அண்மையில் கௌனி, பியகம வோட்ட வேல்ட்
காட்சியகத்திற்கு ஒரு மினி சுற்றுலா செல்லக்கிடைத்தது. அழகழகான கடல்வாழ் மீனினங்களின்
பலதரப்பட்ட மீன் வகைகளை அங்கே தொட்டிகளில் காட்சிப்படுத்தியிருந்தனர். இறைவனின் படைப்புகளின் அழகையும் வணப்பையும் கண்டு பிரம்மித்துப்
போனேன். அவனது படைப்புகளின் வரிசையில் காணக்கிடைத்த ஒரு விநோதமான வித்தியாசமான உயிரினம் தான் ஜெல்லி மீன்கள்.
ஜெல்லி மீன் தொட்டிக்கு அருகாமையில் தொங்கவிடப்பட்டிருந்த விவரணப் பலகையின் வாசகங்கள்தான் இத்தொடரில் ஜெல்லி மீன்கள் பற்றி
என்னை எழுதத் துண்டியது.
ஜெல்லி மீன் “Jellyfish” என ஆங்கிலத்திலும்
“சொறிமுட்டை” என தமிழிலும் அழைக்கப்படுகின்றன.
இவை க்நிடேரிய (Cnidaria)
உயிரினத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். இவை கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமல்லாது கரைப் பகுதிகளிலும் வாழும் தன்மைகொண்டவை. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு
மிக அழகாகத் தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் செய்கின்றன. இதுவரை
2000 க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன் இனங்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளன.
இவை கூடுதலாக கடலின் ஆழத்தில் உலவும் பண்புகொண்டுள்ளதால் இன்னும் ஏராளமான இனங்கள் எமக்குப் புலப்படாமல் இருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள்
ஊகிக்கின்றனர்.
உடலமைப்பு
இதன் உடற் தோற்றம் விசித்திரமாக உள்ளது. தலைப்பகுதி குடை
வடிவத்திலும் அதன் கீழால் கைப்பிடி போன்று நீண்ட வால் பகுதி ஒன்றும் உள்ளது. வால் பகுதியின் நுனியின் ஒரு துளையில் வாயும் மற்றொரு
துளையில் கழிவு நீக்கும் உறுப்பும் அமைந்துள்ளது. குடை போன்று அமைந்துள்ள தலைப் பகுதியின் ஓரம்
எட்டு மடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மடல்களுக்குக் கீழால் உணர்கொம்புகள் (Tentacles) நிறைந்துள்ளன. குடைப்பகுதியின் விளிம்பில் ஏராளமான
குழல் போன்ற நூல்கள் அமைந்துள்ளன. இவை உணவைப் பற்றுவதற்கும் வாயினருகில் கொண்டு செல்வதற்கு உதவுகின்றன.
ஜெல்லி மீன்களுக்கு மூளையோ, இதயமோ, எலும்புகளோ, இரத்தமோ ஏன் கண், காதுகளோ காணப்படுவதில்லை.
இறைவனின் படைப்புகளிலே மிகவும் வித்தியாசமான படைப்பு என்று கூறியது இதனால்தான். அவன் அல் முஸவ்விர், படைப்புகளை அவன் இஷ்டப்படியெல்லாம் படைக்க்க்
கூடிய பேராற்றல் படைத்தவன். ஜெல்லி மீன்களின் மொத்த உடற்பகுதியில்
95% ஆன பகுதி நீராலும் மீதி 5% வீதமும் திடப்பொருளாளும் அமைந்துள்ளது. உடலில் இலையோடியிருக்கும் நரம்புகள் ஒளி, மணம், நீரின் அழுத்தம் மற்றும்
வேறு தூண்டல்களை உணரும் உணர் நரம்புகளாகத் (nerve receptors) தொழிற்படுகின்றன. இவ் உணர் நரம்புகளை வைத்தே இவை
சூழலை அறிந்து உணர்ந்துகொள்கின்றன.
இவற்றின் உடல் ஒளி ஊடுருவக்கூடிய
விதத்தில் அமைந்திருக்கும். எனவே தண்ணீரில் இருந்தாலும் இவை இருப்பதை சிரியாக கவனிக்க முடியாது. இது எதிர் விலங்குகளிடமிருந்து
இவற்றுக்குப் பாதுகாப்பையும் தமது உணவான சிறு மீன்களை இலகுவாகப் பிடித்துண்ண வசதியையும்
ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
ஜெல்லி மீன்கள் பல்வேறு வடிவங்களிலும்
பல்வேறு அளவுகளிலும் பல வண்ணங்களிலும் காணப்படுகின்றன.
இவற்றின் அளவுப் பிரமானம் சில மீன்கள் ஒரு சென்றி மீட்டர் அளவாகவும் இன்னும் சிலவை
ஏழு அடிகள் வரை பெரிதாகவும் காணப்படும். பெரிய மீன்களின் உணர்கொம்புகளும் மிக நீளமாக இருக்கும். இவ் வகை பெரிய ஜெல்லி
மீன்கள் ஜப்பான், ஆப்பிரிக்கா கடல்களிலும், கருங்கடல், காஸ்பியன் கடல், மெடிட்டேரினியன் கடற்பகுதிகளிலுத்தான் அதிகம் வாழ்கின்றன.
