ஹொலிவுட்டில் எப்போதாவது தோன்றக்கூடிய அற்புதமான இயக்குநர்களில் ஒருவர்தான் கியர்மோ டெல் டோரோ. அவரது நீண்ட நாள் தயாரிப்பில் பலரதும் எதிர்பார்ப்பின் பின் தற்போது வெளிவந்திருக்கும் அட்டகாசமான திரைப்படம்தான் “பஸிஃபிக் ரிம் – (Pacific Rim(2013) – 3D – English) ”
திரையின் கதை பற்றி சுருக்கமாக கூறுகின்றேன். பஸிஃபிக் கடலின் ஆழத்தில், பூமியையும் ஒரு ஏலியன் கிரகத்தையும் இணைக்கும் வழி ஒன்று உருவாகிறது. இதன்வழியாக மெதுவாக பிரம்மாண்ட ஏலியன்கள் கடலின் அடியிலிருந்து பூமிக்கு வருகின்றன. இவைகள் வெறுமனே எந்த நோக்கமும் இல்லாமல் வந்துசெல்வதில்லை. அப்படி அவை வந்துசெல்வதில் மிக முக்கியமான நோக்கம் ஒன்று உள்ளது. இந்த ஏலியன்கள் ஏற்கெனவே பூமிக்கு வந்துள்ளன என்று படத்தில் சொல்லப்படுகிறது. அவை ஆதி காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோஸார்களாகும். (இதனோடு Godzilla படத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்) ஆனால் அன்று அவற்றால் இங்கு வாழக்கூடிய சாத்தியமான சூழல் காணப்படவில்லை.

இப்படி வரும் கய்ஜுக்கள் அனைத்தும் ஒரேவகையான மிருகங்களும் அல்ல. ஒவ்வொருமுறையும் வரும் கய்ஜுவும், அதற்கு முந்தைய கய்ஜுவை விட பலத்திலும் உருவத்திலும் பெரியவை. அவை ஒவ்வொருமுறையும் அவற்றின் எஜமானர்களால் அப்படி உருவாக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட கய்ஜுக்களை எதிர்க்க, உலகின் நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய பிரம்மாண்ட இயந்திரங்களே “ஜேகார்ஸ்” (Jaegars) எனப்படுகின்ற ரோபோக்கள். ஒவ்வொரு ஜேகார்ஸையும் இயக்க இரண்டு மனிதர்கள் தேவை. அவர்களது மூளைகள் ஒன்றுசேர்ந்தால்தான் அந்த இயந்திரம் தங்குதடையில்லாமல் இயங்கும்.
ஆரம்பத்தில் வெகு வெற்றிகரமாக இருந்துவந்த ஜேகார்ஸ்கள் அதன்பின் மெல்ல கய்ஜுக்களின் தாக்குதலுக்கு எதிராக இயங்க முடியாமல் போகின்றன. அதற்குப்பதிலாக பஸிஃபிக் கடலோரமாக மாபெரும் சுவரைக் கட்ட உலக அரசாங்கம் முடிவுசெய்கிறது. ஆனால் அது சாத்தியப்படுவதில்லை. எனவே, மீதம் இருக்கும் ஒருசில ஜேகர்ஸ்களையும் அவற்றை இயக்கும் மிகச்சில மனிதர்களையும் வைத்துக்கொண்டு, அந்த பஸிஃபிக் கடலினடியில் இருக்கும் ஏலியன் வாயிலை மூட அவர்கள் முடிவுசெய்கிறார்கள்.
இதன்பின் என்ன ஆகிறது என்பதே படம்.
இதுவரை ஹோலிவுட்டில் வந்துள்ள பிரம்மாண்டங்களை விட இப்படத்தில் வரும் விடயங்கள் மிகப் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கூடவே, வெறுமனே சண்டைகள் மட்டும் இல்லாமல், உறுதியான உணர்வுரீதியான கதையும் இதில் உள்ளதால், படத்தை நன்றாகவே ரசிக்க முடிகிறது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...