விண்ணியல், பூகோளவியல், சமுத்திரவியல், தாவரவியல், விலங்கியல், முளையவியல், இலத்திரணியல், இரசாயனவியல், பௌதீகவியல், கல ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி என்றெல்லாம் பல்வேறு துறைகளிலும் ஆய்வாராய்ச்சிகள் வளர்ச்சியடைந்துகொண்டு செல்லும் ஒரு யுகத்தில் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.இற்றைக்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு மனிதன் கற்பனைகூடப் பண்ணிப்பார்க்காத துறைகளிலெல்லாம் விஞ்ஞானம் ஆழ வேர்விட்டு அகலக் கிளை பரப்பி இன்னும் வானுயர வளர்ந்துகொண்டிருக்கின்றது.
உலகில் இறை மறுப்புக் கொள்கையைத் தீவிரமாகப் பரப்பிக்கொண்டிருக்கும் நாஸ்திகர்கள் வளர்ச்சியடைந்து வரும் விஞ்ஞானத்தைத் தமது கொள்கைக்கு ஆதாரமாகப் பலமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நாத்திக சிந்தனைகளை விஞ்ஞான பூர்வமாக விதைப்பதில் 19ம் நூற்றாண்டின் உயிரியலாளரான சார்ல்ஸ் டாவினால் முன்வைக்கப்பட்ட “உயிரினங்களின் உற்பத்தி” தொடர்பான ஆய்வுகள் பெரிதும் துணையாக அமைந்தன. பிற்பட்ட காலங்களில் தமது கோட்பாடுகளை மென்மேலும் பட்டை தீட்டி அதை இறை மறுப்புக்கு சார்பாக Neo Darwinism என்ற பெயரில் முன்வைத்தனர். தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்வையும் இறை மறுப்பை நிரூபிப்பதற்காக அமைத்துக்கொள்வதோடு இறைகொள்கைகளை மறுப்பதற்காகவே பற்பல ஆய்வுகளையும் இவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.ஒவ்வொரு துறையையும் இறைகொள்கையை சிதைப்பதற்காக எவ்வாறு நாஸ்திகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது அவதானிக்கப்படவேண்டியது.
அல்லாஹ் திருமறையின் 40ம் அத்தியாயத்தில் 36, 37ம் வசனங்களில் கூறுவதுபோன்று அன்று பிர்அவ்ன் வானுயர்ந்த கோபுரமொன்றைக் கட்டி அதில் ஏறி வானில் மூஸா நபி கூறிய இறைவன் இறுக்கின்றானா என்று தேடினான். ஆனால் அறிவிலும் விஞ்ஞானத்திலும் வளர்ந்திருக்கும் இன்றைய மனிதனும் இதனை ஒத்த வேலையையே இன்றும் செய்கின்றான். ரஷ்யா தனது ஸ்புட்னிக்-1 என்ற விண்ணோடத்தை விண்ணில் செலுத்திவிட்டு “நாம் விண்ணில் இறைவனைத் தேடினோம், அங்கு அவனைக் காணவில்லை”என்று கடவுட்கொள்கையைக் கேலிசெய்தது. பிர்அவ்னின் காலத்திற்கும் இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்திற்கும் ஆயிரக்கணக்கான நீண்ட கால இடைவெளியிருந்தும் அறிவு விடயத்தில் இரண்டும் சடவாத சிந்தனையில் சமாந்திரமாகவே இருக்கின்றன என்பது தெளிவு.
ஆணின் துணையின்றி பெண்ணின் உயிர்கலமொன்றை மாத்திரம் பயன்படுத்தி அப்பெண்ணையே ஒத்த குழந்தையொன்றை உருவாக்கும் Cloning முறையை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. தற்போது ஆண் துணையின்றி பெண்ணை மட்டும் துணையாகக்கொண்டு குழந்தை உருவாக்குவதுபோலவே இன்னும் சில தசாப்தங்களில் மனிதனது ஆதாரமே இன்றி இன்னொரு மனிதனை உருவாக்கப்போவதாக விஞ்ஞனிகள் தம்பட்டமடித்துக்கொள்கின்றனர். மனிதனே மனிதனைப் படைக்க முடியுமாயின் கடவுள் எதற்கென்று கேள்வியும் எழுப்புகின்றார்கள்.
