எமது பார்வையில் ஈ மற்றும் நுளம்பு என்பன அற்பப் படைப்புகள் என்ற போதிலும் அவைகூட
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் என்பதால் அல்லாஹ் அவற்றிலும் பற்பல அத்தாட்சிகளை வைத்துள்ளான்.
எனவேதான் இவை பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் ஒரு சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஈயும்
நுளம்பும் அதிகமாக மனிதர்களை நெருங்கியே வாழ்கின்றன. பகலில் ஈத்தொல்லையென்றால் இரவில்
நுளம்புத் தொல்லை. இரண்டும் மாறி மாறி எம்மைப் பின்தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
எனவே இத்தொடரில் ஈக்களில் அல்லாஹ் வைத்திருக்கும்
ஒரு சில அற்புதங்களைப் பற்றிப் பார்ப்போம். இன்னுமொரு பதிவில்
நுளம்புகள் பற்றி இடுகையிடுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.
“ஈயில்லாத நாடில்லை” என்பார்கள். அந்த அளவு ஈக்கள் மனித வாழ்க்கையுடன் பிணைந்து
அனைத்து இடங்களிலும் வாழ்கின்றன. ஈக்களின் தொல்லை எவ்வளவு அதிகமோ அதேபோன்று அவற்றின்
தொகையும் அதிகமாகவே உள்ளன. இதுவரைக்கும் 2இலட்சத்து 40 ஆயிரம் வகையான ஈக்கள்
கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 1இலட்சத்து 20 ஆயிரம் இனங்கள் அறிவியல் ரீதியாக ஐரோப்பிய மொமிகளில்
விளக்கி எழுதப்பட்டுள்ளன. இவற்றில் பெருங்கால் கொசுக்கள் (Gnat), நீர் ஈக்கள் (Midges) என்பவற்றையே நாம்
அதிகமாகக் காண்கின்றோம். ஈக்கள் நீர் நிலைகளில் அதிகமான முட்டைகளையிட்டு சந்ததிகளை
உற்பத்தி செய்தாலும் அவை ஆகக்கூடியது பத்து நாட்கள்தான் உயிர் வாழ்கின்றன. ஆனால் ஒரு
பெண் ஈ இறக்கும் முன் இன்னும் அதிகமான சந்ததிகளை உருவாக்கிவிட்டே அது இறந்துவிடுகின்றது.
அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு உரைக்கும் வகையில் ஈயுடன் ஒப்பிடுகையில் அதனைவிடவும்
சிலைகள் எவ்வளவு பலவீனமானவை என்பதைப் பின்வருமாறு அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
“மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ,
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும்
ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துச்சென்றாலும்
அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பப் பறித்துக்கொள்ளவும் முடியாது. தேடுவோனும்
தேடப்படுவோனும் பலவீனமானவர்களே!” (22:73)
தும்பியின் முகத்தைப்போன்ற முகத்தோற்றத்தையும் அதில் இருபுறமும் இரு பாதியாக கண்களையும்
நீண்ட உறிஞ்சான் ஒன்றையும் ஆறு கால்களையும் இருபுறமும் இரண்டு சிறகுகளையும் இவை கொண்டுள்ளன.
கால்களிலும் உடலிலும் ஒட்டும் தன்மை வாய்ந்த ஆயிரக்கணக்கான சிறு சிறு மயிர்கள் காணப்படுகின்றன.
ஈக்களின் முகத்தில் இருபாதியாக இரண்டு கண்கள்தான் எமக்குத் தெரிந்தாலும் அவற்றில்
சிறிது சிறிதாக மொத்தம் 500 இற்கும் அதிகமான
கண்களை அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியுள்ளான். இதனால் அவற்றின் பார்வை மிகக் கூர்மையாக
இருக்கும். தும்பிக்கைபோன்று நீண்டிருக்கும் அவற்றின் உறிஞ்சான்களால்தான் அவற்றின்
உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்கின்றன. ஈக்கள் அதிகமாக திரவப் பொருட்களையே உறிஞ்சுகின்றன.
இனிப்பு, கசப்பு, உவர்ப்பு என்று வரையறையின்றி கண்டதையெல்லாம் மொய்த்து
உறிஞ்சிவிடுகின்றன. சிலபோது இரத்தத்தையும் உறிஞ்சிக்கொள்கின்றன. இலகுவாக எதனையும் உறிஞ்சுவதற்கு
அல்லாஹ் அவற்றின் உறிஞ்சு குலாயில் ஆறு அரைகளை அமைத்துள்ளான். எனவே ஒரே தடவையில் ஆறு
குலாய்களுடாகவும் மிக விரைவாக உணவுப்பொருள் வாயைச் சென்றடையும்.
ஈக்களின் ஒளி ஊடுபுகும் விதத்தில் அமைந்திருக்கும் இறகுகள் மிக விரைவாகப் பறப்பதற்கு
ஏற்றவிதத்தில் உறுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. அத்தோடு கண்களுக்குத் தென்படாத அமைப்பில்
மிக மெல்லிய இரத்த நரம்புகள் நூற்றுக் கணக்கில் அவற்றில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பொலித்தீன்
போன்று மிக மெலிதாக அவ் இறக்கைகள் இருந்தாலும் பறக்கும்போது அவை பிய்ந்துவிடாத வண்ணம்
அல்லாஹ் பாதுகாத்துவைத்துள்ளான்.
ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில்
அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று
போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான
நுண் கிரிமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள்
எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான்.
ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம்
கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு
முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள்.
நபியவர்கள் கூறினார்கள் “உங்கள் குடிபானத்தில்
ஈ வீழ்ந்தால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு
பின்னர் வெளியில் எறிந்துவிடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றையதில் நிவாரணமும்
உள்ளது” (புஹாரீ, அபூதாவூத்)
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்: “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும்
அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர்
வாழ்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆவள் கொண்டேன். எனவே
ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தேன்.
மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது.
அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு
என்பதை அறிந்துகொண்டேன். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின்
அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.”
என்கிறார்.
இவ்வளவு அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான் என்றால் ஈயைவிடவும் பன்பமடங்கு
பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எத்துனை எத்துனை அற்புதங்களை அல்லாஹ் வைத்திருக்க வேண்டும்.
ஆனாலும் இப்பிரபஞ்சம் அல்லாஹ்விடத்தில் ஈயின் ஒரு இறக்கையளவு கூட பெருமானமற்றது என்று
நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...