மிக சமீபத்தில் உலக முஸ்லிம்களது மாத்திரமன்றி அனைவரினதும் கவனத்தைத் தன்பால் ஈர்த்த ஒரு விடயம்தான் உய்குர் முஸ்லிம்களது சுதந்திரப் போராட்டம். இந்த உய்குர் முஸ்லிம்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கி மிலேச்சத்தனமான அடக்குமுறைகளைக் கட்டுடைத்துள்ள சீன அரசாங்கத்தின் தோல் சர்வதேசத்தின் முன் உறிக்கப்பட்டதையும் இருப்பினும் அது இன்னும் தொடர்வதையும் தாங்கள் அறிவீர்கள். உண்மையில் உய்குர் முஸ்லிம்கள் யார்? இவர்கள் ஏன் வரலாற்று நெடுகிலும் அடக்குமுறைகளுக்கு இலக்காகி வருகிறார்கள்? சீன அரசு உய்குர் பிரதேசத்தை கையகப்படுத்த முயற்சிப்பதில் என்ன இலாபம் காண்கிறது? போன்ற கேள்விக்குறிகளுக்கு விடைகண்டு முற்றுப்புள்ளி வைக்க நாம் வறலாற்றைச் சற்று பின்னோக்கி வாசிக்க வேண்டும். எனவே சீனாவிற்கு இஸ்லாம் அறிமுகமான வரலாற்று நிகழ்வின் பின்புலத்தை சற்று மீட்டிப்பார்ப்போம்…
“துர்கிஸ்தான்” என்ற பாரசீக சொல்லில் இரண்டு சொற்கள் சேர்ந்துள்ளன. ஒன்று “துர்க்” மற்றையது “இஸ்தான்” என்பதாகும். ஆக துர்க் இஸ்தான் என்பதன் பொருள் துர்க்கியரின் நிலம் என்பதுவே. நூஹ் நபியின் மகன் ஜாபேத் (Japheth) என்பவரது வழித்தோன்றலான மங்கோலிய இனத்தினரே இந்த துர்க்கிஸ்தானியர் என அறியப்படுகின்றது. இஸ்லாத்தின் ஆரம்ப கட்டங்களிலே முஸ்லிம்களாகி பின்னைய வரலாற்றில் பல கட்டங்களில் இஸ்லாத்திற்காகப் பற்பல அர்ப்பணங்களைப் புரிந்து இஸ்லாத்தின் கொடியை உயரத் தூக்கிப் பிடித்தவர்களும் இவர்கள்தாம்.
துருக்கியர், உஸ்மானியர் எனும் இரு சொற்களையும் அநேகர் குழப்பிக்கொள்கின்றனர். உஸ்மானியர் யாவரும் துர்க்கியர்கள். அதே நேரம் அனைத்து துர்க்கியரும் உஸ்மானியர்களாவர் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். மாபெரும் துருக்கி இனத்தின் ஒரு சிறு கிளைப்பிரிவே இந்த உஸ்மானிய இனம். இந்த உஸ்மானியர்களில் வரலாற்றில் பொறிக்கப்பட்டவர்கள்தாம் சல்ஜுக்கிய சக்கரவர்த்திகளான அலப் அர்ஸலான், இமாதுத்தீன் ஸன்கீ, நூருத்தீன் முஹம்மது, அஹ்மத் இப்னு துலான் மற்றும் இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.
வரலாற்றாசிரியர்களும் பூகோலவியல் வல்லுனர்களும் துருக்கிஸ்தானை முக்கிய இரு பகுதிகளாகப் பிரித்து நோக்குகின்றனர். ஒன்று மேற்கு துருக்கிஸ்தான். இது தற்போதைய துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஸகஸ்தான், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி மற்றும் ஈரானின் ஒரு பகுதியையும் அத்தோடு ரஷ்யக் காலணியத்தின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த செச்னியா, தஜிஸ்தான் ஆகிய பரந்து விரிந்த நிலப்பரப்புகளைக் கொண்ட மிக மிக விசாலமான ஒரு நிலப்பரப்பாகும்.
