எனது வீட்டில் இரண்டு மணிப் புறாக்களும் ஆறு மாடப்புறாக்களும்
இருக்கின்றன. அவற்றை ஆசையாக வளர்த்துவருகின்றேன். புறா
வளர்ப்பின்போது அவற்றில் பல்வேறு அற்புதங்களைக் கண்டு நான் மெய்சிலிர்த்த
சந்தர்ப்பங்கள் பல உண்டு. இத்தொடரில் அவற்றை உங்களுடன்
பரிமாறிக்கொள்ள நினைக்கின்றேன்.
புறாக்களின் வகை.
புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்தது. உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
புறாக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று மணிப்புறா (Dove),
மற்றையது மாடப்புறா (Pigeon). உருவத்தில்
சிறிதாக இருப்பது மணிப்புறா. காட்டுப் புறா என்றும் சொல்லலாம். இவற்றை அடைத்து வளர்ப்பது சிறமம். பழக்கப்படுத்திக்கொள்வதும்
கடினம். உருவத்தில் பெரிதாக இருப்பது மாடப்புறா. இதனை வீட்டுப் புறா என்று சொல்லலாம். இவ்வகைப்
புறாக்களை வீட்டில் வளர்ப்பதும் பழக்கப்படுத்திக்கொள்வதும் மிக மிக சுலபம்.
இவ்விரண்டும் அல்லாமல் புறாக்களின் குடும்பத்தில் அழகழகான, வித்தியாசமான வடிவங்களில் சுமார் 310 வகை இனங்கள் உள்ளன. அனைத்துப் புறாக்களும் உலகின் பனி, பாலைவனப் பிரதேசங்கள் தவிர்ந்த மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன.
மனதிற்கு இதம்
ஓய்வாகவோ களைப்பாகவோ இருக்கும் நேரங்களில் புறாக்கூட்டுக்கு
முன்னே கதிரையைப்போட்டு அவற்றின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருப்பேன். அது மனதிற்கு ஆறுதலைத் தருகின்றது. புறாக்களின் உடல்
அழகு பார்ப்போரின் மனதை வசீகரிக்கின்றது.
சாதாரணமாக புறாக்கள் 20-25 செ.மீ.
வரை வளரும். உடலானது தலை, கழுத்து, நடுவுடல், இறகுகள், வால் மற்றும்
கால்கள் என்ற பகுதிகளைக் கொண்டிருக்கும். உருண்டை வடிவத் தலைப்பகுதியின் முன்புறத்தில்
கூர்மையான அலகு இருக்கின்றது. அலகின் மேற்புறத்தில் தடித்த ராம்போதீக்கா
(Rhamphotheca) எனும் உறை உள்ளது.
மேல் அலகின் அடிப்புறத்தில் நாசித்துவாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றிலும் அலகுப்பூ
(cere) எனும் பருத்த தோல் பகுதி உள்ளது. இரண்டு
பக்கமும் சற்றுப் பெரிதாக இரண்டு கண்கள் இருக்கின்றன.
கண்களின் பின்புறமாக இரண்டு செவித்துவாரங்கள் உள்ளன. இவையனைத்தும்
புறாக்களின் முகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
நீண்ட கழுத்து, ஒலிவ் இலை வடிவிலான உடல் இரு பக்கமாகவுள்ள
இரண்டு இறக்கைகள் அவற்றை விரித்தால் தென்படும் அழகிய சிறகுகள், அதனைத் தொடர்ந்து நீண்டுள்ள வால்பகுதி, சிவப்பு
நிறத்திலான இரு கால்கள், அதிலுள்ள நகங்கள் இவை யாவும்
புறாக்களின் உடலுக்கு வணப்பையும் மிடுக்குடன் கூடிய தோற்றத்தையும் கொடுக்கின்றன.
