கொழுந்துவிட்டெரியும் நெருப்பு
அல்லாஹ் மறுமையில் அமைத்துவைத்திருக்கின்ற
பிரதானமான இரு வாசஸ்தளங்களில் ஒன்று சுவனம். மற்றையதுதான் நரகம். நரகம் அது ஒரு நெருப்புக்
கிடங்கு. ஆடை அணிகளன்கள் முதல் படுக்கை விரிப்புகள், போர்வைகள் என அனைத்துமே தீப் பிழம்புகளால் தயாரித்துவைக்கப்பட்டுள்ளன.
எப்போதும் அதன் நெருப்பு கனன்றுகொண்டும் தகதகவென கொதித்துக்கொண்டும் இருக்கின்றது.
அந்நெருப்பின் கொந்தளிப்பும்
கழுதையின் பெருங்குரலைப் போன்ற அருவருப்பான இரைச்சல் ஒலியும் தொலைதூரம்வரை கேட்கும்.
(25:12) (67:7) பெருங்கோட்டைகளைப்
போன்று நெருப்புக் கங்குகள் வெடித்து சிதறி வீசப்படும். (77:32) இத்தகைய கோரமுகத்தைக்
கொண்டதுதான் நரகினுடைய நெருப்பு.
அல்லாஹ் நரகை 1000 வருடங்கள் எரித்தான்
அது சிவப்பு நிறத்தில் எரிந்தது. மீண்டும் 1000 வருடங்கள் எரித்தான் அது வெண்மை நிறத்தில் எரிந்தது, மீண்டும் 1000 வருடங்கள் எதிர்தான்
அது கருப்பு நிறத்தில் எரிந்தது. இன்னும் அது கருப்பு நிறத்தில்தான் எரிந்துகெண்டிருக்கின்றது
என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். நரக நெருப்பின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எரிக்கவே
அது அல்லாஹ்விடம் முறையிட்டது. உடனே அல்லாஹ் அதனைக் கட்டுப்படுத்திவிட்டு இரண்டு முறை
மூச்சு விடுமாறு கூறினான். நாம் அனுபவிக்கும் கடும் குளிரும், கடும் வெப்பமும் நரகம்
இடும் அந்த இரண்டு மூச்சுகளும்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதுவரை நாம் பார்த்ததுதான்
நெருப்பின் உண்மை முகம், அதுதான் நெருப்பின்
உண்மைத் தன்மை. நாம் பூமியில் பயன்படுத்தும் நெருப்போ நரக நெருப்பின் வெறும் அற்பத்
துண்டுதான். நபியவர்கள் கூறும் செய்தியைக் கேளுங்கள். “அல்லாஹ் நரக நெருப்பை
எழுபது பகுதிகளாகப் பிரித்து அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்தான். அதனை இருமுறை கடலில்
அமிழ்த்தினான். பின்னர் அதனையே எமக்காகத் தந்தான்” (புஹாரி)
இத்தனையும் செய்து அதன் வீரியத்தைக்
குறைத்து எமது பயன்பாட்டுக்காகத் தந்திருக்கும் நெருப்பே பல பொழுது எம்மை சுட்டெரித்து, பல அழிவுகளை ஏற்படுத்துகின்றதென்றால்
சுப்ஹானல்லாஹ்! நரக நெருப்பின் கொடூரத்தை என்னவென்று சொல்வது?
நாம் பயன்படுத்தும் நெருப்பு
மிகவும் ஆபத்தானதும் அதேநேரம் பல பயன்களைத் தருவதுமான ஒன்றாகும். தமிழில் இது நெருப்பு, தீ, அக்கினி என்றெல்லாம்
அழைக்கப்படுகின்றது. ஆங்கிளத்தில் Fire என்றும் அரபு மொழியில் நார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
அந்நார் மற்றும் நார் என்ற பதங்கள் அல்குர்ஆனில் 139 தடவைகள் இடம்பெற்றுள்ளன. இது நரகையும் நரக நெருப்பையும்
குறிக்கும் சொற்களாகும்.
நெருப்பு எவ்வாறு உறுவாகின்றது?
பெதுவாக நோக்குகையில் தீப்பிடித்தல்
என்பது சூழலில் உள்ள எரியும் தன்மைகொண்ட ஒரு பொருளை மிகையாக வெப்பமேற்றும்போது அதனுடன்
வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசன் அணுக்களும் சேர்ந்து வெப்பமடைவதால் அங்கு திடீரென தீப்பிடிக்கின்றது.
