இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக்
கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றின் இலக்கு
ஒரு முஸ்லிமின் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி அவனைப் பண்பாடுகள் நிறைந்த ஒரு உண்ணத மனிதனாக
மாற்றுவதேயாகும். ஊள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்தமானதாக இருக்கும்போது
மட்டும்தான் அதில் சீர்மிய ஒழுக்க விழுமியங்கள் குடிகொள்ளும். உள்ளம் அழுக்குற்றுக்
காணப்பட்டால் எங்கே அந்த மனிதரிடம் ஒழுக்கத்தைக் காண முடியும்? இனவே தான் இஸ்லாம்
உள்ளத்திற்கும் உளச் சுத்தத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பின்வரும்
அல்குர்ஆனிய வசனங்களைப் பாருங்கள்.
தொழுகை: “நிச்சயாமாக தொழுகை
மானக்கேடான விஷயங்களிலிருந்தும், வெறுக்கத்தக்க காரியங்களிலுருந்தும் தடுக்கிறது.” (29:45)
ஸகாத்: “(நபியே!) அவர்களையும்
அவர்களுடைய உள்ளத்தையும் தூய்மையாக்கும்பொருட்டு அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கான
பங்கை எடுத்துக் கொள்வீராக.” (9:103)
ஹஜ்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்
“ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்
(பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்) அன்று பிறந்த பாழகனைப்போன்று மாறுகின்றார்” (முஸ்லிம்)
இதேபோன்றுதான் நோன்பும் :
“ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)
விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் உளத்தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)
ஆக அடிப்படைக் கடமைகள் யாவும்
உளத்தூய்மையை இலக்காக்கொண்டுள்ளன. உள்ளம் தூய்மையடைவது “முராகபா” என்கின்ற அல்லாஹ்
எப்போதும் என்னை அவதானித்துக்கொண்டிருக்கின்றான் என்ற சிந்தனை இருந்தால் மட்டுமே. இந்த
நிலையை அடையும் மனிதனையே இஸ்லாம் முத்தகீ என்ற பெயரில் அழைக்கின்றது. தக்வா என்பது
எம்மால் அல்லாஹ்வைப் பார்க்க முடியாவிட்டாலும் அவன் எம்மைப் பார்க்கின்றான் என்ற எண்ணத்துடன்
வாழ்வதாகும். எனவே இந்த முத்தகீயுடைய பண்பை உருவாக்குவதே எல்லா வணக்க வழிபாடுகளுடன்
சேர்த்து நோன்பினதும் இலக்காகும். அதனைத்தான் அல்லாஹ் “லஅல்லகும் தத்தகூன்
- நீங்கள் தக்வாதாரிகளாக (முத்தகீன்களாக) ஆகலாம்” என்று கூறுகின்றான்.
ஏன் இஸ்லாம் ஒரு மனிதனை முத்தகீயாக
மாற்ற விரும்புகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்ததிலிருந்து
அவர் அல்லாஹ்வுடன் நெருக்கமாகும் பிரதான படிநிலைகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அதன்
முதல் நிலை முஸ்லிம். இவர் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாத்துடன் தொடர்பான விடயங்களை அறிந்து
வைத்திருப்பார்.
இரண்டாவது கட்டம் முஃமின்.
இவர் அறிந்து மட்டுமன்றி அவற்றை உருதியாக நம்பி ஈமான்கொண்டிருப்பார். மூன்றாவது உயர்ந்த
நிலை முத்தகீ. இவர் அறிந்து, உறுதியாக நம்பி, கட்சிதமாகச் செயற்படுத்துபவராகவும் பாவக் கிரியைகளிலிருந்து
தூரமானவராகவும் உளச் சுத்தமடைந்தவராகவும் இருப்பார். இவருக்கே அல்லாஹ் நிறைய கூலிகளையும், அந்தஸ்த்தையும், கண்ணியத்தையும் வைத்திருக்கின்றான்.
பின்வரும் திருமறை வசனங்கள் முத்தகீயிற்கு உரிய அந்தஸ்த்துகளை விளக்குகின்றன.