இவற்றின் வால் பகுதியில் உள்ள கோதுச் சுரப்பி (uropygial gland) எனும் எண்ணெய்ச்
சுரப்பிகள் மூலம் இறகுகளை அலகினால் நீவிவிட்டு தமது உடலை கவர்ச்சியாகவும் பளபளப்பாகவும்
வைத்துக்கொள்கின்றன. உண்மையில் புறாக்களை நன்கு அவதானித்தால் அவற்றின்
உடல் அழகே மனதிற்குப் பெரிதும் ஆறுதலையும் உட்சாகத்தையும் வரவழைக்கின்றன. அந்த மன ஆறுதலுக்காகவோ என்னவோ உலகமே இன்று புறாவை சமாதனப் பறவையாக
ஏற்றிருக்கின்றது.
மனிதர்களோடு பின்னிப்பினைந்த பறவை.
கி.மு.4500ம் ஆண்டிலிருந்தே
வீட்டுப் பறவையாக புறா வளர்க்கப்பட்டுள்ளதாகவும் மனிதனால் பிடித்து வளர்க்கப்பட்ட முதல்
பறவை புறாதான் என்பதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கின்றது. அந்தக் காலம் முதல் அவை மனிதர்களோடு ஒன்றித்து வாழ்ந்து வந்துள்ளன.
புறாக்கள் ஆரம்பங்களில் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் புத்திக் கூர்மை அறியப்பட்டதன் பின்னர் கணினி, கைபேசிகள், தபால் தந்தி நிலையங்கள்
இல்லாத
மன்னராட்சிக் காலத்தில் இவை தகவல் பரிமாருவதற்கான சிறந்த ஊடகமாகப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது, இரண்டாவது உலக போர்களில் தூது
அனுப்புவதற்காக ஜேர்மன் நாடு புறாக்களை அதிகளவில் பயன்படுத்தியது. புறாக்களின் கால்களில் காகிதச் சுருள்களைக் கட்டிச் செய்திகள்
பரிமாறிக்கொள்ளும் முறை அப்போது பரவலாகப் புலக்கத்தில் இருந்தது. தாங்கள் தெரிவிக்க வேண்டிய செய்தியை ஒரு கடிதத்தில் எழுதி அதை
நன்கு பயிற்றுவிக்கப்பட்டதொரு புறாவின் காலில்
கட்டிவிடுவார்கள். அது பறந்து சென்று கடிதத்தை உரியவரிடம் சேர்த்துவிடும்.
தபால் முறையும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்களும் அறிமுகமாகியதன் பின்னர்
புறாக்களின் தேவை குறைவடைந்தது. தற்போது அதிகமானவர்கள் புறாக்களை வியாபார
நோக்கிலும் பொழுதுபோக்கிற்காகவும்தான் வளர்க்கின்றனர்.
உண்மையில் புறா வளர்பில் உள்ள இன்பத்தை அவற்றை வளர்க்க ஆரம்பித்ததும்தான் நான் கண்டுகொண்டேன்.
புத்திக்
கூர்மை.
புறாக்கள் நல்ல புத்தி சாதுர்யமிக்க பறவைகள். நல்ல ஞாபக சக்தி அவற்றுக்கு உண்டு. நிறங்களைக்கூட
நன்றாகப் பிரித்தரியும். மட்டுமன்றி பலபேர் இருக்கும்
இடத்தில் தனது உரிமையாளன் யார் என்பதையும் அவை துல்லியமாகக்
கண்டுபிடித்துவிடுகின்றன. நன்றாகப் பழகிய ஒரு புறாவை பல
ஆயிரம் கி.மீ. தூரம் கொண்டுசென்று
விட்டு வந்தாலும் அது சரியாக வீட்டைத் தேடிக்கொண்டு வந்துவிடும். அந்த அளவு ஞாபக சக்தி அவற்றுக்கு உண்டு. இதனைப்
பயன்படுத்தி இந்தியா, பெல்ஜியம் போன்ற பல நாடுகளில்
புறாக்களைப் பந்தயத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.