மரபணுப் பொறியியலில் (Genetic Engineering) விஞ்ஞானம் வளர்ச்சியடைந்ததும் பல்வேறு மரபணுக் கலவைகளிலாலான உயிரினங்களையே தம்மால் படைக்க முடியுமென்றும் சதுர, செவ்வக வடிவிலான பழங்கள், பூனையின் முகத்தை ஒத்த மீன், உடலில் மயிறில்லாத கோழிகள், வரிக்குதிரையை ஒத்த கங்காருகள், மல்லிகை வாசத்தை வீசும் தாமரைப் பூ என தாம் விரும்பும் அமைப்பில் புதுவகையான புதுமையன உயிர்களை உருவாக்க முடியுமென இத்துறைசார் விஞ்ஞானிகள் திளைக்கின்றனர்.
அங்கியொன்றின் பாரம்பரிய இயல்புகளைச் சுமந்துள்ள DNA பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு அதனை விஞ்ஞானிகள் அங்குலமங்குலமாக ஆராய்ந்தனர். உடல் கலங்களில் 23 கோடி நிறமூர்த்தங்களிருப்பதாகவும் அதில் ஒரு நிறமூர்த்தம் சுமார் 250 பில்லியன் DNA களைக்கொண்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டது. இந்த DNA மூலக்கூறுகளை ஆராய்ந்ததில் உயிரின் பரம்பறை இயல்புகளெல்லாம் பதியப்பட்டிருக்கும் சுமார் 900 பாகங்களைக்கொண்ட DNA பதிவேட்டினை வாசிக்கும் திறனையும் விஞ்ஞானம் பெற்றுக்கொண்டது.உடனே இறைவனின் இறுப்பை உணர்ந்துகொள்ளப் போதுமான இவ் ஆதாரத்தை இறைமறுப்புக் கொள்கைக்கு ஆதாரமாகச் சேர்த்துக்கொண்டனர் விஞ்ஞானிகள்.
இதுதொடர்பாக 2000ம் ஆண்டில் நடைபெற்ற மாநாடொன்றில் அப்போதைய ஜனாதிபதி பில் கிளின்டன் ஆற்றிய உரையில் அவர் “Today we are learning the language in which god created life - இறைவன் உயிரினங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்திய மொழியை நாம் இன்று படித்துக்கொண்டிருக்கின்றோம்.” என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக Celera Genomic Company இன் உரிமையாளர் Dr.Francis Collins கூறுகையில் “We have caught the first glimpse of our own instruction book, previously known only to god – முன்பு இறைவன் மட்டுமே அறிந்துவைத்திருந்த மனித இயந்திரம் பற்றிய அறிவுருத்தல் ஏட்டின் முதல் வரிகளை நாம் கண்டுகொண்டுள்ளோம்.” என்றார்.
Big Bang – பெருவெடிப்பு மூலம்தான் இப்பிரபஞ்சம் உருவாகியது என்றும் அதுவே பௌதீகத்தின் மூலமுதல் என்றும் சர்வதேச ரீதியில் பெரும்பாலும் அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அனைத்துக்கும் மூலமுதல் Big Bang என்பது இறை இறுப்புக்கு ஆதாரமாக உள்ளது என்ற காரணத்தைவைத்து Big Bang கொள்கையைக்கூடப் பொய்பித்து அதற்கு மாற்றமாக வேறு ஒரு பொறிமுறையை அறிமுகம்செய்ய பல விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றனர்.
“The believe that the Big Bang is the first is more religions than Science - Big Bang தான் (அனைத்துக்கும் மூல) முதல் என்று நம்புவது விஞ்ஞான நம்பிக்கையைவிட மதநம்பிக்கை சார்ந்ததாகவே இருக்கும்.” என Lee Samolin (Cosmologist, Perimeter institute of water loo, Ontario, Canada) எனும் நாஸ்த்திக ஆய்வாளர் கூறுகிறார்.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த விஞ்ஞானிகள் நியுட்டனின் விதிகளைவைத்து பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியதாலும் நியுட்டனின் விதிகள் பல பௌதிக செயற்பாடுகளுக்கு விஞ்ஞான விளக்கங்களை வழங்கியதாலும் அன்றைய விஞ்ஞானிகள் தாம்தான் கடவுளர்கள் என்ற இறுமாப்புடன் செயற்பட்டனர். பிரபஞ்ச விதிகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கைகளை வெளியிட்டனர். விஞ்ஞானத்தினால் முடியாதது எதுவுமே இல்லை என்ற கோசமும் எழுந்தது. இறை மறுப்புவாதம் ஓங்கி ஒலித்தது.