அல்லாஹ்விடத்தில் கண்ணியத்துக்குரியவர்
முத்தகீயே. (அல்ஹுஜூராத்: 13)
அல்லாஹ் முத்தகீன்களையே விரும்புகின்றான்.
(ஆலஇம்ரான் : 76, தௌபா:4)
முத்தகீன்களின் செயல்களையே
அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். (மாஇதா : 27)
அல்லாஹ் முத்தகீன்களுடன் எப்போதும்
இருக்கின்றான். (பகரா:194)
முத்தகீயாக மாறினால் அல்லாஹ்
எனக்குக் கற்றுத் தருவான். (பகரா:282)
அல்குர்ஆன் முத்தகீன்களுக்கே
வழிகாட்டியாக அமையும். (பகரா:01, 02)
மறுமை மஹ்ஷர் வெளியில் அர்ரஹ்மானை
சந்திக்க முடிவதும் முத்தகீன்களுக்கே. (மர்யம் : 85)
அல்லாஹ_த்தஆலா நேசத்தோடு
உதவி செய்வது (வலீயாக இருப்பது) முத்தகீன்களுக்கே. (ஜாஸியா : 19)
நிச்சயமாக அல்லாஹ் முத்தகீன்களின்
நண்பனாவான். (ஜாஸியா : 19)
முத்தகீன்களுக்கே உலகிலும்
மறுமையிலும் இன்பமான வாழ்விருக்கின்றது. (அத்தாரியாத் : 15, அத்தூர் : 17, முர்ஸலாத் : 41,42, அத்துகான் : 51)
திருமறையில் இதுபோன்ற அதிகமான
வசனங்களில் அல்லாஹ் முத்தகீன்களைப் பற்றி பேசியிருக்கின்றான். சூறா பகராவில் மட்டும்
40 தடவைகள் முத்தகீன்களைப்
பற்றிப் பேசியுள்ளான். காரணம் மேலே சொன்ன அத்தனை பாக்கியங்களையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால்
அவன் தன்னை முத்தகீயுடைய அந்தஸ்திற்கு வளர்த்துக்கொள்ளவேண்டுமென்பதற்கே!. முத்தகீயுடைய
அந்தஸ்தை அடைய அல்லாஹ் முத்தகீயின் பண்புகளையும் திருமறையில் எமக்குக் கற்றுத்தருகின்றான்.
“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில்
இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும்
ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன்
மேலுள்ள நேசத்தின் காரணமாக,
பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின்
மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து
வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்)
கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான்
நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம்
முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)” (2:177)
மேற்கூறிய திருமறை வசனம் நாம்
முத்தகீயாக மாறவேண்டுமென்றால் என்னென்ன பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்பதனை பட்டியலிடுகின்றது.
அவை…
1.ஈமான் - உறுதியான நம்பிக்கை
2.அல்-இஃலாஸ் - உளத் தூய்மை
3.இன்பாக் - செலவு செய்தல்
4.இபாதத் - வணக்கங்கள்
5.அல்வபா – வாக்கு மீறாமை
6.ஷப்ர் – பொறுமை
இவைதான் ஒரு முத்தகீயிடம்
இருக்கவேண்டிய பண்புகளாகும். இப்பண்புகளைக் கொண்டவர் உண்மையாளராகவும் முத்தகீயாகவும்
இருக்கிறார் என்பதை மேற்கூறிய வசனத்தின் இறுதிப் பகுதி கூறுகின்றது. இத்தகயை பண்புகளை
உருவாக்குவதே ரமழானுடைய அடிப்படை இலக்காகும். மற்ற காலங்களைவிட ரமழானில் அதிசயமாகவே
நாம் இப் பண்புகளைப் அடைந்துகொள்ள கடிணமாக உழைக்கின்றோம். உதாரணத்திற்கு…
“யார் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ
அவருடைய கடந்துசென்ற பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான்.” (புஹாரி) இங்கு உறுதியான
ஈமான் வளர்க்கப்படுகின்றது.
ஏனைய அமல்கள் அனைத்தையும்
நாம் பிறருக்காகச் செய்ய முடியும். ஆனால் நோன்பு அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடியும்.