புறாக்கள் தமது இறக்கைகளைப் படபடவென அடிப்பதன் மூலம் பூமியில்
கலந்திருக்க கூடிய காந்த சக்தியை மின் சக்தியாக மாற்றுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது அல்லாஹ் அவற்றுக்குக்கொடுத்த ஒரு அற்புத அம்ஷம். இதன் மூலம் புறாக்களை எங்கு கொண்டுசென்று விட்டாலும் தான் வசிக்ககூடிய கூண்டிற்கு
வழிதேடிக்கொண்டு வந்து சேருகின்றன. மேலும் பகலில் சூரியனின் திசைக்கேற்பவும், இரவில் நட்சத்திரங்கள்
திசைக்கேற்பவும் இடங்களை கண்டு பிடிக்கும் குணாதிசயம் இதற்கு உண்டு. காலையில்
கூட்டிலிருந்து புறப்பட்டால் எல்லா இடத்திலும் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு கூடுவந்து
சேரும். சிலபோது வேறு புறாக்களையும் அழைத்துக்கொண்டுவரும். இது
பறவைகளில் புறாக்களுக்கென்றே உள்ள ஒரு தனிச்சிறப்பு.
குடும்ப
வாழ்க்கை.
புறா கூட்டமாக வாழும் பறவை இனம். அதேநேரம் குடும்பமாக வாழ்வதிலும் அவை
சிறப்புப் பெற்றவை. முதற் தடவை ஒன்று சேரும் ஆண், பெண் பறவைகள் இறுதிவரைக்கும் பிரிவதில்லை. அவை கணவன்,
மனைவியாக வாழ்கின்றன. நாமாக அவற்றைப் பிரித்தாலோ,
துணை இறந்தாலோ வேறு துணையை தேடிக்கொள்கின்றன. சில நாடுகளில் திருமணத்தின்போது
ஒரு ஜோடி வெள்ளைப் புறாக்களைப் பறக்க விடுவது வழக்கம். அதன் பின்னணி புறாக்கள் ஒரு
முறை ஜோடி சேர்ந்தால் பிரியாதிருப்பதுபோன்று
புது மணத்தம்பதிகளும் பிரியாமல் வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான். ஆண் புறா இனப்பெருக்க காலத்தில் பெண் புறாவைச் சுற்றிச் சுற்றி வந்து ஒரு
வித ஒலியெழுப்பிக்கொண்டு தன் தொண்டை தரையில் படும்படி தலையை மேலும் கீழும் அசைத்து
வினோதமான முறையில் ஒரு நடனமாடும். முதற்தடவையாக எனது இரண்டு
புறாக்கள் இவ்வாறு நடனமாடுவதைப் பார்த்தபோது அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
இந்த நடனத்தால் கவரப்படும் பெண்பறவை ஆண் பறவையுடன் சேர்ந்துகொள்ளும். அதுமுதல் அவற்றின் குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகும்.
கூடுகட்டும்
பெற்றோர்.
இணப்பெருக்கத்தில் ஈடுபட்டு 15 நாட்களில் பெண் புறா இரண்டு முட்டைகளையிடும்.
எனவே 15 நாட்களுக்குள் அவை கூட்டைக் கட்டி முடிக்கவேண்டும்.
கூடுகட்டுவதிலும் தாய், தந்தை இரண்டு
புறாக்களும் சேர்ந்து பணியாற்றுகின்றன. சிறு சிறு கம்புக்
குச்சிகளைப் பொறுக்கி வந்து அழகான சிறு கூடொன்றை அமைத்துக்கொள்கின்றன. அவற்றுக்கு உதவி செய்யும்நோக்கில் நிறைய சிறு சிறு குச்சிக் கம்புகளை
கூட்டினருகில் போட்டேன். அப்போது தாய், தந்தைப் பறவைகள் இரண்டும் பரந்து வந்து குச்சிகள் கூடுகட்டப்
பொருத்தமானவைதானா என தமது அலகினால் ஆராய்ச்சிசெய்து ஒன்றொன்றாக எடுத்துச் சென்று
அழகிய கூடொன்றைக் கட்டிக்கொண்டதை அவதானித்தேன். வியந்தேன்.
