அருள்மிகு ரமழான் எம்மை நெருங்கிவிட்டது. பாடசாலைகளும் விடுமுறை என்பதால் ரமழானை
முழுமையாகப் பயன்படுத்த பலரும் பல்வேறு திட்டங்களுடன் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்!
இன்னும் பலர் திட்டங்களே இன்றி காலத்தைக் கடத்தும் ஐடியாவிலும் இருப்பீர்கள்.
இதர கடமைகள் போன்று நோன்பும் எமது உள்ளத்தில் குவிந்துகிடக்கும் பாவக் கரைகளைப்
போக்கி அதனைப் பரிசுத்தப்படுத்த வருகிறது. அந்த வகையில் பொதுவாக எமது உள்ளத்தைப் பீடித்துள்ள
ஒரு நோய்தான் செல்வத்தின் மீதுள்ள அபரிமிதமான ஆசை, அதனைச் செலவழிப்பதில் உள்ள கஞ்சத்தனமும் உலோபித்தனமும்
மேலும் பயனற்ற விடயங்களில் செலவழிக்கும் ஊதாரித்தனமும் கூட.
ஓர் இறை அடியான் (இபாதுர் ரஹ்மான்) உலோபியாகவோ, ஊதாரியாகவோ இருக்க மாட்டான். அவன் எல்லா அம்சங்களிலும்
போன்று செலவுசெய்தல் என்ற விடயத்திலும் நடுநிலைபேனுவான். அல்லாஹ் கூறுகின்றான்.
ஆக இந்த மோசமான உளநோயிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள ரமழான் காலங்களில் எவ்வாறு
எமது செலவீனங்களை நல்ல முறையில் மேற்கொள்ளலாம் என்பதற்கான சில ஆலோசனைகளை உங்களுடன்
பரிமாறிக்கொள்கின்றேன்.
1. உண்டியல் சேமிப்பு
ரமழான் தானதர்மங்கள் அதிகமாகச் செய்யுமாறு தூண்டப்பட்டுள்ள மாதம் என்பதால் அக்காலங்களில்
அதிகமாக ஸதகாக்கள் செய்ய இன்றிலிருந்தே சேமிப்பை மேற்கொள்ளுங்கள். உண்மையில் ரமழானை
எதிர்பார்த்து ஆரம்பத்திலிருந்தே ஓர் உண்டியலில் குறைந்தது 10 ரூபா சேமித்து வந்தாலே அதன் மூலம் ரமழானில் நிறைய
தானங்களைச் செய்யலாம்.
2. ஓர் ஏழைக்கு உணவளித்தல்
உங்கள் திட்டங்களில் ரமழானில் ஒரு தடவையோ அல்லது வாரத்தில் ஒரு முறையோ அல்லது முழு
ரமழானிலுமோ ஓர் ஏழைக்கு உணவளிக்க முடிந்தால் அது அளப்பரிய நன்மையை ஈட்டித்தரும். “உங்கள் வீட்டில் சமைக்கும் ஆனத்தை கூடவைத்து பக்கத்து
வீட்டுக்குக் கொடுங்கள்” என்பது நபி மொழி.
அவர் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும் என்று நபியவர்கள் கூறவில்லை. யாராகவும் இருக்கலாம்.
எமது நாட்டில் பாதையோரமெங்கும் நிறைய யாசிப்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும்
உணவளிக்க முடியும்.
3. நண்பர்களுக்கு ஓர் இப்தார் ஏற்பாடு
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு நோன்பு திறக்க உதவிகள் செய்தால் அந்நோன்பாளியின்
நன்மையில் எந்தக் குறையுமின்றி அதே நன்மை நோன்பு திறக்க உதவியவருக்கும் உண்டு. ஒரு
நாளில் உங்கள் நண்பர்கள், சகபாடிகளுக்கு ஒரு
இப்தாரை வீட்டிலோ அல்லது வேறு பொது இடமொன்றிலோ ஏற்பாடு செய்யுங்கள். அது மிக்க நல்ல
செயலாகும். பெரிய அளவில் இல்லாமல், சிறிய எண்ணிக்கையிலான
நண்பர்களைக்கொண்ட ஒரு இப்தாரை ஏற்பாடு செய்யலாம்.
4. பெருநாள் ஆடை வாங்கிக்கொடுத்தல்
நாம் மிக அழகான ஆடைகளை அணிந்து பெருநாள் கொண்டாடும்போது இன்னும் சிலர் அதற்கான
வசதிகள் இன்றி இருப்பார். அவர்களுக்கு அதற்கான ஓர் ஏற்பாட்டினை உங்களால் செய்துகொடுக்க
முடிந்தால் அது மிக்க மகிழ்ச்சிக்குறியதாக இருக்கும். உங்களுக்காக பெருநாள் ஆடை வாங்கும்போது
உங்கள் பெற்றோரிடம் கூறி அவர்களுக்கும் ஓர் ஆடை வாங்கிக்கொடுங்கள்.
5. ஸதகா ஜாரியாவான ஒரு செயல்
நீங்கள் சேமித்த பணத்தின் மூலம் சதகா ஜாரியாவான ஒரு செயலைச் செய்யுங்கள். பள்ளி
உண்டியலில் ஒரு தொகையைப் போடுங்கள், ரமழான் உடன் தொடர்பாகன துஆக்களை அச்சடித்து பலருக்கும பகிருங்கள்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...