மற்றையது கிழக்கு துர்க்கிஸ்தான். இது சீனாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. வடகிழக்கில் மங்கோலியாவையும் கிழக்கில் சீனாவையும் தெற்கில் இந்தியா, திபெத், பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற நாடுகளையும் மேற்கில் கஸகஸ்தான், தஜிகிஸ்தான் என்பவற்றையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது.
துர்கிஸ்தானில் இஸ்லாம்:
கலீபாக்களான உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோரது காலத்திலேயே மேற்கு துர்கிஸ்தான் மண்ணில் இஸ்லாம் அறிமுகமாகியது. அதில் உஸ்மான்(ரழி) அவர்களது காலத்து ஹகம் பின் அமீர் அல் கிபாரி என்பவரது பணி முக்கியமானது. இவரது பிரச்சாரத்தினால் பலர் இஸ்லாத்தில் மலர்ந்தனர். அதுமட்டுமன்றி பல்வேறு நாடுகளினதும் வர்த்தகப் பட்டுப்பாதைகளைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக கிழக்குத் துர்க்கிஸ்தான் இருந்தமையால் பல அரேபிய வியாபாரிகள் வியாபாரப் பொருட்களை மாத்திரம் சுமந்து செல்லாமல் இஸ்லாத்தின் தூதையும் சுமந்து சென்று மார்க்கப் பிரச்சாரங்களையும் செய்தனர். இதனால் கிழக்குத்துர்கிஸ்தானிலும் ஆரம்பமாக இஸ்லாம் தளிர் விட்டது.
இவ்வாறு காலச்சக்கரம் சுழன்று செல்ல ஹிஜ்ரி 96 (714) ஆம் ஆண்டளவில் உமையாக் கலீபாவான அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களது தளபதி குதைபதிப்னு முஸ்லிம் அல்பாஹிலி என்பவரின் தலைமையில் கிழக்குத் துர்கிஸ்தான் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் சேனை “கஷ்கர்” நகரை கையகப்படுத்தியது. கிழக்குத் துர்கிஸ்தானில் ஆரம்பத்தில் இடப்பட்ட இஸ்லாமிய வித்து விருட்சமென வளர்ந்தோங்க இதுவே காரணமாயமைந்தது. இந்நிகழ்வினால் பூர்வகுடிகளாக இருந்த கிழக்குத் துர்கிஸ்தான் மக்கள் முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து கொண்டனர். இவர்கள்தாம் இந்த “உய்குர் மக்கள்.”
கிழக்கு மற்றும் மேற்கு துர்கிஸ்தானிலிருந்து அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரப் பண்டங்களுடன் தெற்கில் இருந்த திபெத் நோக்கிச் சென்றனர். இதன்போதுதான் திபெத் பூமி முதன்முதலாக இஸ்லாத்தின் தென்றல் காற்றைச் சுவாசித்தது. பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அம்மக்கள் குராஸான் கவர்ணரான அல்ஜர்ராஹ் பின் அப்துல்லாஹ்வுக்கு தமக்கும் தம்நாட்டு மக்களுக்கும் இஸ்லாமிய விழுமியங்களைக் கற்பிப்பதற்காக தலைசிறந்த அறிஞர்களை தம் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு அன்றைய உமையா கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்களிடம் கோருமாறு நிருபம் அனுப்பினர். இதற்கமைய அங்கு இஸ்லாம் துரிதமாக வளர்ச்சியடைந்தது.
இதனூடாக கிழக்குத் துர்கிஸ்தான் தஃவாவின் மையமாக மாறியது. அங்கிருந்து அழைப்பாளிகள் சீனாவுக்கும் இஸ்லாமிய இன்பத் தூதைச் சுமந்து சென்றனர். அங்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதன்பின்பு அப்பாஸிய கலீபாக்கள் 12 தடவைகள் இஸ்லாமிய தூதுக்குழுக்களை சீனாவிற்கு அனுப்பிவைத்து அங்கு இஸ்லாத்தின் அறிவு மலர வழிசெய்தனர். குறிப்பிட்டுக்கூற வேண்டிய விடயம் என்னவெனில் சீனா, திபெத் எங்கும் வாழ்ந்த முஸ்லிம்களுடன் பௌத்தர்களும், பிற மதத்தவர்கள் யாவரும் அன்னியோன்யமான, சமாதானமான, அமைதியானதொரு கூட்டு வாழ்க்கையையே வாழ்ந்தனர். அன்று இன, மதப் பிரச்சினைகளோ அரசியல் குழப்பங்களோ காணப்படவில்லை.
