“When
the dream comes true” என்றொரு குறுந்திரைப்படம்.
படிப்பறிவற்ற தள்ளுவண்டித் தொழிலாளிக்கு வரிசையாகக் குழந்தைகள். அவனது மகள் பாடசாலை
செல்லவேண்டிய வயதில் கூலி வேலைக்குச் செல்ல நேரிடுகிறது. “தன் தந்தை ஒரு குழந்தையோடு
நிறுத்தியிருந்தால் குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்” என அந்தப் பத்து வயதுச்
சிறுமி சிந்திப்பதே அக்குறுந்திரைப் படம் சொல்லும் சேதி. தமிழ்நாடு திரைப்படத் துறை
மாணவர்களே இக்குறுந்திரைப் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.
இதுபோன்ற குறுந்திரைப் படங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், விளம்பரங்கள் என்பவற்றை
இன்று சமூகத்தில் பரவலாகக் கண்டுகொள்ளலாம். குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்தை சமூகமயப்படுத்துவதற்காக
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சிலதே இவை.
தோமஸ் ரொபர்ட் மால்துஸ்
என்பவரே உலகுக்கு முதன் முதலில் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
இவர் ஆங்கிலிங்கன் கிறிஸ்த சபையின் பாதிரியாரும் பொருளாதார அறிஞருமாவர். 1798 ஆம் ஆண்டில் அவர்
வெளியிட்ட “மக்கள் தொகையின் அடிப்படைக்
கொள்கைகளும் வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்தில் அது ஏற்படுத்தும் விளைவுகளும் (On
principles of population as it affects the future improvement of society) என்ற நூல்தான் சனத்தொகைப்
பெருக்கத்தைக் கட்டுக்குள்கொண்டுவர குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை அவசியம் கடைபிடிக்கவேண்டும்
என்ற மனநிலையயை மக்கள் மனதில் ஏற்படுத்தியது.
மக்கள் தொகைப் பெருக்கமானது
2,4,8,16… என்ற பெருக்கள் விருத்தி
வேகத்திலும் உணவுற்பத்தியானது 1,2,3,4,5…என்ற கூட்டல் விருத்தி அளவிலும் செல்கின்றமையால் இன்னும் சில
நூற்றாண்டுகளில் உயிர்வாழ்க்கைக்கு மக்களிடத்தில் பலத்த போட்டித்தன்மை உருவாகும் என்றும்
குறிப்பிட்டார். இதனால் மக்கள் வசிப்பிடம் இன்றியும் உணவுப் பற்றாக்குறையினாலும் அல்லல்படப்போகின்றனர்
என்றார்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட
இயந்திரங்கள் ஐரோப்பாவில் புதியதொரு தொழில்முறைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியது.
இதன் மூலம் பெரும் ஆலைகள் உருவாகின. அத்தோடு இயந்திரங்கள், ஆலைகள் உற்பத்தியால்
மனித உழைப்பு குன்றியது. நூருபேர் செய்யும் வேளையை ஒரு இயந்திரம் செய்யும் நிலை உருவாகியதால்
தொழிலாலர்கள் வேலையில்லா நிலைக்குத் தள்ளப்படுமோ என்று அஞ்சினர். குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டத்தை
நடைமுறைப்படுத்த இதுவும் ஏதுவானதொரு காரணியாய் அமைந்தது.
இந்நிலைகளைத் தவிர்ப்பதற்காக
பிந்திய வயதுத் திருமணம்,
சுயகட்டுப்பாட்டு முறைகள், குழந்தைப் பேற்றைத் தாமதப்படுத்தல் போன்ற திட்டங்களை அவர் தனது
நூலில் வலியுறுத்தினார். தூரநோக்கின்றி சந்ததிகளை உற்பத்திசெய்வதால் மனிதர்கள் மூன்று
முக்கிய துறைகளில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டினார். அவை…
1. வளப் பற்றாக்குறை
2. இடப்பற்றாக்குறை
3. உணவுப் பற்றாக்குறை
என்பனவாகும்.
மேற்படி மால்தூஸ் முன்வைத்த
ஆய்வின் உண்மைத் தன்மை என்ன என்பது பற்றியும் நடைமுறை உலகம் இதுபோன்ற பிரச்சினைகளில்
அல்லுருகின்றதா என்பது பற்றியும் இப்படியானதொரு ஆய்வு முன்வைக்கப்பட்டதன் நோக்கம், அதன் பின்னணி என்ன
என்பது பற்றியும் இக்கட்டுரை ஆராய விளைகிறது.
