சிறுவயது முதலே செல்லப்
பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு அலாதி விருப்பம். நான் ஒன்பதாம் ஆண்டு படித்து முடிக்கும்
வரை வசித்தது எனது வாப்பாவின் ஊர் கொடவலையில்தான். எமது வீட்டுக்குப் பின்னால் பெரிய
இரப்பர் தோட்டம். குளிர்ச்சியான கால நிலை. நீர் ஊற்றுக்கள், நீர் ஓடைகள், நீர் வீழ்ச்சிகள், குன்றுகள், மேடுகள், பள்ளனங்கள் என அழகான சுற்றுச் சூழல். பாடசாலை விட்டு
வீடு வந்து மாலைப் பொழுதுகளில் மலை ஏறுவது எனக்கும் எனது சம வயது நண்பர்களதும் வழக்கம்.
தொலைக் காட்சியில் போகும் Rambo கார்டூனைப் பார்த்துவிட்டு
அது போன்று வேடம் அணிந்துகொண்டு கத்தி, கம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு மலை ஏறுவோம். சிறு மரங்களை வெட்டி வீழ்த்துவதும்,
மரத்திற்கு மரம் தாவிப் பாய்வதும்,
மேடு பள்ளங்களில் பாய்ந்து
ஓடுவதும், காட்டு மாங்காய்,
கொய்யா, விரலிக்காய் போன்றவற்றை மரத்திலிருந்துகொண்டே ருசி
பார்ப்பதும் கூடாரங்களை அமைத்துக்கொண்டு கள்வன் பொலிஸ் விளையாடுவதும் இன்னும் நினைவில்
ஜொலிக்கின்றன.
வித விதமான உயிரினங்களைக்
கண்டு பிரமித்து இரசிக்க ஆரம்பித்தது இந்தக் காட்டுப் பகுதியில் இத்தகையதொரு சூழலில்தான்.
வீட்டுப் பக்கம் வரும் குரங்கு, அனில், மர அனில், கிளி, மைனா, பருந்து, சென்பகம், பாம்பு, பூரான், தேள் இவற்றையெல்லாம் அலட்சியப் படுத்தாமல் பார்த்து
மகிழ்வேன். வயல் வெளியில் உலவும் மாடுகள், எருதுகள், ஆடுகள் கூட என்னைக்
கவர்ந்துள்ளன. அவற்றோடு உயிராய்ப் பலகுவேன். அவற்றின் அழகையும் விளையாட்டுக்களையும்
செயற்பாடுகளைப் பார்த்து ரசித்து இன்பமடைவது எனது முக்கியமானதொரு பொழுது போக்கு. எங்காவது
ஒரு மரத்தில் அனில் குட்டிகளின் 'கீச்' சப்தம் கேட்டால் மரத்தில் ஏறி அனில் குட்டியொன்றை
வீட்டுக்கு எடுத்து வந்து பெட்டிப் பால் கொடுத்து வளர்ப்பேன். பாவம் இறந்துவிடும்.
குருவிக் குஞ்சுகள்
விழுந்திருந்தால் அவற்றையும் கொண்டு வந்து வீட்டில் ஏச்சு வாங்குவேன். தேங்காய் பூ
போட்டு குந்து காலிக் குருவிகளையும் பிடித்துள்ளேன். பூனைக் குட்டிகளும் வளர்த்திருக்குறேன்.
வீட்டின் பின்புறத்தில் ஒரு தடைவ நாயொன்று குட்டிபோட்டது. கூடமைத்து அவற்றையும் சிறிது
காலம் வளர்தேன். ஆமை, ஆடு, புறா, முயல், மைனா, கிளி, மீன், என சிறு வயதிலேயே
இவற்றையெல்லாம் வளர்த்துள்ளேன்.
மேற்படிப்புக்காக
சில வருடங்கள் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் தங்கி
இருந்ததால் இவற்றைத் தொடர முடியாமல் போனது. ஆனால் இந்த உயிரினங்கள் பற்றி ஆழமாகப் படித்துக்கொள்வதற்கு
எனது கல்லூரி ஒரு சிறந்த தளமாக அமைந்தது. கல்லூரியின் வாசிகசாலையில் இருந்த அதிகமான
புத்தகங்களில் நான் இவற்றைத்தான் தேடினேன். கல்லூரி வாசிகசாலையில் இருந்த Encyclopedia
Britannica, Planet Earth ஆகிய நூல்கள் எனக்கு
பெரிதும் உதவின. நாளாந்தப் பத்திரிக்கைகளிலும் விலங்கியலுடன் தொடர்பான கட்டுரைகள்,
ஆக்கங்கள் வந்தால் உடனே எடுத்துப்
படித்து விடுவேன்.