என்றாலும் அதன்பின் அல்பட் ஐன்ஸ்டீனின் சிறப்புசார்புக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதும் தாம் கண்டது கைமண்ணளவிலும் குறைவானவை என்பதை விஞ்ஞானிகள் உணரத்துவங்கினர். அதுமட்டுமன்றி ஐன்ஸ்டீனின் இக்கொள்கை இறை இறுப்புக்கான பல ஆதாரங்களை அள்ளித்தந்ததால் நாஸ்திக விஞ்ஞானம் வாயடைத்துவிட்டது.
அமெரிக்காவில் வொஷிங்டனிலுள்ள International Association for Near Death States (IANDS) என்ற நிறுவனமும் ரஷ்யாவின் சில விஞ்ஞானிகளும் மரணத்தின் ரகசியத்தைக் கண்டுபிடித்து மரணத்தைத் தள்ளிப்போடவும் மரணமில்லா வாழ்வை அணுபவிக்கவும் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பவுமான மருத்துவமுறைகளைக் கண்டுபிடிக்கப்போவதாக பல ஆண்டுகளாக முயற்சித்துவருகின்றனர். இறப்பென்பது ஒரு சாதாரண நிகழ்வென்றும் இதயத்தினதும் மூளையினதும் செயலிழப்பினாலேயே முழு உடலும் செயலற்றுப் போகின்றது, எனவே இவ்விரண்டையும் செயலிழக்காமல் செய்வதற்கான கருவிகளையும் மருந்துகளையும் கண்டுபிடித்து மரணத்தை வெள்ளும் விஞ்ஞான யுகத்தை அமைக்கப்போவதாக சூழுரைத்துவருகின்றனர்.
அண்மையில் பத்திரிகை ஒன்றில் “உயிர்களைப் படைக்கும் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அதில் “கடவுளால் மட்டுமே முடியும் என்று கூறப்பட்ட உயிர்களைப் படைக்கும் அற்புதத்தை கடந்த வருடம் (20-05-2010) மேலைநாட்டு விஞ்ஞானியான கிரெயிக் வெண்டர் என்பவரும் அவரது குழுவினரும் முறியடித்துவிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தொழில்நுட்பம் பற்றி கிரெயிக் வெண்டர் கூறுகையில் “படைக்குத் தொழில்நுட்பத்தைக் கண்டுடிபிடித்த மனிதனால் இனி தான் விரும்பும் பண்புகொண்ட உயிரினங்களையும் படைத்துக்கொள்ள முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இறைமறுப்புவாதம் பல்வேறு அறிவியல் துறைகளையும் விஞ்ஞான ஆய்வுகளையும் தனக்கு சார்பாக உபபோகித்து வருகின்றது. மக்கள் மனதிலிருந்து கடவுட்கொள்கையை களற்றி எறிவதற்காகவே இவ்வாறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுவருகின்றது. பலரும் இவற்றை ஆதாரமாகக்கொண்டு தமது நம்பிக்கைகளை நாஸ்திகத்தின் பக்கம் வலுப்படுத்திக்கொள்கின்றனர். என்றாலும் காலப்போக்கில் நாஸ்திகர்கள் தமது கொள்கைக்கு சார்பாக எடுத்துக்கொண்ட அறிவியல் விஞ்ஞானத் துறைகளில் இன்னும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோதுதான் அங்கே இறைவனின் இறுப்புக்கான சான்றாதாரங்கள் குவிந்துகிடப்பதை இறைகொள்கையை ஆதரிக்கும் விஞ்ஞானிகளால் அறிய முடிந்தது.
உயிர்க்கலத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதனைக் கால்பங்குகூட ஆய்வுசெய்ய முன்னர் கூறிய நாஸ்திகக் கருத்துக்க்ள இன்னும் எவ்வளவு ஆய்வுகளுக்கு உட்படுத்தவேண்டியவை என்ற விடயம் பின்னர்தான் அறிவிற்குப் புலப்பட்டது. கலிபோனியாவின் Stanford பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Loan Rough Garden தனது இயலாமையை இவ்வாறு கூறுகிறார். “கலம்தான் மனிதன் இன்றுவரை அறிந்துள்ள மிகவும் சிக்கலான கட்டமைப்பு என்பது நவீன விஞ்ஞானிகளின் ஒருமித்த முடிவாகும்” என்கிறார்.