1. வளப் பற்றாக்குறை
ஏற்படும்.
பூமியின் வசிப்பிடமும் அதில்
உள்ள வளங்களும் குறிப்பிட அளவில்தான் உள்ளன. சனத்தொகைப் பெருக்கமானது குறித்த அளவிலான
இவ்வளங்களைப் பங்குபோடும்போது அவற்றில் பற்றாக்குறை ஏற்படும் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது
என மால்தூஸ் வாதிகள் கூறுகின்றனர்.
மக்கள்தொகை வளர்ச்சியால் வளப்
பற்றாக்குறை ஏற்படாது, மக்கள் தொகை வளர்ச்சியோடு
வாழ்வாதார வளங்களும் விருத்தியடைந்தே வந்துள்ளன என்பதை மால்தூஸ் வாதிகள் அவதானிக்கத்
தவறிவிட்டனர். ஆண்டடிப்படையில் மக்கள் தொகை எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதைப்
பின்வரும் அட்டவனையை அவதானிப்பதனூடாக விளங்க முடியும்.
கி.பி. 1650 முதல் 2012 வரையான 362 வருடங்களில் மக்கள்
தொகையானது அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதிலும் 1930 இற்கும் நடப்பு வருடத்திற்கும்
இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ள 82 ஆண்டுகளில் அண்ணலவாக 200 கோடியால் மக்கள் தொகை வளர்ச்சியடந்து வந்துள்ளது. உலக சனத்தொகை
600 கோடியாக உயர்வடைந்து
12 வருடங்களில் 700 கோடியைத் தொட்டுவிட்டுள்ளது.
அதாவது 12 வருடங்களில் 100 கோடியால் மக்கள்தொகைப்
பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் 2025 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 800 கொடியாக உயர்வடைந்துவிடும்
என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தளவு மக்கள்தொகை உயர்வடைந்துள்ள
போதிலும் பொருளாதாரப் பற்றாக்குறையோ, வளப் பிரச்சினைகளோ ஏற்பட்டு மக்கள் செத்துமடிந்ததாகவோ அசௌகரியங்களை
எதிர்கொண்டதாகவோ அறியமுடியவில்லை. இத்துனை வளர்ச்சியிலும் மக்களின் வாழ்வாதார வளங்கள்
பூர்த்திசெய்யப்பட்டுள்ளன என்பதுவே யதார்த்தமான உண்மை.
நிஜமாகவே மால்தூஸின் குடும்பக்கட்டுப்பாட்டுத்
திட்டத்தை அமுல்படுத்தும்போதுதான் நாட்டின் வளங்களும் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
இன்று உலகளவில் நுகர்பொருள் உற்பத்திகள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. ஒவ்வொரு
நாடும் தமது உற்பத்திகளை நுகர்வோரை நம்பியே சந்தைப்படுத்துகின்றன. நுகர்பொருள் உற்பத்தி
அதிகரிக்க அதிகரிக் குடும்பக்கட்டுப்பாட்டின் மூலம் சந்ததிகள் குறைந்து வந்தால் உற்பத்திகளை
நுகர்வது யார்? இதனால் ஒவ்வொரு நாடும்
நட்டமடைய நேரிடும். தமது உற்பத்தியைக் குறைக்கநேரிடும். அதனல் தொழிற்சாலைகள் குறைந்து
வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரிக்கும். உற்பத்தியாளர்களும் தொழிலார்களும் கூட குறைந்துவிடுவர்.
இதனால் முழு நாடும் நட்டத்திற்குள்ளாகி பாரிய பாதிப்புகளே நிகழும்.
மேலும் இத்திட்டத்தின்படி
சந்ததிகளைக் குறைப்பதால் உலகில் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போதைக்கே
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கடைபிடிக்கும் ஜப்பான் மற்றும் சீனா நாடுகளில்
பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதமும் குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றது. எனவே திடகாத்திரமான இளம் தொழிலார்களையும் உற்பத்தியாளர்களையும் உலகம் இழக்கும்.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களது பராமரிப்பு மற்றும் நலன்புரி செலவுகள்
அதிகரிக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளில் என்றும்
இல்லாத அளவு பிரிட்டன் முதியோர்களாலும் நோயாளிகளாலும் அவதியுற்று வருகின்றது. இதனால்
வருவாயை மீறிய செலவீனம்தான் அதிகரிக்கும். எனவே அதனைச் சமமப்படுத்த புதிய தலைமுறைகள்
உருவாவது அவசியத்திலும் அசியமே.