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உயிரினங்கள் தொடர்பான வசனங்களையெல்லாம்
தொகுத்துக் கொண்டிருக்கும் வேலையில்தான் அகரம் சிறுவர் சஞ்சிகை எனக்கு அறிமுகமானது.
இது கல்லூரியின் முதலாம் வருடம். அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. அல்குர்ஆன் கூறுகின்ற
உயிரினங்கள் பற்றி விஞ்ஞானம் கூறும் விடயங்களைத் தொகுத்து அகரம் சஞ்சிகையில் தொடராக
எழுதினால் என்ன என்றொரு சோசனை. அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் என்று தொடராக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
இதுவரை 98 தொடர் கட்டுரைகளை
எட்டு வருடங்களாக தொடர்ந்து எழுதிவருகின்றேன். படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்
என்ற தலைப்பில் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!
சிறுவயதிலிருந்தே
தொற்றிக்கொண்ட இந்தப் பழக்கம் இன்னும் தொடர்கின்றது. தொட்டில் பழக்கம் சுடு காடுவரை
என்பது உண்மைதான். கல்லூரியிலிருந்து வந்ததும் இறைவனின் படைப்புகள் பற்றிய ஆழமான அறிவுடன்
அவனது படைப்புகள் பற்றி இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லப் பிராணிகளின்
வளர்ப்பை மீண்டும் ஆரம்பித்துள்ளேன். முன்பு பொழுது போக்குக்காக மட்டுமே செய்ததைத்
தற்போது ஒரு இபாதத்தாகச் செய்துவருகின்றேன். அல்லாஹ்வின் படைப்புகளில் உள்ள அற்புதங்களைத்
தேடி அறியவேண்டும் என்ற நோக்கில். Discovery,
National Geography, Animal Planet மற்றும் மிருகக் காட்சி சாலைகளில் பார்ப்பது மட்டுமன்றி
முடியுமான சிலதை வீட்டுச் சூழலிலும் வளர்த்துப் பார்ப்போமே என்ற ஆசையில் எனது உம்மாவின்
ஊரான எல்லலமுல்லையில் வளர்த்து வருகின்றேன்.
முதலில் ஒன்றைச் சொல்லிக்
கொள்ளவேண்டும். எமது வீட்டுத்தோடம் ஒன்றும் ஏக்கர் கணக்கான நிலப்பரப்பைக் கொண்ட இடமல்ல.
வெறும் பத்துப் பேர்ச்சஸ் நிலம்தான். அதில் வீடு போக எஞ்சியுள்ள சிறு பகுதியில்தான்
இவற்றையெல்லாம் செய்துவருகின்றேன்.
கருப்பு, வெள்ளை, கருப்பு வெள்ளை, சாம்மல், சொக்லட் என பல நிறங்களைக்கொண்ட வித்தியாசமான இருபது
புறாக்கள் இருக்கின்றன. அவற்றுக்கென்று தனியாக ஒரு கூட்டையும் அமைத்துள்ளேன். காலையில்
கூட்டைத் திறந்துவிட்டால் சுதந்திரமாகப் பறந்து திரிந்துவிட்டு சரியாக மாலை ஆறு மணிக்கெல்லாம்
கூட்டுக்குள் அடைந்து விடும். என்னையும் எனது வீட்டாரையும் நன்கு அடையாளம் தெரிந்து
வைத்திருக்கின்றன. அவற்றுக்கு உணவு வைக்கும் தட்டைக் கையில் எடுத்தால் போதும் பறந்து
வந்து சூழ்ந்துகொள்ளும். புறாக்கள் பற்றி எழுதிய
கட்டுரையொன்று அகரம் சஞ்சிகையில் ஒரு தடவை பிரசுரமாகியது.
புறாக் கூட்டுக்குப்
பக்கத்தில் இன்னுமொரு கூட்டில் பத்து முயல்கள் இருக்கின்றன. வெள்ளை, கருப்பு, சாம்பல் என்ற நிறங்களில் முயல்கள் உள்ளன. ஒரு பகுதியை
எல்லைப் படுத்தி கம்பியால் அடைத்து வைத்துள்ளேன். அவற்றையும் கூட்டிலிருந்து திறந்து
விட்டால் அப்பகுதியில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். பார்க்க அருமையாகவும் அழகாகவும்
இருக்கும். எப்படியும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குட்டி ஈன்றுகொண்டே இருக்கும்.