அடைகாத்தலில்
அர்ப்பணிப்பு.
கூடு கட்டி முடிந்ததும் பெண் புறா அழகிய இரு முட்டைகளை
இட்டன. பின்னர் 21 நாட்கள்வரை முட்டையை
அடைகாக்க ஆரம்பித்தன. அடைகாப்பதில் ஆண்புறாவும் பெண்புறாவும்
மாறி மாறி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட விதம் உண்மையிலேயே ஆச்சரியமானதுதான். வேறு புறாக்களை கூண்டை அண்டவிடாது பாதுகாக்கின்றது. இவ்வாறாக 21 நாட்களின் பின்னர் குஞ்சுப் புறாக்கள்
முட்டையிலிருந்து எட்டிப் பார்க்கும். ஆனால் எனது இரு
முட்டைகளில் ஒன்று மட்டுமே குஞ்சாகியது. மற்றைய முட்டை கூழாகியது.
Macroscopic appearance of the pigeon crop sac. The non-'lactating' crop (A) has a completely different appearance to that of the 'lactating' crop (B). The lactating crop is more than twice the size of the non-'lactating' crop, with a thickened wall and two very obvious lateral lobes. When the 'lactating' crop is opened the pigeon 'milk' is seen as a bed of close-packed discrete rice-shaped pellets that are closely associated with the mucosal surface of the tissue (C). In contrast, the non-'lactating' crop is undifferentiated with minimal surrounding vasculature. Download authors' original image
புறா குஞ்சுகள் பொறிந்து முதல் ஒரு வாரத்திற்கு தாய், தந்தைப் புறாக்கள் உணவூட்டுகனிற்ன, மற்றப்
பறவைகளைவிட வித்தியாசமான முறையில் இவை உணவூட்டுகின்றன. பொதுவாக பறவை இனங்களில் தாய் பறவைகள் அலகலி வைத்துக்கொண்டுவந்த
இரையை குஞ்சுகளுக்கு ஊட்டுவது வழக்கம். ஆனால், புறாக்கள் தாம் உண்ட
உணவை விழுங்கி இரைப்பைக்கு அனுப்பி அங்கு செரிமானம் அடைந்த நிலையில் இருக்கும் உணவை
மீண்டும் வெளிக் கொண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும். இதனைப் “புறாப்
பால்” என்பார்கள். இது உண்மையில் ஒரு
பெரும் அற்புதம்தான். நானும் ஆரம்பத்தில் யோசித்தேன் சோளம்,
பயறு, பருப்பு, கௌபி
போன்ற கடினமான உணவுகளை எப்படி குஞ்சுப் புறாவினால் உண்ண முடியும் என்று. பின்னர்தான் சங்கதி புரிந்தது. அல்லாஹ்
ஒவ்வொன்றையும் எவ்வளவு அருமையாகப் படைத்திருக்கின்றான்?
சுபஹானல்லாஹ்!
உணவு
முறை.
குஞ்சுகள் பிறந்து 40வது நாளில் பறக்கும்
சக்தியைப் பெறுகின்றன. அத்தோடு சுயமாக அவை உணவு தேடவும் பழகிக்கொள்கின்றன. புறாக்கள்
சோளம், பஜ்ரி, பருப்பு, பயறு, கௌபி, அரிசி போன்றவற்றையும் சில கீரைவகைகளையும் உண்கின்றன. உண்ணும்
கடினமான இந்த உணவுகள் செரிமானமாவதற்கு கல்சியம் சத்து தேவைப்படுகிறது. எனவே கல், மணல், செங்கல் என்பவற்றை உண்டு அதற்கு தேவையான
கல்சியத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத்
தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது.
1 comments:
தோழரே அஸ்ஸலாமு அலைக்கும்
புறாக்களை பற்றி மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள்
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...