நாம் ஒரு விடயத்தை
உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ்
ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான்.
இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின்
மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின்
மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான்.
முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப்
பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
பெயர்.
அரபு மொழியில் ஸைZதூன் என்றும் ஆங்கிலத்தில்
ஒலிவ் என்றும் தமிழிலும் ஒலிவ் அல்லது ஆலிவ் என்றும் இது அழைக்கப்படுகின்றது. அல்குர்ஆனில்
நான்கு இடங்களில் ஸைதூன் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அதில் இரண்டு இடங்களில் சுவனத்தில்
உள்ள பழங்களின் வரிசையிலும் இது சேர்த்து கூறப்பட்டுள்ளது. ஓலியா யுரோபியா என்ற தாவரவியற்
பெயர்கொண்ட, ஓலியேசியே குடும்பத்தைச்
சார்ந்த மர வகைதான் இது. இம்மரமும் அதன் பாகங்களும் சிறந்த மருத்துவப் பலன்கள் கொண்டவையாகும்.
அல்குர்ஆனின் நான்கு இடங்களில் ஸைZதூன் என்ற பிரயோகத்தில் இம்மரம், அதன் காய், எண்ணை பற்றியெல்லாம்
கூறப்பட்டுள்ளது.
வளரும் பிரதேசங்கள்.
பண்டைய கிரேக்க மற்றும்
பாரசீக காலங்கள் முதல் ஸைதூன் மரங்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இப்பகுதிகளே இவற்றின்
தாயகமாகவும் கொள்ளப்படுகின்றது. அதன் பின்பு துருக்கி, சீனா, ஆப்கானிஸ்தான், இந்திய என பல நாடுகளுக்கும்
பரவியுள்ளது. ஸைதூன் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும்,
மிதமான குளிரும் இன்றியமையாதவையாகும். இம் மரம் மத்தியதரைக்
கடல் பகுதிகளில் அதிக அளவில் வளர்கின்றது. இத்தாலி, கிரேக்கம், போர்த்துகல், துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளில்தான் ஸைதூன் எண்ணெய் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.
உலக ஸைதூன் எண்ணெய் உற்பத்தியில் ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள் முதல் மூன்று இடத்தை வகிக்கின்றன.
இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து 75% ஸைதூன் எண்ணெயை உலகிற்கு உற்பத்தி செய்கின்றன.
தோற்ற அமைப்பு.
ஸைதூன் மரம் அடர்ந்த
சிறு சிறு கிளைகளுடன் வளரக்கூடியது. இலையின் மேற்புறம் கடும் பச்சை நிறத்திலும் கீழ்ப்புறம்
வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். அகத்தி இலைகள் போன்று இவற்றின் இலைகளும் நீண்டதாக
இருக்கும். ஸைதூன் காய் ஓரளவு நமது கிராமப் புறங்களில் காணப்படும் விரளிக்காயை ஒத்திருக்கும்.
காய் பச்சை நிறத்தில் உருண்டை, நீளுருண்டை வடிவங்களில் இருக்கும். காய், கனிந்தபின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு
நிறங்களுக்கு மாறும். கனியின் நடுவில் கடினமான விதையும் அதனைச் சுற்றி திடமான சதைப்
பகுதியும் இருக்கும். இந்தக் கணியின் விதைகளைக் காயவைத்து, இடித்து பிளிந்து
எடுப்பதே ஸைதூன் எண்ணெய்யாகும். இலையிலும் காய், காயின் விதையிலும்தான் எண்ணெய்ச் சத்து அதிகமாக
இருக்கின்றது.
அருள் நிறைந்த ஸைதூன்.
ஸைதூன் பற்றி அல்லாஹ்
திருமறையில் சூரா நூரின்:35 ஆம் வசனத்தில் கூறும்போது
அதனை அருள் பொருந்தியது என்று கூறுகின்றான்.
”அல்லாஹ் வானங்கள்
பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் ஏற்படுத்தும் ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள
மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் குவலையில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசம்
நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தின் எண்ணெயினால்
எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை
நெருப்புத் தீண்டாவிடினும்,
அதன் எண்ணெய் ஒளி
வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து)
ஒளிக்கு மேல் ஒளியாகும்.“
அத்தோடு சூரா அத்தீனில்
ஸைதூன் மீது சத்தியமிட்டும் கூறியிறுக்கின்றானே! அப்படியானால் அந்த அருள்தான் என்ன? என்று ஒரு முறை அவதானிப்போம்.
ஸைதூன் எண்ணெய்.
ஸைதூன் எண்ணெய்யில்
பல்வேறு செயல்திறன் மிக்க மூலிகைச் சத்துக்கள் அடங்கியுள்ளன. ஓலிரோசைட், ஒலிரோபின், ஒலினோலிக் எனப்படும்
அமிலங்களும் லிவ்டியோலின்,
எபிஜெனின் பிளேவனாய்ட், பால்மிட்டிக் மற்றும்
ஸ்டீரிக் எனப்படும் அமிலங்களும் பெருமளவு காணப்படுகின்றன. எனவே இதனை உணவாகவும் பாணமாகவும்
சமையலிலும் அழகு சாதனப் பொருட்களிலும் மருந்தாகவும் ஏன் விளக்கை எரிப்பதற்கான எரிபொருளாகவும்
அநேக நாடுகளில் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே ஸைதூன் எண்ணெய் திரவத்தங்கம்
(Liquid Gold) என்று மதிக்கப்படுகிறது.
