"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 September 2010

அல்குர்ஆனின் நிழலில் மறுமைக் காட்சிகள்

ஆலிப் அலி  (இஸ்லாஹியா வளாகம்)

மறுமை பற்றிய நம்பிக்கை இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளில் தலையாயதொன்று. எந்தளவுக்கென்றால் இறைவன் பற்றிய விசுவாசத்தின் பின்பு மனித வாழ்வின் போக்கையே தீர்மானிப்பது மறுமை பற்றிய நம்பிக்கைதான். காரணம் என்னவெனில் மறுமையின் சுவன,  நரக வாழ்வுபற்றி நம்பிக்கை கொள்ளும்போதே, ஒருவன் பயங்கர நரக வேதனையிலிருந்து மீட்சிபெற்று நிரந்தர சுவனத்தை அனந்தரம் கொள்வதற்காக இறைவழிகாட்டலின் பிரகாரம் வாழ முற்படுவான்.

அந்தவகையில் மறுமை நிகழ்வு பற்றியும் மஹ்ஷர் வாழ்வு குறித்தும் சுவன நரகங்கள் பற்றியும் அச்சொட்டானதொரு கற்பனையை எம்மால் உருவகிக்க முடியாவிடினும் அல்லாஹ் மறுமைக்காட்சிகள் குறித்து சிலாகித்துக் கூறியிருக்கும் பல அல்குர்ஆனிய வசனங்களுடாக அதனைத் தத்ரூபமாக விளங்கிக்கொள்ளலாம். எனினும் மறுமையின் ஒவ்வொரு கட்ட நிகழ்வையும் அதன் ஒழுங்கையும் (Order) நுணுக்கமாகவும் துல்லியமாகவும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதனை ஞாபகத்தில் பதித்துக்கொண்டு அல்குர்ஆனின் நிழலில் மறுமைக் காட்சிகள் பற்றி சற்று விளங்க முயற்சிப்போம்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்குர்ஆனிலே மறுமைக் காட்சிகளைக் காணவிரும்புவோருக்கு ஒரு வழிகாட்டலை வழங்குகிறார்கள். “யார் மறுமை நாளைக் கண்கூடாகக் காண விரும்புகிறாரோ அவர் அத்தக்வீர், அல்இன்பிதார் மற்றும் அல்இன்ஷிகாக் ஆகிய மூன்று ஸ{ராக்களையும் ஓதட்டும்” என்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)

வழமைபோன்று மக்கள் தம் அன்றாட விவகாரங்களில் மூழ்கியிருப்பார்கள். மக்கள் நகர்ப்புறங்களிலும் கடைத்தெருக்களிலும் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் இருக்கும்போது “ஒரேயொரு (பெரும்) சப்தத்தைத் தவிர அவர்கள் (வேறு எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.” (36:49) “அப்போது அவர்கள் மரண உபதேசம் (வஸிய்யத்) பற்றி (பிறருக்குக்)கூறவும் சக்திபெறமாட்டார்கள். (அவ்வாறே) தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்றுவிடவும் மாட்டார்கள்.” (36:50) அச்சமயம் மக்கள் யாவரும் அந்நாளில் இப்பூமியில் அவர்கள் முன் அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆச்சரியமான,  பயங்கரமான மாற்றங்களைக் கண்டு பெரும் பீதிக்குள்ளாவார்கள். “(அந்நாளின் அமளிகளைக் கண்டு திடுக்கிட்டு) பார்வைகள் நிலை (குலைந்து) மழுங்கிவிட்டால்.”(75:07) “அதனை நீங்கள் காணும் அந்நாளில், பாலூட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும்,  தான் பாலூட்டியதை மறந்துவிடுவாள். கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும்,  தன் சுமையை (பிரசவித்து) வைத்துவிடுவாள். மேலும் மனிதர்களைப் (பீதியின் கடுமையால்) மதிமயக்கம் கொண்டவர்களாக நீர் காண்பீர். அவர்கள் மதுவினால் மதிமயங்கியவர்களல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாயிருக்கும்.”(22:02)

சிரமப்பட்டு பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்து அன்பின் ஊற்றாய் பாலையூட்டும் தாய் தன் குழந்தையை மறந்துவிடுவாள். பக்குவம் தவறாமலும் பாதுகாப்பாகவும் சிசுவைக் கருவில் சுமக்கும் பெண்கள் தம் கண் முன்னே அது சிதைவடைவதைக் காண்பர். செய்வதறியாதுää பரஸ்பரம் உதவிபுரியமுடியாது திக்கித் திணரி புத்திபேதலித்துப் போவார்கள் மக்கள். உலகின் மாற்றங்களைக் காண்போரின் நிலைகுறித்தே மேற்கூறிய வசனம் விளக்கிக் காட்டுகிறது.

அந்நாளில் வானலோகத்திலும் பூமியின் நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் நடந்தேற இருக்கின்ற பல்பரிமாண மாற்றங்களையும் பேரழிவுகளையும் தொகுத்து நோக்குவோம்.

வானலோகம்
 
சூரியன் பலகோடானுகோடி ஆண்டுகளாக இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அதன் எரிபொருளான ஹைட்ரஜன் (H) தீர்ந்துபோகும் இறுதிநாளில் அது அவ்வாறே ஒளியிழந்து கருந்துளை (Black hole) ஆக மாறிவிடும். இந்நேரம் அது  சுருங்க ஆரம்பிப்பதோடு பிறபொருள்களையும் தன்னுள் ஈர்க்கவும் முனையும். “சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்பட்டு விடும்போது.”(81:01) அதேபோன்று “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது.”(81”02)

சூரியன் ஒளியிழந்துவிடுவதால் அதிலிருந்து ஒளியைப் பெற்றுப்பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சந்திரனின் ஒளியும் மறைந்துவிடுகிறது. அதன் பின்பு கருந்துளையாகிய சூரியன் சந்திரனைப் படிப்படியாக விழுங்கிவிடும். “சந்திரன் ஒளியிழந்து(விடுமானால்) சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும்.” (75:8, 9)

அதனை விஞ்ஞானமும் நிரூபித்துள்ளது. அதாவது பூமியைவிட்டும் சந்திரன் வருடத்துக்கு 3cm அளவு தூரம் விலகிச்செல்கின்றது என்பதை விண்ணியல் ஆய்வாளர்கள் மிக நுண்ணிய அளவுகோல்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்தும் சந்திரன் விலகிச்செல்லும்போது சூரியனின் ஈர்ப்பு விசை எல்லையினுள் சந்திரன் சென்றுவிட்டால் உடனே சூரியன் அதனை லபக்கென்று உள்ளீர்த்துக்கொள்ளும் என எதிர்வுகூறுகின்றனர்.

