கிறிஸ்டோபர் நோலனின் தயாரிப்பில் 2010ம் ஆண்டு வெளியான Inception திரைப்படம் கனவுகளை
மையமாகவைத்து வித்தியாசமானதொரு கோனத்தில் எடுக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான,
தொழில்நுட்ப உதவியுடன் பிறரது கணவுக்குள் நுழைந்து அவர்களது தகவல்களைத்
திருடுவதுபோன்றும் ஏழவே அவர்களது உள்ளத்தில் இருக்கும் மனப்பதிவுகளை கனவுலகில்
இருந்துகொண்டு அழித்து வேறு விடயங்களைப் பதித்து அவர்களது போக்கையே மாற்றிவிடுவது
போன்றும் எடுக்கப்பட்டிருந்தது.
இது மட்டுமன்றி பழங்காலம் முதல் கதைகள், கவிதைகள்,
நாவல்கள், இலக்கியங்கள், பாடல்கள், திரைப்படங்கள் என பல துறைகளிலும் கனவுகள்
கருவாக அமையப்பெற்றுள்ளன. கனவு தொடர்பான பல்வேறு ஆய்வு,
ஆராய்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. கனவு தொடர்பாக
சிந்திக்கும்போது அது இறைவனின் மகத்தானதொரு அத்தாட்சி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கனவின்
பிரதான இரு வகைகள்
கனவு
ஆங்கிலத்தில் Dream
எனப்படுகிறது. அல்குர்ஆன் கனவை “மனாம், ருஃயா, அஹ்லாம்” என்ற சொற்களில் பயன்படுத்தியுள்ளது. அல்குர்ஆனில் மனாம்
என்று நான்கு இடங்களிலும் (8:43,30:23,37:102,39:42), ருஃயா
என்ற சொல் ஏழு இடங்களிலும் (12:4,12:5,12:43,12:100,17:60,37:105,48:27) அஹ்லாம் என்ற சொல் மூன்று இடங்களிலும் (12:44,21:52,4:32) மீட்டப்பட்டுள்ளது. இப்றாஹீம் நபி, யூசுப் நபி,
இரு சிறைக் கைதிகள், எகிப்து நாட்டு அரசன்,
போன்றோர் கண்ட கனவுகள் பற்றி திருமறை சிலாகித்து கனவில் உள்ள
அத்தாட்சிகள், முக்கியத்துவங்கள் பற்றி உணர்த்துகின்றது.
கனவு
இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக எமது இலக்கை அடைவதற்காக கானும்
கனவு. இதற்கு Vision அல்லது Goal
என்று கூறுவோம். இதனையே பேராசிரியர் அப்துல்
கலாம் “Dreams is not what you see in sleep, is the thing which doesn't let you sleep” என்று குறிப்பிட்டார்.
கனவின்
இரண்டாவது வகை உறக்கத்தில் வரும் கனவு. இது பற்றித்தான் இங்கு
விளக்கமாகப் பார்க்கப் போகின்றோம். இக்கனவு பற்றி விளங்க
முதலில் உறக்கம் பற்றி சற்று விளங்கிக்கொள்வோம்.
கனவின்
அடிப்படை உறக்கமே!
விழிப்பு
நிலையில் தொடர்ந்து இயங்கிக்கெண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கான ஓய்வு நிலையே
உறக்கமாகும். அதிலும் இரவு உறக்கம் மிக மிக அவசியமானது. அல்லாஹ்
கூறுகின்றான்
“உங்களுடைய தூக்கத்தை உங்களுக்கு இளைப்பாறுதலாகவும் இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.” [78:10] கனவு காண்பதற்கான அடிப்படை
அம்ஷமே நிம்மதியான உறக்கம்தான்.
பௌதீக மனோதத்துவம் மூளையின் மின் அலைகள், கண்
அசைவுகள், தசைகளின் இயக்கம் (EEG) ஆகியவற்றின்
ஆதாரத்துடன் தூக்கத்தின் நிலைகளை நான்காகப்
பாகுபடுத்துகின்றது. அவை
பின்வருமாறு…
1.விழிப்பு நிலை (wakefulness)
இரண்டாவது நிலையை அடைவதற்கு சில
நிமிடங்களிற்கு முன்னுள்ள நிலை. அதிகளவான அல்லது குறைந்த தூக்கத்தை தூண்டக்கூடிய
பிரதிமையாகவுள்ள ‘hypnogogic
imagery’ எனும் தூக்க நிலையாகும்.
