கற்குகைக்குள் பதுங்கியிருந்துகொண்டு இறைகளைத் தாக்கும்
விலங்கு போன்று பற்குகைக்குள் பதுங்கிக் கிடந்து பல்வேறு செயல்களைப் புரியும் நாவின் சில அற்புதத் தன்மைகளைப்
பற்றி இத்தொடரில் நோக்குவோம்.
எமது நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான எழும்புகளற்ற ஒரு தசையாகும். அத்தோடு உடலில் உள்ள வலிமையான தசைகளில் நாக்கும் ஒன்று. நாவின் வெளியே தெரியும் பகுதி அகலம் குறைந்த்தாகவும் மெல்லியதாகவும்
நாவின் உற்பகுதி அகலமாகவும் தடிப்பாகவும் காணப்படுகின்றது. எழும்பில்லாத தசைத் துண்டு
என்பதால் எப்படி வேண்டுமானாலும் வளைந்து, நெழியும் தன்மையைக்
கொண்டுள்ளது. அத்தோடு நாக்கின் நுணிப் பகுதி உடம்பிலேயே
தொடுகை உணர்ச்சி கூடிய பகுதியாகும். வாயில் ஊறும் உமிழ் நீர் நாவை எப்போதும் ஈரமாக வைத்திருக்கின்றது.
நாவை அரபு மொழியில் லிஸான் என்று அழைப்பர். அதேபோன்று மொழியையும் அரபியில் லிஸான், அல்ஸினா
என்று அழைப்பர். நாம் பேசும் மொழிகளில் தீர்கமான குரைகள் ஏற்பட
வாய்ப்புக் குறைந்த மொழி எது என்றால் அது அரபு மொழிதான். அந்த
மொழியில்தான் அல்லாஹ் அல்குர்ஆனை அருளியுள்ளான். இதனை அல்லாஹ்
குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
“எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).” [39:28]
நா செய்யும் பிரதான தொழில் சுவையை உணர்வது. நாக்கின் மேற்புறத்தில் காணப்படுகின்ற சுவை உணரிகள் சுவைகளை பிரித்தரிகின்றன. வெறுமனே நாவின் துணைகொண்டு ஒரு பொருளின் சுவையை அறிய முடியாது
என்பது நவீன ஆய்வுகளின் கண்டுபிடிப்பு. நா ஒரு பொருளின் சுவையை சரியாக ருசிக்க வேண்டுமென்றால்
கண், மூக்கு என்பவற்றின் பங்கும் மிக அவசியம். ஒரு சுவையான பண்டத்தை கண்கள் கண்டதும் சுவையை உணரும் அரும்புகள்
மெல்லச் செயல்பட ஆரம்பிக்கின்றன. அதனை வாயினருகே கொண்டு செல்லும் போது மூக்கு அதனை நுகர்ந்து விடுகின்றது. உடனே வாயில் உமிழ்
நீர் சுரந்து உணவின் வருகையை எதிர்பார்த்து நிற்கின்றது.
உணவை
வாயில் போட்டதும் அதனுடன் உமிழ் நீர் கலந்து, பற்கள் நன்கு அரைத்து, நா அதனை அங்கும் இங்கும் நன்றாகப் புரட்டி கலவையாக மாற்றுகின்றது. உடனே அங்கிருந்து பல சிக்னல்கள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. மூளை அந்த சிக்னல்களை அலசி, ஆராய்ந்து இது இன்ன சுவைதான் என்பதனை உணர்ரச்செய்கின்றது. மேலும் மென்று சுவைத்த உணவை
உணவுக் குழாய்க்குள் தள்ளி விழுங்கவும் நாவு உதவுகின்றது. இச் செயன்முறையை விளக்குவதற்கு சில வினாடிகள், சில வரிகள் எடுத்தாலும் நாவும் மூளையும் அதனை ஓரிரண்டு மைக்ரோ
செக்கன்களில் செய்து முடித்துவிடுவதுதான் மாபெரும் அற்புதம்.
எமது நாவுக்கு அல்லாஹ் ஆறு வகையான சுவைகளை உணரும்
ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான். அவை இனிப்பு (sweet), புளிப்பு (Sour), காரம் (Pungent), உவர்ப்பு (Salt), துவர்ப்பு (Astringent), கசப்பு (Bitter) என்பனவாகும். இவற்றுக்கு மேலால் ஓர் சுவையை எம்மால் உணர முடியாது. ஏனெனில் இந்த உலகில் எமக்கு வரையறுக்கப்பட்ட
சுவை நரம்புகளே தரப்பட்டுள்ளன. ஆனால் சுவனத்தில் அல்லாஹ் இந்த
வரையறையை எடுத்துவிடுகின்றான். எனவே எண்ணிலடங்காத சுவைகளை எமக்கு
சுவைக்க முடியும். ஒரு உணவை ரசித்து, ருசித்து
பல வருடங்கள்வரை உண்டு மகிழ்வது இதனாலாக இருக்கும். ஒரு பழத்தை
ஒரு முறை கடித்தால் ஒரு சுவை, இன்னொரு முறை கடித்தால் இன்னொரு
சுவை. இவ்வாறு ஒரு பழத்தில் எண்ணிலடங்கா சுவைகளை அல்லாஹ் வைத்திருப்பதுபோல
அவற்றை ருசிப்பதற்கான அமைப்பையும் சுவனத்தில் எமது நாவுக்கு வழங்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்.
“அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) அது போன்றதுதான் (அவர்களுக்கு) கொடுக்கப்பட்டிருந்தன, (ஆனால் சுவையில் வித்தியாசமானவை).” [2:25]
சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவங்கள் உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை இவ்வாறு விளக்குகின்றன.
உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டுள்ளது.
இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்களும் சமமாகப் பேணப்படல் வேண்டும்.
இவை சம்மாகப் பேணப்பட வேண்டுமானால் ஆறு சுவைகளையும் நாம் சரியாக உட்கொண்டாகவேண்டும்
என்கின்றது. அறு சுவைகளும் இத்தாதுக்களின் வளர்ச்சியில் எத்தகைய பங்கை வகிக்கின்றன என்று
பாருங்கள்.
1.
இனிப்பு - தசையை வளர்க்கின்றது –
நாக்கின் நுனி உணர்கிறது.
2. புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது – நாக்கின் இரு பகுதிகளும்
3. கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது - நாக்கின் பின் புறம்.
4. உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
- நாக்கின் மேற்புரம்.
5. துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது - நாக்கின்
மேற்புரம்
6. கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது - நாக்கின் பின் புறம்.
சுவையை உணர்வதற்கு நாவு எந்தளவு பயன்படுகிறதோ அதேபோன்று பேசவும் ஒலிகளை எழுப்பவும்
நாவு உதவுகின்றது. அண்ணலவாக
இன்று உலகில் 6900 வகையான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒரே அமைப்பிலான நாக்கு ஆனால் பல்லாயிரக்கணக்கான
மொழிகள் அதன் மூலம் பேச முடியும் என்றால் அதுவும் ஓர் மாபெரும் அற்புதம். இது அற்புதம் என்பதை அல்லாஹ் திருமரையில் குறிப்பிடுகின்றான்.
“உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு சான்றுகள் இருக்கின்றன.” [30:22]
பற்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருந்துகொண்டு வெளியிடும் மோசமான வார்த்தைகளால் உடலின் ஏனைய உருப்புகள்தான்
வேதனையை அனுபவிக்கின்றன. அதனால்தான் “சிந்திய பாலையும் சிதரிய வார்த்தையையும் திருப்பிப் பெற முடியாது” என்பார்கள். “தீயினால் சுட்ட புன் ஆறும், ஆறாது நாவினால் சுட்ட வடு” என்பது இன்னுமொரு பழமொழி.
“பேசினால் நல்லதைப் பேசுங்கள், இல்லையேல் மௌனமாக
இருங்கள்” என்பது எம்பெருமானாரின் பொன்மொழி. நாவை மிக்க் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் தான் “யார் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருப்பதையும், இரண்டு
தாடைகளுக்கு மத்தியிலிருப்பதையும் (நாவு) பாதுகாக்கின்றாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டைத் தர நான் வாக்களிக்கின்றேன்”
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தைகளது
நாக்கில் குறைந்தளவான சுவை உணரிகளே காணப்படும். இளம் வயதுடைய ஒருவரின் நாவில் சுமார் 10,000 அளவிளான சுவை உணரிகள் இருக்கும். அவை அடிக்கடி புதிதாக்கப்பட்டுக்கொண்டுமிருக்கும். என்றாலும் வயது செல்லச் செல்ல இவ் உணரிகளின் எண்ணிக்கையும்
சுவையுணரும் ஆற்றலும் குறைந்து செல்கின்றன. எழுபது வயதுள்ள ஒருவரது நாவில் 400 அளவிளான சுவை உணரிகளே இருக்கும். அத்தோடு புகைப்பிடித்தாலோ, வெற்றிலை மென்றாலோ நாக்கின் சுவை மொட்டுகள் பாதிக்கப்படுகின்றன.
அதனால் ருசியை உணரும்தன்மை மந்தமாகும். இதனால்தான் இவர்கள் உணவுடன் அதிக காரத்தைச்
சேர்த்துக்கொள்வார்கள்.
சுகயீனம் காரணமாக
நாம் வைத்தியரை நாடிச் சென்றால் அவர் நாக்கை வெளியே நீட்டச் சொல்வதை அறிவீர்கள். ஏனென்றால்
நாவுக்கு உடல் நோய்களைக் காட்டித்தரும் ஆற்றல் உள்ளதாலாகும்.
உதாரணமாக
நாக்கு வெளுத்துக் காணப்பட்டால், உடலில் ரத்தம் குறைந்துள்ளது
என்றும் ரத்தச்சோகை நோய் உள்ளது என்றும் பொருள். நாக்கு மஞ்சளாக இருந்தால் மஞ்சள் காமாலை
நோயைக் குறிக்கும். காய்ச்ச ல் உள்ள ஒருவருக்கு நாக்கில் வெண்மைணான படலம் படிந்திருந்தால்
அது டைபொட் காய் ச்சலுக்குரிய நோய்க் குணம். வெள்ளையும் கறுப்புமாக நிறம் மாறியிருந்தால்
அது புற்றுநோய் வருவதற்கான அறிகுறி.
ஒரு துண்டு நாவில் இத்துனை அற்புதங்களா? அல்ஹம்துலில்லாஹ்.
நாகரீகம் என்ற பெயரில் நாவுக்குச் செய்கின்ற கொடுமைகளைப் பாருங்கள்.
நாகரீகம் என்ற பெயரில் நாவுக்குச் செய்கின்ற கொடுமைகளைப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...