காலம் மிக வேகமாக
நகர்வதற்கும் உலகம் குக்கிராமமாக மாறியிருப்பதற்கும் அடிப்படைக் காரணிகள் இரண்டு. ஒன்று
நவீன துரித தொலைத்தொடர்பாடற் சாதனங்கள். இரண்டு துரித போக்குவரத்து வசதிகள். போக்குவரத்துத் துறையில்
முன்நிலை வகிப்பது விமானப் போக்குவரத்து சேவைகளே! ஆரம்பங்களில் விமானப் பயணம் என்பது
ஒரு சிலரைத்தவிர அநேகருக்கு எட்டாக் கணியாகவே இருந்துவந்தது. ஆனால் இன்று அதுவே சர்வசாதாரணமாக
மாறியுள்ளது. காரணம் முன்னொருபோதும் இல்லாதவாறு விமானப் பயணங்களின் கட்டணங்கள் மலிந்து
போயிருக்கின்றமையும் நூற்றுக்கணக்கில் புதுப்புது நிறுவனங்கள் தோன்றி விமானச் சேவைகளை
மலிவாகத் தருகின்றமையும்தான்.
பயணச் செலவுகளும்
பயணங்களும் மலிவாகியிருப்பதுபோன்றே விமான விபத்துக்களும் அதனால் ஏற்படும் மரணங்களும்
மலிந்துபோயுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப அபிவிருத்திகளுடன் நவீனரக விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும்
ஏதோ ஒருவகையில் இறை நாட்டம், இயற்கையின் சீற்றம் அவை விபத்துக்களைச் சந்திக்கத்தான் நேர்கின்றன.
என்றாலும் மனிதத் தவருகளினால் நிகழும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரலாற்றில்
நடந்த முக்கிய விமான விபத்துக்களும் பலியானோர் விபரமும்:
விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக
எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகளிலேயே பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. உயர்ந்த மலைமேடுகளிலிருந்தும்
உயரமான கட்டிடங்களிலிருந்தும் விமானங்களைப் பறக்கவிட்டு ஆய்வுகளை நடாத்திய சந்தர்ப்பங்களில்
பல விபத்துக்களும் சேதங்களும் நிகழ்ந்துள்ளன.
என்றாலும் 1920 களில் வர்த்தக விமானங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்துதான் விமான விபத்துக்கள் அதிகரிக்கத் துவங்கின. 1928 ஆம் ஆண்டில் விமானவிபத்துக்களில்
பலியானோரின் எண்ணிக்கிகை முதற்தடவையாக நூறைக் கடந்தது. 1943இல் 1000 பேர் இறந்தனர். 1945 ஆம் ஆண்டின் பின்னர்
2004, 2007 மற்றும் 2008 ஆகிய மூன்று வருடங்களிலும்
விமான விபத்தின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ அண்மித்து இருந்தது.
2009 ஆம் ஆண்டு முதல்
2011 ஆம் ஆண்டு வரை பாரிய
விமான விபத்துக்கள் நடக்காத போதிலும் 2009 ஆம் ஆண்டு எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம் அட்லான்டிக்
சமுத்திரத்திற்கு மேலால் பறந்தபோது புயலில் அகப்பட்டு கடலில் வீழ்ததில் 228 உயிர்கள் பலியான
சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கியிருந்தது.
இவ்வருடம் (2012) ரஷ்யாவிலும் யெமனிலும்
கனடாவிலும் கொங்கோவிலும் கானாவிலும் லிபியாவிலும் மற்றும் நேபாளத்திலுமாக சில உயிர்ச்
சேதங்களுடன் விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.
இதில் ரஷ்ய - இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 93 பேர் இறந்ததோடு ஒரே
ஒரு சிறுமி மட்டும் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்துக்களுக்கான
காரணிகள்:
1950 முதல் 2006 வரை இடம்பெற்ற 1843 விமான விபத்துக்களை
ஆராய்ந்த குழுவொன்று அவற்றின் 53 சதவீதமான விபத்துக்களுக்கு விமானிகளின் தவறே காரணம் எனத் தெரிவித்துள்ளது.
21 சதவீதமானவற்றுக்கு
பொறியியல் கோளாருகளும் 11 சதவீதமானவற்றுக்கு
காலநிலையும் 8 சதவீதமானவற்றுக்கு
ஏனைய மனிதத்தவறுகளும் காரணமென அக்குழு மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டது. பின்வரும்
முக்கிய காரணிகளால் அதிகமான அளவு விமான விபத்துக்கள் நேர்கின்றன.