2.விழி அசைவுகளற்ற உறக்க நிலை (non- REM (rapid eye movement)
ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச்
செல்லும் நிலை. இந்த நிலையிலே இலேசான தூக்கத்திலுள்ளவர்களுக்கு கனவுகள்
வருவதற்குரிய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் குறைவான கண் அசைவும் (EOG), தசை இயக்கங்கள் குறைவாகவும் (EMG), மூளையின் மின் அலைகள் குறைவாகவும் இருக்கும்.
3.விழிகள் வேகமாக
அசையும் உறக்க நிலை (REM Sleep)
இதுவே கனவுகளுடன் தொடர்பான நிலை எனப்படுகின்றது. இந்நிலையில் மூளையின் மின் அலைகள் 1-2Hz “delta” அலைகளாக மாற்றம் பெறுகின்றன. இதிலிருந்து நான்காவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலை ஆரம்பமாகும்.
4.ஆழ்ந்த உறக்க
நிலை (Deep Sleep)
இதுவே படிப்படியான
உறக்கத்தின் இறுதி நிலை. விடிகாலை நேரம் என்றுகூடக் கூறலாம். இந்நிலையை அடைந்து சுமார் 90 நிமிடங்களின் பின்
தசை இயக்கம் குறைவாகவும், விழி அசைவற்றதாகவும் இருக்கும். இதன் பின்னர் ஒருவர்
இயல்பாகவே விழித்துக்கொள்வார். இந்நிலையே கனவுகள் தோன்றும் உச்சகட்ட நேரமென விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இங்கு
நபியவர்கள் கூறியதாக அபூ ஸஈத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் கீழ்காணும் ஹதீஸ் குறிப்பிடத்தக்கது. ‘கனவுகளில்
மிக உண்மையானது ஸஹர் நேரங்களில் காணப்படும் கனவுகளாகும்.’ (நூல் : திர்மிதி)
கனவு
ஒரு குறுந்திரைப்படம் போன்றது
கனவு என்பது ஒரு குறும்படம் போன்றது. கனவுலகில் எப்போதுமே
நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நிஜத்தில் நிகழ்வதைப்பேன்றே அத்தனையும் அங்கு
நிகழும். நிரங்கள், பொருட்கள், முகத்தோற்றங்கள்,
பேசும் மொழி, பேசுபவரின் குரல் என அனைத்தும்
நிஜம் போன்று இயல்பாகவே வந்து போகும். நாம் அன்றாடம்
பயன்படுத்தும், பார்க்கும், கேட்கும்,
பழகும் விடயங்களே அதிகமாக கனவில் காட்சி தருகின்றன. நம்மைச் சுற்றிய நிகழ்வுகளை
நாம் சென்று வந்த இடங்களைத்தான் பெரும்பாலும் கனவில் காண்கிறோம்.
கனவு
காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படும், எச்சில்
விழுங்குவார், சிலபோது கை கால்களை அசைப்பார், முனகல், புலம்பல், அழுகை,
சிரிப்பு என்பனவும் ஏற்படும். அத்தோடு முகத்தில்
உணர்ச்சி மாற்றங்களையும் அவதானிக்க முடியும். இதன் உச்ச கட்டம்தான்
சில் கனவை நிஜம் எனக் கருதி எழுந்து நடந் உலாவருவர். சில மனநலக் குறைபாடு உள்ளவர்களைத் தவிர சகலருமே கனவு காண்கின்றனர். சிறு குழந்தைகள்
கருவறையிலும் பிறந்ததன் பின்னரும் கனவு காண்கின்றனர். பார்வை குறைபாடு உள்ளவர்களும், பிறவிக்
குருடர்களும் ஏன் விலங்குகளும் கூட கனவுகாண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அநேகமானவர்கள் நாளொன்றுக்கு
சுமார் நான்கு முதல் ஏழு வரையான கனவுகளைக் காண்கின்றனர்.
கனவு
பற்றிய கருத்துகள்.
மனோதத்துவவியலின்படி
தூக்கத்தின் போது மனித மூளையில்
ஏற்படும் ஒரு இரசாயன மாற்றமே கனவுருவாகக் காரணம் என்கின்றது. உளவியலின்
கண்ணோட்டத்தில் சிக்மண்ட் பிரொய்டின் கருத்தாவது “வாழ்வில் அடக்க
முடியாதுள்ள ஆசைகள் கனவாக வெளிப்படும்” என்பதாகும். கனவு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் தனித்துவமானதாகக் காணப்படுகின்றது.