மக்கள்தொகை அதிகமாகப் பெற்றுள்ள
நாடுகள்தாம் பாதுகாப்பிலும் தன்னிறைவைப் பெறுகின்றன. குறைவான மக்கள் தொகையைப் பெற்றுள்ள
குவைத், சவூதி அரேபியா போன்ற
நாடுகள் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் ராணுவவீரர்களை கூலிக்கு அமர்த்தவும்
நிர்பந்தமாகின்றன. அத்தோடு தமது நாட்டு மக்கள்தொகையைப் பெருப்பித்துக்கொள்வதற்காக பிற
நாடுகளிலிருந்து தமது நாட்டுக்கு அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் பணம்கொடுத்து வாங்குகிறார்கள்.
அமெரிக்கா Green Card முறையில் வருடத்திற்கு 55 ஆயிரம் வெளிநாட்டவர்களை குலுக்கல் முறைப்படி தெரிவுசெய்து தமது
நாட்டில் குடியமர்த்தி சனத்தொகையைப் பெருக்கிக் காட்ட முயற்சிக்கின்றது. அண்மையில்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாலிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு அறிக்கை
வாசித்தபோது உள்நாட்டவர்களைவிட அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு கூடிய அக்கரை
செலுத்துவதாக ஒரு இணைய ஊடகவியலாளர் முரண்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டதை நாம்
அறிவோம்.
எனவே ஒரு நாட்டின் செல்வமே
அதன் மக்கள் தொகைதான். மக்கள் தொகை வளர வளர வளங்கள் உற்பத்திசெய்யப்படுகின்றனவே அல்லாமல்
வளப்பற்றாக்குறை ஏற்படுவதில்லை என்பதனை மால்தூஸ் வாதிகள் கவனத்தில்கொள்ளவேண்டும்.
2.இடப்பற்றாக்குறை
ஏற்படும்.
பூமியின் மொத்தப் பரப்பளவு
57,168,000 சதுர மைல்களாகும்.
இதில் இவ்வாண்டின் கணக்குப் படி உலக சனத்தொகை 700 கோடி. பூமியின் மொத்தப் பரப்பளவையும் உலக மக்கள் அனைவருக்கும்
பங்குவைத்தால் அண்ணலவாக ஒரு சதுர மைல் பரப்பில் 100 – 150 இற்கு இடைப்பட்டவர்கள்தான் வாழ முடியும். இதனடிப்படையில்
பார்த்தால் சனத்தொகை வெடிப்பினால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதென்பது இயல்பு என மால்தூஸ்
வாதிகள் விளக்கமளிக்கின்றனர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்
குடிசைகளில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை எடுத்து நோக்கினால் இத்தகைய அளவுமுறையானது
சரியாக இருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துவரும்
நிலையில் மனிதர்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களை அமைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்துள்ளனர்.
இதனால் நிலப்பற்றாக்குறை வந்தாலும் தாராளமாகச் சமாளிக்கும் நிலை உருவாகியுள்ளது. மால்தூஸ்
வாதிகளின் கணக்குப்படி ஒரு சதுர மைல் பரப்பில் 100 – 150 இடைப்பட்டவர்கள்தான் வாழ முடியும் என்கிறார்கள்.
ஆனால் இன்று அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஒரு சதுர மைல் பரப்பில் 25,000 பேர் உலகின் முதல்தர
சௌகரியங்களோடு வாழ்கின்றனர். ஜப்பான், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இதே நிலையைக் காணமுடியும்.