மின்னல்:
மின்னல் தாக்கத்தினால்
பல விமானங்கள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் பான் அமெரிக்கன் விமானமொன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில்
83 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம்
வளர்ந்திருப்பதால் இடிமின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
1980களின் முற்பகுதியில்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாஸா ஜெட் விமானமொன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள்
அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம்
மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை விமானத் தயாரிப்பின்போது
பிரயோகிக்கப்பட்டுள்ளன.
அட்லான்டிக் கடல்
பகுதியில் திடீர் திடீர் என்று உருவாகும் கொடூரமான புயல் காற்றின் மேகங்கள் காரணமாக
60 ஆயிரம் அடிவரைகூட
மின்னல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. வர்த்தக
விமானங்கள் வருடத்திற்கு ஒரு தடவை வீதம் மின்னல் தாக்கத்திற்குள்ளாவதாக புளோரிடா பல்கழைக்கழகம்
நடாத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பொதுவாக விமானத்தின் இறக்கை முனைகள், வால், மூக்குப்பகுதி போன்ற
பகுதிகளே மின்னல் தாக்கத்திற்குற்படுகின்றன. தற்போது நவீன விமானங்கள் மின்னைக் கடத்தும்
தன்மை குறைவாகவுள்ள உலோகப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
கொந்தளிப்பு
நிலை:
பறந்துகொண்டிருக்கும்
விமானங்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு அபாய நிலைதான் இது. வளிமண்டலத்தில் ஏற்படும் இத்தகைய
கொந்தளிப்பு நிலைமையால் (Turbulence) விமானப் பயணிகள் பெறும்
பீதிக்குள்ளாகின்றனர். வளிமண்டல அமுக்க வித்தியாசம் காரணமாக இந்நிலை ஏற்படுகின்றது.
இதனைக் கடந்துசெல்லும் போது விமானங்கள் தட தட வென்று குலுங்கும் நிலை ஏற்படுகின்றது.
கொந்தளிப்புகளை இலகுவில் கண்டறிய முடியாது. அவை திடீரென எதிர்பார்க்காத விதத்தில் நிகழ்கின்றன.
இந்நிலையினால் உயிர்ச்சேதங்கள்
ஏற்படாதபோதிலும் விமானப் பயணிகள் பலர் இதனால் காயமடைந்துள்ளனர். பயணிகளும் பணியாற்களும்
ஆசனப்பட்டி அணிந்திராத வேளைகளில் இந்த குலுங்களை எதிர்நோக்க நேரிடும்போது இந்நிலை ஏற்படுகின்றது.
1980 முதல் 2004 வரை அமெரிக்க விமானங்களில்
இத்தகைய 198 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும்
இதனால் 266 பேர்வரை கடுமையாகக்
காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் அமரிக்க விமான சேவைகள் நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆக்ரோஷமான
புயல்:
திடீரென்று உருவாகும்
புயற் காற்றினாலும் விமானங்கள் அலைக்கழிக்கப்படுகின்றன.
இதனால் விமானத்திற்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு விபத்துக்கள் சம்பவிக்க அதிகமான
வாய்ப்புக்கள் உள்ளன. அட்லான்டிக் கடற் பகுதிகளில் கூடுதலாக ஆக்ரோசமான புயற் காற்று
உருவாவது வழக்கம். என்றாலும் விமானங்களில் பொறுத்தப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின்
உதவியுடன் புயல் உருவாவதை முன்கூட்டியே அறிந்து அதற்குண்டானா நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.
மோசமான வானிலை நிலவும் பகுதிகளைத் தவிர்த்துச் செல்வதற்காக வானிலை பற்றிய தகவல்கள்
நிமிடத்திற்கு நிமிடம் விமானத்திற்கு அனுப்பப்படுகின்றன.
பனிப்படிவுகள்:
விமான இறக்கைகளில்
குளிர்காலங்களில் படியும் பனிப்படடிவுகளால் பாரிய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. கடும்
குளிரான நீர்த்துளிகள் விமான இறக்கைகளில் ஒட்டிக்கொள்வதால் பனி தேங்குகின்றது. இறக்கைகளில்
பனி அதிகளவில் தேங்குவது விமானம் மேலே எழும் தன்மையைப் பாதித்து அனர்த்தங்களுக்கு வழிவகுக்கலாம்.