இஸ்லாத்தைப் பொருத்த வரை தூக்கமும்
ஒரு வித மரணமேயாகும். அதாவது அல்லாஹ் நாம் தூங்கும்போது நம் ரூஹைக் (ஆன்மா)
கைப்பற்றுகிறான். “அல்லாஹ்,
ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையின்போதும் கைப்பற்றுகின்றான். பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ
அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; (இன்னும் வாழ வேண்டுமென நாடுபவற்றை) ஒரு குறிப்பிட்ட தவணை
வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. [39:42]
மேலுள்ள அல்குர்ஆனிய
வசனத்தின் படி
நாம் தூங்கும் போது அல்லாஹ் எமது ரூஹைக் (ஆன்மா)
கைப்பற்றி தூக்கத்திலிருந்து எழும்போது அதனை மீள அளிக்கிறான் என்ற விடயத்தை விளங்க முடிகின்றது. அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபி (ஸல்) அவர்களின் அன்பு
தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம்
தருகிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் உயிரும் (நஃப்ஸ்), ஆன்மாவும் (ரூஹ்)
தரப்பட்டுள்ளன. உயிர் உணரும் தன்மையும் அறிவும் கொண்டது. ரூஹில்
அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளது. மனிதன் தூங்கும் போது
அல்லாஹ் உயிரை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. ரூஹ் தனது அசையும்
தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறது. அப்பொழுது அந்த ரூஹிற்கு மற்ற
ரூஹ்களுடன் நடைபெறும் சம்பாஷனைகள் மற்றும் நிகழ்ச்சிகளே கனவுகளாகும். (நூல் : குர்துபி) இதன் உண்மையான விளங்கங்களை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
கனவின்
மூன்று பிரிவுகள்
உறக்கத்தில் நாம் காணும் கனவுகளை அடிப்படையில் மூன்றாகப்
பிரிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
'கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும்.
மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது
உள்ளத்தில் மனிதன் காண்கின்ற கனவாகும்' (முஸ்லிம்:4200)
1. நல்ல
கனவுகள்.
இவை இனிமையானவையாகவும், சந்தோசமானவையாகவும் நாம் விரும்பக்
கூடிய விதத்திலும் இருக்கும். சிலபோது இனிமையான இந்தக் கனவு
இடை நடுவே துண்டிக்கப்பபட்டால் நாம் தொடர்ந்தும் தூங்கியிருந்தால் நன்றாக
இருக்குமே என்று வருந்துவோம். நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள
நலன்கள், குழந்தைச் செல்வம், பதவிகள் போன்றவற்றை முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன்
அறிவிக்கின்றான். இதன் கருத்து அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தி என்பதாகும். இது கனவாகவும் இல்ஹாம் எனும் உள உதிப்பாகவும் இருக்கும்.
'நபித்துவமும், தூதுத்துவமும் முற்றுப் பெற்று விட்டன. எனவே எனக்குப் பின்
எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் (தூதரும்) இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்குக்
கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனினும்
நற்செய்தி கூறுபவை உள்ளன' என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன
என்று நபித்தோழர்கள் கேட்ட போது 'அது நீங்கள் (முஸ்லிம்) காணும் கனவாகும். இது
நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்' என்று விடையளித்தார்கள். (அஹ்மத் 13322)
மற்றுமொரு அறிவிப்பில் 'நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் (தூதுச்
செய்தியின்) நாற்பத்தி ஆறு பங்கில் ஒரு பங்காகும்' என நபிகள்
நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி 6987, 6988, 6989,
6983, 6994)
எனவே நல்லது நடப்பது போல் கனவு கண்டால் நாம்
மிகவும் நேசிக்கக் கூடிய, நம்மை நேசிக்கக் கூடியவர்களிடம் மட்டுமே அதனை தெரிவிக்க
வேண்டும். மற்றவர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். 'நல்ல கனவு
அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக்
கண்டால் தமக்கு மிகவும் நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாருக்கும் அதைத்
தெரிவிக்கக் கூடாது' என்றார்கள். (புகாரி 7044)
2. கெட்ட
கனவுகள்.
எந்தக் கனவைக் காணும் போது நமக்கு கவலை, அச்சம் ஏற்படுகிறதோ அவை தாம் கெட்ட
கனவுகள். இவை Nightmare எனப்படும் பயங்கரமானவையாக,
ஆபாசமானவையாக, இருக்கும். உயரத்திலிருந்து பாதாளத்தில் விழுவது போன்று இருக்கும். யாரோ நம்மைக் கொல்ல வருவதுபோன்று இருக்கும். பேய்,
பிசாசுகள் என்றெல்லாம் காட்சிகள் தோன்றும். இதுபோன்ற
கனவுகள் காணும் போது சிலசமயம் நாம் திடுக்கிட்டு அலரிக்கொண்டு எழுந்துவிடுவோம்.