சீனாவின் மொத்த நிலப்பரப்பில்
10 சதவீதம் மட்டுமே
உபயோகத்தில் உள்ளது. மேற்கு ஆப்ரிக்காவில் 62 சதவீதமான (1,150,000,000 ஏக்கர்) விவசாய நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல்
தரிசு நிலங்களாகக் காணப்படுகின்றன. பிரேசில் தனது (2,000,000,000 ஏக்கர்) மொத்த விளைநிலத்தில்
2.25 சதவீதத்தை மட்டுமே
விவசாயத்திற்காகப் பயன்படுத்துகின்றது. அதேபோன்று ஜப்பான் தனது மொத்த விளைநிலத்தில்
13.97 சதவீதத்தைத்தான்
விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்றது. கனடா தனது மொத்த விளைநிலத்தில் 8 சதவீதத்தைத்தான்
பயன்படுத்துகின்றது.
ஆக இதுபோன்ற நாடுகளில் பயன்படுத்தப்படாத
நிலங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. பயன்படுத்தப்படும் நிலங்களிலும் அடுக்குமாடிக்கட்டிடங்கள்
நிறுவப்படும்போது மக்கள் பயன்படுத்தும் இடப்பரப்பு இன்னும் எஞ்சிவிடுகிறது.
இன்றைய தொழில்நுட்ப அறிவைக்
கொண்டு மனிதன் நீர்ப்பரப்பையும் கரடு முரடான பாறை நிலங்களையும் கைவிடப்பட்ட சுரங்கங்களையும்
சதுப்பு மற்றும் பாலை நிலங்கiயும் வாழவும் விவசாயம்
செய்யவும் ஏற்ற நிலங்களாக மாற்றிப் பயன்படுத்தி வருகின்றான். இதனை ‘திருத்தியமைக்கப்படும்
பயன்பாடற்ற நிலங்கள் (Land
reclamation process)’ என்று அழைக்கின்றனர். இம்முறையினால் பிரிட்டன், நெதர்லாந்து, இத்தாலி, அமெரிக்கா ஜப்பான்
மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாரிய அளவிலும் பாகிஸ்தான், இந்தியா, ஹொல்லேண்ட் என்பன
சாதாரண அளவிலும் பயனடைந்து வருகின்றன.
சனத்தொகை இன்னும் எவ்வளவுதான்
பெருகினும் இத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதாலும் பயன்படுத்தப்படாது விடப்பட்டிருக்கும்
நிலங்களை வளப்படுத்தி எடுப்பதனூடாகவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என்பதனை
மேற்கூறிய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
3.உணவுப் பற்றாக்குறை
உருவாகும்.
மால்தூஸ்வாதிகள் குடும்பக்கட்டுப்பாட்டுத்
திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்க முன்வைக்கும் அடுத்த வாதம் மக்கள் பெருக்கத்தினால்
உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பசி, பட்டினி காரணமாக மக்கள் மடியக்கூடும் என்பதாகும்.
சரியான ஆய்வு முடிவுகளின்
படி பூமியின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீத நிலத்தில்தான் விவசாயம் செய்யப்படுகின்றது. மீதி 90 சதவீத நிலப்பரப்பும்
காடுகள், புல்வெளிகள் மற்றும்
பாலை நிலங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் 70 சதவீத நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலங்களாகும். இத்தகைய
நிலங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு எடுக்கப்படாமலேயே இருக்கின்றன.
உற்பத்தி செய்யப்படும் 10 சதவீத நிலங்களின்
விளைச்சல்களை மட்டும் சரியான முறையில் பாதுகாத்து ஊழல், மோசடி, பதுக்கள் ஏதுமின்றி
சரியான விகிதத்தில் பங்கீடுசெய்தாலே உலகில் யாரும் பசியோடு இருக்கமாட்டார்கள் என ஆய்வுகள்
தெரியப்படுத்துகின்றன.
1997 இல் ரோமில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உச்சி மாநாட்டில்
பேசிய பொப் அவர்கள் உலக மக்களுக்குத் தேவையான அளவையும் தாண்டி உணவுப் பொருட்கள் உற்பத்தி
செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் உணவு உற்பத்தி முன்பைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது
என்று கூறினார். இக்கூற்று உணவுற்பத்தியானது அதிகரித்து வருகின்றது என்பதைக் காட்டுகின்றது.