அதனைத்தொடர்ந்து வானம்பிளந்து உறுதியற்றுப்போய்விடும். “வானமும் பிளந்து அது அந்நாளில் பலவீனமுற்றதாகிவிடும்.” (69:16) அதுமட்டுமன்றி வானில் நட்சத்டதிரங்கள் வெடித்துச் சிதறும். அப்போது அது ரோஜாப்பூவைப்போன்ற நிறமுடையதாக மாறும். “வானம் பிளந்துவிடும்போது அது (உருகி) எண்ணையைப்போல் (சிவப்பு) ரோஜாநிறமாகிவிடும்.” (55:37)

இதேபோன்ற தோற்றத்தில் விண்ணில் வெடித்துச்சிதறிய நட்சத்திரமொன்றின் புகைப் படத்தை 1990 ம் ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதி அமெரிக்க நாஸா விண்வெளி ஆய்வுமையம் வெளியிட்டிருந்தது. அதன் தோற்றம் இவ்வசனம் கூறும் சிவப்புரோஜாவை ஒத்திருந்தது. (படத்தைப் பார்க்க)

அதனைத்தொடர்ந்து வானம் புறமொதுக்கப்பட்டு அகற்றப்பட்டுவிடும். அதனை அல்லாஹ் தன் கைகளில் சுருட்டி எடுத்துவிடுவான். இதனைக் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “வானமும் (பிளந்து) அகற்றப்படும்போது”(82:11)  “(நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போன்று நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூறுவிராக!)” (22:104) மற்றுமொரு வசனத்தில் “இன்னும் பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது (ஒருகைப்)பிடியிலும் வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையிலும் சுருட்டப்பட்டனவாயிருக்கும்.” (39:67)

இவ்வாறு அல்லாஹ் வானங்களை முற்றாக நீக்கிவிட்டதன் பின்பு அங்கு வானமென்றொன்று இருக்காது. அது திறபட்ட பல வாயில்களைப்போன்றாகிவிடும். “வானமும் திறக்கப்பட்டு பின்னர் பல வாயில்களாக அது ஆகிவிடும்.” (78:19) இவ்வாறு வானவெளியில் பல அபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

 நிலப்பரப்பு
சூரியன் படிப்படியாக ஒளியிழந்துவரும் சமயம் அதன் ஈர்ப்புச்சக்தியும் குறைவடையும். இதன்போது நேர்த்தியாக, செவ்வையாக தமது ஒழுங்குகளில் சுற்றிக்கொண்டிருந்த கோள்கள் சூரிய ஈர்ப்பிலிருந்து விடுபட்டு ஒன்றோடொன்று மோதக்கூடும். இதன் ஆரம்பமாக பூமி அதன் அடிப்பாகத்திலிருந்து பலமாக ஆட்டங்காண ஆரம்பிக்கும். இதனால் மேற்பரப்பிலுள்ள மலைகள் நடுக்கம்கண்டு மேலுயர்ந்து மீண்டும் நிலத்தில் மோதி தூள்தூளாகிவிடும்.

“பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டுவிடும்போது”(99:01) மேலும் “பூமியும் மலைகளும் உயர்த்தப்பட்டு அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்..” (69:14)  “அல்லது! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்பட்டுவிடும்போது.” (89:21) “மேலும் (நபியே!) நாம் மலைகளை (அவற்றின் இடங்களிலிருந்து பெயர்த்து) நடத்தாட்டிவிடும் நாளை (நினைவு கூறுவீராக!)” (18:47)

இவ்வாறு மலைகள் யாவும் பஞ்சுபஞ்சாக சிதறிவிடும்வேளையில் பூமி மாபெரும் வெட்டவெளியாகவே காணப்படும். எனினும் அங்கு பார்ப்பவர்களுக்கு கானல் நீர் போன்ற போலி மலைகளே புலப்படும். இதனைக் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “இன்னும் மலைகள் கொட்டப்பட்ட பஞ்சுபோன்றாகிவிடும்.” (101:05) “(அந்நாளில்) பூமியைச் சமமான (மேடுபள்ளங்களற்ற) வெட்டவெளியாகவே நீர் காண்பீர்.” (18:47) “பின்னர் அவற்றைப் (புற் பூண்டோ, கட்டிடங்களோ அற்ற) சமவெளியக ஆக்கிவிடுவான். அதில் பள்ளத்தையோ மேட்டு நிலத்தையோ நீர் காணமாட்டீர்.” (20:106, 107) “எனினும் மலைகளும் (இடம்) பெயர்க்கப்பட்டு கானல்நீராகிவிடும்.”(78:20)

இது எதற்கென்றால் உலகில் வாழ்ந்த கோடானகோடி மக்களை ஒன்றுகூட்டவேண்டுமல்லவா அதற்கும் அந்தப் படுபயங்கரமானää மிக விசாலமான நரகைக் கொண்டுவருவதற்காகவும் அதனையும்விட பரந்து விரிந்த சுவனபதியை எடுத்துவருவதற்காகவும்தான் அல்லாஹ் இப்பூமியை இவ்வாறு வெட்டவெளியாக்குகிறான். அதுமட்டுமன்றி இப்பூமி இருப்பதைவிட பன்மடங்கு விசாலமாக்கப்படுமெனவும் அல்குர்ஆன் கூறுகின்றது. “பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும்போது”(84:03)

ஆக விண்ணைப்போன்றே மண்ணிலும் பல அபாயகரமான நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கும்போதே கடலிலும் எண்ணிப் பார்க்க முடியாத பல அதிசயமான சம்பவங்கள் இடம்பெறும்.