கலங்கள் பற்றிய அறிவுக் குறைபாட்டைக் கூறும் மற்றுமொரு அறிஞர் விளக்குகிறார். “The large gap in our knowledge about cells can only be filled by speculations that are liable to be wrong – கலம் பற்றிய எமது பாரிய அறிவுக் குறைபாட்டை எமது கற்பனைகள் மூலமே நிரப்ப முடியும். அவைகூட பிழையாகவே அமையும்” என்கிறார்.
1999ம் ஆண்டில் நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் Blobel “we are far from understanding how these molecules are setup and regulated. We are still working. – கலத்தின் இப்பகுதிகள் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றோ அவை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்றோ அறிந்துகொள்ளும் நிலையில் நாம் இன்னும் இல்லை. நாம் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.” என்கிறார்.
பிரபஞ்சத்தில் நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் அளவுபற்றி ஐக்கிய இராச்சியத்தின் துர்ஹைம் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியரான Tom Shanks கூறுகிறார். “பிரபஞ்சம் பற்றி நாம் அறிந்துவைத்துள்ள இத்துனை இலட்சம் பால்வீதிகளும் கிரகங்களும் வெறும் 4% என்றால் இம்மனிதப் பிறவி எம்மாத்திறம்?” என்று வினா எழுப்பிகிறார்.
பிரபஞ்ச உற்பத்தியின் பின்னால் ஒரு அற்புத சக்தியிருக்கவேண்டும் என்பதனை பேராசிரியர் Brain field (Professor in theoretical physics, University of illinois, Urbana) பிரமிப்புடன் விளக்குகிறார். “பிரபஞ்சவெளியில் உள்ள (அறியப்படாத 96%ஆன) மர்மமான ஆற்றல்கள், திணிவுகள், நவீன BBN கருதுகோள்கள் என்பன இப்பிரபஞ்சவெளியில் உள்ள (அறியப்பட்ட 4% ஆன) சாதாரண பொருட்களை உருவாக்கி வழிநடாத்குகின்ற ஏதோ ஒன்று இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றது.” என்கிறார்.
“பிரபஞ்சத்தின் எப்பகுதியை நோக்கினாலும் அணுவின் உட்பகுதி முதல் பிரம்மாண்டமான பால்வீதிகள்வரை அனைத்திலும் ஒழுங்கு பேணப்படுவதை நான் அவதானிக்கின்றேன்” என Paul Davis என்ற பௌதிகவியலாளர் கூறுகின்றார். மற்றுமொரு அறிஞர் “ஒரு சாணக்கயவானின் கட்டுப்பாடு இப்பிரபஞ்சத்தில் இருக்கவேண்டும் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் உண்டு” என Max Plank என்ற பௌதிகவிலாளர் குறிப்பிடுகின்றார்.
Roger Penrose என்ற பிரித்தானியாவின் பிரபல கணிதவியலாளர் தனது நிகழ்தகவுக் கணிப்பீட்டு ஆய்வு (Probability Calculations Research) இனை முடிக்கும் தருவாயில் “மொத்த நிகழ்வுச் சாத்தியத்தின் மூலம் படைப்பாளனின் நோக்கம் எவ்வளவு நுண்ணியது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அளவு மிக மிக நுட்பமாக ஒழுங்குபடுத்துவதென்பது ஓது அதி புத்திசாதுர்யமிக்க ஒன்றினால் மட்டுமே முடியும்” என்று தனது ஆய்வை முடிக்கிறார்.
கூர்ப்பியலிற்காக ஆதாரங்களைத்தேடும் கூர்ப்பியல்வாதிகளே பல்வேறு ஆய்வுகளின் பின்னர் இப்படிப்பட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு நிச்சயமாக நுணுக்கமான திட்டமிடல்களுடன் கூடிய ஒரு மாபெரும் படைப்பாளன் தேவைப்படுகிறான் என்று கூறி படைப்பாளனைத் தேடத் தலைப்பட்டுள்ளனர். “It is more plausible that a great builder with a master plan would be required for such a risk.”