1898 இல் பிரிட்டனின் பிரிட்டிஷ் அசோஸியேசனைச் சேர்ந்த மால்துஸ்
சார்புவாத அறிஞர்களில் ஒருவரான தலைவர், சர் வில்லியம்ஸ் க்ரூக்ஸ் என்பவர் “பிரிட்டனின் மக்கள்
தொகை இதே அளவில் வளர்ச்சியடைந்தால் அடுத்துவரும் 30 ஆண்டுகளில் வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நம்மிடம்
கோதுமை உற்பத்தி இருக்காது. இதனால் பிரிட்டன் மிகப்பெரிய உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க
நேரும்” என்றார். இவரது இக்கூற்று
உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இன்று ஒரு நூற்றாண்டையும்
கடந்த நிலையில் பிரிட்டன் உணவுப் பற்றாக்குறைக்கு உள்ளாகவில்லை என்பதுதான் உண்மை. காலவோட்டத்திற்கும்
மக்கள் வளர்ச்சிக்கும் ஏற்ப உணவுற்பத்தியும் கூடியே வந்துள்ளது. அவரது காலத்தில் பிரிட்டனின்
மக்கள்தொகை 34 மில்லியனாக இருந்தது.
அன்றைய கோதுமை உற்பத்தி 0.85 மெட்ரிக் டொன்களாகும்.
1996ல் பிரிட்டனின் மக்கள்தொகை
65 மில்லியனாக இருந்தது.
இக்கட்டத்தில் பிரிட்டனின் கோதுமை உற்பத்தி 14,300,000 மெட்ரிக் டொன்களாக உயர்வடைந்தது. எனவே மக்கள் வளர்ச்சிக்கு
ஏற்ப உணவுற்பத்தியும் கூடியே வந்துள்ளது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.
இதே காலத்தில் அமெரிக்காவிலும்
அர்ஜெண்டீனாவிலும் அளவுக்கு அதிகமாக கோதுமை உற்பத்திசெய்யப்பட்டதனால் ஏற்பட்ட விலைச்
சரிவைக் கட்டுப்படுத்த அவ் அரசுகள் அளவுக்கதிகமாக உற்பத்திசெய்யப்பட்ட கோதுமைகளை டொன்
கணக்கில் கடலில் கொட்டியும் தீயிட்டு எரித்தும் அழித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன்சிங்
கூறிய விடயம் இங்கு அவதானிக்கத்தக்கது. “இந்தியாவின் தற்போதய உணவுப்பொருள் கையிருப்பு 3 கோடி டன்களாகும்.
2 கோடி டன்கள் இருந்தாலே
போதும். இன்னும் 66 ஆயிரம் கோடி அந்நியச்
செலாவணி கையிருப்பில் உள்ளது. கடும் வறட்சியே வந்தாலும் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க
முடியும்.” என்றார்.
உணவுற்பத்தி எந்தளவு வேகமாக
நடைபெறுகின்றது என்று பாருங்கள். முன்பெல்லாம் ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லீட்டர் பால் கரக்குமென்றால்
அது ஆச்சரியம்தான். ஆனால் இன்று ஒரு நாளைக்கு 40 லீட்டர் பால் கரக்கும் கலப்பு இன மாடுகள் காணப்படுகின்றன. மேலும்
ஆஸ்த்ரேலியா, டென்மார்க், ஹொல்லேண்ட் போன்ற
நாடுகளின் உள்ள மாடுகள் ஒரு நாளைக்கு 90 லீட்டர் பால் கரக்கும் திறனுடையவை. இதே மாடுகளை சவூதி அரேபியா
இற்கு இறக்குமதி செய்து பொருத்தமான சீதோஷ்ன நிலையை செயற்கையாக உருவாக்கி அதிகளவிலான
பாலை உற்பத்திசெய்கிறார்கள்.
முன்பு ஒரு மாட்டுக் கண்று
சினைக்குத் தயாராக நீண்ட நாட்கள் செல்கின்றன. ஆனால் மேலே கூறிய மாடுவகை ஈனும் கன்றுகள்
எட்டு மாதத்திலேயே சினைக்குத் தயாராகிவிடுகின்றன. முன்பு நமது நாட்டிலும் பண்ணைக் கோழிகள்
ஒரு நாளைக்கு ஒரு முட்டைதான் இடும். ஆனால் இன்று ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் இடும்
கோழிகளும் இருக்கின்றன. கோழியே முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் காலம்போய் இன்று
இயந்திரங்களும் முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்கின்றன. ஒரு கிலோ கத்தரிக்காய் பறிக்க
முப்பது செக்கன்கள் செல்லும். ஆனால் இன்று ஒரு செக்கனில் 10 கிலோ கத்தரிக்காய்களைப்
பறிக்கும் தொழில்நுட்பம் வந்துள்ளது. முன்பு நெல் அறுவடைக்காக 6 மாதங்கள் காத்திருந்த
காலம்போய் இன்று 90 நாட்களிலேயே நெல்
அறுவடைசெய்யமுடியுமான இனங்கள் அறிமுகமாகியுள்ளன.