நமது தோலில் செயற்படும்
விதம்.
நமது தோலின் மேல்பகுதி
எபிடெர்மிஸ் (Epidermis),
அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்
(Hypodermic), மையப் பகுதி டெர்மிஸ்
(Dermis) என்று அழைக்கப்படுகிறது.
மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம்மில் பலர்
தற்போது பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்றாம் அடுக்கு வரை ஊடுருவுவதில்லை.
சிலபோது மேல் தோல் இரசாயன கலவைகளால் எரிந்து வெண்மை நிறத்தைத் தரும். ஆனால் காலப்போக்கில்
அதுவே புற்று நோய், தோல் சிரங்கு போன்ற
நோய்கள் வரக் காரணமாக அமையும். ஆனால் ஸைதூன் எண்ணெய் தோலின் மூன்று தட்டுக்களையும்
ஊடறுத்துச் சென்று சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து
ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அப்படியான ஒரு அற்புத மூலிகைதான் ஸைதூன் எண்ணெய்.
விட்டமின்கள் நிறைந்த
ஸைதூன்.
ஸைதூன் எண்ணெயில்
விட்டமின்களும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. என்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள் என்பனவும்
காணப்படுகின்றன. கால்சியம்,
பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவையும்
உள்ளன. விட்டமின் பி 1,2,3,5,6,
ஏ பீட்டா கரோட்டீன், விட்டமின் ஈ, கே, போன்றவை இதில் அதிகம்
காணப்படுகிறது.
இவை தவிர தாதுப் பொருள்களும், விட்டமின் ‘ஏ’, விட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும்
அடங்கியுள்ளன. கொழுப்புச் சத்தில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உண்டு. "மோனோ சாச்சுரேடட்"
கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லது. அதே சமயம், கொலஸ்ட்ரல் போன்றவை உடலுக்கு கேடு தரக்கூடியன. ஸைதூன் எண்ணெய்யோ
இந்த நல்ல கொழுப்பை மாத்திரம் நமக்குத் தருகின்றது. இதன் மூலம் கொலஸ்ட்ரலின் அளவைக்
குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
தோலை பளபளக்கச் செய்யும்.
வயோதிபத்தின் அறிகுறிகளில்
தோல் சுருங்குதல், தோல் வறட்சியும், முடி நறைத்தல் என்பனவும்
முக்கியமானவை. முகத்திலும் கைகள் மற்றும் கால்களில், பாதங்களில் தொடர்ந்து ஸைதூன் எண்ணெய்யைப் பூசி வந்தால்
தோல் பொழிவுடன் இருக்கும். முகத்தில் இருக்கும் பரு அடையாளங்கள், கண்களைச் சுற்றியுள்ள
கருவளையம் என்பன நீங்கி முகம் வெண்மையாகும். தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும்
பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி
ஏற்படாமல் பாதுகாக்கிறது. உள்ளங்கையின் கடினத் தன்மை மாறி மென்மையாகும். குதிகால் வெடிப்புக்களைக்
குணப்படுத்தும். தலை முடியும் கருமையாகி, அடர்ந்து வளரவும் இது காணரமாகின்றது. எனவேதான் ஸைதூன் எண்ணெயைத்
தொடர்ந்து பயன் படுத்தினால் இளமையாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு இவ்
எண்ணெய்யில் உள்ள ஒமேகா 6 கொழுப்புச் சத்து
துணை புரிகின்றது.
இதயநோயைத் தடுக்கும்.
இதயத்துக்கு ஏற்ற
மிகச்சிறந்த சமையல் எண்ணெய் என்றால் ஸைதூன் எண்ணெய்தான். உலக அளவில் குறிப்பாக மேலை
நாடுகளில் சமையலில் அதிகமாக ஸைதூன் எண்ணெய்யைத்தான்
பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்த எண்ணெய்யைச்
சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாட்டவர்களில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக
இருப்பதாக ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில்
ஸைதூன் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தினம் ஒரு தேக்கரண்டி ஸைதூன் எண்ணெய் உட்கொண்டு வந்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்
எனவும் உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஸைதூன்
எண்ணையைப் பருகி வந்தால் இரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் எனவும் அவ்வாய்வு
சுட்டிக்காட்டுகின்றது.
மார்பகப் புற்றுநோயைத்
தடுக்கும்.
உலக அளவில் பெண்களின்
உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். இந்த நோயைக் கட்டுப்படுத்தவும்
ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தால் அதனைக் குணப்படுத்துவதற்கும்
மிகச் சிறந்த மருத்துவகப் பொக்கிஷமாக ஸைதூன் காணப்படுகின்றது. ஸைதூன் எண்ணெயில் காணப்படும்
பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய்
இருப்பவர்களைக் குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய்க்
கலங்களை அழிக்கும் தன்மை கொண்டது என ஸ்பெயின் நாட்டின் ICO அமைப்பும் கிரனடா
பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவில் இது தெரியவந்துள்ளது. எனவே பெண்கள்
மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், இந்த ஸைதூன் எண்ணெயை
உபயோகிக்குமாறு ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகின்றார்.
இவ்வளவு பயன்களும்
சிறப்புகளும் இந்த ஸைதூனில் இருப்பதனால்தான் அல்லாஹ் அதன் மீது சத்தியமிட்டுக் கூறியது
மாத்திரமன்றி அது பரகத் –
அருள் பொருந்தியது
என்றும் கூறுகின்றான். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...