இவ்வாறு இன்றைய விஞ்ஞானம் நாஸ்திகத்திற்கு எதிராக இறைமறுப்புக் கொள்கைக்கு எதிராக இப்பிரபஞ்சத்தைத் திட்டமிட்டு ஒழுங்குற அமைத்த இறைவனைத் தேடிப் புறப்பட்டுள்ளது. இப்பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற சடப்பொருட்கள் முதல் உயிர் ஜீவிகள் வரை அணு முதல் பேரண்டம்வரை அனைத்திலும் பொதிந்துள்ள அற்புதமான திட்டமிடல்களை ஆராய்ந்து நிச்சயமாக இவற்றிற்குப் பின்னால் ஓர் மாபெரும் சக்தியிருக்கவேண்டுமென்பதை ஊகித்துவிட்டது. எனவே நவீனவிஞ்ஞானம் அதன் அனைத்துத் துறைகளிலும் இறைவனைத் தேடும் ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. நிச்சயமாக வடிவமைப்பாளன் ஒருவன் இருந்தே ஆகவேண்டும் என்ற கருதுகோளுக்கு விஞ்ஞானிகள் விஞ்ஞானரீதியாகவே இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தேடுதல் பயணம்தான் கடவுளின் துகளைத் தேடும் பயணம்.
இம்முழுப் பிரபஞ்சமும் தட்செயலாகத் தோன்றி இதிலுள்ள உயிரிணங்கள் யாவும் தனிக்கல அங்கியொன்றிலிருந்து பரிணாமமடைந்து வந்துள்ளதாகவே கூர்ப்பியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அத் தனிக்கல அங்கியினது தோற்றம் அல்லது அனைத்து உயிர் ஜீவிகளினதும் ஆரம்பத் துகல் எவ்வாறு நிகழ்ந்தது? என்ற கேள்விக்குத் திருப்திகராமான பதில் அவர்களிடமில்லை. எனவே தற்போது அனைத்து உயிரினங்களினதும் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்கான பிரம்மாண்டமானதொரு ஆய்வு பிரான்ஸில் நடைபெற்றுவருகின்றது. கடவுளைத் தேடும் பயணத்தில் மிகப்பெரும் ஆராய்ச்சியாக இது கருதப்படுகின்றது. இவ் ஆராய்சிக்குக் “கடவுளின் துகல்” எனப் பெயரிட்டு உலகின் முதலாவது துகலைத் தேடும் ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் ஆராய்ச்சி Large Hadron Collider (LHC) என அழைக்கப்படுகிறது.
உலகின் உயிர்களெல்லாம் Big Bang இன் விளைவாகவே தோற்றம் பெற்றன என்ற விஞ்ஞானத்தின் கருதுகோளை அடிப்படையாகக்கொண்டு, அதேபோன்றதொரு மாபெரும் பெருவெடிப்பை (Big Bang) மீண்டும் நிகழ்த்துவதனூடாக உயிரினங்களின் ஆரம்பத் துகல் உருவாக முடியும் என்ற சிந்தனை இயற்பியல் விஞ்ஞானிகளிடம் எழுந்தது. இப்பரிசோதனையைச் செய்வதனூடாக பல்வேறு இயற்பியல் கேள்விகளுக்கும் விடைகிடைக்குமென விஞ்ஞானம் கருதுகின்றது.
பல கோடிகளை செலவுசெய்து மேற்கொள்ளும் இவ்வாய்வில் 2000 இயற்பியல் வல்லுணர்கள் பங்கேற்றுள்ளனர். 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வாராய்ச்சியின் மிக முக்கியமான கட்டத்தைத் தற்போது விஞ்ஞானிகள் அடைந்துள்ளனர். பிரான்ஸிற்கும் சுவிட்சர்லாந்திட்கும் இடையில் தரைக்குக் கீழ் 100 மீற்றர் ஆழத்தில் இதற்காக பாரியதொரு பரிசோதனைச் சாலை அல்லது சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 27 km நீளமான இந்த பரிசோதனைச் சுரங்கம் மிக மிகச் சக்திவாய்ந்த, கனதியான, வலிமைமிக்க உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இச் சுரங்க அரணை அமைக்கப்பயன்படும் Compact Muon Solenoid (CMS) என்ற சிறு பகுதியின் நிறை மட்டும் 2500 தொன்களாகும்.
