ஆலிப் அலி (இஸ்லாஹி)
கிணற்றிலிருந்து நீரை எடுத்து நீர்த்தாங்கிக்குச் செலுத்த எவ்வாறு ஒரு நீர்ப்பம்பி தேவைப்படுகின்றதோ அதைவிடவும் எமது உடல் முழுதும் இரத்தத்தை எடுத்துச் சென்று பல்வேறு இடங்களுக்கும் இரத்தத்தைப் பகிர்ந்தளிக்க ஓர் பம்பி அவசியப்படுகின்றது. அப்பம்பியின் தொழிலை எமது உடலில் காணப்படுகின்ற இதயம் மிகக் கச்சிதமாகச் செய்துவருகின்றது.
இதயம் ஆங்கிலத்தில் Heart என்றும் அரபு மொழியில் قَلْبٌ என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு சிசு தாயின் கருவறையில் கருத்தரித்ததும் இதயம் பல செல்கள் சேர்ந்து உருவாக ஆரம்பிக்கின்றது. அதன்பின் 21ஆம் நாளிலிருந்து இதயம் துடிக்க ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் இரத்த ஓட்டமும் ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் இருந்து நாம் மரணிக்கும் வரை இதயம் ஓயாது தொழிற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
எமது இதயம் நெஞ்சறையில் சற்று இடப்பக்கமாக அமைந்துள்ளது. இது தசையாலான ஒரு உறுப்பாகும். ஒவ்வொருவரது இதயமும் அவரது கை முஷ்டியின் பருமனை ஒத்திருக்கும். இதயம் நான்கு அறைகளைக் கொண்டமைந்துள்ளது. அவை வலது சோனையறை, வலது இதயவறை, இடது சோனையறை, இடது இதயவறை என்பனவாகும். இவ்வறைகள் குருதியை முறையாகவும் படிப்படியாகவும் உடல் முழுதும் வினியோகிக்கப் பெரும் பங்காற்றுகின்றன.
இதயத்தை வலது இடதாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியும். இவ்வாறு இதயத்தின் இடது பக்கப் பாதியை வலது பக்கப் பாதியிலிருந்து பிரிப்பது இதையப் பிரிசுவர் என அழைக்கப்படுகினறது. வலது புற இதயச் சோனைக்கும் இதயவறைக்கும் இடையே முக்கூர்வால்வு (Tricuspid valve) காணப்படுகின்றது. அதேபோன்று இடதுபுற இதயச் சோனைக்கும் இதயவறைக்கும் இடையே இருகூர் வால்வு (Bicuspid valve) காணப்படுகின்றது. இவ்வால்வுகள் சோனையறையை அடைந்த குருதி மீண்டும் இதயவறைக்குத் திரும்பிச் சென்றுவிடாது கதவுபோன்று திறந்தும் மூடியும் தடுக்கின்றன.
இனி இவ்விதயத்தின் பிரதான தொழில்களைப் பற்றி சுறுக்கமாகப் பார்ப்போம்.
1. உடல் முழுதும் குருதியைப் பாய்ச்சுதல்
எமது உடலில் குருதிச் சுற்றோட்டம் தொடர்ந்தும் நிகழ்ந்துகொண்டே இருக்க இவ்விதயமே காரணம். உடல் முழுதும் காணப்படுகின்ற ஒட்சிசன் அகற்றப்பட்ட குருதி உடலின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் முற்பெருநாளத்தினூடாகவும் பிற்பெருநாளத்தினூடாகவும் வந்து, வலது சோனையறையில் சேர்கின்றது. வலது சோனையறை சுருங்கும்போது அங்கு வந்து சேர்ந்த ஒட்சிசன் அகற்றப்பட்ட குருதி முக்கூர் வால்வினூடாக வலது இதயவறைக்குள் செல்கின்றது. மீண்டும் அங்கு நிகழும் சுருக்கம் காரணமாக சுவாசப்பை நாடிகளினூடாக குருதி சுவாசப்பையை வந்தடைகின்றது.
