وَالتِّينِ وَالزَّيْتُونِ
”அத்தியின் மீதும்,
ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும்
சத்தியமாக.” [95:1]
திருக்குர்ஆன் ஒரு
படைப்பினத்தைப் பற்றிக் குறிப்பிடுமானால், அதிலும் அதன் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறியிருந்தால் அதற்குத் தனிச் சிறப்பு
உண்டு. அல்லாஹ் திருக்குர்ஆனில் சத்தியமிட்டுக் கூறியவற்றின் வரிசையில் உள்ள மற்றுமொரு
பிரதானமான தாவரம்தான் அத்தி. அரபு மொழியில் அத்தீன் என்றும் தமிழில் அத்தி என்றும்
ஆங்கிளத்தில் Fig என்றும் இது அழைக்கப்படுகின்றது.
இது FICUS GLOMERATA, FICUS AURICULATE என்ற தாவரப்பெயரால் அழைக்கப்படுகின்றது. அத்தோடு MORACEAE என்ற தாவரக் குடும்பத்தைச்
சார்ந்துள்ளது. அத்தி மரங்களில் நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER
FIG) என பல வகை உண்டு.
மரத்தின் அமைப்பு
கடும் வெப்ப,
கடும் குளிர் நாடுகளைத் தவிர
பொதுவான சீதோஷ்ன நிலையுள்ள அனைத்து நாடுகளிலும் அத்தி மரம் வளர்கின்றது. குறிப்பாக
ஆசிய நாடுகளில் கூடுதலாக இவற்றைக் காணலாம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில்
நன்கு வளரும். அத்தி மரங்கள் 6 – 10 மீட்டர் உயரம் வரை
வளரக்கூடியன. அடர்ந்த கிளைகளும் முட்டை வடிவிலான இலைகளும் உண்டு. மரத்தின் பட்டை சாம்பல்
மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும்.
வருடத்தில் இருமுறை பூப்பூத்து காய்காய்க்கும். ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும்.
அத்தி பூத்தாப்போல.
யாருக்கும் தெரியாமல்
ஒரு காரியம் செய்துவிட்டால் ‘அத்திப் பூத்தாப்போல’
என்று ஒரு பழமொழி கூறுவார்கள்.
காணரம் அத்தி மரத்தில் பூப் பூப்பதை நம்மால் இலகுவாக அடையாளம் காண முடியாது. பூக்கள்
மரத்தின் அடியிலிருந்து உச்சிவரை மரத்தை ஒட்டியே பூக்கும். அப்பூக்கள் காயாகும் போதுதான்
தெரியவரும் அத்தி பூத்திருக்கின்றது என்று. விடுகதைகளில் இப்படியும் ஒரு கேள்வி உண்டு
“காணாமல் பூப் பூக்கும் கண்டு
கண்டு காய் காய்க்கும் அது என்ன?” வேறென்ன? அத்திதான்.
அத்தி காய் –
பழம்
அத்தி காயாக இருந்து
சில காலங்களில் பழமாக மாறும். அத்திப் பழத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று சீமை அத்தி
(Ficus Carica) மற்றையது நாட்டு அத்தி
(Racemosa). அத்தி பழங்கள் கொத்துக்
கொத்தாக மரத்தின் அடிப்பகுதியிலிருந்து தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள்
பிரியும் இடங்களிலும்கூட கொத்துக் கொத்தாகத் தொங்கியபடி காணப்படும். காயாக இருக்கும்போது
நெல்லிக்காய் அளவில் உருண்டையாக பச்சை நிறத்திலும் பழுத்ததும் வெளிப்புறம் மஞ்சல்,
நாவல் போன்ற நிறங்களிலும்
உட்புறம் செக்கச் சிவப்பாகவும் மாறிவிடும். பழமாக இருக்கும்போது பரவும் நல்ல மணத்தால்
மனிதன் மட்டுமன்றி பறவைகள், விலங்குகள்,
பூச்சிகள் என அனைத்தும் அதன்பால்
கவரப்படும். அத்திப் பழத்தின் விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும்.
வாசத்துடன் இருந்தாலும் பழத்தின் உற்புறத்தில் அதற்குள் மெல்லிய பூச்சி, புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
அத்திப் பழம் உண்ணும்
முறை.
தமிழ் நாட்டின் இயற்கை
மருத்துவர் என அழைக்கப்படும் வெங்கடேஸ்வரன் அவர்கள் அத்திப்பழம் உண்பதற்கு உள்ள முறைகளைப்
பின்வறுமாறு விளக்குகின்றார். ‘‘அத்திப்பழத்தை நன்றாக
தண்ணீரில் அலசிவிட்டு தோலோடு சாப்பிடும்போதுதான் முழுப் பயன் நமக்கு கிடைக்கும். காய்ந்த
அத்திப்பழத்தில் இனிப்பு அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் அதனைத் தவிர்க்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்போ
அல்லது 2 மணி நேரத்திற்குப்
பிறகோ அத்திப்பழம் சாப்பிடுவது சிறந்தது. காய்ந்த நான்கு அத்திப்பழங்களை இரவில் மண்
குவளையில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லது. இதனால் மலச்சிக்கல்
தீரும். அத்திக்காய் துவர்ப்புச் சுவை உடையது என்பதால் அதை சமைத்தும் சாப்பிடலாம்.