பறக்கும்போது மட்டுமன்றி விமான நிலையங்ககளில் தரித்திருக்கும்போதும் பனி தேங்குவற்கு
வாய்ப்புள்ளது. சிறிய விமானங்களின் உட்புறத்திலும் பனி உருவாகி இதனால் விபத்துக்கள்
அதிகரிக்கின்றன.
1982 முதல் 2000 ஆம் ஆண்டுவரை 819 பேர் விமானங்களின்
உட்புறத்தில் ஏற்படும் பனி காரணமாக இறந்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப்
பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது. பனி படிதலைத் தடுப்பதற்காக விமானங்கள் பறப்பதற்கு
முன்னர் ஒருவகைப் பதார்த்தம் பூசப்படுகின்றது.
பறவைகள்:
சாதாரணமாக ஒரு கிலோ
எடையுள்ள பறவைகள் விமானங்களில் மோதி சிக்காகுவதால் விமானங்கள் விபத்துக்களைச் சந்திக்க
நேர்கின்றன. விமானத்தின் இயந்திரப் பகுதியை நோக்கி அதிவேகமாகக் காற்று ஈர்க்கப்படும்
நேரத்தில் அப்பகுதியில் சஞ்சரிக்கும் பறவைகளும் ஈர்க்கப்படுகின்றன. இயந்திரத்தின் முன்
பகுதி பல கொம்போசர் அலகுகளைக் கொண்டவை. பறவைகள் குறித்த இயந்திர அலகுகளில் மோதுவதால்
இயந்திரத்தின் உற்பகுதிக்குள் இழுக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளாகலாம்.
1988 முதல் உலகம் முழுதும்
விமானங்களில் பறவைகள் மோதியதன் விளைவாக 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் விமானங்கள்
பறக்க ஆரம்பிக்கும்போது அல்லது இறங்கும்போது 5000 இற்கும் அதிகமான தடவைகள் பறவைகள் மோதிய நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு ஜனவரி
மாதத்தில் 155 பேருடன் பயணித்த
அமெரிக்க எயார்வேர்ஸ் விமானமொன்றின் இயந்திரத்தில் பறவையொன்று சிக்கியதால் அனர்த்தத்தைத்
தவிர்ப்பதற்காக விமானத்தை உடனடியாக நியுயோர்க் ஹ{ட்சன் நதியில் பத்திரமாக இறக்கிய சம்பவத்தை நாம்
யாவரும் அறிவோம்.
அமெரிக்காவின் பறவைத்
தாக்க ஆய்வுக் குழு இப்பறவைகளை இறக்கையுள்ள தோட்டாக்கள் என வர்ணிக்கிறது. தரையிலிருந்து
சில ஆயிரம் அடி உயரம் வரையான பகுதிகளிலேயே இத்தகைய அபாயம் காணப்படுகின்றது.
ராடாரின்
கண்காணிப்பிலிருந்து காணாமல்போதல்:
விமானங்கள் பறக்கும்போது
அவை ராடாரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதன்போதுதான் விமானம் செல்லும்
பாதை பற்றியும் வரும் தடங்கள் பற்றியும் காலநிலை குறித்தும் எச்சரிக்க முடியும். தட்செயலாக
ராடாரின் கண்காணிப்பிலிருந்து விமானம் விடுபட்டால் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி
வரும். சமுத்திரங்களின் மீது பறக்கும் விமானங்களை ராடாரினால் அவதானிப்பது கடினம். அட்லான்டிக்
சமுத்திரங்களைக் கடந்துவரும் பல விமானங்கள் சிலபோது ராடாரின் கண்காணிப்பிலிருந்து விடுபடுவதால்
எதிர் திசையிலிருந்து வரும் விமானங்களுடன், வர்த்தக விமானங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும்
உள்ளன. சமுத்திரங்களின் மீது பறக்கும் விமானங்கள் மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு
விமானத்திற்கும் 80 கடல்மைல் இடைவெளி
இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
மலிந்த
விலையில் கிடைக்கும் விமானப் பயணங்கள்:
மலிந்த விலையில் விமானப்
பயணங்களை மேற்கொள்ளும் போது பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டி வருகின்றது. நேரம் தவறாமை
என்ற ஒழுங்குகள் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. பத்து மணிக்குப் புறப்படும் விமானம்
11 மணிக்குப் புறப்படுவதென்பது
சாதாரணம். அத்தோடு விமானசேவை ரத்து செய்யப்படும் நிலையும் உண்டு. ஆசனப் பதிவுசெய்தபின்
விர்க்க முடியாத காரணத்தினால் பயணத்தைப் பின்போட நாடினால்கூட தொகையும் திருப்பித் தரப்படமாட்டாது.