கடற்பரப்பு

யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென கடல் பற்றியெரிய ஆரம்பிக்கும். பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அச்சங்கொள்ளச்செய்யும். ஏனெனில் தண்னீர் பற்றியெரிவதென்பது அற்புதமானவொன்றாயிற்றே! அல்லாஹ் கூறுகின்றான். “கடல்களும் தீ மூட்டப்படும்போது”(81:06) மேலும் கடல்கள் பலமாகப் பொங்கிப் பிரவாகித்து சுனாமிபோன்று அலைகள் மேலெழுந்து அல்லாஹ் கடலிலே ஏற்படுத்திவைத்திருக்கும் தடுப்புகளையும் தாண்டி ஒன்றோடொன்று கலந்துவிடும். “கடல்களும் பொங்கவைக்கப்பட்டு (அவற்றுக்கு மத்தியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டு ஒன்றாகக் கலந்து) விடும்போது.” (82:03) இறுதியில் கடலும் எரிந்து வற்றிப் போய்விடும். அப்போது நீர்நிலைகளுமற்ற வெட்ட வெளியாகப் பூமிப்பந்து காட்சியளிக்கும். “(பின்னர்) அவற்றை (ப் புற்பூண்டுகளோ, நீர்நிலைகளோ அற்ற) சமவெளியாக ஆக்கிவிடுவான்.” (20:106)

சூர் ஊதப்படல்

இதுவரை இப்பிரபஞ்சத்தில் வழமைக்கு மாற்றமாய் நடக்கும் அமளி துமளிகளைப் பார்த்து மதிமயங்கி அச்சத்தினாலும் பீதியினாலும் நடுநடுங்கிக்கொண்டிருந்த மனிதர்கள்,  மிருகங்கள்,  ஜின்கள் யாவரும் முதலாவது சூர் (குழல்) ஊதப்பட்டதும்… “மேலும் (முதல்) ஸ{ர் ஊதப்படும். பின்னர் வானங்களில் இருப்பவர்களும் பூமியிலிருப்பவர்களும் (அல்லாஹ் நாடியவர்களைத் தவிர) மூர்ச்சித்து (சித்தமிழந்து வீழ்ந்து) விடுவார்கள்.” (39:68) “அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்” (101:04) அல்லாஹ் நாடியவர்கள் தவிர்ந்த மற்ற அனைவரும் இறந்துவிட அனைத்தினதும் அதிபதி வல்ல நாயன் அல்லாஹ் மாத்திரம் தன் அர்ஷிலே வீற்றிருப்பான். “(பூமி) அதன் மேலுள்ள யாவும் அழிந்துவிடக்கூடியவையாகும். (எனினும்) கண்ணியமும் சங்கையும் மிக்க உமது இரட்சகனின் (சங்கையான) முகமே நிலைத்திருக்கும்.” (55:26,27)

பின்னர் இதே பூமி மஹ்ஷர் மைதானமாக மாற்றப்படும். “இப்பூமி வேறு(விதப்) பூமியாகவும்,  வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும் நாளில்.” (15:48) “பூமியும் (விசாலமானதாக) விரிக்கப்பட்டுவிடும்போது” (84:03) மீண்டும் இரண்டாம் முறையாக சூர் ஊதப்படும். “பிறகு அதில் மறுமுறை ஊதப்படும்.”(39:68) அப்போது “பூமியானது (அதன்) அடிப்பாகத்திலிருந்து கடுமையான அசைவாக அசைக்கபட்டுவிடும்போது,  இன்னும் பூமி தனது சுமைகளை(யெல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது”(99:1,2) “மண்ணறைகளும் மேலும் கீழுமாகப் புரட்டப்படும்போது”(82:04) “அது தன்னுள் இருப்பவற்றை வெளிப்படுத்தி வெறுமையாகிவிடும்போது”(84:04)

மஹ்ஷர்வெளி

இவ்வாறாகப் பூமி ஆரம்ப மனிதன் முதல் இறுதியானவன் வரை மண்ணில் புதைந்திருந்த அனைவரது உடல் மூலக்கூறுகளையும் வெளிக்கொணர்ந்து கொட்டி வெறுமையாகிவிடுவதையே இவ்வசனம் சுட்டுகிறது. அதன்பின்பு அல்லாஹ் ஒரு மழையைப் பொழிவிப்பான். உடனே புற்பூண்டுகள் முளைப்பதுபோன்று மனிதர்கள் யாவரும் உயிர்பெற்று எழுந்து நிற்பார்கள். “பூமி அவர்களைவிட்டும் பிளந்துவிடும் நாளில் (மனிதர்கள் அவர்களின் மண்ணறைகளிலிருந்து வெளியேறி) விரைந்தவர்களாக (வருவார்கள்). இது படைப்பினங்களை ஒன்றுதிரட்டுவதாகும்.” (50:44) பின்னர் யாவரும் விசாரணைக்காகக் கூட்டங்கூட்டமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். “ஸ{ர் ஊதப்படும் நாளன்று நீங்கள் கூட்டங்கூட்டமாக (விசாரணை நடக்கும் திறந்தவெளிக்கு) வருவீர்கள்.” (78:18) அல்லாஹ் நேர்த்தியானவன் என்பதால் மக்களும் நேர்த்தியாக,  அணியணியாக அழைத்துவரப்படுவர். “மேலும் உமதிரட்சகன் முன் அவர்கள் யாவரும் அணியணியாகக் கொண்டுவரப்படுவார்கள்.” (18:48) அப்போதுகூட நகர்வினால் ஏற்படும் காலடிச்சப்தங்களைத்தவிர மற்ற அனைத்தும் நிசப்தமாகவே இருக்கும். “அந்நாளில் (ஸ{ர் ஊதுகின்ற) அழைப்பாளரையே (அனைவரும்) பின்பற்றிச் செல்வார்கள்”(20:108) “சப்தங்கள் (யாவும்) அர்ரஹ்மானுக்குப் பணிந்து (அடங்கி)விடும். ஆகவே (மெதுவான) காலடிச்சப்தத்தைத் தவிர (வேறொன்றையும்) நீர் கேட்கமாட்டீர்”(20:108)

அல்லாஹ்வின் சன்நிதியில் மக்கள் ஒன்று திரட்டப்படும் நிலை பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் வெறுங்காலுடனும் நிர்வாணமாகவும் விருத்த சேதனம் (கத்னா) செய்யப்படாத நிலையிலுமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.” என்றார்கள் (புகாரி , முஸ்லிம்). அன்றைய தினம் அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் விசாரணைக்காக மனு,  ஜின் வர்க்கங்களும் அவர்கள் மாத்திரமன்றி பறவைகளும் மிருகங்களும்கூட கொண்டுவரப்பட்டிருக்கும். இச்செயலானது அல்லாஹ்வின் நீதிவழுவாமையையும் நீதி வழங்குவதில் அவனது துல்லியத்தன்மையையும் சான்று பகர்வதாக உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான். “பூமியில் ஊர்ந்து செல்கின்ற பிராணியாயினும் தன்னிரு இறக்கைகளால் பறந்துசெல்லும் பறவையாயினும் அனைத்துமே தவறி விட்டுவிடப்படுவதில்லை. பின்னர் தமது இரட்சகனிடத்தில் அவை யாவும் ஒன்று திரட்டப்படும்.”(06:38) இதனைப் பின்வரும் நபிமொழி மேலும் தெளிவுபடுத்துகின்றது.