உடல் நடுக்கமெடுக்கும், வியர்த்திருக்கும்,
நெஞ்சு படபடக்கும். அவசரமாக பொழுது விடியாதா
என்று நினைப்போம். இவை ஷைத்தானின் ஊசலாட்டங்களாகும்.
தூங்குவதற்கு முன்பு
மோசமான விடயங்களைப் பார்ப்பது, பேய், பிசாசு
என்ற பொய்யான கதைகளைக் கதைப்பது, இரவில் சினிமாக்களைப்
பார்த்துவிட்டு தூங்குவது, கோள், புறம்
பேசிவிட்டுத் தூங்குவது, மரண வீடுகளுக்குச் சென்று வந்து அதே
எண்ணத்துடன் தூங்குவது போன்ற செயல்களால் பயங்கரமான, கெட்ட
கனவுகள் வருகின்றன. ஷைத்தானும் தன் வேலைகளை ஆரம்பிக்கிறான்.
இனி நிம்மதியான தூக்கம் இருக்காது.
“தனக்குப் பிடிக்காத கனவை ஒருவர்
கண்டால் அதனால் ஏற்படும் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் அவர் பாதுகாவல் தேடட்டும்.
மேலும் இடது புறம் மூன்று தடவை துப்பட்டும். எவரிடமும் அது பற்றிக் கூறவும்
கூடாது. இவ்வாறு நடந்து கொண்டால் அவருக்கு அவரது கனவால் எந்தக் கேடும் எற்படாது” என்று நபிகளார்
கூறினார்கள். (புகாரி 7044)
3. குழப்பமான, அர்த்தமற்ற
கனவுகள்
இவை சம்பந்தமில்லாத குழப்பமானவையாக இருக்கும். நாம் கானும்
அதிகமான கனவுகள் இவ்வகையைச் சார்ந்தவையே! ஒரு இடத்தில்
ஆரம்பித்து எங்கெங்கோ எம்மைக் கொண்டு செல்லும். பூனை
புலியாகி, புலி குதிரையாகி, அதற்கு
சிறகு முழைத்து பறப்பது போன்றெல்லாம் சம்பந்தமில்லாத காட்சிகளாக இருக்கம். இதில் மகிழ்ச்சியடையவோ கவலைப்படவோ ஒன்றுமில்லை. இதற்கு எந்த
அர்த்தமுமில்லை. நமது ஆழ் மனதில் (subconscious mind) பதிந்துள்ள எண்ணங்கள் உறக்க நிலையில் கோர்வையாக ஒழுங்குபடுத்தப்படும்போது இத்தகைய
குழப்பமான கனவுகள் தோன்றுவதாக அறியப்படுகிறது.
இதற்கு முன்பு எங்கோ நடந்தது போன்ற உணர்வு
பொதுவாக நாம் காணும் கனவுகள் எல்லாம் நினைவில் நிற்பதில்லை. ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து
நிமிடத்திலேயே 50% கனவுகள் மறந்து போய்விடுகின்றன. பத்து நிமிடத்தில் சுமார் 90% கனவுகள் மறந்து விடுகின்றன. அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை நினைவில் வைக்க
முடிவதில்லை. நாம் இரண்டு பேர் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். இடையே அந்த
நிகழ்வு இதற்கு முன்பு எங்கோ நடந்த்துபோன்ற உணர்வு வரும். இது
கனவில் நடந்த ஒரு சம்பவம் மறந்திருந்து அது உண்மையில் நிகழும் போதே அந்த உண்ர்வு எமக்கு
வருவதாகும். நல்ல கனவுகள் எதிர்காலத்தில் நிகழ இருக்கும் சில
விடயங்களைக் காட்டித்தருகின்றன என்பது நபிமொழி.
என்னதான் விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும்
அறிவியல் விளக்கங்கள் கொடுக்க முடியாத ஒன்று தான் கனவு. கனவிலும் அல்லாஹ் எமக்கான அத்தாட்சிகளை வைத்துள்ளான். கனவு பற்றிய ஆழமான, உண்மையான விளக்கங்கள் அல்லாஹ் ஒருவனுக்கே
வெளிச்சம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...