ஹிஜ்ரி 323 (943) ஆம் ஆன்டு கிழக்குத் துர்கிஸ்தானில் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நிகழ்வு இடம்பெற்றது. உய்குர் துர்க்கியரான சுத்துக் போக்ரா கான் மற்றும் கர்கன்த் கான் எனும் இரு பெரும் கோத்திரத்தலைவர்களும் 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்களோடு இஸ்லாத்தில் நுழைந்தனர். இதனால் கிழக்குத் துர்கிஸ்தான் ஒரு பலமான இஸ்லாமிய நாடாக மிளிர்ந்தது. அதன் பின் வந்த முதலாம் போக்ரா கானின் பேரனான ஹாரூன் போக்ரா கானின் ஆட்சியில் பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அவருக்கு “ஷிஹாபுத் தவ்லா” என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டது. இவர் நாடு முழுவதிலும் பாடசாலைகளை கட்டுவித்தார். அதில் அரபு, துர்கிஸ்தானி, உய்குர் மொழிகளைக் கற்பிக்க உத்தரவிட்டார். அரபியில் எழுதவும் வாசிக்கவும் கற்பித்துக்கொடுக்கவும் உத்தரவிட்டார். இதனால் அல்குர்ஆன், அல்ஹதீஸ் என்பவற்றைக் கற்பது இலகுவாக அமைந்தது. அதன்பின்பு ஹிஜ்ரி 435ல் அப்பாஸியக் கலீபாவான அல்காதிர் பில்லாஹ்வின் கீழ் ஆட்சிவந்தது. அவரது பெயர் நாணயங்களிலும் பொறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கிழக்குத் துர்கிஸ்தான் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த உண்ணதமான காலம் அது.
தாத்தாரியப் படையெடுப்பு:
ஹிஜ்ரி 603 (1206) மங்கோலியாவை அண்டியிருந்த நாடுகளை ஆக்கிரமிக்கும் வகையில் மங்கோலிய மாமன்னன் ஜிங்கிஸ்கான் படையெடுப்புகளை ஆரம்பித்தான். இதனையே வரலாறு தாத்தாரியப் படையெடுப்பு என குறிப்பிடுகிறது. கிழக்குத் துர்கிஸ்தான் முதன்முதலாக தாத்தாரியப் படையின் தாக்குதலுக்குள்ளானது. அன்று முஸ்லிம்களிடம் காணப்பட்ட பலவீனத்தினாலும் தாத்தாரியர்களின் படைப்பலத்தினாலும் இலகுவில் கிழக்குத் துரகிஸ்தான் ஜிங்கிஸ்கானின் கைவசமானது. எனினும் ஜிங்கிஸ்கானின் மறைவோடு அவனுக்குக் கீழ் இருந்த சிற்றரசுகள் கருத்து முரண்பட்டமையால் பரந்து விரிந்து கிடந்த மங்கோலியப் பேரரசு சிதைவடைந்து பற்பல நாடுகளாகப் பிரிந்து சென்றது. இதில் இரண்டு முக்கிய பகுதிகளைப் பார்ப்போம்.