ஒரு மரக்கட்டை 150 செல்சியஸ் பாகையில்
வெப்பமேற்றப்படும்போது தீப்பிடிக்கின்றது. ஆதிகால மனிதன் நெருப்பை இவ்வாறான முறைகளில்தான்
உருவாக்கி பயன்படுத்தினான். இரு கூழாங்கற்களை உராய்வதன் மூலமும், இரு மரக்கட்டைகளை
ஒன்றோடொன்று உராய்ந்தும் நெருப்பை உண்டாக்கினான். காடுகளில் உள்ள மரங்கள் இரண்டு காற்றடிக்கும்போது
ஒன்றோடொன்று உராய்வதால் தீப்பற்றி அது காட்டுத்தீயாகப் பரவுகின்றது. அறிவியல் வளர்ச்சியினால் இன்று கந்தகம் கொண்டு தீக்குச்சி, எரிவாயுக்களைக்கொண்டு
லைட்டர் என்பன தயாரிக்கப்படுகின்றன.
புகை.
நாம் ஒருபொருளை எரிக்கும்போது
அதன் விளைவாக வெளிச்சமும்,
வெப்பமும் புகையும் வெளியாகின்றது. புகை என்பது ஹைட்ரஜன், கார்பன் மற்றும் ஒக்ஸிஜன்
என்பவற்றின் கலவையாகும். அத்தோடு எரித்த பொருளின் சாம்பரும் அங்கே எஞ்சிவிடும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும்
மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும்
தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும்.
கண்களுக்குப் புலப்படாத நெருப்பின்
இன்னொரு பகுதி.
நெருப்பு இப்படித்தான் இருக்கும்
என்று வடிவம் கொடுக்க முடியாது. ஆனால் பொதுவாக நெருப்பு சிவப்பு, மஞ்சல், இள மஞ்சல், நீலம் போன்ற நிறங்களைக்
கொண்டதாக எரியும். அதுவும் எதனை நாம் எரிக்கின்றோமோ அதன் நிறமிகள் எரியும் போது அந்த
நிறத்தையும் நெருப்பு எடுத்துக்கொள்ளும். தீச்சுடர் அல்லது தீப்பிழம்பு என்பதே எமது
கண்களுக்குத் தெரியும் நெருப்பின் பகுதியாகும். இது எமது கண்களுக்குப் புலப்படும் ஒளிக்கற்றையாகும்.
ஆனால் நெருப்பு வெளியிடும் அகச்சிவப்பு ஒளி (Infra-red Light), புற ஊதா ஒளி (Ultraviolet light) மற்றும் இதுபோன்ற
இதர ஒளிக்கற்றைகளை எம் கண்களால் காண முடியாது. ஏனெனில் அவை எமது பார்வைச் சக்திக்கு
அப்பாட்பட்ட அதிர்வெண்கொண்ட அலை நீள ஒளிக்கற்றைகளாகும்.
நெருப்பினாலான ஒரு படைப்பு.
இணைய உலவி ஒன்றான நெருப்பு
நரி எனப்படும் Firefox பற்றியோ, புராண எகிப்திய, கிரேக்க, கிறிஸ்தவக் கதைகளில்
புணையப்படும் 'நெருப்பில் கருகி
இறந்த பின் தன் சாம்பலில் இருந்தே மீண்டும் உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவை (Phoenix Bird) பற்றியோ
இங்கு குறிப்பிடவில்லை. இறைவனின் படைப்புகளில் ஒன்றான ஜின்களைப் பற்றியே குறிப்பிடுகின்றேன்.
திருமறை கூறுகின்றது “நெருப்பின் கொழுந்திலிருந்து
அவன் ஜின்களைப் படைத்தான்”
(55:14,15)
நெருப்பு எமது கண்களுக்குப்
புலப்படும் ஒளிக்கற்றைகளை வெளியிடுவதுபோலவே எமது கண்களுக்குப் புலப்படாத ஒளிக்கற்றைகளையும்
வெளியிடுகின்றன. ஜின்கள் எமது கண்களுக்குப் புலப்படாதவர்கள் என்பதால் அல்லாஹ் அவர்களை
எமது கண்களுக்குப் புலப்படாத “மாரிஜ்” எனப்படும் நெருப்பின் கொழுந்தாலான ஒளிக்கற்றைகள் மூலம் படைத்திருக்கின்றான்
என்பதை அறியலாம்.
நெருப்பை வணங்கும் சமூகங்கள்.