பயணிகளை அதிகம் ஏற்றிச் செல்வதற்காக ஆசனங்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். இலவசம்
என்பது அடியோடு இல்;லையென்பதால் சிலபோது
தண்ணீரையும் பணம்கொடுத்து வங்க வேண்டும். இது எவ்வாறிருப்பினும் இங்கு விடப்படும் தவருகள்
காரணமாக கூடுதலான அளவு விபத்துக்கள் நேர்வது வழமையாகிவிட்டுள்ளது.
மனிதத்
தவருகள்:
கட்டுப்பாட்டு நிலையம்
கொடுக்கும் அறிவுறுத்தல்களை விமான ஓட்டிகள் சிலபோது அசட்டை செய்வதால் விபத்துக்கள் நேர்கின்றன. கட்டுப்பாட்டாளர்களின்
அசிரத்தை, மாசடைந்த எரிபொருள், விமானம் முறையாகப்
பராமரிக்கப்படாமை, அறிவுருத்தல்கள் தவறாகப்
புரிந்துகொள்ளப்படுகின்றமை என்பன காரணமாகவும் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்கின்றன.
அத்தோடு பயணிகள், விமானத்தின் பாதுகாப்பு
விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பதும் விமான விபத்துக்களுக்கும் விபத்துக்களின்போது
நேரும் உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாகும். ஆசனப் பட்டிகளை அணியாமல் இருப்பது, இருக்கைகளை விட்டு
எழுந்து விமானத்தில் உலாவுவது, போன்ற அநாவசியமான செயல்களால் சேதங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.
மேலும் விமானங்கள்
தமது நாட்டு வான் பரப்பில் பறக்கும்போது சுட்டுவீழ்த்தப்படுவதாலும் விமானக் கடத்தல்கள்
மற்றும் குண்டுவைப்புகளாலும் சேதத்துக்குள்ளாகின்றன. 1988 ஜுலை 3ம் திகதி ஈரானியப்
பயணிகள் விமானமொன்று பாரசீக வளைகுடாவுக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்தபோது அமெரிக்கக்
கடற்படைக்கப்பலான வின்ஸன்ஸிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதனால் 290 பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதே ஆண்டில் பான் அமெரிக்கன் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து தரையில்
வீழ்ந்ததால் தரையிலிருந்த 11 பேர் உற்பட பயணிகள்
270 பேரும் உயிரிழந்தனர்.
உலகம் முழுதும் கடந்த
13 ஆண்டுகளில் நடந்த
400 விமான விபத்துக்களில்
6 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்
பலியாகியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில்
குறிப்பிபட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் விமான விபத்துக்களும் உயிரிழப்புக்களும் நடைபெறுப்போதும்
அது அநேகரிடத்தில் விமானப் பயணம் பற்றிய மரண பயத்தை சில காலங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
பலபேர் தமது பதிவுகளையும் ரத்துச் செய்துகொள்கின்றனர். என்றாலும் கால வெள்ள ஓட்டத்தில்
இவை மறந்துபோக மீண்டும் பயணங்கள் ஆரம்பிக்கின்றன. அதோடு இத்துனை விபத்துக்கள் நேர்ந்தாலும்
“நான் செல்லும் வாகனத்திற்கு
ஒன்றும் நடக்காது” என்ற நம்பிக்கைகூட
பொதுவாக அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இந்த மறதியும் நம்பிக்கையும் இல்லையென்றால்
சிலபோது வாழ்வதுகூட கடினமாக இருந்திருக்கும். இவை இறுப்பது வாழ்க்கைக்கு மிகவும் சௌகர்யமாகிப்
போய்விட்டன.
குறிப்பு : எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்.
1 comments:
பல அறியாத தகவல்கள்... நன்றி...
வேதனை தரும் சம்பவங்கள்...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...