இப்பாரிய பரிசோதனைச் சுரங்கத்தில் விஞ்ஞானிகள் கடவுளின் துகலைக் கண்டுபிடிப்பதற்காக இரண்டு புரோத்திரன் அணுக்களை ஒளியின் வேகத்தில் (300,000 km ph.sec) சுரங்கத்தின் இரண்டு முணைகளிலிருந்து எதிரெதிர் திசையில் செலுத்தி மோதவைக்கவுள்ளனர். இதன் மூலம் Higgs Boson எனும் கடவுளின் துகளைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர். இப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் விஞ்ஞானத்தின் பல்வேறு முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
நாஸ்திகத்தை நிறுவ ஆதாரமாகக் கொண்ட அதே விஞ்ஞானம் இன்று இறைவனைத் தேடி முதல் எட்டுக்களை எடுத்துவைத்துள்ளது. விஞ்ஞான ரீதியாகவே இறைஇறுப்பை உறுதிப்படுத்த Intelligent Design Theory என்றொரு நவீன கொள்கையும் இத்துடன் வந்து கைகோர்த்துள்ளது. இன்ஷா அல்லாஹ் கண்னெட்டும் தூரத்தில் விஞ்ஞானம் இஸ்லாத்தைத் தழுவும்.
இத்தலைப்புடன் தொடர்புபட்ட ஒரு இன்டர்நெட் ஜோக் ஒன்றையும் இங்கு ஞாபகிக்கின்றேன்.
30ம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் கடவுளைச் சந்திக்கின்றனர்.
விஞ்ஞானிகள்: இறைவா! இப்போது மனிதனை நாம் விரும்பிய விதங்களிலெல்லாம் படைக்கிறோம். தற்போது எமக்கு உனது தேவை ஒன்றுமேயில்லை. எனவே நீ இல்லாம்ல் போய்விடு!
இறைவன் : அப்படியா? நல்லது. நாம் உயிர்களை உருவாக்கும் போட்டியொன்றை ஏற்பாடு செய்வோம். அதில் நீங்கள் ஜெயித்தால் நான் உங்களுக்குக் கட்டுப்படுவேன்.
இறைவன் ஒரு பிடி மண்ணை எடுத்து ஊதுகின்றான். உடனே ஒரு மனிதன் தோன்றுகின்றான். விஞ்ஞானிகளும் ஒரு பிடி மண்ணை எடுத்து ஊதத் தயாராகிறார்கள்……
இறைவன் : நிறுத்துங்கள்! எனது மண்ணைப் பயன்படுத்தக் கூடாது!
விஞ்ஞானிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
குறிப்பு : 2012 மார்ச் மாத எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமாகிய எனது கட்டுரை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
4 comments:
good job Aalif Brother.
ஆக்கம் சிறப்பாக இருக்கின்றது.
உங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள எனது வாழ்த்துக்கள்.
விஞ்ஞானம் தொடர்பான ஆக்கங்களை அதிகமாக எழுதுகின்றீர்கள். விஞ்ஞானத்தில் அவ்வளவு ஆர்வமோ?
நன்றிகள் விஞ்ஞானத்தில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் உண்டுதான்...
கடவுளை மனிதன் படைத்த போது இப்படி எல்லாம் இணையத்தில் தம் கடவுள் அல்லல்படுவார் என அவர்களுக்குத்தெரியாமல் போய்விட்டது!!!!!!!!!!
---------------------------
கற்பனைக்கு எட்டாத கற்பனையே கடவுளே
உனைக் கற்பிதம் செய்த மனிதனைப்படைத்த
நீ போற்ப்படவேண்டியவனே!!!
---------------------
தன் சாயலில் மனிதனைப்படைத்தாக கூறும் சில மதங்கள்
உனக்குள் கடந்து கடவுளைக்காண் என்று மெய்யுணர்வை ஊட்டும் சில.......
எல்லா மதத்தவரும் தத்தம் கடவுள்கள் இருக்க வேண்டும் என்று வேண்டவேண்டிய காலத்தை அறிவியல் நெருங்கும் வேளையில் கடவுளுக்கும் கடவுள் கவலையைத் தராதீர்கள்
-------------------
உண்டென்பர் சிலர் இல்லை என்பார்கல் சிலர் எனக்கில்லை கடவுள் கவலை- பாரதிதாசன்.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...