சுவாசப்பையை வந்தடைந்த குருதி அங்கிருந்து ஒட்சிசனை நிறப்பிக்கொண்டு சுவாசப்பை நாளங்களுடாக இடது சோனையறையை வந்தடைகின்றது. மீண்டும் அங்கு நிகழும் சுருக்கத்தின் காரணமாக இருகூர் வால்வுகளினூடாக குருதி இடது இதயவறையினுள் செல்கின்றது. பின்னர் அங்கு நிகழும் சுருக்கப் பெறுகத்தால் தொகுதிப் பெருநாடியூடாக உடல் முழுதும் ஒட்சிசன் வாயு ஏற்றப்பட்ட குறுதி வினியோகிக்கப்படுகின்றது. இவ்வாறு குருதிச் சுற்றோட்டம் உடல் முழுதும் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. குருதிச் சுற்றோட்டம் பற்றி முதன் முதலில் உலகிற்கு விளக்கப்படுத்தியவர் இப்னு நபீஸ் ஆவார். இவர் தற்போதும் மேற்குலக மறுத்துவர்களினால் குருதிச் சுற்றோட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.
இதயத் தசைகள் சுருங்கி விரிவதற்கேற்பவே உடலில் இரத்தச் சுற்றோட்டம் நிகழ்கின்றது. இதயம் சுருங்கி விரியும் இச்செயற்பாட்டையே நாம் இதயத் துடிப்பு என்கின்றோம். சுகதேகியான ஒருவரின் இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 60 – 80 இற்கும் இடைப்பட்டதாகும். எமது இதயம் ஒரு நாளைக்கு 103,680 தடைவைகள் சுருங்கி விரிகின்றது. ஒரு முறை சுருங்கும்போது இதயம் 8m.l. இரத்தத்தை முழு உடலுக்கும் பாய்ச்சுகின்றது. அதன்படி இதயம் ஒரு நாளைக்கு 8300l இரத்தத்தை உடல் முழுதும் பாய்ச்சுகின்றது.
2. விடயங்களை உணர்ந்து சிந்திக்கின்றது.
இதயமும் பலதையும் உணர்ந்வதோடு சிந்திக்கின்றது என கலிபோனியாவைச் சேர்ந்த இதயம் தொடர்பான துறைசார் பேராசிரியர் “ரோவ்லின் மெகார்த்தி” பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “இதயத்திற்கு மூளையையும் ஏனைய உடல் அவயங்களையும் ஹோர்மோன்களையும் கட்டுப்படுத்தக்கூடிய அபரிமிதமானதும் தனித்துவமானதுமான ஒரு ஆற்றல் காணப்படுகின்றது. அதேபோன்று உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற தகவல்களை அதேவடிவில் தன்னுள் சேமித்துவைக்கும் தொழிலையும் இதயம் செய்கின்றது. உண்மையில் இதயம் அதனுள் ஒரு மூளையைக் கொண்டு செயற்படுகின்றது” என்று அவர் கூறுகின்றார்.
ஆச்சரியம் என்னவென்றால் மறுத்துவ விஞ்ஞானம் இன்று, நேற்று கண்டுபடித்த இந்த அற்புதத்தை அல்குர்ஆன் இற்றைக்கு 1432 வருடங்களுக்கு முன்பே கூறியிருப்பதுதான். பாருங்கள் அல்லாஹ் எவ்வாறு அழகாக இவ்விடயத்தைக் கூறுகின்றான் என்று.
“அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணித்தால்) உணர்வுபெரும் இதயங்கள் அல்லது நல்லவற்றைக் கேட்கக் கூடிய காதுகள் அவர்களுக்கு அதன் மூலம் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்களது பார்வைகள் குருடாகவில்லை எனினும் நெஞ்சங்களில் இருக்கின்ற இதயங்கள் குருடாகிவிட்டன.” (22:46)
3. விடயங்களைச் சேமித்துவைக்கின்றது.
இதயத்தில் இலட்சக்கணக்கான மரபணுக்கள் காணப்படுகின்றன. இம்மரபணுக்களுக்கு பல்வேறு தகவல்களையும் சேமித்துவைக்கும் ஆற்றல் இருப்பதாக மறுத்துவ விஞ்ஞானம் விளக்குகின்றது. இதுதொடர்பாக அரிஸோனா பல்கலைக்கழகத்தின் உளவியற்துறைப் பேராசிரியர் “ஷுவாத்ஸ்” பின்வருமாறு விளக்குகின்றார்.