“ஒரு கொம்புள்ள ஆட்டை ஒரு கொம்புள்ள ஆடு முட்டிக் குத்தியதற்காகப் பழிவாங்கப்படும். இந்தளவுக்கு நாம் மறுமை நாளில் உரிமைகளை அதற்குரியவர்களிடம் நிச்சயமாகச் செலுத்தியே ஆகவேண்டும்.” என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்,  திர்மிதி) மனிதனால் பிறஜீவிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதங்களையும் அல்லாஹ் கச்சிதமாகத் தீர்த்துவிட்டு விலங்கினங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவான். இதனைக் காணும் நிராகரிப்பாளன் தான் அனுபவிக்கப்போகும் வேதனைகற்கு அஞ்சி தன்னையும் இறைவன் அவ்வாறு செய்துவிடக்கூடாதா என அங்காளாய்ப்பான். “இன்னும் நிராகரித்தவனோ ‘நான் மண்ணோடு மண்ணாக ஆகியிருக்கவேண்டுமே!’ என்று கூறுவான்”(78:40)

இச்சந்தர்ப்பம் ஒவ்வொருவரும் தாம் பூமியில் வாழ்ந்த காலம் குறித்து ஒருவரையொருவர் பரஸ்பரம் இரகசியமாக விசாரித்துக்கொள்வார்கள். இவ்வுலகில் 60,  80 வருடங்கள் வாழ்ந்த மனிதன் அன்றையதினம் “நீங்கள் பத்து (நாட்கள்) தவிர (உலகில்) தங்கியிருக்கவில்லை என்று அவர்களுக்கு மத்தியில் இரகசியமாகப் பேசிக்கொள்வார்கள். அவர்களில் நிறையறிவுடையோர் ‘ஒரு நாளேயன்றி நீங்கள் தங்கியிருக்கவில்லை’ என்று கூறும் சமயம் அவர்களை நாம் அவதானிப்போம்”(20:103,104) இன்னும் “அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர தங்கியிராததுபோன்று (உணர்வார்கள்.)”(79:46)

சூரியனும் மிகத் தாழ்வாகக் கொண்டுவரப்படும். மனிதர்கள் பூமியில் புரிந்த செயல்களிற்கேற்ப வெப்பத்தினால் வெளியேறும் வியர்வை வெள்ளத்தில் ஒவ்வொரு படித்தரத்தில் நின்று தத்தளித்துக்கொண்டிருப்பார்களென நபியவர்கள் பகர்ந்தார்கள். (முஸ்லிம்) இவ்வாறு மக்கள் அப்பெரும் வெளியில் பல்லாண்டுகளாக வேதனையை அனுபவித்தக்கொண்டிருப்பார்கள். இறுதியில் அதன் கொடுமை தாளாது மக்கள் ஆதிபிதா ஆதம் நபியிடம் சென்று அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறு வின்னப்பிப்பார்கள். அவர் தன்னால் இயலாது என்று கூறவே நூஹ் நபியிடமும் பின்பு மூஸா நபியிடமும் அதன் பின்னர் ஈஸா நபியிடமும் செல்வார்கள். ஒருவராலும் முடியாதுபோகவே இறுதியாக இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறுவார்கள். அவர்கள் இறைவனிடம் அவ்வேதனையைத் தளர்த்தக்கோறி பிரார்த்திப்பார்கள். அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று அடுத்தகட்டமாக விசாரனைகளை ஆரம்பிப்பான்.

விசாரனைகள் ஆரம்பமாகிவிடும். வானவர்கள் அணிவகுத்து நிற்க வல்லோன் அல்லாஹ்வும் வந்துவிடுவான். “இன்னும் வானவர்கள் அணியணியாக நிற்க உமதிரட்சகனும் வந்துவிட்டால்”(89:22) அடுத்தபடி தனக்கு என்ன நேருமோ என்றெண்ணி மனிதன் தவியாய்த்தவிப்பான். இருக்கும் சொற்ப நன்மைகளிலிருந்து பிறர் கேட்டு எடுத்துக்கொள்வார்களோ என்றெண்ணி எங்கு ஓடித்தப்பலாமென்று யோசிப்பான். நண்பன் நண்பனைவிட்டும் சகோதரன் சகோதரனைவிட்டும் ஏன் தன்னைப் பூமியிலே வளர்த்து ஆளாக்கிய தன் பெற்றோரைவிட்டும் மனைவியைவிட்டும் பிள்ளைச்செல்வங்களைவிட்டும் சொந்த பந்தங்களைவிட்டும் தலைதெறிக்க ஓடுவான். அல்லாஹ் கூறுகின்றான். “அந்நாளில் யாதொரு உறவும் பயனளிக்காது. ஒருவர் (நிலை) பற்றி மற்றவர் விசாரிக்கவுமாட்டார்கள்.”(23:101) “ஒரு நண்பன் மற்றொரு நண்பன் (பற்றிக்) கேட்கமாட்டான்”(70:10) “அந்நாளில் மனிதன் தன் சகோதரனைவிட்டும் வெருண்டோடுவான். தன் தாயையும் தன் தந்தையையும் (விட்டும்) தன் மணைவியையும் தன் மக்களையும் (விட்டு வெருண்டோடுவான்.)” (81:34-37)

இவ்வாறு மனிதன் எங்குதான் வெருண்டோடினாலும் அவனது நிலையோ தலைகீழாகத்தான் இருக்கும். விசாரனையின் ஆரம்பமே அவனுக்கு விணையாக அமையும். அவனது உடலுறுப்புகள் அவனுக்கெதிராகச் சாட்சிகூறும். “இன்றைய தினம் நாம் அவர்களது வாய்களின்மீது முத்திரை பதித்துவிடுவோம். அன்றியும் அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்தவைபற்றி அவர்களது கைகள் நம்மிடம் பேசும். அவர்களது கால்களும் சாட்சிகூறும்.”(36:65) “அவர்களுடைய நாவுகளும் கைகளும் கால்களும் அவர்கள் செய்தவைபற்றி அவர்களுக்கு எதிராகச் சாட்சிசொல்லும்.”(24:24)