அரபு மொழியில் “மஜுஸிகள்” எனப்படுவோர் நெருப்பு
வணங்கிகளாவர். நூஹ் நபியின் காலம் தொட்டு இன்றுவரை நெருப்பை கடவுளாக வணங்குவோர் இருந்துவருகின்றனர்.
இவர்கள் தமது எந்த செயலையும் ஆரம்பிக்கும் முன்னர் நெருப்பை வணங்கியே ஆரம்பிப்பார்கள்.
இதன் ஒரு பழக்கம்தான் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும்போது ஒலிம்பிக் தீபமேற்றி
விளையாட்டுக்களை ஆரம்பிப்பார்கள். எமது பாடசாலைகளிலும் இல்ல விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும்போது
இச்செயல் மேற்கொள்ளப்படுகின்றது. மனிதர்கள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் வழிகெடுத்து
தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக நெருப்பினால் படைக்கப்பட்ட ஷைத்தான் இத்தகைய வேலைகளைச்
செய்கின்றான். இது இணைவைத்தல் “ஷிர்க்” என்ற செயலைச் சாரும்.
இந்துக்கள், பௌத்தர்கள் நெருப்பை
அக்கினி தெய்வம் என்ற பெயரில் வணங்குகின்றனர். தீ மிதித்தல், குத்துவிளக்கு ஏற்றுதல், ஆரத்தி எடுத்தல் என்பவற்றில்
நெருப்பு பயன்படுகின்றது. இப்பிரபஞ்சம் பஞ்ச புதங்களால் அல்லது ஐம்புதங்களால் ஆனது
என இந்து, பௌத்த மதங்கள் கூறுகின்றன.
இவற்றுல் நெருப்பும் ஒன்றாகும்.
நெருப்பின் சாதக பாதகங்கள்.
இறைவன் தந்திருக்கும் தீ எமது கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் அழிவுகள்
பாரதூரமாய் இருக்கும். பல மாடிக் கட்டடங்களையும் சில மணி நேரங்களில் எரித்து கரித்துவிடும்.
அதுவே காட்டுத் தீயாகப் பரவினால் தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் சிலபோது மனிதர்களும் எரிந்து அழிந்து விடுகின்றனர்.
பொருட்கள் எரிந்து கரியாகிவிடுவதால் புமியில் உள்ள காபனின் அளவு அதிகரித்து சுற்றுச்
சூழல் மாசடைகின்றது.
அவ்வாறே நெருப்பு எமது கட்டுப்பாட்டுக்குள்
இருக்கும்வரைக்கும் அதிலிருந்து பல்வேறு பயன்களையும் பெறலாம். இருளில் வெளிச்சத்தையும்
குளிரில் கதகதப்பான வெப்பத்தையும் பெறுகின்றோம். அதன் மூலம் உணவு சமைக்கின்றோம். இன்னும்
பல நன்மைகளை அடைந்துகொள்கின்றோம்.
சிலபோது எமது சூழல் நெருப்பைப்
பயன்படுத்தி தன்னைத்தானே புதுப்பித்து மீளமைத்துக் கொள்கின்றது. சில விதைகளின் ஓடுகள்
கடினமாக இருப்பதால் அவை வெடித்து முளைப்பதற்கு கூடுதலான வெப்பம் தேவைப்படுகின்றது.
எனவே அவை நெருப்பை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. நெருப்பு வெளியேற்றும்
புகை கூட விதைகள் முளைக்க உதவுகின்றன. புகையில் உள்ள சுமார் 70 ஆக்கக்கூறுகள் விதை
முளைக்க உதவுகின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. நைட்ரஜன் டயொக்ஸைட் அவற்றில் முக்கியமானவையாகும்.
அத்தோடு எரிந்து கரியாக மிஞ்சிய எச்சங்கள் கூட இதர தாவரங்களுக்கு உரமாகக் காணப்படுகின்றன.
சுப்ஹானல்லாஹ்! இத்தகைய நன்மைகளைக்
கொண்ட நெருப்பைப் பயன்படுத்தும் விதத்தில் அமைத்துத் தந்த அல்லாஹ்வை நாம் தஸ்பீஹ் செய்யவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் –
நீங்கள் மூட்டும் நெருப்பை
கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு
பண்ணுகிறோமா? அதனை நாம் எம்மை நினைவூட்டுவதற்காகவும், பயணிகளுக்கு (ஒளிபெற்று)
பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு
செய்வீராக. [56:71-74]
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...