“ஞாபகிப்பதும் விடயங்களைச் சேமித்துவைப்பதும் மூளைக்கு மாத்திரம் உரித்தானதொரு விடயமல்ல. மாறாக இதயமும் இப்பணியைக் கட்சிதமாகச் செய்கின்றது.” மேலும் இம்மரபணுக்கள் இதயத்திற்கு வந்துசேரும் தகவல்களைச் சேமித்துவைத்து பின்புதான் அவற்றை மூளைக்கு அனுப்புகின்றன. அதன்பின்பே மூளை சிந்தித்து செயல்வடிவில் கொண்டுவர மனிதனைத் தூண்டுகின்றது. இதயம்; சேமித்துவைத்த தகவல்கள் அழிந்துவிடுவதில்லை. இவை மறுமை நாள் நிகழும் வரை அப்படியே இருக்கும். மனிதன் மரணித்தாலும் கூட ஏதோ ஒரு விதத்தில் அவை பாதுகாக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்.
“அவன் அறிந்துகொள்ள மாட்டானா? மண்ணறைகளிலுள்ளவை (எழுப்பப்பட்டு) வெளியேற்றப்படும்போது, இதயங்களிலுள்ளவையும் வெளியாக்கப்பட்டுவிடும்.” (100:9,10)
4. மனித நடத்தைகளைத் தீர்மானிக்கின்றது.
மனிதனது நடத்தைக் கோலங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிளும் இதயம் பாரிய தாக்கம் செலுத்துகின்றது. உங்களது இதயத்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒருவரது இதயத்தைப் பொறுத்தினால் நிச்சயமாக உங்களது நடத்தையிலும் பண்பாட்டிலும் கண்ணோட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதனை மருத்துவர்கள், இதயமாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட அதிகமானவர்களிடத்தில் அவதானிக்கத்தக்க பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமையை கண்டறிந்து உறுதிசெய்கின்றனர்.
பொருத்தப்பட்ட இதயம் யாருடையதாக இந்ததுவோ அவரது பண்புகள் காலப்போக்கில் உங்களிலும் பிரதிபளிப்பதை வெளிப்படடையாகவே அவதானிக்க முடியும். அவர்களது உணர்வுகளிலும் விருப்பு, வெறுப்புகளிளும் அன்றாட பழக்கவழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் முன்பிருந்ததைவிட இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னால் பல மாற்றங்கள் ஏற்பட்டதனை மருத்துவர்களால் அவதானிக்க முடிந்துள்ளது. இதுதொடர்பானதொரு சம்பவத்தை இங்கு குறிப்பிட முடியும்.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இதய நோய்க்குள்ளானபோது அதே சமயத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்த ஒரு குற்றவாளியினது இதயம் குறித்த தொழிலதிபருக்குப் பொருத்தப்பட்டது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டு சில வருடங்களிலேயே இத்தொழிலதிபரில் முன்பைவிட பல வித்தியசாமான நடத்தைகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. சிந்தனா ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் பலமோசமான, கடுமையான குணாதிசயங்கள் அவரிடத்தில் காணக்கிடைத்தன. இறுதியில் அவர் ஒரு குற்றவாளியாகவே மாறியமை பலரையும் ஆச்சரியப்படவும் கவலைகொள்ளவும் செய்தது.
மனிதனது இதயம் அவனது முழு உடலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இதயம் சீர்கெட்டுவிடும் சந்தர்ப்பத்தில் அவனது நடத்தையிலும் பழக்கவழக்கங்களிலும் நம்பிக்கைக்களிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஒன்றே போதிய சான்றாகும். இவ்வுண்மையை நபி (ஸல்) அவர்களது பின்வரும் பொன்மொழி மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதனை அவதானிக்கலாம்.
நபியவர்கள் கூறினார்கள் “அறிந்துகொள்ளுங்கள் மனிதனது உடலிலே ஒரு சதைக் கட்டி இருக்கின்றது. அது சீரடைந்தால் முழு உடலும் சீர் பெற்றுவிடும். அது சீர் கெட்டுவிட்டால் முழு உடலும் சீர் கெட்டுவிடும். அறிந்துகொள்ளுங்கள் அதுதான் இதயம்” என்றார்கள். (புகாரி,முஸ்லிம்)
5. இதயம் மற்றுமொரு இதயத்துடன் உரையாடுகின்றது.