மட்டுமன்றி ஒவ்வொருவரது பிடரியிலும் அல்லாஹ் அவர்களது பதிவுகளைப் பதியும் ஒரு பதிவியை (Recorder) வைத்துள்ளான். மறுமையில் அவனிலிருந்தே அது எடுக்கப்பட்டு அவனது வலக்கையிலோ அல்லது இடக்கையிலோ வழங்கப்படும். “மேலும் ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (பதிவுக்) குறிப்பை அவனது கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டியுள்ளோம். மறுமையில் அவனுக்கான பதிவினை வெளிப்படுத்துவோம். அதனை அவன் விரிக்கப்பட்டதாகப் பெறுவான்.” (17:13) “ஒவ்வொரு சிறிதும் பெரிதும் அதில் பதியப்பட்டிருக்கும்.”(54:53) அதனைப் பார்த்தபின் “மனிதர்கள் யாவரும் இறைவனின் முன் முழந்தாளிட்டவர்களாக இருப்பார்கள்.”(45:28, 29)

பின்பு மீஸானிலே (நிறுவையிலே) நன்மை தீமைகள் நிறுக்கப்படும். “மேலும் மறுமையில் நீதமான தராசுகளை நாம் வைப்போம்.”(21:47) அதிலே மனிதன் செய்த அணுபிரமான நன்மையாகிலும் தீமையாகிலும் அதற்கான கூலியை அவன் கண்டுகொள்வான். “எனவே எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் அதனைக் கண்டுகொள்வார். இன்னும் எவர் ஓர் அணுவளவு தீமைசெய்தாரோ அவர் அதனைக் கண்டுகொள்வார்.”(99:7, 8) அதன்பின்பு அல்லாஹ் தனக்கும் அடியானுக்கும் இடையே உள்ள கணக்குகளை முதலில் தீர்த்துக்கொண்டதன் பின்பு ஒரு அடியானுக்கும் மற்றோர் அடியானுக்கும் இடையே இருக்கும் கணக்குகளையும் தீர்த்துவைப்பான். இவ்விடம் “ஒரு அடியான் அல்லாஹ்வின் விடயத்தில் ஏதும் பிழைகள் விட்டிருந்தால் அல்லாஹ் நாடினால் அதனை மண்ணித்துவிடுவான். அனால் ஒரு அடியான் மற்றுமோர் அடியான் விடயத்தில் குற்றம் புரிந்திருந்தால் அதனை அவ்வடியான் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிக்கமாட்டான்” என நபியவர்கள் கூறினார்கள்.

நிராகரிப்பாளனோ விசாரனைகளின் இருக்கத்தைக் கண்டு திணறுவான். தன்னிலை அதோகதிதானென்பதை உணர்ந்து அல்லோலகல்லோலப்படுவான். நபியவர்கள் கூறினார்கள் “எவரொருவர் (கடுமையாக) விசாரிக்கப்படுகிறாறோ அவர் வேதனைசெய்யப்படுவார்.” எனவே “அந்நாளின் வேதனையிலிருந்து (தன்னைக் காத்துக்கொள்ள) குற்றவாளி தனது மக்களை ஈடாகக்கொடுக்க விரும்புவான். தன் மனைவியையும் தன் சகோதரனையும் உறவினர்களையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடாகக் கொடுத்துப்) பின்னர் அது அவனைக் காப்பாற்றும் (என எண்ணுவான்)” (70:11-14)

எனினும் அல்லாஹ் அதற்கு மாற்றமாகக் கூறுவான் “நிச்சயமாக நிராகரித்து அவ்வாறே மரணிக்கின்றனரே அத்தகையோர் இப்பூமியளவுக்குத் தங்கம் ஈடாகக்கொடுத்தாலும் (அது) அங்கீகரிக்கப்படவேமாட்டாது.” (03:91) விசாரனையின் இறுதியாக தீர்ப்பு வழங்கப்படும். ஏக நாயனைப் புறக்கணித்து நிராகரித்து அவனுக்கு இணைசேர்த்து அவன் சொற்படி வாழாதோர் நரகில் நுழைவிக்கப்படுவர். “மேலும் (அந்நாளில்) நிராகரித்துக்கொண்டிருந்தார்களே அத்தகையோர் கூட்டங்கூட்டமாக நரகின்பால் இழுத்துவரப்படுவார்கள். இறுதியாக அவர்கள் அங்கு வந்தடைந்ததும் அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். அதன் காவலர்கள் அவர்களிடம் ‘உங்களிலிருந்து தூதர்கள் உங்கள் இரட்சகனது வசனங்களை ஓதிக்காண்பிப்தற்காகவும் இந்நாளைப் பற்றி எச்சரிப்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?’ என்றும் கேட்பார்கள்”(39:71) பின்பு அவர்கள் நரகில் தூக்கி வீசப்படுவார்கள்.

நரகம்

வேதனைகளின் முழு ஊற்றிடம் நரகம்தான். அங்குதான் கெட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அது ஒதுங்குதளங்களிலேயே மிகக் கெட்டது. அதில் வழங்கப்படும் வேதனைகளோ படுபயங்கரமானவை. நரகிற்கு 40,000 கடிவாளங்கள் இருப்பதாகவும் ஏழு வாயில்களிருப்பதாகவும் அந்த ஒவ்வொரு கடிவாளத்துக்கும் 40,000 வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஹதீஸ்களில் காணலாம். நரகில் நான்கு சுற்றுச் சுவர்கள் காணப்படுகின்றன. ஒரு சுவரிலிருந்து மற்றையதை வந்தடைய நாற்பது ஆண்டுகள் செல்லுமென நபியவர்கள் கூறினார்கள். அதன் ஆழமும் பயங்கரமானது. ஒரு முறை நபியவர்களும் ஸஹாபாக்களும் பள்ளிவாயிலில் அமர்ந்திருக்கும்போது பெரும் சப்தமொன்றைச் செவிமடுத்தனர். பின்னர் அது 70,000 ஆண்டுகளுக்கு முன்பு நரகில் போடப்பட்ட கல்லென்றும் தற்போதுதான் அது நரகின் அடித்தளத்தில் சென்று வீழ்ந்துவிட்டதாகவும் நபியவர்கள் விளக்கம் கூறினார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான். “அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன”(15:44) “இன்னும் ஸபானியாக்கள் எனும் பத்தொன்பது காவலர்களும் அதனைச் சூழ இருப்பார்கள். (காவலர்களாக மலக்குகளில்) அதன்மீது பத்தொன்பதுபேர் இருக்கின்றனர்”(74:30) “நாமும் (அவனது தண்டனைதரும்) ஸபானியாக்களை அழைப்போம்”(95:18) அதன் தலைவராக மாலிக் எனும் மலக்கிருப்பார். “(நரகின் பொருப்பாளரிடம்) மாலிக்கே!! ஊமதிரட்சகன் எமக்கு (மரணத்தைக் கொண்டாவது) தீர்ப்பளிக்கட்டும் என்று சப்தம்போடுவர். ஆதற்கவர் ‘நிச்சயமாக நீங்கள் (மரணமின்றி இதேநிலையில்) தங்கியிருக்கவேண்டியவர்களே!”என்று கூறுவார் (43:77)