இவ்வாறு மக்கள்தொகை பெருகப்
பெருக அவற்றைச் சமாளிக்கவும் துரித பொருளாதார சேகரிப்பிற்கும் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள்
அறிமுகமாகின. துரிதமாக விளைச்சலைப் பெற இன்று அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுவதுதான்
Genetic Engineering தொழில்நுட்பம். பெருகிவரும்
மக்கள் தொகையின் தேவைகளை நிவர்த்திசெய்ய இதுபோன்ற தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும்
இவற்றில் பல்வேறு பக்கவிளைவுகள் இருப்பதை மறுக்க முடியாது. இவற்றின் பக்க விளைவுகளால்தான்
முன்பு 150, 200 வருடங்கள் உயிர்
வாழ்ந்த மனிதன் இன்று 50,
60 வருடங்கள் வரை உயிர்வாழ்கின்றான். முன்பு சுகப் பிரசவத்திற்கும்
இன்று சிசேரியன் பிரசவத்திற்கும் புதிது புதிதாக அறிமுகமாகும் நோய்களுக்கும் இவையும்
ஒருவகையில் காரணிகள்தாம் என்பதையும் மறுக்க முடியாது.
இவ்வாறு இன்று உணவுற்பத்தி
பரவலாக மேற்கொள்ளப்படும் அதேவேளை அவற்றில் சிறிதளவு பிரமானம் உபயோகப்படுவதோடு பெரும்பாலானவை
வீணாக்கப்படுகின்றன. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை முழுமையாப் பதனிட முடியாமையால்
சிறிதளவைப் பதனிட்டுவிட்டு ஏனையவை கடலில் கொட்டப்படுகின்றன.
போதுமான பராமரிப்பு, பாதுகாப்பு வசதிகள்
செய்யப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அழுகி
வீணாகின்றன. இவற்றை சரிவரப் பராமரித்தாலும் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பத்தில்
பாதுகாக்கலாம்.
இந்தளவு மக்கள்தொகை உயர்வடைந்துள்ள
போதிலும் பொருளாதாரப் பற்றாக்குறையோ, உணவுப் பஞ்சமோ ஏற்பட்டு மக்கள் செத்துமடியவில்லை. இத்துனை வளர்ச்சியிலும்
மக்களின் உணவுத் தேவை, பொருளாதாரம் என்பன
பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கும் மேலாக உணவுப் பஞ்சம் ஏற்பட்டாலும் வயிராற
உண்ணுமளவு தானியக் கையிருப்பும் பெரும்பாலும் அனைத்து நாடுகளிடமும் காணப்படுகிறது என்பதுவே
உண்மை. அதனால்தான் ஒரு நாடு பாதிப்புக்குள்ளாகும்போது பிற நாடுகள் தமது கையிருப்பில்
உள்ள உணவுப்பொருட்களைக்கொண்டு உதவிசெய்கின்றன. இவை இன்றைய உலகில் நடந்துவரும் சம்பவங்களே.
உண்மையில் மால்துஸ் கூறியதற்குப்
புறம்பாக மக்கள் தொகை பெருகப் பெருக உணவுற்பத்தியும் அது சார்ந்த தொழில் வளர்ச்சிகளும்
புதுப்புது விஞ்ஞானக் கண்டுபடிப்புக்களும் வளர்ந்து மக்கள் தொகையின் தேவைகளை நிறைவுசெய்யும்
அளவில் வளர்ந்துள்ளதே அல்லாது பசி பட்டினி இடப்பற்றாக்குறை ஏற்படவில்லை.
குடும்பக்
கட்டுப்பாட்டுத் திட்டத்தின் நோக்கம்.
இன்றைய குடும்பங்களில் குழந்தைகளின்
எண்ணிக்கையை மட்டுப்படுத்தக் காரணம் பொருளாதாரப் பற்றாக்குறையே என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட
உண்மை. வைத்திய ஆலோசனைகள் கூட மூன்று குழந்தைகளோடு குழந்தைப் பேற்றை நிறுத்திக்கொள்ளவே
கூறுகின்றது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.