முதலாம் பகுதி:
முதற்பகுதி மங்கோலியாவையும் கிழக்குத் துர்கிஸ்தானையும் உள்ளடக்கிய பகுதி. இதனை மங்கோலிய ஒகேடி பரம்பரையில் வந்த “அரீ புகா” என்பவர் ஆட்சி செய்தார். கிழக்குத் துர்கிஸ்தான் முழுமையாக இவரின் கீழேயே காணப்பட்டது. இச்சந்தர்ப்பம் ஹிஜ்ரி 722(1322)ல் தாத்தாரிய தலைவர்களுல் ஒருவரான “திர்மா சிப்ரீன்” (Tirma Chibrine) இஸ்லாத்தைத் தழுவினார். இதனால் பல நூற்றுக்கணக்கான மங்கோலியர்கள் இஸ்லாத்தில் நுழைந்தனர். எனவே அந்த ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இருந்தது. இது உண்மையில் வரலாற்று அபூர்வமிக்க ஒரு சம்பவம். ஒரு இனத்தை அழித்து அந்த நாட்டை காலனியம் செய்யவந்த படை அந்நாட்டு மக்களது மார்க்கத்தை ஏற்று அதன் காப்பாளர்களாக மாறியமை உண்மையில் வரலாற்றிலே எங்கும் நடந்திராதவொன்று.
இரண்டாம் பகுதி:
நாம் பார்க்கவிருக்கும் இரண்டாம் பகுதி சீனாப் பிரதேசமாகும். மங்கோலிய மன்னன் “துலாய்” (Tolai) இன் மகன் “குப்லாய்” இன் கீழ் சீனாவுடைய ஆட்சி வந்தபோது அவன் “கன்பலிக்” என்ற நகரை அதன் தலைநகராக மாற்றினான். அதுதான் இன்று “பிஜிங்” எனப்படுகின்றது. ஏழவே இங்கு தாத்தாரியர்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் காரணமாக குப்லாயின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு நல்ல கண்ணியமும் நன்மதிப்பும் கிடைத்தது.
அதிகமான முஸ்லிம்கள் இங்கு அரச நிர்வாகப் பகுதிகளின் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறந்த கல்வித் தகைமையும் நேர்மையும் நிர்வாகத் திறமையும் நம்பிக்கையும் பெற்றிருந்தமையே இதற்குக் காரணம். அங்கு சீன முஸ்லிம்கள் மட்டுமன்றி கிழக்கு மற்றும் மேற்கு துர்கிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களும் இவ்வாறான நிர்வாக உத்தியோகங்களில் அமர்த்தப்பட்டிருந்தனர். குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அன்று சீனாவில் காணப்பட்ட 12 மாகாணங்களில் 10 மாகாணங்களை முஸ்லிம் ஆளுணர்களே நிர்வகித்து வந்தனர். “சம்சுத்தீன் உமர்” என்பவர் மிக்க செல்வாக்குடையவராக விளங்கினார். முதலில் ஆளுணராக மாத்திரம் இருந்த இவர் பின்னர் மன்னனின் நன்மதிப்பை வென்று இராணுவ உத்தியோகத்தராகவும் பின்பு மிலிட்டரி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். இவரிடம் இரண்டு நகரங்கள் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்தனர். பின்பு ஒரு நீதவானாகவும் பதவிபெற்று இறுதியில் சீனாவின் தலைநகரான பீஜிங்கின் ஆளுணராக நியமிக்கப்பட்டார். இந்த அளவிற்கு முஸ்லிம்கள் மன்னனினதும் பிறமக்களினதும் விசுவாசத்தையும் நன்மதிப்பையும் பெற்று விளங்கினர்.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் சீனாவில் பல இஸ்லாமியக் கற்கை நிறுவனங்களை இஸ்தாபித்தனர். இன்று சீனாவில் காணப்படும் பெருவாரியான பள்ளிவாயல்கள் அன்று மங்கோலிய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட பாடசாலைகளின் படிப்படியான வளர்ச்சியின் விளைவினதாகும். இவ்வாறு இருக்க குப்லாய் ஆட்சியைத் தொடர்ந்து அங்கு “மொன்கே” ஆட்சி ஆரம்பமாகின்றது. “மொன்கே” ஆட்சியிலும் முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியில் குப்லாய் ஆட்சி போன்றே சிறப்பாக நடாத்தப்பட்டனர். இது ஹிஜ்ரி 1052(1642) ஆம் ஆண்டு வரை நீடித்தது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...