“Heart Math” என்ற தனது நூலில் டாக்கடர் Pearsall இதயங்களுக்கிடையிலான உரையாடலைப் பின்வருமாறு கூறுகின்றார். “இதயம் உணர்கின்றது, ஞாபகிக்கின்றது, அத்தோடு வேறு ஒரு இதயத்தால் விளங்க முடியுமான எண்ண அலைகளையும் வெளியிடுகின்றது. இது எதுபோன்றதென்றால், இதயம் எவ்வாறு ஒவ்வொரு கணப்பொழுதும் உடலின் பல பாகங்களில் இருந்தும் வருகின்ற தகவல்களைப் பெற்று அவற்றை மூளைக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் மின் அலைவடிவில் கடத்துகின்றதோ அதுபோன்றதாகும்.” இதனை விஞ்ஞானம் Telepathy என்கின்றது.
ஆய்வாளர்களது கண்டுபடிப்பின்படி மூளையைவிடவும் இதயத்தின் மின் அலைகள் நூறு மடங்கு பலமிக்கவை. அதேபோன்று இதயத்தின் மின் காந்த சக்தி மூளையைவிடவும் 5000 மடங்கு பலமானதாகும் என்கின்றனர். இந்த மின் அலைகள் மற்றும் மின்காந்த சக்தி மூலம் இதயம் சூழவுள்ளவர்களைக் கவர்ந்து ஈர்த்துவிடுகின்றது. அல்லது எண்ண அலைகளை அனுப்புகின்றது. ஒரு மனிதர் மற்றுமொருவருடன் வாய் மூலம் போசாது இதயத்திணூடாகவும் உரையாட முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
சிலபோது நீங்கள் மனதுக்குள் நினைத்த ஒரு பாடலை இன்னுமொருவர் சப்தமிட்டுப் பாடிக்கொண்டுவருவார். நீங்கள் சொல்ல நினைத்த விடயத்தை உங்களது நண்பர் அப்படியே சொல்லி முடிப்பார். நீங்கள் ஒருவரைப் பார்த்து அவர் உங்களைப் பார்க்கவேண்டுமென நீங்கள் எண்ணினால், அவ் எண்ண அலைகள் அவரைச் சென்றடைந்தால், அவரும் உங்களைத் திரும்பிப்பார்ப்பார். இவை யாவும் உள்ளத்தின் எண்ண அலைவடிவிலான உரையாடல்களின் ஒரு வகையாகும்.
இதயத்தின் வகைகள்.
அல்லாஹ் அல்குர்ஆனிலே இதயத்தை ஆறாக வகைப்படுத்திக் கூறுகின்றான். பின்னர் அவற்றில் இரண்டு விதமான இதயத்துடன் யாரெல்லாம் மறுமைநாளில் இறைவனைச் சந்திக்க வருகின்றார்களோ அவர்களுக்கே சுவனம் செல்லும் தகுதியும் உண்டு என்று கூறுகின்றான். இதயத்தின் வகைகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
அமைதியடைந்த இதயத்தை அல்குர்ஆன் ஆரோக்கியமான இதயம் قلب سليم (37:84(26:89)என்றும் அழைக்கின்றது.
இவ்விதயங்களில் மீளக்கூடிய இதயத்துடனும் அமைதியடைந்த அல்லது ஆரோக்கியமான இதயத்துடனும் யார் மறுமையில் தன்னைச் சந்திக்க வருகின்றாரோ அவரை சுவனத்தில் பிரவேசிக்கச்செய்வதாக அல்லாஹ் கூறுகின்றான். இதுவல்லாத மற்ற நான்கு வகையான இதயங்களும் நோயுடைய ஆரோக்கியமற்ற இதயங்களாகும். “இதயத்தில் ஓட்டை (Whole in the Heart)> மாரடைப்பு (Heart Attack)” போன்ற நோய்கள் இதயத்தைப் பீடிப்பதையிட்டும் நாம் அஞ்சுவதோடு அதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகுந்த சிறத்தையும் எடுத்துக்கொள்கின்றோம்.
