இந்தியாவில்
உ.பி. மாநிலம், மதுரா மாவட்டத்திலுள்ள “விருந்தாவனம்” எனும் நகரம் கிருஷ்ணனும் ராதையும்
உலவிய புண்ணிய பூமி என்று புகழ்ந்துரைக்கப்படுகின்றது. இதற்குத் “துளசிவனம்” என்று
மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் இன்று அங்குள்ள துளசிச் செடிகளையும் விட விதவைகளே அதிகம்.
அதனால்தான் விருந்தாவனம் இன்று “விதவைகளின் நகரம்” என்று அழைக்கப்படுகின்றது.
இங்கு
கிருஷ்ணர், ராதை, ராமர் ஆகியோருக்கென தனித்தனியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள்
வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. அவற்றிலுள்ள கடவுள்களின் சிலைகளுக்கு தங்க ஆபரணங்கள்,
பட்டாடைகள் அணிவித்து பாலாபிஷேகமும் நடாத்தப்படுகிறது. அங்குள்ள உண்டியல்களில் பக்தர்களால்
இலட்சக்கணக்கான காணிக்கைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனாலும்
வெளியே… தலை மொட்டை அடித்து நைந்துபோன வெள்ளைச் சேலைகள் அணிந்த ஆயிரக் கணக்கான பெண்கள்,
கைகளில் பிச்சைப் பாத்திரங்களை ஏந்தி, வழிபாட்டுக்கு வருபவர்களிடம் கையேந்தி யாசகம்
கேட்கும் அவலக்காட்சியையும் இங்கு காணலாம். இவர்கள் யாவரும் விதவைப் பெண்கள். விதவைகளானதும்
குடும்பத்தினராலும் கணவன் வீட்டாராலும் கைவிடப்பட்டவர்கள். இங்குள்ளவர்களில் 95 சதவீதமானவர்கள்
மேற்கு வங்கத்திலிருந்து வந்தவர்கள்.
இருள்
சூழ்ந்த இரவுகளில் நாற்றமெடுக்கும் அதன் குப்பை மேடுகளிலும் தெருவோரங்களிலும் அநாதைகளாகப்
படுத்துக் கிடக்கும் விதவைகளின் உடலை மேய்வதற்காக காமப் பித்தர்கள் வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
முதலில் எதிர்த்து நின்றவர்களும்கூட பிறகு தங்கள் உடல் பசியைப்போக்க யாராவது வர மாட்டார்களா
என்று தானாகவே தேடி அலையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிடுகிறது.
இங்கு
உலவும் விதவைகளில் 75 சதவீதம் பேர் 20 வயதிற்கு முன் மணமுடித்து வைக்கப்பட்டவர்கள்.
அதிலும் பெரும்பாலானோர் 12 வயதுக்கு முன்பே திருமணமானவர்கள். இங்குள்ள 50 சதவீத விதவைகளுக்கு
குழந்தைகள் உள்ளனர்.
இத்துனைக்கும்
மத்தியில் பிராமணக் குலத்தில் பிறந்த விதவைகளுக்கும் பிற கீழ் சாதியில் பிறந்த விதவைகளுக்குமிடையில்
அன்றாடம் நடைபெறும் சண்டை சச்சரவுகள் மிகவும் பிரபலம்.
இங்குள்ள
அரச விடுதியொன்றில் தங்கியிருந்த சில விதவைகள் அண்மையில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் துப்பரவுத் தொழிலாளர்களால் துண்டு
துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டைகளில் கட்டி யமுனை நதியில் வீசி எறியப்பட்டுள்ளது.
இதனால் இருக்கும் கொஞ்ச விடுதிகளிலும் தமது கடைசி காலத்தைக் கழிக்க இங்குள்ள அபலை விதவைகள்
அச்சப்படுகின்றனர்.
“நாங்கள்
விருந்தாவனத்திற்கு வருவதே நிம்மதியாக சாவதற்காகத்தான். மாறாக, கடவுள் மீது கொண்ட பக்தியினால்
அல்ல. எனவே, பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அளவற்ற பக்தியினால் இங்கே வந்திருக்கிறோம் என்று
நீங்கள் தவறாக எண்ணிவிடாதீர்கள்…” என்று ராதாமணி என்ற விதவைப் பெண் கூறுகிறாள்.
குறிப்பு : 2012 மார்ச் மாத சமநிலைச் சமுதாயம் என்ற சஞ்சிகையில் வந்த ஒரு கட்டுரையைத்
தழுவி எழுதியுள்ளேன். மேலதிக வாசிப்பிற்கு இச்சஞ்சிகையைப் பார்க்கவும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...