மேலும் 3 வாத்துகளும் 4 தாராக்களும் ஒரு சேவல் உட்பட 7 கோழிகளும் உண்டு. வீட்டில் எஞ்சுகின்ற சோறு,
பான், கறி வகைகளயும் நெல், அரிசி, தவிடு போன்றவற்றையும் கொடுக்கின்றேன். ஆரம்பங்களில் வீட்டில் சேரும் இதுபோன்ற எச்சில்
மீதிகளைக் கொட்டுவதே பெரும் சிறமமாக இருந்தது. ஆனால் தற்போது அவற்றைக் கோழிகளும்,
வாத்துக்;களும் மிச்சம் வைக்காமல் உண்டு விடுவதால் அந்தப்
பிரச்சினை இல்லை. அவற்றை வெறுமனே வீசுவதால் விரயமாவது மட்டுமன்றி சூழலும் மாசடைகின்றது.
ஆனால் தற்போது அவற்றை எனது கோழிகளும் வாத்துக்களும் உண்பதால் விரயம் தவிர்க்கப்படுவதோடு
ஸதகாவுடைய நன்மையும் கிடைக்கின்றது போஷாக்கு நிறைந்த முட்டையும் கிடைக்கின்றது சிலபோது
முட்டைகளை விற்பதால் பணமும் கிடைக்கின்றது. இவற்றோடு மட்டும் நிற்காமல் இவை பெரும்பாலும்
நிலத்தைக் கிளறித் தேடி புழு, பூச்சிகளையும் உண்கின்றன.
பக்கத்திலுள்ள ஒரு தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள காட்டுக் கீரை வகைகளையும் தேடி
உண்டுவிட்டு வீட்டுக்கு வந்து சேரும். வாத்துக்களுக்கும், தாராக்களுக்கும் நீந்துவதற்கு நீர் மிக அவசியம்.
எனவே ஒரு பிளாஸ்டிக் பேஸனில் ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் நிறைத்து வைப்போம். அவை
அதில் நீந்திக் குளித்து விளையாடும்.
இன்னுமொரு கூட்டில்
எட்டு காடைக் கோழிகள் இருக்கின்றன. அவை தோற்றத்தில் சிறிதாகவும் அழகாகவும் இருக்கும்.
காடைக் கோழிகளின் மாமிசமும் அவற்றின் முட்டைகளும் நல்ல சுவை போன்றே மிகுந்த சத்தும்கொண்டவையாகும்.
உலகிலுள்ள எந்த இயந்திரத்தில் பூச்சி புழுக்களை, எஞ்சிய எச்சில்களைப்போட்டாலும் அதனை அவற்றால் முட்டைகளாக
மாற்ற முடியாது. ஆனால் அல்லாஹ் தந்துள்ள இந்த இயற்கை இயந்திரம் சுற்றுச் சூழலில் உள்ள
அழுக்குகளை உண்டு விட்டு அழகிய முட்டைகளை நமக்குத் தருகின்றன.
இன்னும் ஐந்து மீன்
தொட்டிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் அழகழகான சிறிய வர்ண மீன்கள் இருக்கின்றன.
மற்றுமொன்றில் மாபல் கெட் பிஷ் எனும் இரண்டு பெரிய மீன்களும் Tank cleaner எனும் இரண்டு மீன்களும்
இருக்கின்றன. இன்னுமொரு பகுதியில் ஜயன்ட் குராமி (Giant Gourami) எனும் இரண்டு பெரிய மீன்களும் கெட் பிஷ் வகையான
3 பெரிய மீன்களும் இருக்கின்றன.
Cocktail என்றழைக்கப்படும் ஒரு சோடிக் கிளிகள் இருக்கின்றன.
வித்தியாசமான கிளிகள். இவை பழங்கள் சாப்பிடுவதில்லை. பஜ்ரி, நெல், சூரிய காந்தி விதை, கெனேரி விதை என்பவற்றோடு
கீரை வகைகளும் பிஸ்கட் வகைகளும்தான் உண்கின்றன. இவை விரைவில் எம்மைப் போன்று பேசக்
கற்றுக்கொள்ளும். இன்னும் love
birds என்றழைக்கப்படும் பஜ்ரிகர் பறவைகள் பத்தும் இருக்கின்றன.