ஆனால் அவற்றைவிடவும் கொடிய பல இதயநோய்கள் (امراض القلب) இருக்கின்றன. அவை பற்றி நாம் அலட்டிக்கொள்வதே இல்லை. பொறாமை, பெருமை, வஞ்சகம், பொய், புரட்டு, குரோதம், நிதானமின்மை என்பன அவற்றுள் சில. இவற்றிலிருந்தும் எமது இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் முஹாஸபா, தஸ்கியா, திக்ர், அவ்ராத் என பல்வேறு வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளார்கள். இவற்றின் மூலம் எமது இதயத்தை மேற்கூறிய ஆரோக்கியமான இரண்டு உள்ளங்களாக மாற்றிக்கொள்வதையே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
இதயம் எப்போது அமைதியடையும் என்பதை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். “அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதுகொண்டுதான் இதயங்கள் அமைதிபெறுகின்றன.” (அர்ரஃது : 28) எனவே இறை சிந்தனை இருக்கும்போதெல்லாம் உள்ளம் அமைதியடைந்திருக்கும். இறை சிந்தனை அற்றுப்போய் என்று சைத்தானிய சிந்தனை உள்ளத்தை ஆக்கிரமிக்கின்றதோ அன்று உள்ளம் அமையிழந்து போகின்றது. சைத்தான் எப்போதும் மனித இதயங்களை ஆக்கிரமிக்கவே முயற்சிக்கின்றான். ஏனெனி்ல் மனித இதயம் நடத்தைகளைத் தீர்மானிக்கின்றதல்லவா? அதனால்தான்.
அத்தோடு இதயம் இரத்தத்தை உடல் முழுதும் கொண்டு செல்வதால் சைத்தான் இதயத்தில் வந்து அமர்ந்தால்தான் அவனால் இலகுவாக உடல் முழுதும் நாடி நாளங்களெல்லாம் ஓட முடியும். சைத்தான் மனிதனது நாடி நாளங்களெல்லாம் ஓடுகின்றான் என்பது ஆதாரபூர்வமான நபி மொழி என்பதையும் ஞாபத்திற்கொள்ளவேண்டும்.
ஆக “இதயம் என்பது வெறுமனே ஒரு சதைப் பிண்டம், அது குருதியைப் பாய்ச்சும் வேலையை மட்டும்தான் செய்கின்றது” என்றுதான் இதுகாலவரை நாம் அறிந்துவைத்திருந்தோம். விஞ்ஞானமும் கூட இதுபோன்றதொரு விளக்கத்தையே கூறிக்கொண்டிருந்தது. ஆனால் இதற்கும் மேலாக, இதயத்தின் பல்வேறு தொழில்களைப் பற்றி 1400 வருடங்களாக அல்குர்ஆனும் அல்ஹதீஸும் கூறிவருவதை நாம் அவதானிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இதயம் ஆற்றும் பல்வேறு தொழில்களில் ஒரு சிலதைத்தான் நாம் இங்கு பார்த்தோம். இத்துனை பெரும் அற்புதங்களைச் சுமந்திருக்கும் அல்குர்ஆன் எத்துனை மகோன்னதம் மிக்கதென்பதை இதிலிருந்தே விளங்கமுடியும். “அல்ஹம்துலில்லாஹ்” என்று அவனுக்கு ஒரு முறை நன்றி செலுத்துவோம்.
“அல்லாஹ்தான் ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்களுடைய தாய்மார்களின் வயிருகளிலிருந்து உங்களை வெளிப்படுத்தினான். மேலும் உங்களுக்கு செவிப்புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் - நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக ஆக்கியுள்ளான்.” (16:78)
குறிப்பு எனது இந்த ஆக்கம் அல்ஹஸனாத் மற்றும் அகரம் சஞ்சிகைகளில் பிரசுரமானது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)குறிப்பு எனது இந்த ஆக்கம் அல்ஹஸனாத் மற்றும் அகரம் சஞ்சிகைகளில் பிரசுரமானது.
2 comments:
please see this article by zakir nayak
http://moosa-mpktntj.blogspot.com/
அப்போ நப்ஸ் கல்ப் இரண்டும் ஒன்றா
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...