நரக நெருப்பு தளர்ந்து குறையும் போதெல்லாம் அல்லாஹ் அதனை மீண்டும் பற்றியெரியச்செய்வான். “அது தனியும்போது கொழுந்துவிட்டெரிவதை அவர்களுக்கு (மென்மேலும்) நாம் அதிகரிப்போம்”(17:97) தூரவிருப்போரை நரகம் காணும்போது அது பயங்கரமானதாக மாறிவிடும். “அது இவர்களை வெகு தொலைவிலிருந்து கண்டால் அதற்குரிய கொந்தளிப்பையும் அது மூச்சுவிடும் பேரிரைச்சலையும் இவர்கள் கேட்பார்கள்.” (25:12) “நிச்சயமாக அது (பெரும்) மாளிகைகளைப்போன்ற நெருப்புக்கங்குகளை வீசி எறியும்”(77:32) மேலும் “அதில் அவர்கள் தூக்கிப்போடப்பட்டால் அது கொதிக்கும் நிலையில் (கழுதையின் சப்தத்தைப்போல்) அருவருப்பான சப்தம் அதற்கிருப்பதை அவர்கள் கேட்பார்கள்.”(67:07)

இந்தக் கடுமையான பிரம்மாண்டமான வேதனைகளை அனுபவிக்கச்செய்வதற்காக மனித உடல் இன்றிருப்பதைவிட பண்மடங்கு பெரிதாக மாற்றப்படும். இல்லாவிடின் பெரும் நெருப்புக்குண்டத்தில் கட்டெரும்பு வீழ்ந்து நொடிப்பொழுதில் காணமல் கருகிப்போவதுபோல மனிதனும் பெரியளவில் வேதனையை உணராதுபோய்விடுவான். எனவே அவனது சாதாரன 30சென்றி மீட்டர் நீளமான புஜம் நான்கு நாள் பிரயாண தூரமளவிற்கு நீட்டிப் பெரிதாக்கப்படும். பற்கள் உஹது மலையளவுக்கும் நாவு நான்குமைல் நீளஅளவுக்கும் விகாரப்படுத்தப்படும் என நபியவர்கள் கூறினார்கள்.

நரகவாசிகளுக்கான உணவோ மிகக் கொடுமையானதாயிருக்கும். “(ஜக்கூம்) எனும் கள்ளிமரத்திலிருந்து உண்பார்கள்”(56:52) “பின்பு அதைவிடக் கடுமையாகக் கொதிக்கும் நீரிலிருந்து பருகுவார்கள்”(56:54) அந்த நீர் “(நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) சீழைத்தவிர (வேறு) உணவுமில்லை”(69:36) “அதனை அவன் சிறுகச் சிறுக விழுங்குவான். எனினும் அவன் அதை எளிதாக விழுங்கமாட்டான்”(14:17) “அது (அவர்களைக்) கொழுக்கச்செய்யாது. பசியையும் தீர்க்காது”(88:07) “(அந்நீர்) அவர்களின் குடல்களைத் துண்டு துண்டாக்கிவிடுமே!” (47:15)

மேலும் அவர்களுக்காகத் தயார்படுத்தப்பட்டிருக்கும் ஆடைகள் விரிப்புகள் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். “நிராகரிக்கின்றவர்கள் நெருப்பு ஆடைகள் அவர்களுக்கு வெட்டிவைக்கப்பட்டுள்ளன”(22:19) “அவர்களது சட்டைகள் தாரால் (செய்யப்பட்டு) இருக்கும்”(14:50) “அவர்களுக்கு நரகிலிருந்து (நெருப்பு) விரிப்புகளும் மேலிருந்து (போர்த்திக்கொள்ள நெருப்புப்) போர்வைகளும் உண்டு”(07:41)

நரகின் தீப்பிழம்புகள் மனித உடலைச் சுட்டுக் கரிக்கும்போதெல்லாம் புதிய தோல்கள் மாற்றப்படும். “(அதில்) அவர்கள் வேதனையை (சதா) அனுபவிப்பதற்காக அவர்களது தோல் கருகிவிடும்போதெல்லாம் அவையல்லாத (வேறு புதிய) தோல்களை நாம் மாற்றிக்கொண்டே இரப்போம்”(04:56) இந்தப் பயங்கரமான வேதனைகளைத் தாங்க முடியாது மனிதன் நரகிலே புலம்புவான். துனக்கு அழிவைவேண்டி ஓலமிடுவான். நுரகம் பூராகவும் தலைதெரிக்க ஓடுவான். பின்பு சுவனவாசிகளை அழைத்து உதவிகோறுவான். “நரகவாசிகள் சுவனவாசிகளை அழைத்து ‘தண்ணீரில் (கொஞ்சத்தை) எங்கள்மீது கொட்டுங்கள் அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவாக அளித்தவற்றிலிருந்து (கொஞ்சமேனும் தாருங்கள்)’ என்று வருந்திக்கேட்பர் “அதற்கவர்கள் ‘நிச்சயமாக அல்லாஹ் (உங்களைப்போன்ற நிராகரிப்போரின்மீது இவ்விரண்டையும் தடுத்துள்ளான்’ என்று கூறுவார்கள்.” (07:50) 

இவ்வாறு நிராகரிப்பாளர்களும் காபிர்களும் இணைவைப்பாளர்களும் கொலை மற்றும் வட்டியோடு சம்பந்தப்பட்டவர்களும் நிரந்தரமாக நரகில் தங்கிவிட அல்லாஹ் நாடியவர்கள் வேதனைகளை அனுபவித்ததன்பின்பு சுவனத்தில் நுழைவிக்கப்படுவர். நரகவாசிகளுக்கோ இன்னொரு மரணம் இருக்காது. “நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில் மரணிக்காது) தங்கியிருக்கவேண்டியவர்களே!”(43:77) என்று கூறப்படும்.