மிகவும் துடிதுடிப்பான குருவிகள். விர் விர்ரென்று சிறகடித்துப் பறக்கும். பல வர்ண
நிறங்களைக் கொண்டவை. கிரீச் கிரீச் என்று ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறாக இப்போதைக்கு
இந்தப் பிராணிகளைப் பராமறித்து வருகின்றேன். உண்மையில் இவற்றைப் பார்த்து ரசிப்பதில்
மட்டுமன்றி இவற்றுக்கு உணவு கொடுப்பதிலும் கூடுகளைச் சுத்தம் செய்வதிலும் கூட ஒரு அலாதி
சுகம் இருக்கின்றது. இன்னும் பெரிய அளவில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.
இடம் போதாத குறைதான். இவற்றைப் பராமறித்து வருவதில் எனது தம்பியும், வாப்பாவும் மிகவும் உதவியாக இருக்கின்றனர். நான்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மேற்குப் பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றுகின்றேன்.
ஜமாஅத்தின் பணிகளுடன் இந்த வேலைகளையும் செய்வதற்கு அவர்கள் பெரிதும் உதவுகின்றனர்.
இந்தப் பிராணிகளின்
உணவுக்கு எப்படியும் மாதம் 1000 ரூபாவாவது செலவாகும்.
மற்றபடி வீட்டில் எஞ்சும் உணவுகளையும் கீரை வகைகளையும் சுற்றியுள்ள காட்டுக் கொடிகளையும்
உண்ணக் கொடுப்பதால் பெரிதாக செலவாதில்லை. அப்படி செலவானாலும் இடையிடையே முயல்,
புறா, கோழி முட்டை, வாத்து முட்டை மற்றும் காடை முட்டை என்பவற்றை விற்பனை
செய்வதால் கிடைக்கும் தொகையில் அது சரியாகிவிடும். அது மட்டுமன்றி மனதுக்கு சந்தோசம்,
நிம்மதி எனும் பெரும் வருமானம்
இதனால் கிடைப்பது 1000 ரூபாவை விடப் பெரிது.
எமது வீட்டினர் மட்டுமன்றி சுற்றியுள்ளவர்களும் அவர்களது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க
இங்குதான் வருவார்கள். ஏன் அண்மையில் ஒரு பாலர் பாடசாலையிலிருந்தும் மாணவர்கள்,
ஆசிரியர்கள் சகிதம் வந்து
எனது Mini zoo ஐப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். இவையெல்லாம்
மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.
இவைபோக வீட்டின் முற்றத்தில்
பூ மரங்களையும் மூலிகைகளையும் கீரைகளையும் நட்டு அழகு படுத்தும் வேலைகளை உம்மா அழகாகச்
செய்வார். அவர் நடும் மரங்களை சிலபோது கோழிகள் தின்றுவிட்டால் ஏச்சுக்களை நான்தான்
வாங்கிக்கொள்ளவேண்டும்.
உண்மையில் இறைவனின்
படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து அறிவதனூடாக அவனுடைய வல்லமைகளை விளங்கிக்கொள்ள முடியும்.
அதனால்தானே அல்குர்ஆனிலும் ஈ முதல் யானை வரை சொல்லப்பட்டிருக்கின்றது. இணையத்தலத்தில்
Home farming, Birds Aviary என்று தேடிப் பாருங்கள்
வெளிநாட்டவர்கள் இதனை ஒரு பொழுதுபோக்காகவே செய்துவருகின்றனர். அவர்களது குழந்தைகளின்
அறிவுத் தேடலுக்கு வீட்டில் இதுபோன்ற அம்ஷங்களை ஏற்படுத்தி வழிகாட்டுகின்றனர். போட்டிகள்
வைத்து பரிசில்கள் எல்லாம் வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர்.
ஆனால் இன்றைய எமது குழந்தைகளிடம்
நான் ஆரம்ப வரிகளில் சொன்ன எமது அன்றைய காலங்கள் தொழைந்து போயுள்ளன. அன்று பிள்ளைகள்
ஓடையில் மீன் பிடிக்கச் சென்றால், சேற்றில் விளையாடினால்
பெரியவர்கள் அடிப்பார்கள். ஆனால் இன்று பாலர் பாடசாலைகளின் கல்வித் திட்டத்தில் ஒன்றுதான்
ஓடைகளுக்கும் வயல் வெளிகளுக்கும் பிள்ளைகளை சுற்றுலா அழைத்துச் செல்வது. நேரத்தையும்
காலத்தையும் வீட்டுச் சூழலையும் சரியாகத் திட்டமிட்டால் உங்களாலும் இவ்வாறு ஒரு Mini zoo செய்யலாம். இன்ஷா அல்லாஹ்!
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
Regional Coordinator slji –
western
1 comments:
exellant post.all i love it.thank-you very much my dear brother
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...