மீறி யாராவது ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் அவரது தொழில் பறிக்கப்பட்டு
அவருக்கு வழங்கும் தொகைகூட நிறுத்தப்படுகிறது. உலகப் பொருளாதாரம் குறித்து அக்கரையற்ற
முஸ்லிம்கள் குடும்பக்கட்டுப்பாடு குறித்து சிந்திப்பதில்லை. அவர்கள் சந்ததிகளை உற்பத்திசெய்து
தள்ளுகின்றார்களென்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்படுகின்றது.
பணச் சுமை மற்றும் பொருளாதாரப்
பற்றாக்குறை என்பன சந்ததிப் பெருக்கத்தினால்தான் உருவாகின்றது என்றொரு மாயையை மக்கள்
மத்தியில் ஏற்படுத்திய மேற்குலகம் உண்மையில் நுகர்பொருள் ஆசையால்தான் இந்நிலைமை ஏற்படுகின்றது
என்பதை மறைத்துவிட்டு மக்கள் மத்தியில் விளம்பரங்களுடாக தேவையற்ற நுகர்பொருள் ஆசையை
உண்டாக்கி வருகின்றது. விளம்பரங்களுடாக நுகர்பொருள் ஆசையை ஏற்படுத்தும் உலகம் வருடாந்தம்
எந்தளவு பொருளாதாரத்தை வீணடிக்கின்றது என்பதை யுனிசெஃப் நடத்திய ஆய்வு இவ்வாறு சுட்டுகின்றது.
மது, பீர் வகைகளுக்கு 245 பில்லியன் டொலர்.
கோல்ஃப் விளையாட்டிற்கு 40 பில்லியன் டொலர்.
சிகரெட்டிற்கு 400 பில்லியன் டொலர்.
விளம்பரங்களுக்கு 250 பில்லியன் டொலர்.
இராணுவத்திற்கு 1735 பில்லியன் டொலர். இவ்வாறு பட்டியல் நீண்டு செல்கிறது.
உண்மையில் குடும்பக் கட்டுப்பாடு
தொடர்பாக சமூகத்தில் பரப்பப்பட்டுவரும் குறுந்திரைப் படங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், விளம்பரங்கள் என்பன
பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதல்லாது பிரச்சினைகளையே உருவாக்குகின்றன. ஆரம்பத்தில்
கூறிய “When
the dream comes true” போன்ற விளம்பரங்கள்
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை வளர்த்துவிடுகின்றன. தன்னுடன் பிறந்த உடன் பிறப்புக்களையே
தனது எதிரிகளாகக் கருதும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மால்தூஸின் குடும்பக்கட்டுப்பாட்டுத்
திட்டமானது எந்த அறிவியல் ரீதியிலும் பொருந்தாத ஒரு குருட்டுவாதமே.
இதனைத்தான் கொலிக் க்ளார்க்
என்பவர் தமது Population
growth and living standards என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். “மால்துஸ் சார்பு வாதிகள்
மக்கள் மத்தியில் தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏனெனில் இவர்கள் மதச்சார்பற்ற
கொள்கையைக் கடைபிடிப்பவர்கள். இவர்கள் முன்வைக்கும் வாதங்கள் முற்றிலும் அறிவியல் வாய்ந்தவையல்ல
மாறாக பெரும் பெரும் கற்பனைக் கோட்பாடுகளேயாகும். மால்தூஸ் வாதிகளுக்கு உலக மக்கள்தொகை
பற்றியோ பொருளாதார மற்றும் உணவுற்பத்தி பற்றியோ எந்த அறிவும் கிடையாது. அறிவியலாளர்கள்
இவர்களது வாதங்களை சற்று அணுகி ஆராய்வார்களெனில் இது ஒரு முரட்டுவாதக் கொள்கை என்பதை
நிச்சயம் புரிந்துகொள்வர்.”
என எழுதியுள்ளார்.
1 comments:
fathima binthi muhammed waffa.....
"varumaikku payanthu ungal kulanthaihalai kolai saiyyatheerhal" enra irai vakkuku intha article mihavum nanraha niroofikkinrathu....
varikku vari sirantha aayvodu ikkatturai eluthappattullathu.....
ungal muyatchi thodarattum.... alhamdulillah
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...