சுவனம்

மனிதன் நெறிபிறழ்ந்து போக்குத் தவறும்போது அல்லாஹ் அவனுக்கு இறைத்தூதுர்கள் மூலமும் வேதவெளிப்பாடுகள் மூலமும் நல்வழிகாட்டி நெறிப்படுத்துவதெல்லாம் அவன்மீதுள்ள அன்பினால் அவனைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்யவேண்டுமென்றேயாகும். அந்த சுந்தர சுவனத்தை அல்லாஹ் அவனை விசுவாசித்து அவன் ஏவல் விலக்கள்களின்படி வாழ்ந்தோருக்கே அணந்தரமாக்குவான். “இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும் எவர் (இதில்) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்தனரோ அவரை சுவனபதிகளில் பிரவேசிக்கச்செய்வான்.”(04:13) “மேலும் எவர் விசுவாசித்து நட்கருமங்கள் செய்த நிலையில் (அல்லாஹ்) அவனிடத்தில் வருகின்றாரோ அத்தகையோர்க்கு உயர் பதவிகளுண்டு. நிலையான சுவனங்களும் உண்டு.”(20:75,76)

அதிலே நூறு படித்தரங்கள் இருக்கும். மிக உயர்ந்ததுதான் ஜன்;னதுல் பிர்தௌஸ். மேலும் ஏழு வாயில்களும் உண்டு. சுவனத்தின் விசாலமோ எண்ணிப்பார்க்க முடியாதளவு மிக விசாலமானது. “அதன் அகலம் வானம் மற்றும் பூமயின் அகலத்தைப் போன்றது”(57:21) அதனை நோக்கி “தங்கள் இரட்சகனுக்கு அஞ்சி (நடந்து)கொண்டார்களே அத்தகையோர் (அந்நாளில்) கூட்டங்கூட்டமாகச் சுவனத்தின்பால் அழைத்துவரப்படுவார்கள். இறுதியாக அதன் வாயில்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் அங்கு வந்தடைந்துவிட்டால்”(39:73) அவ்வாயிற்காவலர்களான மலக்குகள் வாழ்த்துக்கூறி வரவேற்பார்கள். “அதன் காவலர்கள் அவர்களிடம் ‘உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்இ நீங்கள் நல்லோராகிவிட்டீர்கள். எனவே இதில் நீங்கள் நிரந்தரமாகத் தங்கியிருக்க நுழையுங்கள்” என்று கூறுவார்கள்”(39:73)

அங்கு அவர்களுக்கு குடியிருப்புகளும் மாடமாளிகைகளும் தயாராயிருக்கும். “(அத்ன் எனும்) நிலையான சுவனங்களில் பரிசுத்த (அழகிய உயர்) குடியிருப்புகளையும் (அவன் வாக்களித்துள்ளான்).”(09:72) “எனினும் தமது இறைவனுக்கு அஞ்சி நடக்கின்றார்களே அவர்களுக்கு (அடுக்கடுக்கான) மாளிகைகள் உண்டு. அவற்றுக்கு மேலும் கட்டப்பட்ட மாளிகைகளும் உண்டு.”(39:20) அதேபோல் சுவனவாசிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இரு சோலைகளையும் அல்லாஹ் வர்ணிக்கின்றான். “தன் இறைவனின் சந்நிதானத்தைப் பயப்படுபவருக்கு (சுவனத்திலே) இரு சோலைகள் உண்டு. அவை அடர்ந்த கிளைகளை உடையவை. அவ்விரண்டிலும் இரு நீர் ஊற்றுக்கள் (உதித்து) ஓடிக்கொண்டிருக்கும்”(55:46-52)  மேலும் சுவனத்தின் கீழால் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். “அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனத்தில் நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்”(22:23) அங்கே பசியோ தாகமோ இருக்காது. “நீர் பசியில்லாதிருப்பதும் நிர்வாணமாகாதிருப்பதும் இச் (சுவனத்தில்) நிச்சயமுண்டு. அன்றியும் இதில் நிச்சயமாக நீர் தாகிக்கவும் மாட்டீர். வெயிலில் கஷ்டப்படவும் மாட்டீர்.”(20:118, 119)

பழங்களிலிருந்தும் இறைச்சியிலிருந்தும் மற்றும் இதுவல்லாமல் எதை உணவாகவேண்டினாலும் அது உடனே தயாரான நிலையில் கையில்கிட்டும். “பழத்தையும் அவர்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து இறைச்சியையும் அவர்களுக்கு நாம் அதிகப்படுத்துவோம்” (52:22) “இவர்கள் தேர்வுசெய்பவற்றிலிருந்து கனிகளோடும் விரும்புபவற்றிலிருந்து பட்சிகளின் மாமிசத்தோடும்…”(56:21, 22) மேலும் பாலாரும் தேனாரும் மதுக்கோப்பைகளும் வழங்கப்படும். “அதில் தண்ணீரிலிருந்து மாற்றமுறாத (தெளிவான) ஆறுகளும் பாலிலிருந்து சுவை மங்காத (பால்) ஆறுகளும் மதுவிலிருந்து குடிப்போருக்கு (போதை தராது) பேரின்பமளிக்கும் ஆறுகளும் தெளிவான தேனிலிருந்து ஆறுகளும் (அவர்களுக்காக) உண்டு” (47:15)  “அதில் ஒருவருக்கொருவர் (மதுக்) கோப்பைகளைப் பரிமாறிக்கொள்வார்கள்”(52:23)

அச்சுவனப் பூங்காவிலே அவர்களுக்கு வழங்கப்படும் ஆடை அணிகளன்கள் பற்றியும் அல்லாஹ் கூறுகின்றான். “அவற்றில் (அவர்களுக்குப் பரிசாக) பொன்னாலான கடகங்கள் அணிவிக்கப்படும்.”(18:31) “அவற்றில் தங்கத்தினாலான கடகங்களும் முத்து (ஆபரணமும்) அணிவிக்கப்படும்.” (22:23) மேலும் “வெள்ளியினாலான கடகங்களும் அணிவிக்கப்பட்டிருக்கும்”(76:21) பட்டாடைகளை அல்லாஹ் அவர்களுக்கு அணிவிப்பான். “அவர்களது தேகத்தின் மேல் மென்மையான மற்றும் சுமையான பச்சைப் பட்டாடைகளும் இருக்கும்”(76:21)

தமக்கு வழங்கப்பட்ட ஆடம்பரமான இருக்கைகளிளே களிப்புடன் அமர்ந்திருப்பர். “அவற்றில் (உள்ள) ஆசனங்களின்மீது சாய்ந்தவர்களாக (உல்லாசமாக) இருப்பார்கள்”(18:31) அங்கே “வரிசையாக வைக்கப்பட்ட தலையனைகளும் விரிக்கப்பட்ட உயர் கம்பளங்களும் (உண்டு)” (89:15, 16)  “அவர்கள் (பட்டு)விரிப்புகளின்மீது சாய்ந்தவர்களாக (இருப்பார்கள்) அவற்றின் உட்பகுதிகள் ‘இஸ்தப்ரக்’ (எனும்) பட்டினால் அமையப்பெற்றிருக்கும்”(55:54) 