அதனால்தான் அல்லாஹ்வும் “ஏனைய அமல்கள் அவனுக்குரியன
ஆனால் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி வழங்குகின்றேன்” என்று கூறியுள்ளான்.
எனவே இந்த எண்ணம் இஃலாஸை வளர்க்கின்றது.
நபியவர்கள் ஏனைய காலங்களை
விட கூடுதலாக ரமழானில் தான தர்மங்களில் ஈடுபட்டுள்ளார் என்ற விடயம் எம்மையும் அதிpகமாக தான தர்மங்களில்
ஈடுபட வைத்து உலோபித்தனம் எனும் உள அழுக்கிலிருந்து விடுபட வைக்கின்றது.
அடிப்படை இபாதத்களை இக்காலப்பகுதியில்
செய்ய நாம் ஆவலுடன் ஈடுபடுகின்றோம். ஏனைய காலங்களில் பள்ளிக்கு வருகைதராதோர்கூட ரமழானில்
தொழுக்கு வருவதை அவதானிக்கலாம். அவ்வாறே நோன்பு நோட்பவனாகவும் ஸகாத் கொடுப்பவனாகவும்
ஒரு மனிதன் மாறுகின்றான். உம்றா செய்பவர்கள்கூட இக்காலப்பகுதியில் உம்றா செய்ய நினைப்பது
இபாதத்களில் ஏற்படும் ஆர்வத்தைக் காட்டுகின்றது.
வாக்களித்துவிட்டு மாறுசெய்பவன்
முனாபிக் என்ற வகையில் நோன்பிருக்கின்ற ஒருவன் தனது நோன்பு வீணாகிவடக்கூடாது என்ற வகையில்
வாக்களிக்கும் முன்பு யோசித்துப் பார்ப்பதும் வாக்களித்தால் அதனை உரிய முறையில் நிறைவேற்ற
முயற்சிப்பதும் ரமழான் கற்றுத்தரும் ஒரு உண்ணதப் பாடமாகும். வுhக்களித்துவிட்டு அதனை
நிறைவேற்றாது சென்றால் அது பொய்யாக மாறிவிடும். பொய் நோன்பைப் பாழ்படுத்தும் என்ற எண்ணமே
இவ்வாறு செயற்படவைக்கின்றது.
ரமழான் பொறுமையின் மாதம் என்போம்.
பசியை மட்டுமன்றி இச்சைகளையும் அடக்கிவைக்க பொறுமை என்ற கேடயம் மிக முக்கியம். ஏனைய
காலங்களில் ஹலாலானவற்றைக்கூட அல்லாஹ் ரமழான் காலத்தில் ஹராமாக்கிச் சோதிப்பது இந்தப்
பொறுமையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்குத்தான். யாராவது ஏசினாலும் “நான் நோன்பாளி” அடித்தாலும் “நான் நோன்பாளி” என்று கூறி பொறுமையைக்
கையாளழும் உண்ணதப் பண்பை ரமழான் நோன்பினால் மட்டும்தான் உருவாக்கமுடியும்.
இவ்வாறான பண்புகளை எம்மிடத்தில்
உருவாக்கவே ரமழான் ஒவ்வொரு வருடமும் எம்மை வந்தடைகின்றது. ஆனால் ஒவ்வொரு ரமழானும் எம்மை
விட்டுக் கடந்து செல்லும்போதும் இவ்விலக்கை நாம் அடைந்துகொண்டோமா? என்பது கேள்விக்குறியாகத்தான்
இருக்கின்றது. இவ்விலக்கை அடையாதபோது ரமழானில் நாம் வெறுமனே பசித்தும் தாகித்தும் இருந்தது
மட்டுமே எமக்காக எஞ்சியிருக்கும் என்பதுதான் உண்மை. யாஅல்லாஹ் இந்த ரமழானின் மூலமாவது
என்னை முத்தகீயுடைய அந்தஸத்தை அடைய நெருங்கச் செய்வாயாக! ஆமீன்!
2 comments:
plz add more islamic posts
there are no posts under Science->islam science
plz add more posts
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...