அத்திப்பழத்தின் உள்ளே புழுக்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் புழு இல்லாத அத்திப்பழமா
என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தை ஜூஸ் செய்தும் அருந்தலாம்.”
என்கிறார்.
அத்தியில் உள்ள சத்துக்களும்
அமிலங்களும்
அத்திப் பழங்களில்
84% பழச் சதையும் 16% தோலும் இருக்கும். அத்திப்பழத்தில் நியாசின்,
தயாமின், ரிபோஃப்ளைவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் உற்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்களும்
அதிகம் காணப்படுகிறன. 100 கிராம் அத்திப் பழத்தில்
புரதம் 4 கிராம், கால்ஷியம் 200 மி.கி, இரும்பு 4 மி.கி, விட்டமின் 100 ஐ.யு, தயாமின் 0.10 மி.கி, கலோரி அளவு 260 என்பன அடங்கியிருக்கும். உலர்ந்த அத்திப் பழங்களில்
அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு
எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
ஐம்பது கிராம் அத்தி
பழம் ஒன்றில் கிடைக்கும் சத்துக்கள்.
• நார்ச்சத்து: 5.8%
• பொட்டாசியம்: 3.3%
• மாங்கனீசு: 3%
• விட்டமின் பி6: 3%
• கலோரி(37): 2%
• புரதம்: 2 கிராம்,
• கால்ஷியம்: 100 மி.கி,
• இரும்பு: 2 மி.கி
அத்திப்பழத்தை ஆராய்ச்சி
செய்த அறிவியலாளர்கள் இதில் மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு
மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர விட்டமின் ஏ,
விட்டமின் சி அதிக அளவிலும்
இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் குணங்கள்.
இத்தனை சத்துக்கள்
கிடைப்பதால் அத்திப்பழத்தை ஆரம்பத்தில் கிராமப்புறங்களில் மட்டும்தான் சாப்பிட்டு வந்தார்கள்.
மருத்துவரீதியாக நிறைய பலன்கள் இருப்பதை விஞ்ஞான உலகம் கண்டு அறிந்ததன் பிறகு,
இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும்
மருந்தாக மாறிவிட்டது. நிறைய நாடுகளில் அத்திமரத்தை
அதிகளவில் விவசாய நிலங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர். காரணம் அதன் மருத்துவக் குணம்தான்.
சீரான ரத்த ஓட்டத்துக்கு
அத்திப்பழம் வழி செய்கிறது, அத்திப்பழத்தில் கால்சியம்
சத்தோடு சேர்த்து பாஸ்பரஸ் சத்தும் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடைகிறது. நார்ச்சத்து
அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் உப்பு கரைகிறது. மலச்சிக்கல்,
ஆசனவாய் எரிச்சல்,
ரத்தக்கசிவு, மூலம் போன்ற
பிரச்னைகளையும் அத்தி தீர்க்கிறது. உடலில் அளவோடு ரத்தம் உற்பத்தியாகிறது, ரத்த சோகை நீங்குகிறது.
மைக்ரோ வைட்டமின்
சத்துகள், பி.காம்ப்ளக்ஸ் சத்துக்கள்
குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர பிரச்னைகள் தீரும். தினசரி அத்தி சாப்பிடும்
பழக்கமிருந்தால் பெருங்குடல் புற்று நோயைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறியிருக்கிறார்கள். அத்திப்பழத்தில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளதால் உடல் எடை கூடாமல்
சீராக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தக்கசிவு குறையும். தலைமுடி
உதிரும் பிரச்னைகள் இருப்பவர்கள் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது
நின்று முடியின் வேர்கள் பலமடையும்.
அத்திப் பழம் குறிப்பாக,
சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, போன்ற பாதிப்புகள்
உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
கண்களின் பார்வையைக்
கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம்,
அஸ்கார்பிக் அமிலம் போன்றவை
அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப்
பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச்
சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச்
சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
உணவை விரைவில் ஜீரணிக்கச்
செய்து, சுறுசுறுப்பைத்தந்து,
கரும் பித்தத்தை வியர்வை மூலம்
வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழம்
தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி
அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு
சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. அத்திப்
பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
அத்தியின் இலைகளை
இடித்து பவுடராக்கி தேனுடன் கலந்து உண்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலில்
காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது அவ்விடத்திற்கு இவைகளை வைத்துக் கட்டினால் இரத்தம்
கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க
இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் மூலம் வாய் கொப்பளிக்கலாம். அத்தி மரத்தின்
பட்டையை இரவில் தண்ணீரில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும்.
நீரழிவு குணமாகும்.
அத்தி மரத்தை லேசாக கீறினால் ஒரு வித பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின்
கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத்தின்
பாலாகும். இந்தப் பாலை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில்
குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அடிமரத்தின் கீழ்
வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும்.
தென்னை, பனை போன்றவற்றில்
பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய்
போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை
ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு
பெறும்.
சுப்ஹானல்லாஹ்!
இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை என அத்தித் தாவரத்தின் அனைத்துப் பாகங்களிலும்
எத்துனை மருத்துவக் குணங்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான்
என்று பாருங்கள். அதனால் தானே வத்தீன் – அத்தி மரத்தின் மீது சத்தியமாக என்று அல்லாஹ் திருமறையில் கூறியிருக்கின்றான்.
அவனுக்கே புகழ்கள் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...