இவையனைத்துக்கும் மேலாக அல்லாஹ் அச்சுவனவாசிகளுக்கு ‘ஹ{ர்உல் ஈன்’ எனும் கண்ணழகிகளைத் திருமணமுடித்து வைப்பான். “நாம் அவர்களுக்கு (ஹ{ருல் ஈன் எனும்) கண்ணழகிகளை மணமுடித்து வைப்போம்” (52:20) அதற்குமுன் அவர்களை எந்தக் கண்ணும் கண்டிராது. எந்த உள்ளமும் கற்பனை பண்ணியிராது. அந்தளவு அழகு ததும்பும் கண்ணியர்களாக அவர்களிருப்பார்கள். “அவற்றில் கீழ்நோக்கிய பார்வைகளையுடைய (அழகிய) கண்ணிகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (அழகிகளான) அவர்கள் (ஒளியில்) வெண்முகத்தையும் (பளபளப்பில்) பவளத்தையும் ஒத்திருப்பார்கள்.” (55:56-58) சுவனவாசிகள் அவர்களோடு கட்டில்களிலே சயனித்திருப்பார்கள். “அவர்களும் அவர்களது மணைவியரும் நிழல் (உள்ள) கட்டில்களிலின்மேல் (வெகு உல்லாசமாக) சாய்ந்திருப்பார்கள்.” (36:56)

அச்சுவனபதி குளிரையோ வெயிலையோ வெப்பத்தையோ தரும் காலநிலையைக் கொண்டிருக்காது. “நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.” (56:30) “அதில் சூரிய (வெப்பத்தி) னையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்”(76:13) அவர்களது பெற்றோர் மனைவி பிள்ளைகள் சாலிஹானவர்களாக இருந்து சுவனத்தில் நுழைந்திருந்தால் அவர்கள் யாவரும் குடும்பமாக சேர்த்துவிடப்படுவார்கள். தமது எண்ணத்தினில் நினைப்பவையெல்லாம் கண்முன் நிற்கக்காண்பார்கள். “அன்றியும் அவர்கள் தம் மனங்கள் விரும்பிய (சுகபோகங்களைச் சுவைப்ப)தில் நிரந்தரமாக இருப்பார்கள்”(21:102) அவர்களை உபசரித்துப் பணிவிடைசெய்ய முத்துப்போன்ற சிறுவர்கள் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். “மேலும் அவர்களுக்குரிய (பணிபுரியும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் (சிப்பிகளில்) மறைத்து வைக்கப்பட்ட (கைபடாத) முத்துக்களைப்போன்று (பிரகாசமாக) இருப்பார்கள்”(52:24) இவ்வாறாக நீடூளிகாலம் சுவனத்தின் இன்பங்களைச் சுவைத்து ருசித்து அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள். எனினும் அதில் அவர்கள் அலுத்து சலித்துவிட மாட்டார்கள். அந்தவகையில் அல்லாஹ் அதனைத் தன் நேசர்களுக்குக்காகத் தயாரித்துவைத்துள்ளான்.

இந்த அனைத்து சுகபோகங்களுக்கும் மேலாக சுவனவாசிகள் மற்றுமோர் இன்பத்தை அனுபவிப்பார்கள். ஆம் அதுதான் புவியிலே மனிதனாக எம்மைப் படைத்து, நேர்வழிகாட்டி, பல்வேறு அருள்களையும் எம்மில் சொரிந்து, பரிபாலித்துவந்த அந்த ஏகநாயனை நேரில் கண்களால் காணும் அருமையான காட்சி. நபியவர்கள் கூறினார்கள். “ஒரு முழுமதியைää பௌர்னமி நிலவை வெட்டவெளி வானில் நீங்கள் கண்டு ரசிப்பதைப்போன்று அந்நாளில் இறைவன் உங்கள் முன் தோன்றுவான். ஆவனை நீங்கள் கண்டு இன்புறுவீர்கள்.” அவனது அழகுத் திருமுகத்தைப் பார்த்து இன்புற்றவர்களாக சுவனவாசிகள் பல்லாண்டு காலங்களைக் கழிப்பார்கள். அக்காட்சியை அல்லாஹ் அல்குர்ஆனிலே சுருக்கமாக இவ்வாறு கூறுகின்றான். “கெண்டைக்காலைவிட்டும் (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில் அவர்களோ சிரம்பணிவதின்பால் அழைக்கப்படுவார்கள் ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்திபெறமாட்டார்கள்.” (68:42) ஏனெனில் இவ்வுலகில் தேகாரோக்கியத்துடனிருந்தபோது  தொழுகைக்காக அழைக்கப்பட்டும் அவர்கள் தொழுகையிலீடுபடாது அலட்சியமாயிருந்தார்கள்.

இவ்வாறு சுவனவாசிகளுக்கும் இன்னோர் மரணம் கிடையாது. அதிலே என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். “முந்திய மரணத்தைத் தவிர அவற்றில் (வேறு) மரணத்தை அவர்கள் சுவைக்கமாட்டார்கள்”(44:56)

எனவே இறைவனின் போதனைகளின் படி வாழ்ந்து சுவனம் நுழைய பிரயத்தனம் எடுப்போம். சுவனப்பூங்காவில் இன்பமனுபவிக்கவும் தாங்கொனா வேதனைகளைக்கொண்ட நரகிலிருந்து தப்பித்துக்கொள்வும் வல்ல நாயன் எம்மனைவருக்கும் அருள்புரிவானாக..

உங்கள் கருத்து:

3 comments:

இஜாஸ் said...

சிறந்த பதிவு

Anonymous said...

fathima...............

தூக்கம் கலையட்டும் என்று சொல்லி உமது வலைப்பூவை இவ்வதிகாலை வேளை உலா வந்தேன். சுவனத்தை கற்பனையில் உலாவரச்செய்துவிட்டீர் உமது ஆக்கத்தினால்......
தூக்கம் மறந்து உள்ளநடுக்கத்தோடு இறை தண்டனையின் பயத்தை அதிகரித்தது உமது ஆக்கம்....
நன்றி....

Aalif Ali said...

உங்களுக்குள் இவ் ஆக்கம் மாற்றத்தை ஏற்படுத்தியதென்றால் அதற்கு முதலாவதாக நான் நன்றி சொல்வது என்னைப் படைத்து, ஆற்றல்களைத் தந்த வல்லவலன் அல்லாஹ்வுக்குத்தான்.

தொடர்ந்தும் கருத்துக்களை எழுதுங்கள் என்னை அவை உரமூட்டுகின்றன.

ஜஸாகல்லாஹு கைரன்

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...