய்தார் என்கிற தொண்மத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். புத்தரின் போதனைகளான அன்பு, காருண்யம், சகிப்புத் தன்மை ஆகியவற்றின் மலிவான சாயல்களே கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு இடத்தில் ஜான் சொல்கிறார், “நான் என் பெயரை எப்போதும் ஜான் என்று தான் வைத்துக் கொள்கிறேன். ‘உயிர்த்தெழுதல்’ பரவிய பிறகு யோஹனன் (கடவுள் கருணையானவன்) என்ற ஹீப்ரு சொல்லுடன் என் பெயர் குழம்பியது. அது பிறகு இறவாமையின் சாட்சியாகி, நானே ரட்சகன் என யாஷ்வா (ரட்சகர் கடவுள்) என்ற பெயர் ஆனது. யாஷ்வா கிரேக்கத்தில் ஈசோயஸ் ஆகி, பின்னர் லத்தீனில் ஈசஸ் ஆகி, கடைசியாக ஜீசஸ் ஆகியது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது. நான் இறைவனின் மகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை. எனக்கு என்னைவிடச் சிறந்தவரான ஒரு குரு இருக்கிறார், அவர் சொன்னதைச் சொல்கிறேன் என்று தான் சொன்னேன். ஒருபோதும் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவில்லை, அற்புதங்கள் நிகழ்த்தவில்லை, யூதர்களின் ராஜா என்று கூறிக்கொள்ளவில்லை, சிலருக்கு வைத்தியம் செய்தேன், அது நான் கிழக்கில் கற்றுக் கொண்ட வைத்திய முறைகள். அப்புறம் எல்லாம் வாடிகனின் அபத்தக் கருத்துக்கள் “.
உளவியலாளர், ஜானை சிகிட்சைக்கு வரவேண்டும் என்கிறார். பொய்க் கதைகளால் நண்பர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். அவர் சொன்னதெல்லாம் வெறும் கதை என்று அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார். பிறகு அவரே ஜான் சொன்னவற்றை நம்பும் படியாக ஒரு சுவாரசியத் திருப்பத்துடன் படம் நிறைவடைகிறது.
ஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது. இவர்களின் உரையாடல் தான் படமே. சூரியன் அஸ்தமனமாகத் தொடங்கும் ஒரு மாலை வேளையில் உரையாடல் நடக்கிறது. இடையே பீத்தோவனின் புகழ்பெற்ற ஏழாவது சிம்பொனியின் இரண்டாவது கட்ட இசைக்கோர்வை ஒலிக்கிறது. குளிர் ஏற ஏற கனப்பின் வெளிச்சத்திலும், கதகதப்பிலும் உரையாடல் தொடர்கிறது. கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது. சுருக்கமாக வின்னில் இருந்து வந்த தேவகுமாரன் யாரும் அங்கே இல்லை, மண்ணில் இருந்து வந்த சாதாரன மனிதன் தான் என்கிறது ‘The
Man from Earth’ படம். ஒட்டுமொத்த கிருத்துவமே மதவாதிகள் பாகனிய நம்பிக்கைகளில் இருந்து அள்ளிச் சேர்த்த தொண்மங்களை பொய் வரலாற்றால் மேலும் பெருக்கி, நம்பிக்கை, விசுவாசம், நரகம், சொர்க்கம், பாபம், தண்டனை, மீட்பு என மிரட்டிக் கட்டிவைத்தது தான் என்கிறது படம். இந்த அறிமுகக் கட்டுரையில் விவரிக்காமல் விட்டது படத்தில் நிறைய இருக்கிறது.
அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் வெளியான புகழ்பெற்ற அறிவியல் புனைவுத் தொடரான ‘ஸ்டார் ட்ரெக்’கின் பல அத்தியாயங்களை எழுதிய அறிவியல் புனைவு எழுத்தாளர் ஜெரோமி பிக்ஸ்பி எழுதிய கதையை ரிச்சர்ட் ஷென்க்மான் இயக்கியுள்ளார். மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அறிவியல் புனைவு வகையில் ஒரு புதிய அலையையையும், பின்தொடரல்களையும் உருவாக்கிய படம் எனப்படுகிறது. அந்த அளவிற்கு இப்படம் வரவேற்கப்பட்டது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...