ஜெல்லி மீன்கள் செங்குத்தாக
கீழ் நோக்கியும் மேல் நோக்கியும் நகர்வதோடு
அலைகளின் அசைவுக்கும் நீரோட்டத்திற்கு ஏற்ப இருபக்கங்களுக்கும் நகர்கின்றன.
அதன் குடை போன்றிருக்கும் பகுதியைச் சுருக்கி மீண்டு உந்தித் தள்ளி விரிப்பதால் இவை
உந்தப்பட்டு நீரிலே நீந்துகின்றன. இவற்றால் விரைவாக நீந்த முடியாது. எனவே மெதுவாக சாந்தமாகத்தான் கடல் நீரில்
நீந்திக்கொண்டிருக்கும்.
உணவு முறை
இது நீரில் மிதந்து கொண்டிருப்பது
பெரும்பாலும் கண்களுக்குப் புலப்படாது. அமைதியாக மிதந்து செல்லும். அவ்வேலை சிறு மீன் போன்ற உயிரினங்கள் ஏதும் வந்து உணர் கொம்புகளில் பட்டுவிட்டால் உடனே உணர் கொம்புகளில் நீண்டிருக்கும் நூல்களை வெளியே வீசி இரையை மடக்கிக் சிக்க வைத்து
விடுகிறது. இவ்வுணர் கொம்பில் உள்ள நச்சுகள் இரையை செயலிழக்கச் செய்துவிடுகின்றன. பின்னர்
இரையானது செரிமானக் குழாயில் செலுத்தப்பட்டு செரிக்கவைக்கப்படுகிறது. சிலவைகை மீன்களிடம் சிறிதளவில் மிண்சார சக்தியும் உண்டு. உணவின் மீது மிண்சாரத்தைப் பாயச்சி கொன்றுண்ணும்
வழக்கமும் உண்டு. இவ்வுணர் கொம்புகளை ஜெல்லி மீன்கள் வேட்டையாடுவதற்குப்
பயன்படுத்துகின்றன. சில நேரங்களில் அவை தம்மைப் பாதுக்காக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன.
இனப்பெருக்க முறை
இம் மீன்கள் தமக்கிடையே நுட்பமான தொடர்பாடல் முறைகளைக் கைக்கொள்கின்றன. அமைதியாக இருக்கும் நீர் பரப்பில் திடீரென
பல நூறு ஜெல்லி மீன்கள் கூட்டமாக ஒன்று சேரும். அப்போது பெரும்பாலும்
அக்கூட்டத்தில் 100 இலிருந்து 1000 வரையான மீன்களைக் காணலாம்.
ஆண் மீன் தனது உயிரணுவையும் பெண் மீன் தனது சினை முட்டையையும்
தண்ணீரில் விட்டுவிடுகின்றன. நீரில் விடுபட்ட முட்டைகள் ஒன்றுடன் ஒன்று
இணைந்து கருக்கட்டுகின்றன. அதற்கு “ப்லானுலே (planulae) (லார்வா பருவம்)” என்று பெயர். இப்பருவத்தில் அவை தரையை நோக்கி பயனித்து
பாறைகளில் தொற்றிக்கொள்கின்றன. இப்பருவத்திற்கு “பாலிப்” என்று பெயர். இப்பேது அது கடல் பாசித் தாவரம் போல் பாறையில் மெது மெதுவாக வளர்கின்றது. சில நாட்களில் நன்கு வளர்ந்த்தும் பாறைகளில்
இருந்து விலகி நீந்தக் கூடிய ஜெல்லி மீன்காளாக மாறுகின்றன. (படத்தைப்
பார்க்க) அனேகமாக இவற்றின் ஆயுள் காலம் ஆறு மாதங்களாகவே இறுக்கும்.
கொட்டும் கொடுக்குகள்
ஜெல்லி மீன்களின் அடிப்பகுதியில் காணப்படும் வால்களில் (நிமாடோசைட்ஸ் (nematocysts) எனப்படும் கொடுக்குகள் காணப்படுகின்றன. இதில் ஒரு வகை
நச்சுப்பொருள் காணப்படுகின்றது. அவற்றில் ஏதேனும் பட்டால் உடனே தம்மிடம் இருக்கும் நஞ்சைப் பாய்ச்சுகின்றன. பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்குதல் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. சிலபோது வலியை ஏற்படுத்துகின்றது. அதிலும் Sea whip வகையான ஜெல்லி மீன்களின் தாக்குதல் மனிதர்களுக்கு மூச்சடைப்பை
ஏற்படுத்துவதுடன், இதயத்தையும் செயலிழக்கச்
செய்து, மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளது. இந்த நஞ்சு மனிதனை முப்பது நொடிகளுக்குள் கொல்லக்கூடியது.
ஜெல்லி மீன்களை அழகையும் சாதுரியத்தையும் முடிந்தால் நீங்களும்
நேரில் சென்று பாருங்கள். அருமையாக இருக்கும்.
1 comments:
ரசிக்க வைக்கும் தகவல்களுக்கு நன்றி...
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...